-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
30. எப்படிப் பூஜிப்பேன்?
.
வஸ்த்ரோத்தூதவிதௌ ஸஹஸ்ரகரதா புஷ்பார்ச்சனே விஷ்ணுதா
கந்தே கந்தவஹாத்மதா அன்னபசனே பர்ஹிர்முஹாத்யக்ஷதா/
பாத்ரே காஞ்சனகர்பதாஸ்தி மயி சேத்பாலேந்துசூடாமணே
சு’ச்’ருஷாம் கரவாணி தே பசு’பதே ஸ்வாமின் த்ரிலோகீகுரோ//
.
துகிலுடுத்தக் கதிரவனோ மலர்தொடுக்க மாதவனோ
மணங்கூட்ட மருத்துவோ அமுதூட்ட அக்கினியோ
பொருள்படைக்க பொன்சூலனோ யானெளியோன் பிறையோனே
பசுபதியே உந்தனுக்கு உபசரிப்ப தெங்ஙனமே?
.
சிவபெருமான் எங்கும் நிறைந்தவர். மிகச் சிறியோராகிய நாம் அவரை எவ்விதம் நிறைவாக பூஜிக்க முடியும்? சிவபெருமானுக்கு வஸ்திரம் உடுத்தி அழகுபார்க்க, கிரணங்களாகிய ஆயிரம் கரங்களைக் கொண்ட சூர்யபகவானா நாம்? தாமரை மலர்களைக் கொண்டு சிறப்பாக அர்ச்சிக்க நாம் என்ன மாதவனாகிய விஷ்ணுவா?
(ஒரு முறை சிவபெருமானுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு பூஜை செய்தபோது, ஒரு மலர் குறையவே, தமது தாமரைக் கண்களில் ஒன்றையே பறித்து பூஜையைக் குறைவின்றி முடித்தார் என்று புராணக் கதையொன்று உண்டு. சுதர்ஸனம் எனப்படும் சக்ராயுதத்தை சிவபெருமானிடமிருந்து வரமாகப் பெறுவதற்காக இந்த வழிபாட்டை விஷ்ணு நடத்தினார் என்பது புராணக் கதை.)
சிவபெருமானுக்கு சந்தனம், அகில் உள்ளிட்ட வாசனைப் பொருள்களைக் கொண்டு நிறைவாக பூஜை செய்ய, எங்கும் நிறைந்து மணத்தைப் பரப்புகின்ற, மருத்து எனப்படும் வாயு பகவானாகவா நாம் இருக்கிறோம்? தேவர்களுக்கு படைக்கப்படும் நிவேதனங்களை எடுத்துச் சென்று கொடுக்கும் அக்னி பகவானா நாம், சிவபெருமானுக்குச் சிறப்பாக அமுது படைக்க? உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் தோற்றத்திற்கு காரணமான ஹிரண்யகர்ப்பன் (பொன்சூலன்) எனப்படுகின்ற பிரும்மதேவனா நாம், சிவபூஜைக்குரிய பொருட்களையெல்லாம் சிறப்புடன் படைப்பதற்கு? பிறைசூடிய பெருமானே, நான் மிகவும் எளியவனாயிற்றே? என்று பக்தன் மலைக்கிறான். (எளியோனின் பூஜை எப்படிப் பட்டதாக இருந்தாலும், சிவபெருமானே நீர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று மறைமுகமாக இங்கே வாதாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.)
$$$