-திருநின்றவூர் ரவிகுமார்

7. ‘விஜய்’ நாயகன்
18 ஆயிரம் அடி உயரத்தில் எதிரி. அங்கிருந்து ஆளுக்கொரு தோட்டா என்று துல்லியமாகக் கொல்ல முடிந்தது. அந்தக் கடினமான சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து மலை மீதேறி எதிரிகளை வேட்டையாடிய இந்திய வீரர்களின் அபாரமான செயலைக் கண்டு உலகமே வியந்தது. இது நடந்தது 1999-இல் கார்கிலில். அந்தப் போரை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியவர் இந்திய ராணுவ தளபதியான ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக். அதன் பிறகு பல நாடுகளில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் ‘கார்கில் விஜயம்’ ஓர் அங்கமாக மாறியது.
ஜெனரல் பிரகாஷ் மாலிக் இந்திய ராணுவத்தின் 19 வது தலைமைத் தளபதி. இன்றைய பாகிஸ்தானில் பிரிவினைக்கு முன் பிறந்தவர். 1997 செப்டம்பரில் இருந்து 2000 செப்டம்பர் வரையில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தார். நகைமுரணான ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட முடியும். இந்தியாவில் பிறந்து பிரிவினைக்குப் பலகாலம் பின் பாகிஸ்தானில் குடியேறி, அங்கு ராணுவத்தில் சேர்ந்து தளபதியானவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். அவர்தான் கார்கில் போருக்குக் காரணம்.

அணு ஆயுதம் ஒரு தற்காப்புக்காகவே என்றது இந்தியா. அணுகுண்டு அழகு பார்ப்பதற்கு அல்ல, தேவைப்பட்டால் எதிரி மீது போடுவோம் என்பது பாகிஸ்தானின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு. இரண்டும் 1998-இல் அணு ஆயுத நாடுகளாக வெளிப்படையாக அறியப்பட்டவை. இந்நிலையில்தான் கார்கில் போர் நடந்தது.
ஆரம்பத்தில் இந்தியா தன் விமானப்படையைப் பயன்படுத்தவில்லை. நம் எல்லைக்குள் வந்த எதிரியை அகற்ற வேண்டும். ஆனால் எல்லை தாண்டிச் சென்று தாக்கக் கூடாது என்று இந்திய ராணுவத்திற்கு அரசியல் தலைமை உறுதியாகக் கட்டளையிட்டு விட்டது. கைகள் கட்டப்பட்ட நிலையில் போரில் ஈடுபட்டது இந்திய ராணுவம். பிறகு ஹெலிகாப்டரில் இருந்து சுடுவது அதன் பிறகு நம் நாட்டின் எல்லைக்குள் இருந்தபடியே பாகிஸ்தானியர்கள் இருக்கும் மலை முகடுகள் மீது விமான தாக்குதல் என்று படிப்படியாக விமானப் படையும் போரில் ஈடுபடுத்தப்பட்டது. இறுதியில் இந்தியா வென்றது. அது ‘விஜய் திவஸ்’ (வெற்றி தினம் – ஜூலை 26 ) என்று கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் 1989-இல் அதி விஷிஷ்ட சேவா மெடல், ஆகஸ்ட் 1996-இல் பரம் விஷிஷ்ட சேவா மெடல் ஆகிய விருதுகளைப் பெற்ற ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக்கின் தலைமை கார்கில் போருக்கு பின்பு சர்வதேச அரங்கில் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
தலைமைப் பண்புகளை பற்றி இவர் கூறுபவை:
”ஐந்து பேருக்கு தலைவனாக இருப்பதும் ஐந்து கோடிப் பேருக்கு தலைவனாக இருப்பதும் ஒன்றுதான். தலைமைப் பண்பில் மாற்றம் கிடையாது. உங்களுக்கு அடுத்ததாக/அருகில் இருக்கும் சகாக்களுக்கு மட்டும் தலைவர் அல்ல நீங்கள். உங்கள் கீழ் உள்ள எல்லோருக்கும் நீங்கள்தான் தலைவர். ஒவ்வொருவர் சொல்வதையும் நீங்கள் கேட்க வேண்டும்.”
