-எஸ்.வையாபுரிப் பிள்ளை

7. குறுந்தொகை*
* கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா வெளியீடாகிய ‘கரந்தைக் கட்டுரை’ என்ற தொகுதியில் 1938-ம் வருடம் வெளிவந்த கட்டுரை இது.
-1-
நிகழும் ஆண்டு தமிழன்னையின் திருவுள்ளத்தை மகிழ்வித்த ஓர் நல்யாண்டாகும். அவளுடைய பேருடைமைகளுள் ஒன்றாகிய குறுந்தொகை நூற்றுக்கணக்கான வருடங்களாக ஏறியிருந்த துரு முதலிய மலினங்கள் போகப் பரிசோதிக்கப் பெற்று இரண்டு திங்கட்கு முன்னர் தான் அவள்பால் உய்க்கப் பெற்றது. இப்பொழுது அவள் மிக்க ஒளியுடனும் பெருமிதத்துடனும் விளங்குகின்றாள். நவமணிகளும் இழைக்கப்பெற்ற அவளது திருமுடியும், பலவகை யணிகளும் மிளிரும் அவளது தெய்வத் திருமேனியும், நமக்குக் கண் கொள்ளாத காட்சியாயுள்ளன.
தமிழ்மொழிக்கு இத்துணைச் சிறப்புத் தரத்தக்க பேரிலக்கியத்தை ஆராய்ந்து அதன் நயங்களை உணர வேண்டுவது அவசியமாகும். இந்த அவசியம் பற்றியே இந்நூலைக் குறித்து யான் பேச முன்வந்தது.
இந்நூல் தொகை நூல்களைச் சார்ந்ததாகும்.
தொகை யென்ற வழக்கு உரைகாரர்கள் பலராலும் கூறப்பட்டதே யாகும். ‘தொகைகளினுங் கீழ்க்கணக்குக்களினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க’ என்றார் நச்சினார்க்கினியர் (தொல். அகத். 6, பக். 19) அவர் தாமே ‘தொகைகளிலும் கீழ்க் கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக’ என்று பிறிதோரிடத்திங் கூறினர் (தொல். புறத்.26, பக். 321).
இவ்விரண்டாவது இடம் பிறிதோர் அரிய செய்தியையும் நமக்குப் புலப்படுத்துகின்றது. பதிற்றுப்பத்து என்ற தொகை நூலில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் இப்பொழுது அகப்படவில்லை யென்பது யாவரும் அறிவர். அந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் முழுமையும் இங்கே தரப்பட்டுள்ளதெனக் கருத இடமுளது. அது ‘எரியெள்ளுவன்ன’ என்ற உதாரணச் செய்யுளாம். பேராசிரியர் ‘பாட்டுந் தொகையும் அல்லாதன சில நாட்டிக்கொண்டு’ என்பர் (தொல், மரபி. 94, பக். 1355). பாட்டு என்றது பத்துப் பாட்டினை. நன்னூற்கு உரையெழுதிய மயிலைநாதர் என்னும் சைன முனிவர் இத்தொகை நூல்கள் எட்டாவன என்பதை ‘ஐம்பெரும்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ்விலக்கியங்களுள்ளும் விரிந்த உரிச் சொற்பனுவல்களுள்ளும் உரைத்தவாறு அறிந்து வழங்குக’ (பக்.265) என்ற உரை வாக்கியத்தால் நமக்கு அறிவுறுத்துகின்றார். இவ்எட்டு நூல்களும் இன்ன என்பதை,
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை
என்ற பழைய செய்யுள் நமக்கு உணர்த்துகின்றது. எனவே தொகை நூல் எட்டனுள் இரண்டாவதாகக் கூறப்படுவது இக்குறுந்தொகை.
