-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
16. கடைக்கண் காப்பாற்றும்
.
விரிஞ்சிர் தீர்காயுர் பவது பவதா தத்பரசி’ரஸ்
சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸ கலு புவி தைன்யம் லிகிதவான்/
விசார: கோ வா மாம் விச’த க்ருபயா பாதி சி’வ தே
கடாக்ஷ வ்யாபார: ஸ்வயமபி ச தீனாவனபர://
.
விருமனும் நீடூழி வாழட்டும் நின்னருளால்
விடுநான்கு தலைகளும் வீழாமல் இருக்கட்டும்
அவனன்றோ என்தலையில் ஏழ்மையை எழுதியது
சிவனேநின் கடைக்கண் போதுமெனைக் காத்திடவே.
.
விருமன் (விரிஞ்சியாகிய பிரம்மன்) நீடூழி வாழட்டும். சிவனே, உன்னுடைய அருளால், போனால் போகிறது என்று நீ விட்டுவைத்த அவரது எஞ்சியுள்ள நான்கு தலைகளும் விழாமல் இருக்கட்டும். இந்த பக்தனுக்காகக் கோபித்துக்கொண்டு பிரம்மனை நீ எதுவும் செய்துவிட வேண்டாம். ஏனெனில், அந்தப் பிரம்மன் அல்லவா, ஏழ்மையில் (அறியாமையில்) நான் உழலுமாறு மோசமான தலையெழுத்தை எழுதிவைத்தது? தலையெழுத்து எப்படி இருந்தால் என்ன? சிவபெருமானே, ஒரு கணம் உனது கடைக்கண் பார்வை என் மீது பட்டால் போதாதா? அதுவே என்னைப் பிறவிப் பெருங்கடலில் இருந்து காப்பாற்றி விடுமே? விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அந்த மதி (அறிவு) தோன்றுவதற்குக் கூட மதியைச் சூடிய எம்பெருமானின் கடைக்கண் பார்வை வேண்டும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” விதியை வென்று விடலாம்.
“விதியையும் விதித்தென்னை விதித்திட்ட மதியையும் விதித்து அம்மதி மாயையிற் பதியவைத்த பசுபதி நின்னருட் கதியை எப்படிக் கண்டு களிப்பதே” என்று தாயுமானவர் வினவியுள்ளார். அதற்கு பதில் அளிப்பதைப் போல, சிவனின் கடாட்சம் (கடைக்கண்) பட்டால் போதும் அவரோடு இணைகினற அருட்கதியைக் கண்டுகளிக்கலாம் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$