-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
15. விதியை வெல்லும் சிவனருள்
.
உபேக்ஷா நோ சேத் கிந்ந ஹரஸி பவத்–த்யான விமுகாம்
துராசா’பூயிஷ்டாம் விதி லிபி மச’க்தோ யதிபவான்/
சி’ரஸ்தத்வைதாத்ரம் ந நகலு ஸுவ்ருத்த பசு’பதே
கதம் வா நிர்யத்னம் கரநக முகேனைவ லுலிதம்//
.
உனக்கென்ன வெறுப்போ? உன்தொழுதல் நோக்காமல்
உழலாசை மனதாமென் தலையெழுத்தேன் போக்கவில்லை?
சக்தியிலான் நீயென்றால் சதுர்முகத்தான் ஒருமுகத்தை
சட்டென்றே கைநகத்தால் கொய்ததுவும் எங்ஙனமே?
.
உயிர்களின் தலைவனாகிய பசுபதியே, உனக்கு என் மீது என்ன வெறுப்பு? அவ்விதம் வெறுப்பு இல்லையென்றால், என்னைக் காப்பாற்றும் விஷயத்தில் ஏனிப்படி பாராமுகமாய் இருக்கிறாய்? கெட்ட ஆசைகள் நிறைந்ததாயும், உன்னைத் தொழுது நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் எனது மனது உழல்கின்றதே? இவ்வாறான மனது எனக்குக் கிடைக்கும்படியாகச் செய்த பிரம்மன் எழுதிய தலையெழுத்தை நீ ஏனய்யா போக்கவில்லை?
நான் முற்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களின் அடிப்படையில் இவ்வாறாக எனது தலையெழுத்தை பிரம்மன் எழுதி வைத்துவிட்டார் என்றால், அதனை மாற்றுவதற்கு நீ என்ன சக்தி இல்லாதவனா? அவ்வாறு சக்தி இல்லாதவன் என்றால், முன்பொருமுறை சதுர்முகனின் (பிரம்மனின்) தலைகளில் ஒன்றை உனது கைவிரல் நகத்தாலேயே கிள்ளி எறிந்துவிட்டாயே, சிவபெருமானே? அது எவ்விதம் நிகழ்ந்தது? பிரம்மனின் தலையையே கிள்ளி எறியும் சக்தி படைத்த நீ, இந்த எளியேனின் தலையில் அவன் எழுத்தை அழித்து மாற்றிவிட முடியாதா என்ன? என்று வினவுகிறார் ஆதிசங்கரர். சிவபெருமானைச் சரண் புகுந்தால், நமது தலையெழுத்தும் மாறி, நற்கதி கிடைத்துவிடும் என்பதைத்தான் அவரிடமே கிண்டலாய் கேள்வி எழுப்புவதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார் ஆதிசங்கரர்.
$$$