தொகை நூல்களுள்ளே வேறொன்றற்கு மில்லாத பெருமை குறுந்தொகை பெற்றுள்ளது. இதன்கணுள்ள செய்யுளொன்று இறைவனாலே இயற்றப்பட்ட தென்னும்படி அத்துணை யழகுவாய்ந்து நக்கீரர் சரிதத்தோடு பிணைப்புண்டு கிடக்கின்றது. இச்செய்தி தமிழ் மக்கள் யாவரும் அறிந்ததே. யான் குறிப்பிடுஞ் செய்யுள்,
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீ யறியும் பூவே
என்பது. இதனை யியற்றியவர் இறையனார் என்று பெயர் சிறந்த ஒரு தமிழ்ப்புலவர். இப்பெயருடையாரொருவர் இறையனார் களவியல் என்னும் அகப்பொருள் நூலை யியற்றியுள்ளா ரென்பது நாம் அறிந்து மகிழத்தக்க ஒரு செய்தியாம். இவ்வாறு கொள்ளுதலால், நமது தெய்வபக்திக்கு யாதோரிழுக்குமின்று. இதனை நாம் நன்றாக மனங்கொள்ளுதல் வேண்டும்.
மேலே சுட்டிய குறுந்தொகைச் செய்யுள்பற்றி யெழுந்த சரிதத்தை விரிவாகக் கூற வேண்டும் ஆவசியகம் இல்லை. ஆனால் அச்சரிதத்தின் உட்கிடையைக் குறித்துச் சில சொல்ல வேண்டுவது இன்றியமையாததென நினைக்கின்றேன். செய்யுளானது இயற்கையிற் சிறிதும் வழுவாதிருக்க வேண்டுமென்பது ஒரு கொள்கை. செய்யுள் சாமான்யவியற்கையில் வழுவாதிருக்க வேண்டு மென்பது தக்கதொரு நியமமாகாது; மனோபாவனையினாலும் கவித்துவ சக்தியினாலும் நெறிப்பட்டுச் சென்று கவித்துவ வுண்மையினை வெளிப்படுக்க வேண்டுமென்பது பிறிதொரு கொள்கை. இவ்விரு கொள்கைகள் பற்றிய விவாதமே மேற்குறித்த சரிதத்தின் உட்கிடை. உண்மைக் கவிதை இக் கொள்கைகளால் பாதிக்கப்படாது சிறந்து விளங்குமென்பது முடிவாக நாம் உணரத்தக்கது.
இச்சரிதத்தோடு மட்டும் இந்நூலின் பெருமை அமைந்து விடவில்லை. உரைகாரர்கள் பலரும் சங்க நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றார்கள். ‘அங்ஙனம் காட்டும் நூல்களுள் ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப் படுகின்றது’ எனக் குறுந்தொகைப் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ சாமிநாதையரவர்கள் எழுதியிருக்கின்றார்கள். இந்நூலினின்றும் சுமார் 1000 மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்நூல் முற்காலத்தே மிகுதியாய்ப் பயிலப்பட்டு வந்ததென்பது தெளிவாம்.
நூலின் பெருமை நோக்கியும், அது மிகுதியாய்ப் பயிலப்பட்டு வந்தமை நோக்கியும், இதற்குப் பேராசிரியர் உரையெழுதினர். உரையெழுதினாரென்பது கேவலம் கன்னபரம்பரைச் செய்திமட்டும் அன்று; நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றில்,
நல்லறிவுடைய தொல் பேராசான்
கல்வியுங் காட்சியுங் காசினி யறியப்
பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற்
கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய
இதுபொரு ளென்றதற் கேற்ப உரைத்தும்
எனக் காணப்படுகின்றது. இதனால் பேராசான் தமது கல்விப் பரப்பும் அறிவுத் திறனும் விளங்கும்படி மிகச் செவ்வியவுரையொன்று இயற்றினாரென்பதும், அவர் 20 செய்யுட்களுக்கு உரை யெழுதவில்லையென்பதும் புலனாகும். விடப்பட்ட இருபது செய்யுட்களுக்கும் நச்சினார்க்கினியர் உரையியற்றினார் என்பது மேலைப் பகுதியின் இறுதியடி தெரிவிக்கின்றது. இச்செய்தி,
பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்
ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும்- சாரத்
திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்தி நச்சினார்க்கினிய மே
என்ற வெண்பாவினாலும் அறியக் கிடக்கின்றது. மேலே காட்டிய உரைச் சிறப்புப் பாயிரத்தில் ‘பேராசான்’ என்று கூறப்பட்டுள்ளதேயன்றித் தொல்காப்பிய வுரை முதலியன இயற்றிப் பெயர் சிறந்து விளங்கிய பேராசிரியரென்பது தெளியப்படவில்லை. இப்பேராசான் என்பவர் பேராசிரியரே யென்பது அவரது உரைக் கருத்தைத் தழுவி நச்சினார்க்கினியர் எழுதிய உரைப்பகுதி யொன்று நன்கு தெரிவிக்கின்றது. அகத்திணையியல் 46-ம் சூத்திரவுரையில் ‘பேராசிரியரும் இப்பாட்டில் (யானே யீண்டையேனே; குறுந்.54) மீனெறி தூண்டிலென்பதனை ஏனையுவம மென்றார்’ என வருகின்றது. எனவே குறுந்தொகைக்குப் பேருரை கண்டவர் பேராசிரியரே யென்பது ஐயமின்றித் தெளியலாம்.
