வேள்வித் தீ பாடல்கள்

-மகாகவி பாரதி

மகாகவி பாரதி, யாகம் வளர்க்கும் தீ மீதான இப்பாடல்களில் பழங்கால முனிவர்களின் வேள்விப் பண்பாட்டை மிகவும் சிறப்பாகப் பதிவு செய்கிறார். வேதப் பாடல்களில் பாரதிக்கு இருந்த ஞானம் இப்பாடல்களில் வெளிப்படுகிறது. 

பக்திப் பாடல்கள்

74. தீ வளர்த்திடுவோம்!
(யாகப் பாட்டு)
ராகம் – புன்னாகவராளி

பல்லவி

தீ வளர்த்திடுவோம்! – பெருந்
தீ வளர்த்திடுவோம்!

சரணங்கள்

1. ஆவியி னுள்ளும் அறிவி னிடையிலும்
      அன்பை வளர்த்திடுவோம் – விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம் – களி
      ஆவல் வளர்த்திடுவோம் – ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
      செங்கதிர் வானவனை – விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப் – பெருந்திரள்
      சேர்ந்து பணிந்திடுவோம் – வாரீர்! (தீ)

2. சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
      தீமை யழிப்பவனை – நன்மை
சேர்த்துக் கொடுப்பவனை – பல
      சீர்க ளுடையவனைப் – புவி
அத்தனை யுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
      ஆரியர் நாயகனை – உருத்திரன்
அன்புத் திருமகனை – பெருந்திர
      ளாகிப் பணிந்திடுவோம் – வாரீர்! (தீ)

3. கட்டுகள் போக்கி விடுதலை தந்திடுங்
      கண்மணி போன்றவனை – எம்மைக்
காவல் புரிபவனைத் – தொல்லைக்
      காட்டை யழிப்பவனைத் – திசை
எட்டும் புகழ்வளர்ந்தோங்கிட – வித்தைகள்
      யாவும் பழகிடவே – புவிமிசை
இன்பம் பெருகிடவே – பெருந்திரள்
      எய்திப் பணிந்திடுவோம் – வாரீர் (தீ)

4. நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
      நீக்கிக் கொடுப்பவனை – உயிர்
நீளத் தருபவனை – ஒளிர்
      நேர்மைப் பெருங்கனலை – நித்தம்
அஞ்ச லஞ்சே லென்று கூறி எமக்குநல்
      ஆண்மை சமைப்பவனைப் – பல்வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப் – பெருந்திரள்
      ஆகிப் பணிந்திடுவோம் – வாரீர்! (தீ)

5. அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
      அழித்திடும் வானவனைச் – செய்கை
ஆற்றுமதிச் சுடரைத் – தடை
      யற்ற பெருந்திறலை – எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
      ஏற்றதோர் நல்லறமும் – கலந்தொளி
ஏற்றுந் தவக்கனலைப் – பெருந்திரள்
      எய்திப் பணிந்திடுவோம் – வாரீர்! (தீ)

6. வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
      மண்டி யெழுந்தழலைக் – கவி
வாணர்க்கு நல்லமுதைத் – தொழில்
      வண்ணந் தெரிந்தவனை – நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
      தீம்பழம் யாவினையும் – இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப் – பெருந்திரள்
      சேர்ந்து பணிந்திடுவோம் – வாரீர்! (தீ)

7. சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
      தேவத் திருமகளிர் – இன்பத்
தேக்கிடுந் தேனிசைகள் – சுவை
      தேறிடு நல்லிளமை – நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
      முழுக்குடம் பற்பலவும் – இங்கேதர
முற்பட்டு நிற்பவனைப் – பெருந்திரள்
      மொய்த்துப் பணிந்திடுவோம் வாரீர்! (தீ)

$$$

75. வேள்வித் தீ

ராகம் – நாதநாமக்கிரியை; தாளம் – சதுஸ்ர ஏகம்

ரிஷிகள்: எங்கள் வேள்விக் கூடமீதில்
      ஏறுதே தீ! தீ! – இந்நேரம்
பங்க முற்றே பேய்க ளோடப்
      பாயுதே தீ! தீ! இந்நேரம் 1

அசுரர்: தோழரே, நம் ஆவி வேகச்
      சூழுதே தீ! தீ! – ஐயோ! நாம்
வாழ வந்த காடு வேக
      வந்ததே தீ! தீ! – அம்மாவோ! 2