“தலைமை ராணுவத் தளபதி என்பது படிநிலைகளில் மிக உயரத்தில் இருப்பது. சுலபத்தில் யாரும் அணுகி பேச முடியாது. கார்கில் போரின் போது ஒரு லெப்டினன்ட் கர்னல் எனக்கொரு கடிதம் எழுதினார். அவரது படைப்பிரிவு வேறு இடத்திற்கு மாற்றல் ஆகும் நேரத்தில் மாற்றல் ரத்து செய்யப்பட்டு தாக்கல் செய்யும்படி உத்தரவிட பட்டுள்ளதாகவும் ஆனால் தனது படையினரிடம் தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதம் என்னைக் கலங்கச் செய்தது. நான் மறுநாள் காலை ஸ்ரீநகருக்குப் பறந்தேன். கள நிலவரத்தை ஆராய்ந்தேன். ஆயுதப் பற்றாக்குறை பற்றித் தெரிந்து கொண்டேன். கொல்கத்தா, சென்னை, இன்னும் சில இடங்களில் இருந்து ஆயுதங்களை உடனடியாக நான் வரவழைத்தேன். கிளம்பும்போது அந்த அதிகாரி படிநிலைகளைக் கடந்து எனக்கு கடிதம் எழுதியதற்காக தண்டிக்க வேண்டாம். அவரால்தான் எனக்கு சூழ்நிலை புரிந்தது என்று கூறிவிட்டுச் சென்றேன். பின்னாளில் அவர் பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்” என்கிறார் ஜெனரல்.

தலைமை என்பதில் அறிவு 20 %; அணுகுமுறை என்பது 80 % என்று கூறும் தளபதி மாலிக், “நீங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும். எல்லோரையும் அரவணைத்துச் செல்பவராக, அவர்களை மதிப்பவராக இருக்க வேண்டும். அதே வேளையில் நீங்கள் சொல்வது வாய்மொழியில் மட்டுமன்றி உடல்மொழியிலும் தெளிவாக இருக்க வேண்டும்” என்கிறார்.
“தலைமை என்பதில் நடத்தையின் பங்கு முக்கியம். நல்லது கெட்டது இரண்டும் சேர்ந்ததுதான் ஆளுமை. ஆனால் நல்லது அதிகமாகவும் தீயது குறைவாகவும் இருக்க வேண்டும். அது வெளிப்படவும் வேண்டும்.”
”ராணுவத் தளபதியாக நான் யாரிடமும் எந்தப் பரிசும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு பெறுவது முறையல்ல என்றும் கருதினேன். அதை வெளிப்படையாகச் சொல்லியும் உள்ளேன். ஒருமுறை தீபாவளியின் போது ஒரு அதிகாரி உலர் பழங்களையும் உயர்வகை மதுபானங்களையும் கூடை நிறைய எனக்கு அனுப்பியிருந்தார். நான் அதை அவருக்கு திருப்பி அனுப்பினேன். ‘இனி இதுபோல் செய்ய வேண்டாம்’என்ற கடிதத்துடன்” என்கிறார் அவர்.
“தலைமை என்பது எப்போதும் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கக் கூடாது. அது எப்பொழுதும் நம்பிக்கைக்கு, மாற்றத்திற்கு, வெற்றிக்கு குறியீடாக நிற்க வேண்டும். கார்கில் போர் துவங்கியபோது எல்லோரும் அச்சப்பட்டார்கள். ஆனால் இறுதியில் எல்லோர் முகத்திலும் புன்னகை” என்கிறார்.
“தலைவராக யாரும் பிறப்பதில்லை; உருவாகிறார்கள். தலைமை என்பது வெள்ளித்தட்டில் வைத்து கொடுக்கப் படுவதில்லை. தங்கள் வாழ்க்கை அனுபவத்தினால் ஒருவர் அதனை உருவாக்குகிறார். கார்கில் போரின் துவக்கத்தில் எதிரி யார் என்றே தெரியவில்லை. பாகிஸ்தான் ராணுவமா, பயங்கரவாதிகளா என்று தெளிவாகத் தெரியவில்லை. எதிர்கொள்வதில் இரண்டுக்கும் நம் நாட்டில் வெவ்வேறு அணுகுமுறை உள்ளது. எனவே எதிரி பாகிஸ்தான் ராணுவம்தான் என்று தெளிவாகத் தெரிந்த பிறகே போர்த் திட்டத்துடன் அரசை அணுகினேன்”
ராணுவ அமைச்சராக முலாயம் சிங் இருந்தபோது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கவும் சிலரது பதவி உயர்வை நிறுத்தவும் முயற்சித்தார். அதை எதிர்கொண்டு தன் தலைமை பண்பை நிறுவியவர் ஜென்ரல் வேத் பிரகாஷ் மாலிக்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அரசுக்கு ஆலோசகராக உள்ளார். இவரிடம் சீனாவைப் பற்றி கேட்டபோது, “லடாக்கில் அவர்கள் ஊடுருவல் செய்தபோது அதை முறியடித்து அவர்களுக்கு ஓர் உறுதியான செய்தியை அளித்தோம். அது இதற்கு முன் நடந்ததில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த அணுகுமுறை இப்போது மாறிவிட்டது. அன்று, போட்டி போட வேண்டாம், மோத வேண்டாம், இணக்கமான கூட்டுறவு முறையைக் கையாளுவோம் என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர். அதற்கேற்ப ராணுவமும் செயல்பட வேண்டியிருந்தது. அது தாஜா செய்யும் நிலை என்று கருதும் அளவுக்கு இருந்தது” என்கிறார்.
