சந்திரன் மீதான பாடல்கள்

-மகாகவி பாரதி

நிலவைப் பாடாத கவிஞர் இல்லை. மகாகவி பாரதியோ நிலவினை பக்திப் பெருக்குடன் பாடி மகிழ்கிறார். அவரது 72, 73 வது பக்திப் பாடல்கள் வேறு தனிச்சுவையும் தருபவை…

பக்திப் பாடல்கள்

72. சோமதேவன் புகழ்

பல்லவி

ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா!
ஜய ஜய!

சரணம்

நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
      வயமிக்க அசு ரரின் மாயையைச் சுட்டாய்,
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
      துயர் நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
      உயவேண்டி இருவருளம் ஒன்றுறக் கோப்பாய்;
புயலிருண் டேகு முறி யிருள்வீசி வரல்போற்
      பொய்த்திரள் வருவதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)

$$$

73. வெண்ணிலாவே

எல்லை யில்லாதோர் வானக் கடலிடை
      வெண்ணிலாவே! – விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
      வெண்ணிலாவே!
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
      வெண்ணிலாவே! – நின்றன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
      வெண்ணிலாவே!
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
      வெண்ணிலாவே! – இந்த
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
      வெண்ணிலாவே!
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
      வெண்ணிலாவே! – வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
      வெண்ணிலாவே! 1

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
      வெண்ணிலாவே! – அஃது
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
      வெண்ணிலாவே!
காத லொருத்தி இளைய பிராயத்தள்
      வெண்ணிலாவே! – அந்தக்
காமன்றன் வில்லை யிணைத்த புருவத்தள்
      வெண்ணிலாவே!
மீதெழும் அன்பின் விளைபுன் னகையினள்
      வெண்ணிலாவே! – முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தின் எழிலிங்கு
      வெண்ணிலாவே!
சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
      வெண்ணிலாவே! – நின்
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்
      வெண்ணிலாவே! 2

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
      வெண்ணிலாவே! – நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
      வெண்ணிலாவே!
மன்னு பொருள்க ளனைத்திலும் நிற்பவன்
      வெண்ணிலாவே! – அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
      வெண்ணிலாவே!
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
      வெண்ணிலாவே! – இங்கு
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்
      வெண்ணிலாவே!
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
      வெண்ணிலாவே! – நல்ல
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
      வெண்ணிலாவே! 3

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
      வெண்ணிலாவே! – நினைக்
காதல் செய்வார் நெஞ்சிற் கின்னமு தாகுவை
      வெண்ணிலாவே!
சீத மணிநெடு வானக் குளத்திடை
      வெண்ணிலாவே! – நீ
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
      வெண்ணிலாவே!
மோத வருங்கரு மேகத் திரளினை
      வெண்ணிலாவே! – நீ
முத்தி னொளிதந் தழகுறச் செய்குவை
      வெண்ணிலாவே!
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
      வெண்ணிலாவே! – நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ
      வெண்ணிலாவே! 4

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
      வெண்ணிலாவே! – உன்றன்
மேனி யழகு மிகைபடக் காணுது
      வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
      வெண்ணிலாவே! – மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
      வெண்ணிலாவே!
சொல்லிய வார்த்தையில் நாணுற்றனை போலும்
      வெண்ணிலாவே! – நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
      வெண்ணிலாவே!
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
      வெண்ணிலாவே! – இருள்
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
      வெண்ணிலாவே! 5

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s