இனி, ‘தொல் பேராசான்’ என்று மேலைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறுதலின், நச்சினார்க்கினியருக்கு மிக முற்பட்டவரென்று ஒருவாறு தெரியலாம். இருவருக்கும் இடைப்பட்ட காலம் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாகக் கொள்ளின், அது மிகவும் பொருந்துவதேயாம். நச்சினார்க்கினியர் 16-வது நூற்றாண்டில் வாழ்ந்தவரென ஒருவாறு அறுதியிடப்படுகின்றது. ஆகலின், குறுந்தொகை யுரைகாரராகிய பேராசிரியர் 13 அல்லது 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதல் வேண்டும். இக்கால வரையறை தொல்காப்பிய வுரைகாரராகிய பேராசிரியருக்கும் பொருந்துவதாகலின், இரண்டு நூல்களுக்கும் உரையாற்றியவர் ஒருவரேயெனத் துணியத்தகும்.
வேறொரு செய்தி இங்கே மனங்கொள்ளுதற்குரியது. தொல்காப்பியச் செய்யுளிலுரையிற் பலவிடங்களிற் பேராசிரியரது கருத்தைப் பின்பற்றி நச்சினார்க்கினியர் எழுதிச் செல்கின்றார். ஆகவே, பேராசிரியரிடத்துப் பெருமதிப்பு உடையவர் இவரென்பது போதரும். இங்ஙனம் தம்மால் மதிக்கப்பட்டா ரொருவரது உரையை நச்சினார்க்கினியர் முற்றுவித்தாரென்றல் பெரிதும் ஏற்புடைத்தாதல் காணலாம்.
பேராசிரியர் 20 செய்யுட்களுக்கு ஏன் பொருளெழுதாது விடுத்தனர் என்ற கேள்வி நமக்கு எழுதல் இயல்பே. அதற்குரிய விடையை நாம் ஆராய்ந்து தெரிவதில் பயன் யாதுமில்லை. குறுந்தொகைப் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ ஐயரவர்கள் ஒரு காரணத்தைத் தம் பதிப்புரையிற் காட்டியிருக்கின்றார்கள். அக்காரணத்தை யொப்புக் கொள்ளுதலில் எவ்வகைத் தடையுந் தோன்றவில்லை. அதைப் போன்ற ஒத்த தகுதியையுடைய வேறொரு காரணமும் கூறுதல் கூடும். உரைகாரர்கள் பொருள் வெளிப்படையெனத் தாம் கருதுஞ் செய்யுட்களுக்கு உரையெழுதாது விடுதல் மரபு. ஐங்குறுநூற்றிற் பல செய்யுட்களுக்கு உரையின்மையும் ஈண்டு நோக்கத்தக்கது. இங்ஙனம் தாம் வெளிப்படையெனக் கருதிய 20 செய்யுட்களுக்கு உரை வரையாது பேராசிரியர் விடுத்திருப்ப, அவற்றின் அருமைப் பாட்டினை யுணர்ந்து நச்சினார்க்கினியர் தமது புலமையெல்லாந் தோன்ற உரை யெழுதினாரெனக் கொள்ளுதலும் அமையும். காரணம் எதுவாயினும் இரண்டு பேருரைகாரர்கள் குறுந்தொகைக்கு உரையியற்றினாரென்றல் உண்மை. இவ்வுரை இப்பொழுது அகப்படவில்லை. இதனைக் கற்று இன்புறும் பேறு நமக்கு இல்லை யென்று வருந்துவதோடு நாம் அமைந்துவிட வேண்டியதே.
