சிவகளிப் பேரலை- 13

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

13. ஏழைப் பங்காளன் சிவபெருமான்

.

அஸாரே ஸம்ஸாரே நிஜஜனதூரே ஜடதியா

ப்ரமந்தம் மாமந்தம் பரமக்ருபயா பாதுமுசிதம்/

மதன்ய: கோ தீன-ஸ்தவ க்ருபண ரக்ஷதிநிபுணஸ்

த்வதன்ய: கோ வா மே த்ரிஜகதி ச’ரண்ய பசு’பதே//

.

பயனிலா மெய்த்தவமிலா பிறவிச்சுழலில் மூடமதியால்

புகுந்துழல் குருடன்யான் பொழிவாயே நின்கருணை

எனைவிட வேறொருவர் ஏழையோ நின்தயைக்கு?

நினைவிட வேறுதெய்வம் மூவுலகில் எனக்காரே? 

.

     பொய்யான உடலை மெய்யெனக் கருதுவதால் சம்சாரச் சுழல் எனப்படும் பிறவிப் பெருங்கடல் ஏற்படுகிறது. இந்தப் பிறவிச் சுழலால் எள்ளளவும் பயனில்லை. மேலும், உண்மையான ஆன்ம சாதனை, தவம் இல்லாததால்தான் இந்தப் பிறவிச் சுழல் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொள்வதற்கு, விவேகமற்ற நமது மூடமதிதான், அறியாமைதான் காரணம். ஆகையால் தோன்றி மறையக் கூடிய இந்த வாழ்க்கையை நிலையானது என்றும் நிஜமானது என்றும் நினைத்துக்கொண்டு குருட்டுத்தனமாகச் செயல்படுவதால், பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட குருடர்களில் ஒருவனான என் மீது சிவபெருமானே உனது கருணையைப் பொழிந்துவிடு என்று நமக்காக வேண்டுகிறார் ஆதிசங்கரர்.

     மேலும், சிவபெருமான் தீனர்களுக்கு, ஏழைகளுக்கு, பராரிகளுக்குத்தான் மிகவும் இரங்கி அருள்புரிவார். ஆகையால், உனது அருளைப் பெற, ஏழைப் பங்களனாகிய சிவபெருமானே, எனைவிட மிகத் தகுதியானவர் யார்? என்று வினவுகிறார். உன்னைவிட்டால், இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு, மிகச் சிறந்த தெய்வம் இந்த மூவுலகிலே வேறு யார் இருக்கிறார்கள்? என்றும் நமக்காகக் கேட்டு வாதிடுகிறார்.  என்போல் எளியவரும் எங்கெங்கு பார்த்தாலும் உன்போல் வலியவரும் உண்டோ பராபரமே” என்று தாயுமானவர் கேட்டதையும் இங்கே ஒப்புநோக்கலாம்.

     (மூவுலகை, பூலோகம், பாதாள லோகம், மேலோகம் என்று கூறுவார்கள். இதனை முறையே புறவுலகம், அகவுலகம், கனவுலகம்  என்றும் எடுத்துக்கொள்ளலாம்.)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s