-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
89. பக்தன் அடித்தாலும் களிப்பவர்
.
நதிபிர்- நுதிபிஸ்- த்வமீச’பூஜா
விதிபிர்த்யான ஸமாதிபிர் ந துஷ்ட:/
தனுஷா முஸலேன சாச்’மபிர் வா
வத தே ப்ரீதிகரம் ததா கரோமி//
.
தொழுதலாலும் துதிகளாலும் நின்குறித்த பூசையாலும்
தியானத்தோடு ஆழ்தலாலும் ஈசனேநீர் மகிழ்வதில்லை
வில்லாலும் கல்லாலும் அடித்திட்டால் களிக்கின்றீர்
சொல்லுமுன் விருப்பமெது? அவ்விதமே செய்வேனே!
.
சிவபெருமான் விசித்திரமானவர். பெரிய பெரிய மகான்களும், தவசீலர்களும் அவரைக் காண முடியாமல் தவிக்கின்ற நிலையில், எளிய பக்தனுக்கு அவர் இர(ற)ங்கி வந்து காட்சி தருகிறார். பக்தர்களோடு விளையாடுவதற்காக திருவிளையாடல் செய்யும் சிவபெருமான், அந்தத் தருணங்களிலே அறியாமையால் பக்தர்கள் அடித்தாலும், திட்டினாலும்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். இதனைத்தான் நிந்தாஸ்துதியாக (வஞ்சப்புகழ்ச்சியாக) இங்கே வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
சிவபெருமானே, உம்மை பல்விதங்களால் வணங்கித் தொழுதாலும், துதித்துப் பாடினாலும், பூஜைகள் செய்தாலும், தியானத்தில் ஆழ்ந்திருந்தாலும், நீர் மகிழ்ச்சி அடைவதில்லை. ஆனால், உம்மை பக்தர்கள் வில்லாலும், கல்லாலும் அடித்தால் நீர் ஆனந்தம் கொள்கிறீர். (பாசுபத அஸ்திரம் வேண்டி தவமிருந்த அர்ச்சுனன், வேடன் வடிவில் வந்த சிவபெருமானை வில்லால் அடித்து சண்டையிட்டான். தமிழகத்தில் சமண, பௌத்த ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் வாழ்ந்த, சாக்கிய நாயனார், சிவபிரானை வெளிப்படையாக வணங்க வழியில்லாமல், சிவலிங்கத்தின் மீது கற்களை வீசியெறிந்து அர்ச்சனை செய்தார்.) வில், கல் இல்லாத நிலையில் முஸல என்று சொல்லப்படும் உலக்கையால் அடித்து பூஜிக்கட்டுமா? இறைவா, உனக்கு எந்த விதமான பூஜையில் உண்மையிலேயே விருப்பம் இருக்கிறது? அதனைச் சொல், அந்த விதத்திலேயே உன்னை பூஜிக்கிறேன் என்று வேடிக்கையாகச் சொல்கிறார் பகவத்பாதர்.
$$$