இங்ஙனம் சரிதத்தாலும், பயிற்சி மிகுதியாலும், உரைச் சிறப்பாலும் பெருமையுற்று விளங்கிய குறுந்தொகை இப்பொழுதுதான் நன்கு பரிசோதிக்கப்பெற்று வெளிவந்துள்ளது. இதற்குமுன் ஒரு சில பதிப்புக்கள் வெளிவந்துள்ளமையை நான் மறந்துவிடவில்லை. முதன்முதலாக இந்நூற் பதிப்பில் ஈடுபட்டு வெளியிட்ட பெருமை சௌரிப்பெருமாள் அரங்கன் என்றவருக்கு உரியது. அவர் எத்துணையோ முட்டுப்பாடுகளுக் கிடையில் 1915-ம் வருடத்தில் குறுந்தொகைப் பதிப்பொன்று வெளியிட்டனர். இந்நூலைப் பதிப்பித்தற்குப் பெருந்தகுதி வேண்டு மென்பதைத் தாமே நன்குணர்ந்தவர். ஆனால் தமக்கு இயல்பாக வுரிய தமிழார்வத்தினால் யாதானுமொரு பதிப்பு வெளிவருமாயின், பின்னர் அது திருத்தமடையக் கூடுமென் றெண்ணி இப்பதிப்பிடு முயற்சியிற் புகுந்தவர். அவர் பதிப்பில் பதிப்பாளர்க்கு நேர்ந்த இடுக்கண்கள், கிடைத்த ஓலைச்சுவடிகள் இருந்த அலங்கோலங்கள், அச்சுவடிகளோடு போராடிய போராட்டங்கள், நேரியவாயுள்ள செய்யுட்களிலும் தம் இளங்கண்ணுக்குத் தோன்றிய நூதன வடிவங்கள், உரை காணுதற்கு முயன்ற பயனில் முயற்சிகள் முதலிய அனைத்தும் நன்கு வெளியாகின்றன. ஒரு சில உதாரணங்கள் காட்டு:
யாரினு மினியன் போன பின்னே (குறுந். 85)
என்று பதிப்பித்துள்ளார். இது
யாரினு மினியன் பேரன் பினனே
என்று பதிப்பிக்கக் பெறல் வேண்டும்.
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் காட்டி னன்னாட் டும்பர் (குறுந். 11)
என்று பதிப்பித்துள்ளார். இதில் இரண்டாமடி,
வல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
என்று பதிப்பிக்கப் பெறல் வேண்டும்.
சிறுகோட்டுப் பெரும் பழந்தூங்கியாங்
கிவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே (குறுந். 13)
என்று பதிப்பித்தனர். இதன்கண் முதலடி நான்கு சீர்களை யுடையதாதல் உரைகாரர்கள் பலர்க்குங் கருத்தாம். எனவே,
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ
ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
என்று அடிவரையறை செய்தல் வேண்டும்.
முனாஅது, யானையுண் குருகின் கானலம்
பெருந்தோட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம் (குறுந். 34)
என்றிருக்க வேண்டுவது,
முனாஅ தியானையுண் குருகின் கானலம்
பெருந்தோட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம்
எனப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந்.75)
என்றிருக்க வேண்டும் அடிகள்,
வெண்கோட் டியானை பூஞ்சுனை படியும்
பொன்மலி பாடிலி பெறீஇயர்
என்று காணப்படுகின்றது.
ஏந்துகோட் டியானைச் சேந்தன் றந்தை
அழீசி யார்க்கா டன்ன விவள்
என்றிருக்கற்பாலது,
ஏந்துகோட் டியானைச் சேந்த னுறத்தை
எனப் பதிப்பிக்கப்பட்டது.
பதிப்பிலுள்ள பிழைகள் இவ்வாறுள்ளன. இவர் உரைவகுக்குந் திறத்திற்கு ஓருதாரணம் காட்டுகின்றேன்:
‘முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே’ (குறுந். 239) என்ற அடிக்கு ‘முந்தும் முறைமையாகிய காவலையுடைய மலைக்குரியான் றிறத்து’ என்று உரை வகுத்தனர். முந்தூழ் என்பது மூங்கிலின் பெயராகும்.
