-எஸ்.எஸ்.மகாதேவன்

5. கிராமங்களும் நானும்
விதுராஸ்வத்தம்:
ஒரு கிராமம். ஊர் நடுவே மகாபாரத விதுரர் நட்டுவைத்த அஸ்வத்த விருட்சம் (அரசமரம்) ஓங்கி வளர்ந்து நிற்கிறது. அதை வைத்தே இந்த ஊர் விதுராஸ்வத்தம் என்று அழைக்கப்படுகிறது . ஊரில் இந்தக் கலாச்சார வரலாறு மட்டுமல்ல சுதந்திரப் போராட்ட வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் தென்கிழக்கு மூலையில் ஆந்திரப் பிரதேச மாநில எல்லை அருகே சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமம் மைசூர் சமஸ்தானத்தில் (மன்னராட்சிப் பகுதி) இருந்தது. 1938இல் சுதந்திரப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியிருந்த நேரம். சமஸ்தானத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் தொண்டர்கள் சுயராஜ்யக் கொடியேற்றும் போராட்டத்தை மேற்கொண்டார்கள். துவஜ சத்தியாகிரகம் என்று அதற்குப் பெயர். ஏப்ரல் 25 அன்று விதுராஸ்வத்தம் கிராமத்தின் மையப் பகுதியில் மக்கள் கொடி ஏற்றுவதற்காக ஒன்று கூடினார்கள். மைசூர் சமஸ்தானத்தின் திவான் மிர்ஸா இஸ்மாயில் ஏவிவிட்ட போலீஸ் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது; 96 ரவுண்டு சுட்டதில் 32 சத்தியாக்கிரஹிகள் கொல்லப்பட்டார்கள். ‘தென் பாரதத்தின் ஜாலியன் வாலாபாக்’ என்று இந்த ஊர் அறியப்படலாயிற்று. போலீஸ் கெடுபிடி அதிகரித்தால் ஊரைத் தழுவியபடி பாயும் நதியை கடந்து ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தின் எல்லைக்குள் போய்விடலாம் என்று மக்கள் வைத்திருந்த திட்டம் நிறைவேறவில்லை. அங்கே ஒரு நினைவுத் தூண் அந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை நமக்கு நினைவூட்டி நிற்கிறது.
மணக்கரை:
தமிழர்களின் சமையலறைகளில் எவர்சில்வர் எட்டிப்பார்க்காத 1950களின் தொடக்கக் காலம். பிளாஸ்டிக் தம்ளர் பற்றிய பேச்சே இல்லை. தொலைதூர குக்கிராமம் என்பார்களே, அப்படி ஒரு ஊர் மணக்கரை. திருநெல்வேலி மாவட்டத்துக்குள் வயலுக்கும் ஏதோ ஒரு மலைத்தொடருக்கும் இடையே பொதிந்து வைத்தது போலக் காட்சியளித்தது. செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து தந்தையார் விரல் பிடித்து தளர்நடை இட்டு பல மைல் தூரத்திற்கு நடைபயணம். எட்டு வயது சிறுவன் நான். நெளிந்து வளைந்து போகும் வரப்பு மேலேயே நடக்க வேண்டியிருந்ததால் தளர்நடை. மணக்கரையில் ஒரு திருவிழா. திருவிழா முடிந்ததும் ஊர்க்காரர்கள் பந்திகளில் அமர்ந்து பிரசாதம் எடுத்துக் கொண்டார்கள். சாப்பிடுகிறவர்களுக்கு தண்ணீர் பரிமாறிய விதம் தான் பளிச்சென்று ஞாபகம் வருகிறது. மண் குடுவையில் கீழ்ப்புறமாக ஒரு தொளையிட்டு அதில் முற்றிய பூவரசம் இலையை குழாய் போல சுருட்டி சொருகி தண்ணீர் நிரப்பிக்கொண்டு பந்தி நெடுக “கங்கா ஜலம்!” என்று உரத்த குரலில் அறிவித்தபடி போய் வந்து கொண்டிருந்தார்கள். தேவைப்பட்டவர்கள் கையை வாயருகே கிண்ணம் போல வைத்து காத்திருந்தார்கள். கங்கா ஜலம் என்ற முழக்கம் தான் எனக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்தியது மண் குடுவையில் இருப்பது மிஞ்சிப்போனால் தாமிரபரணி நதியிலிருந்து கிளைத்த ஒரு பாசனக் கால்வாய் தண்ணீர். கங்கை ஓடுவதோ வடக்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால். ஆனால் மணக்கரை மனிதர்களுக்கு தங்கள் ஊர் தண்ணீரை கங்கை என்று அழைத்து கௌரவிக்க அப்படி ஒரு ஆசை! சகஜமான இந்த அகில பாரதக் கண்ணோட்டம்தான் எந்தப் பிரிவினைவாதத்தையும் வேரறுக்கக் கூடியது என்று எனக்கு இப்போது புரிகிறது.