“இன்று நிலைமை அப்படி அல்ல. இப்போதுள்ள பிரதமரும் அவரது சகாக்களும் வேறுவிதமாகச் செயல்படுகிறார்கள். வம்புக்குப் போக மாட்டோம், வந்தால் விட மாட்டோம் என்ற அணுகுமுறை வந்துள்ளது. ராணுவத்தில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் போட்டியை எதிர்கொள்கிறோம். ராஜதந்திர ரீதியிலும் குவாட், ஒரே மாதிரியான மனநிலை கொண்ட நாடுகளுடன் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு என்று நம்முடைய கொள்கையிலேயே தலைகீழ் மாற்றங்கள் வந்துள்ளன. அது ராணுவப் பேச்சுவார்த்தைகளில் கூட வெளிப்படுகிறது…
“அதேபோல பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த நாட்டுக்குள்ளேயே சென்று நடத்திய துல்லியத் தாக்குதல். இவை எல்லாம் மாற்றத்தை உரக்கச் சொல்கின்றன. இது நல்ல மாற்றம்” என்கிறார் ‘விஜய்’ நாயகர் வேத் பிரகாஷ் மாலிக்.

இவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இவரது மனைவி டாக்டர் ரஞ்சனாவும் ராணுவத்தில் மருத்துவப் பிரிவில் கேப்டனாகப் பணியாற்றி உள்ளார். ராணுவ சேவைக்குப் பிறகு ஓஎன்ஜிசி-யில் இயக்குனராக இருந்தார். கணவர் ராணுவ தலைமைத் தளபதியாக ஆனதும் அந்தப் பதவியில் இருந்து விலகினார். தளபதியின் மனைவி என்ற வகையில் ராணுவத்தினரின் மனைவியர் நலச்சங்கத்தின் (Army Wives Welfare Association) பொறுப்பாளராக சேவை செய்யத் துவங்கினார். முன்னோடியான ஒரு திட்டத்தை இவர் ராணுவத்தில் அறிமுகம் செய்தார். அது பற்றி அவரே சொல்லியது இது:
“கார்கில் போருக்குப் பின் இரண்டு இளம் விதவைகள் என் அலுவலகத்திற்கு வந்தனர். தங்கள் கணவர் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்ததாகவும் அவருடைய முழுமையான ஓய்வூதியம் தங்களுக்குக் கிடைப்பதாகவும் கூறினார்கள். அது தங்கள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் என்றாலும் தாங்கள் அதில் வாழ விரும்பவில்லை என்றார்கள். தங்கள் கணவரைப் போல ராணுவத்தில் சேர்ந்து தேச சேவை செய்ய விரும்புவதாகக் கூறினார்கள். நான் வியப்பில் உறைந்து போனேன்…
“ஆனால் ராணுவத்தில் அப்படி சேர விதிமுறைகள் இல்லை என்பது எனக்கு தெரியும். உடனே என் கணவரிடம் இதைப் பற்றி சொல்லி, ஏதாவது செய்ய வேண்டும் என்றேன். அவரும் அமைச்சகத்துடன் பேசினார். விதிமுறையில் மாற்றம் வந்தது. ஆனால் அந்தப் பெண்களுக்கு தகுதித்தேர்விலோ பயிற்சியிலோ எந்தவிதமான சமரசமும் கிடையாது என்பதைச் சொல்லி விட்டோம். அவர்கள் அதை ஏற்று நுழைவுத் தேர்விலும் கடினமான பயிற்சியிலும் தேறி ராணுவ அதிகாரிகளானார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது” என்கிறார் டாக்டர் ரஞ்சனா. இப்போது சுமார் 75-80 பெண் அதிகாரிகள் இந்தவகையில் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.
இத் தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் தன்னைப் போலவே ராணுவத்தில் சேர்ந்து, தான் பணிபுரிந்த சீக்கிய லைட் படைப்பிரிவில் பணி புரிவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ஜெனரல். தன் மகன் ராணுவ மருத்துவப் பிரிவில் பணியாற்றும் ஒரு டாக்டரை திருமணம் செய்து கொண்டதைக் குறிப்பிட்டு, தன் வளர்ப்பு சரியாகத்தான் இருக்கிறது என்று பெருமையுடன் கூறுகிறார் டாக்டர் ரஞ்சனா. அமெரிக்காவில் நடந்த தனது மகள் திருமணத்திற்குப் போகாததை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார் ஜெனரல். காரணம் அப்போது பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்தியா செய்ததால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பல விதமான தடைகளை விதித்திருந்ததைக் குறிப்பிடும் அவர், அணு ஆயுதம் பற்றி இன்றும் பேச மறுக்கிறார். இது தான் தலைமைப் பண்பு.
$$$