இங்ஙனமாக எத்தனையோ பெரும்பிழைகள் காணப்படினும் சௌ. அரங்கனாரை நாம் போற்ற வேண்டியவர்களாக வுள்ளோம். முதலாவது, அவர்க்குக் கிடைத்த பிரதிகளின் நிலைமையே பிழைகள் பலவற்றிற்குக் காரணமாயுள்ளது. இரண்டாவது, குறுந்தொகையின் நயத்தைத் தமிழ் மக்கள் ஒருவாறு உணரும்படியாகச் செய்தனர். மூன்றாவது, தமிழறிஞர்களுடைய உள்ளத்தைக் குறுந்தொகைத் திருத்தத்தில் ஈடுபடும்படியாகச் செய்தனர். நான்காவது, குறுந்தொகைக்கு நல்ல பதிப்பு வெளிவர வேண்டுமென்ற அவா தமிழ் நாடெங்கும் உண்டாகும்படி செய்தனர். ஒரு சில பதிப்புக்கள் சிற்சில இடங்களில் திருத்தம் பெற்று வெளிவருவதற்கும் காரணமா யிருந்தனர். இவ்வாறு பெருநன்மைகள் பல உண்டாவதற்கு அரங்கனார் காரணமாயிருந்தன ரென்பதை யெண்ணுந்தோறும் அவர்பாற் கௌரவம் பெருகித் தோன்றுகிறது. இப்பொழுதுகூட, அரங்கனார் பதிப்பு ஒருவாறு பயன்படுகிற தென்றே சொல்ல வேண்டும். பதிப்பாளர் கடமையை நன்குணர்ந்தவரானமையினாலே ஏட்டுப் பிரதிகளின் நிலைமைகளையெல்லாம் அங்கங்கே கூறிச் செல்வர். இவ்வாறு எழுதுவதனாலுண்டாம் நன்மையைப் பதிப்பாளர் தொழிலில் ஈடுபட்டவர்கள் நன்குணர்வார்கள். ஓர் உதாரணத்தால் எனது கருத்தை விளக்குகின்றேன். குறுந்தொகை 266-ம் செய்யுளை யெடுத்துக் கொள்க. இச்செய்யுளைக் குறித்து ‘இப்பாட்டு ஆறடியினதாதல் உணர ஒரு பிரதியில் 4, 5 அடிகளுக்கு இடம் விடப்பட்டிருக்கிறது’ என்று அரங்கனார் எழுதுகின்றார். பின்னர், 1930-ல் ‘கலா நிலயத்’தில் குறுந்தொகையைத் தாம் நூதனமா யெழுதிய உரையுடன் ஓர் அறிஞர் பதிப்பித்தனர். அப்பதிப்பில் அரங்கனாரது குறிப்பை அறவே மறந்து விட்டனர். செய்யுளிற் குறையுள்ள தென்பதனை ஓராற்றானுங் குறித்தல் செய்யாது உரையெழுதிச் சென்றனர். சில காலத்திற்கு முன் குறுந்தொகையை யான் ஆராய்ந்த பொழுது, அச்செய்யுளில் ஓரடி குறைந்து விட்டதென்றும், அவ்வடி,
மறப்பரும் பணைத்தோன் மரீஇ
என்பதாகு மென்றுந் தெளிந்து கொண்டேன். எனவே,
மேலைச்செய்யுள்,
நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொள்
றின்னா விரவி னின்றுணை யாகிய
படப்பை வேங்கை மறந்தனர் கொல்லோ
மறப்பரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே
என்றிருத்தல் வேண்டுமென்று அறிந்தேன்.
இங்ஙனமாக, அரங்கனாருரையை எப்பொழுதும் போற்றுங் கடப்பாடுடையோம்.
இப்பதிப்பிற்குப் பின் எனது நண்பர் திருவாளர் கா.நமச்சிவாய முதலியாரவர்களால் மூலப்பதிப்பு ஒன்று அச்சிடப்பட்டது. அப்பதிப்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை. பின்னர் 1930-ல், புரசைபாக்கத்திலிருந்து எனது நண்பர், திரு டி.என்.சேஷாசல ஐயரவர்களால் வெளியிடப்பட்ட ‘கலா நிலயத்’தில், திரு. இராமரத்னமையரவர்கள் தாம் எழுதிய புத்துரையுடன் ஒரு பதிப்பு வெளியிட்டனர். இது தனிப் புத்தகமாக வெளிவரவில்லை. இப்பதிப்பிற்குப் பின்னர் 1933-ல், வித்துவான் சோ.அருணாசல தேசிகரவர்களால் மூலம் மாத்திரம் பதிப்பிக்கப்பட்டது.