ரிஷிகள்: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
      போந்து விட்டானே! – இந்நேரம்
சின்ன மாகிப் பொய் யரக்கர்
      சிந்தி வீழ்வாரே! – இந்நேரம் 3

அசுரர்: இந்திராதி தேவர் தம்மை
      ஏசி வாழ்ந்தோமே – ஐயோ! நாம்
வெந்து போக மானிடர்க்கோர்
      வேதமுண்டாமோ! – அம்மாவோ! 4

ரிஷிகள்: வானை நோக்கிக் கைகள் தூக்கி
      வளருதே தீ! தீ! – இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
      நண்ணி விட்டாளே! – இந்நேரம் 5

அசுரர்: கோடி நாளாய் இவ்வனத்திற்
      கூடி வாழ்ந்தோமே – ஐயோ! நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
      பண்பிழந் தோமே! – அம்மாவோ! 6

ரிஷிகள்: காட்டில் மேயுங் காளை போன்றான்
      காணுவீர் தீ! தீ! – இந்நேரம்
ஓட்டியோட்டிப் பகையை யெல்லாம்
      வாட்டு கின்றானே! – இந்நேரம் 7

அசுரர்: வலி யிலாதார் மாந்த ரென்று
      மகிழ்ந்து வாழ்ந்தோமே – ஐயோ! நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
      கண்டு கொண்டாரே! – அம்மாவோ! 8

ரிஷிகள்: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
      வாய்திறந் தானே! – இந்நேரம்
மலியு நெய்யுந் தேனுமுண்டு
      மகிழ வந்தானே! – இந்நேரம் 9

அசுரர்: உயிரை விட்டும் உணர்வை விட்டும்
      ஓடி வந்தோமே – ஐயோ! நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
      தோன்றி விட்டானே! – அம்மாவோ! 10

ரிஷிகள்: அமரர் தூதன் சமர நாதன்
      ஆர்த் தெழுந்தானே! – இந்நேரம்
குமரி மைந்தன் எமது வாழ்விற்
      கோயில் கொண்டானே! – இந்நேரம் 11

அசுரர்: வருணன் மித்ரன் அர்ய மானும்
      மதுவை உண்பாரே – ஐயோ! நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
      பின்னி மாய்வோமே! – அம்மாவோ! 12

ரிஷிகள்: அமர ரெல்லாம் வந்து நம்முன்
      அவிகள் கொண்டாரே! – இந்நேரம்
நமனு மில்லை பகையு மில்லை
      நன்மை கண்டோமே! – இந்நேரம் 13

அசுரர்: பகனு மிங்கே யின்ப மெய்திப்
      பாடுகின்றானே – ஐயோ! நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
      பொங்கல் கண்டீரோ! – அம்மாவோ! 14

ரிஷிகள்: இளையும் வந்தாள் கவிதை வந்தாள்
      இரவி வந்தானே! – இந்நேரம்
விளையுமெங்கள் தீயினாலே
      மேன்மையுற்றோமே! – இந்நேரம் 15

ரிஷிகள்: அன்ன முண்பீரே பாலும் நெய்யும்
      அமுது முண்பீரே! – இந்நேரம்
மின்னி நின்றீர் தேவ ரெங்கள்
      வேள்வி கொள்வீரே! – இந்நேரம் 16

ரிஷிகள்: சோமமுண்டு தேர்வு நல்கும்
      ஜோதி பெற்றோமே! – இந்நேரம்
தீமை தீர்ந்தே வாழியின்பஞ்
      சேர்த்து விட்டோமே! – இந்நேரம் 17

ரிஷிகள்: உடலுயிர்மே லுணர்விலுந் தீ
      ஓங்கி விட்டானே! – இந்நேரம்
கடவுளர் தாம் எம்மை வாழ்த்தி
      கை கொடுத்தாரே! – இந்நேரம் 18

ரிஷிகள்: எங்கும் வேள்வி அமர ரெங்கும்
      யாங்கணும் தீ! தீ! – இந்நேரம்
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
      சார்ந்து நின்றோமே! – இந்நேரம் 19

ரிஷிகள்: வாழ்க தேவர்! – வாழ்க வேள்வி!
      மாந்தர் வாழ்வாரே! – இந்நேரம்
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
      வாழ்க தீ! தீ! தீ! – இந்நேரம் 20

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s