-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
35. எல்லாம் அறிந்தவனிடம் என்ன கேட்பது?
.
யோகக்ஷேம துரந்தரஸ்ய ஸகல:ச்’ரேய: ப்ரதோத்யோகினோ
த்ருஷ்டாத்ருஷ்ட மதோபதேசக்ருதினோ பாஹ்யாந்தர வ்யாபின:/
ஸர்வஜ்ஞஸ்ய தயாகரஸ்ய பவத: கிம் வேதிதவ்யம் மயா
ச’ம்போ த்வம் பரமாந்தரங்க இதி மே சித்தே ஸ்மராம்யன்வஹம்//
.
காத்தலைச் சுமந்தவனாய் மேலனைத்தும் தருபவனாய்
காண்காணா கருத்தனைத்தும் சாற்றுவனாய் உள்வெளியாய்
யாதறிவாய் பேரன்பாய் திகழுமக்கு என்னுரைப்பேன்?
நாள்தொறுமெண் ணுவேன்நன்னா அகத்திருந்தருள் வாயென்றே!
.
இந்த உலகத்தைக் காப்பாற்றுகின்ற சுமையை அம்மையப்பனாகிய சிவபெருமானே தாங்குகிறார். உலக நன்மைக்காக மேலான நன்மைகள் அனைத்தையும் தருபவராய் அவரே திகழ்கிறார். நம்மால் காணப்படுகின்ற இந்த இகத்திலும், காணவியலாத பரத்திலும் நாம் கருதுகின்ற அனைத்தையும் அடைவதற்குரிய வழிமுறையை உபதேசிக்கும் லோக குருவாகவும் யோக குருவாகவும் அவரே வீற்றிருக்கிறார். நம்மிடையேயும் பிரபஞ்சத்தினூடேயும் உள்ளும் புறமுமாய் அவரே வியாபித்திருக்கிறார் (சர்வவியாபி). யாதும் (அனைத்தும்) அறிந்தவராய் அவர் விளங்குகிறார் (சர்வக்ஞர்). உலக உயிர்கள் அனைத்திற்கும் பேரன்புடன் அவரே கருணை புரிகின்றார் (தயாகரன்).
இவ்விதம் திகழும் சிவபெருமானிடம் பக்தனாகிய நான் என்ன உரைக்க முடியும்? எங்கும் நிறைந்து, எல்லாம் அறிந்து, அனைத்தையும் இயக்குகின்ற இறைவனிடம் என்ன முறையிடுவது? அவருக்குத் தெரியாதா என்ன? ஆகையால், நன்மையைத் தருகின்ற நன்னனே (சம்பு), எனது அகத்தினில் எப்போதும் வீற்றிருந்து அருள்புரிவாய் என்றே நாள்தோறும் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
இதையேதான் திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான், “வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ, வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி, என்னைப் பணிகொண்டாய், வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசொன்று உண்டென்னி லதுவும் உந்தன் விருப்பன்றே” என்று மொழிகிறார்.
$$$