இப்பதிப்புக்க ளனைத்தினும் அங்கங்கே ஒருசில பிழைகள் திருந்தினவென்பது உண்மை. ஆனால் இன்னும் பல பிழைகள் பொதிந்தனவாகவே அவை இருந்தன. இப்பிழை மலிந்த பதிப்புக்களும் மிகுதியாக வாங்கிக் கற்கப்பட்டன. அரங்கனார் பதிப்பு வெளிவந்த பின்னர் 20 ஆண்டுகட்குள் 3 பதிப்புக்கள் தோன்றின வெனின், எத்துணை யளவாகத் தமிழ் மக்கள் இந்நூலை அவாவின ரென்பது புலனாம். ஆங்கில நூற் பதிப்புக்கள் போலத் தமிழ் நூற் பதிப்புக்களை யெண்ணுதல் தவறு. இந்நாட்டில் வெளிவரும் பதிப்புக்களை யெண்ணின், மேற்குறித்த 3 பதிப்புக்களும் வெகு விரைவில் வெளிவந்தனவென்றே சொல்ல வேண்டும். ஓலைச்சுவடிகள் பெற்று ஆராய்ச்சி செய்து இவை வெளியிடப்பட்டனவல்ல. ஆகவே, ஐயரவர்களுடைய பதிப்பு தமிழ் மக்களுடைய பேராவலையெதிர் நோக்கியே வெளிவந்ததென்று கூற வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தார் இப்பதிப்பிற்கு வேண்டும் பொருளுதவி செய்தது மிகவும் பாராட்டத் தக்கது.
நன்று: அச்சின்வாய்த் தோன்றிய வரலாற்றினை இதுகாறுங் கூறினேன். இனி, முதன்முதலாகத் தொகுக்கப்பட்டு, குறுந்தொகையெனப் பெயர்கொண்டு வெளிவந்த வரலாற்றினைப்பற்றி ஒருசிறிது கூறலாமென்றெண்ணுகிறேன். பிரதிகளின் இறுதியில், ‘இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இருநூற்றைவர்; இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரேல்லையாகவும் தொகுக்கப்பட்டது’ என்று காணப்படுகின்றது. அகநானூறு என்ற தொகைநூற் பிரதிகளின் இறுதியில் ‘தொகுத்தான், மதுரை உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்மன்; தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி’ எனக் காணப்படுகின்றது. நற்றிணைப் பிரதிகளின் இறுதியில் ‘இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி’ எனக் காணப்படுகின்றது. குறுந்தொகைப் பிரதியின் இறுதியிலுள்ள ‘முடித்தான்’ என்பது தொகுத்தான் என்று பொருள்படுமெனக் கோடலே நேரிது. இஃது உண்மையோடு பட்டதாயின், பூரிக்கோவும் உப்பூரி குடிகிழாரும் ஒருவரேயாதல் சாலும். ஆகவே குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும். இவர்கள் அந்தணரா அல்லது வேளாளரா என்ற வினாவிற்கு விடையிறுத்தல் எளிதன்று. கிழார் என்பதனை நோக்கினால் வேளாளரென்று கொள்ளுதல் வேண்டும்; சன்மன் என்பதனை நோக்கினால் அந்தணரென்று கொள்ளுதல் வேண்டும். ஆனால் ‘சன்மன்’ என்பது ‘ஜந்மந்’ என்றதன் தமிழ் வடிவென்று கொள்ளின், இவர்கள் வேளாளராகவே இருத்தல் கூடும்.
