-மகாகவி பாரதி

அதிதீவிர ஹிந்துவான மகாகவி பாரதி, பிற சமயத் தெய்வங்களையும் மதித்துப் போற்றியவர்; அதுவே ஹிந்துவின் இயல்பும்கூட. கிறிஸ்தவ சமயத்தினரின் யேசு கிறிஸ்துவையும், இஸ்லாமிய சமயத்தவரின் அல்லாவையும் பாரதி பாடிய கவிதைகள் இவை…
பக்திப் பாடல்கள்
77. யேசு கிறிஸ்து
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்.
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேசமாமரியா மக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர் இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்;
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால். 1
அன்புகாண் மரியா மக்த லேநா
ஆவி காணிதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை;
அன்பெனும் மரியா மக்த லேநா
ஆஹ! சாலப் பெருங்கிளி யிஃதே. 2
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்;
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து;
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும். 3
$$$
78. அல்லா
பல்லவி
அல்லா! அல்லா! அல்லா!
சரணங்கள்
1. பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லாவெளி வானிலே!
நில்லாது சுழன்றோட! நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி!
(அல்லா, அல்லா, அல்லா!)
2. கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாதவராயினும் தவமில் லாதவ ராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச் செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)
.
(பாரதியின் பக்திப் பாடல்கள் நிறைவு)
$$$