மல்லியங்கரணை:
சென்னையின் தலைசிறந்த விவேகானந்த வித்யாலயா பள்ளிகளின் ஆசிரிய- ஆசிரியை பெருமக்கள் 100 பேர், சில ஆண்டுகளுக்கு முன் காலை முதல் மாலை வரை காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தலத்தை அடுத்த மல்லியங்கரணை கிராமத்தில் தங்கியிருந்து ஆசிரியப் பணி குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்த நிகழ்வுக்கு நானும் சென்றிருந்தேன். கற்றுக் கொடுப்பவர்கள் கற்றுக் கொள்கிற சுவாரஸ்யமான காட்சி ஒன்று என் கண்ணில் பட்டது. முற்பகல் அமர்வுகள் முடிந்து பகல் உணவுக்கு முன்னதாக அங்கிருந்த கோசாலை சென்றோம். கோமாதாவுக்குக் கொடுப்பதற்காக ஒவ்வொருவரும் கைநிறைய புல் எடுத்துக் கொண்டோம். பசு மாட்டிற்கு அருகில் போகத் துணியாத சில ஆசிரியர்கள் புல்லை கோமாதா முன்பாக தூக்கிப் போட்டார்கள். அப்போது கோசாலை நிர்வாகியான முதியவர் வந்து, அம்மா குழந்தைக்கு கவளம் கவளமாகச் சோறு ஊட்டுவது போல கோ மாதாவுக்கு அகத்திக் கீரையை அல்லது புல்லை ஊட்ட வேண்டும் என்று சொல்லிவிட்டு செய்து காட்டினர். புல்கட்டின் ஒரு முனையை கையில் பிடித்தபடி மறுமுனையை கோமாதாவின் வாயருகே கொண்டு சென்றார். கோமாதா புல்லை மென்று மென்று விழுங்க விழுங்க புல்கட்டை அருகே அருகே கொண்டு போனார் (ஹோமம் செய்யும்போது அக்னியில் சமித்துக் குச்சியை சிறிது சிறிதாக உள்நோக்கி கொண்டுபோய் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கோ மாதாவுக்கு புல் சமர்ப்பிப்பது போல என்று உதாரணம் காட்டுகிறது வேதம்!). அடுத்து, கிராமத்தார் உபயமாக அனைவருக்கும் பகலுணவு. சாப்பிட்டு எழுந்து கை கழுவும் இடத்தில் கிராம மக்களின் நயத்தகு நாகரிகம் என்னைக் கவர்ந்தது. வந்திருந்த ஆசிரிய- ஆசிரியை பெருமக்கள் அணிந்திருந்த பாண்ட், சேலை நனையாமல் கை கழுவ வேண்டும் என்பதற்காக கை கழுவும் இடத்தில் தண்ணீர் தரையில் சிந்தி உடையில் தெறிக்காமல் இருக்க கனமாக வைக்கோலைப் பரப்பி வைத்திருந்தார்கள் கிராமத்து அன்பர்கள். என்ன ஒரு அனுசரணை என்று வியந்து கொண்டேன்.
மேலூர்:
மதுரை வட்டாரத்தில் மக்களின் குல சாமி மதுரைவீரன். மதுரையை அடுத்த மேலூரில் உள்ள மதுரைவீரன் கோயில், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஊர் மக்கள் ஒன்றுகூடி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்கள். கோயிலைத் தொடாமல் சாலை விரிவாக்கம் நிறைவேற வேண்டுமானால் நூறு வீடுகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். மக்கள் துளிக்கூட தயங்காமல் தங்கள் வீடுகளை இடித்து சாலைக்கு வழி விடுவதாக அறிவித்ததோடு நில்லாமல் தங்கள் வீடுகளை இடிக்கவும் தொடங்கினார்கள். தங்களுடைய குல சாமி கோயில் மீது யாரும் கைவைக்கக் கூடாது என்பது அந்த தியாக மூர்த்திகளின் திட உறுதி. 2007 பிப்ரவரி 9 தினமலரில் வெளியான இந்த செய்தியை படித்துவிட்டு ஒரு பெரியவர் சொன்னார்: “ஹிந்துக்களுக்கும் திருக்கோயில்களுக்கும் உள்ள உறவு, வழிபடுவோருக்கும் வழிபாட்டுத் தலத்திற்கும் உள்ள உறவு அல்ல. அது தொப்புள் கொடி உறவு.” துல்லியம்!
ஒரு வேண்டுகோள்: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் ஒரு சில ஊர்களில் கிடைத்த அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டேன். கிராம மக்களும் கிராமச் சூழலும் தரும் அனுபவம் எல்லையற்றது. ஒரு குறிப்பிட்ட காட்சி தமிழகத்தின் ஏதாவது ஒரு கிராமத்தில் தென்படுகிறதா (அல்லது தென்பட்டதுண்டா) என்று இந்த அனுபவத் தொகுப்பைக் கண்ணுறும் அன்பர் யாராவது எனக்கு (mavaraja@gmail.com) தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன். விஷயம் இதுதான்: அறுவடை நாளில் வயலிலிருந்து கதிர்களை அறுக்கும்போது ஆங்காங்கே ஒருசில கதிர்களை அறுக்காமல் விட்டு வைப்பார்கள். பொழுது சாய்ந்த பின் ஊருக்குள் ஏழைகளாக ஆனால் கையேந்த விரும்பாத மானிகளாக வாழும் பெருமக்கள் வந்து அவற்றை சேகரித்துக் கொண்டு செல்வார்கள். (அப்படி வயலிலேயே விட்டு வைக்கப்படும் கதிர் ’சீட்டைக் கதிர்’ என்கிறது தமிழ் லெக்சிகன் என்னும் பேரகராதி).
$$$