-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
29. பார்வை ஒன்றே போதுமே
.
த்வத்பாதாம்புஜ மர்ச்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யன்வஹம்
த்வாமீச’ம் ச’ரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ/
வீக்ஷாம் மே திச’ சாக்ஷுஷீம் ஸகருணாம் திவ்யைச்’சிரம் ப்ரார்த்திதாம்
ச’ம்போ லோககுரோ மதீயமனஸஸ் ஸௌக்யோபதேச’ம் குரு//
.
நின்பதம் போற்றுகின்றேன் நின்னையே நினைக்கின்றேன்
நின்னடி சரணடைந்தேன் நின்னிடத்தே வேண்டுகின்றேன்
விண்ணோரும் போற்றுகின்ற விழியருளைத் தருவீரே
என்னுள்ளே பேரின்பம் விழைந்திடச் செய்வீரே.
.
இறைவனின் கடாட்சம், மிகுந்த மகத்துவம் வாய்ந்தது. அவர் ஒரு பார்வை நம்மைப் பார்த்தால் போதாதா? ஓரப் பார்வை போதுமே! எல்லாத் துன்பங்களும் பறந்தோடிப் போகுமே! ஆயினும் முக்தி பெற, பேரின்பம் கிட்ட தீட்சை (குருவிடம் உபதேசம் பெறுவது) பெறுவது அவசியமாகிறது. கவலைப்பட வேண்டாம்! கருணா மூர்த்தியான சிவபெருமான் அதற்கும் வழி வைத்திருக்கிறார். அவரே லோக குருவாயிற்றே. குருவுக்கெல்லாம் அவரே மகாகுரு. ஆகையால் நமக்கு தீட்சையும் அவரே தந்துவிடுவார். அதுவும் தமது கருணைக் கடல்போன்ற கண் பார்வையாலேயே தந்துவிடுவார். அந்த விழியருளைத்தான் பக்தனுக்காக இங்கே வேண்டுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
சிவபெருமானின் பாதங்களைப் போற்றுகிறேன், அவரையே மனத்தில் நினைத்து தியானிக்கிறேன், அவரது திருவடியே கதியென்று சரணடைந்துவிட்டேன், அவரிடமே பிறவித் தளையில் இருந்து விடுதலையை வேண்டுகிறேன். அதற்கு வழிசெய்யும் வகையில், விண்ணில் உள்ள தேவர்கள் எல்லோரும் வியந்து போற்றுகின்ற தமது விழியருளை சிவபெருமான் என் மீது பாய்ச்சட்டும். அதன்மூலம் பேரின்பம் எனக்குள்ளே ஏற்படுமாறு செய்யட்டும்.
$$$