-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
34. தனிப்பெரும் தெய்வம்
.
கிம் ப்ரூமஸ்தவ ஸாஹஸம் பசு’பதே கஸ்யாஸ்தி ச’ம்போ பவத்
தைர்யஞ் சேத்ருச’மாத்மன: ஸ்திதிரியஞ் சான்யை: கதம் லப்யதே/
ப்ரச்’யத்தேவகணம் த்ரஸன்முனிகணம் நச்’யத்ப்ரபஞ்சம் லயம்
பச்’யந் நிர்பய ஏகஏவ விஹரத்யானந்த ஸாந்த்ரோ பவான்//
.
என்சொல்வோம் நின்துணிவு? யார்பெறுவார் நின்னுறுதி?
நின்போன்ற ஆன்மநிலை அடைந்திட்டார் வேறாரோ?
அமரரரள முனிவரஞ்ச உலகழியும் லயத்தினிலும்
அச்சமற்று தனியனாய் உவந்திருப்பாய் பசுபதியே!
.
அமிர்தத்தை உண்ட இந்திராதி தேவர்களும் பிரளய காலத்தில் அழிவை எய்துகிறார்கள். எமதர்மன், பிரும்மா, விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களும் பிரளயத்தில் முடிவடைந்து விடுகிறார்கள். இந்தப் பிரளயத்தைக் கண்டு தேவர்களும், தவ வலிமை கொண்ட முனிவர்களும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆனால் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானோ, அழிவின்றி பிரளயத்தின்போதும் தனியனாய் வீற்றிருக்கிறார். அதனால்தான் அவர் மகாகாலன் என்றும் காலாதீதன் என்றும் போற்றப்படுகிறார். ஏனெனில், பிரபஞ்சம் அழிகின்ற பிரளய காலத்தில் அனைத்து ஜீவன்களும், பொருள்களும் அவற்றின் தோற்றுவாயான சிவ பரம்பொருளிடமே லயம் அடைகின்றன. மீண்டும் அவரிடமிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படுகின்றன. இது ஒரு தொடர்கதை.
இவ்வாறாக, பல பிரபஞ்சங்கள் தோன்றி, யுகங்களைக் கடந்து அழிகின்றன. மீண்டும் தோன்றுகின்றன. ஒவ்வொரு பிரளயத்தின்போதும் பிரபஞ்சம் சிவபெருமானிடமே ஒடுங்குகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் தனித்திருக்கும் மோன இறைவன் சிவப் பரம்பொருள். அவ்வாறு தனித்திருக்கும் சிவபெருமானின் துணிவை என்னென்று சொல்வது? அழியாது, அசராது நீடிக்கும் அவரது உறுதியை வேறு எந்தத் தெய்வம் பெற்றிருக்கிறது? பிரளய கால அழிவின்போதும் சஞ்சலமின்றி அமைதியோடு புன்னகைக்கும் சிவபெருமானைப் போன்ற ஆன்ம நிலையை அடைந்திருப்பவர்கள் வேறு யார்தான் உள்ளனர்? என்று கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$