அகநானூற்றுக்கு நெடுந்தொகையெனப் பெயருண்மை கற்றாரறிவர். தந்தை தொகுத்ததனைக் குறுந்தொகையெனவும் மகனார் தொகுத்ததனை நெடுந்தொகை யெனவும் வழங்கிழா ரென்றல் ஒருவகையாற் பொருத்த முடையதேயாம். இரண்டு ஆசிரியர்கட்கும் உள்ள தொடர்பு அவர்கள் தொகுத்துள்ள நூற்பெயர்களிலும் விளங்குதல் அமைதியுடையதே. சம காலத்திலேனும் அல்லது மிக அண்ணிய காலத்திலேனும் இரு நூல்களும் தொகுக்கப்பட்டமை மேலைத் தொடர்பும் விளக்குகின்றது.
இவ் இரண்டு நூல்களில் நாலடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையது குறுந்தொகை; 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் உடையது நெடுந்தொகை. 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் உடையது நற்றிணை. இந்நற்றிணை தொகுக்கப் பெற்றது குறுந்தொகைக்கு முன்னோ பின்னோ என்று தெளிதற்குரிய பிரமாணங்கள் கிடைக்கவில்லை. இவ்வகப்பொருள் நூலும் குறுந்தொகைக் காலத்தினை யடுத்தே தொகுக்கப் பெற்றிருத்தல் வேண்டும்.
தொகை நூல்களுட் பெரும்பாலன பாண்டியர்களால் தொகுப்பிக்கப்பட்டனவெனத் தோன்றுகின்றது. ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும், சேரர்களாலே தொகுப்பிக்கப்பட்டன. சோழ அரசர்களால் தொகுப்பிக்கப்பட்டதாக யாதொரு தொகை நூலும் காணப்படவில்லை. ஆனால் வரையறுத்துச் சொல்லுதற்குரிய ஆதாரமொன்றும் நமக்குக் கிடைக்கவில்லை.
-2-
குறுந்தொகையின் காலத்தை இனி ஆராய்ந்து கூறலாமென்று எண்ணுகிறேன். குறுந்தொகையின் காலமென்பதில் இரண்டு வேறு வேறு கருத்துக்கள் உள்ளன. ஒன்று இந்நூல் தொகுக்கப்பட்ட காலம்; பிறிதொன்று இந் நூற் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலம். இரண்டற்கும் யாதோரியைபும் இல்லை. எனது கருத்தினை ஓர் உதாரணத்தால் விளக்குகிறேன். பன்னூற்றிரட்டு என்னுந் தொகை நூலைப் பற்றித் தமிழ் கற்றாரனைவரும் அறிவர். இது சில வருடங்கட்கு முன்னர் ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்களால் தொகுக்கப்பட்டது. ஆனால், இதன்கண் அடங்கிய செய்யுட்களோ எனின், வெவ்வேறு காலத்திருந்த பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டன. இதனையொத்து இரண்டு வெவ்வேறு ஆராய்ச்சிகள் தொகைநூல்களின் கால வரையறை குறித்துச் செய்ய வேண்டுவனவா யுள்ளன. இதனை நாம் நன்றாக மனங் கொள்ளுதல் வேண்டும். ஒன்றனைப் பிறிதொன்றனோடு மயங்கவைத்தல் கூடாது. தொகுத்தது, குறிப்பிட்ட ஒரு காலத்தாதல் வேண்டும்; செய்யுட்கள் இயற்றியதோவெனின், பற்பல காலங்களிலாதல் வேண்டும்.
இக்காலத்துப் பதிப்பாளர் சிலர் ஒரு பொருள் பற்றிப் பல ஆசிரியர்கள் பல நோக்குப் பற்றி ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுதலைக் காண்கின்றோம். இத்தொகையை ‘Symposium’ என ஆங்கிலத்தில் வழங்குவர். இதனைப் போன்றே ஏக காலத்திலே இயற்றித் தொகுக்கபபட்டனவாக, கடைச்சங்கத்துத் தொகை நூல்கள் இருத்தல் கூடாவோ என்று சிலர் ஆசங்கித்தல் கூடும். ஆனால் உற்று நோக்கின், இவ் ஐயுறவிற்கு இடமில்லை யென்பது தெளிவாம். இவ்வகை நூல்கள் தோன்றுதற்குரிய நிலைமை யுண்டாதல் முற்காலத்து அருமையாம். ஏககாலத்தில் சங்கத் தொகை நூற் புலவர்கள் இருந்தனரென்று கொண்டாலும், அவர்கள் பல இடங்களில் வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் முயற்சிகளை ஒருமுகப்படுத்துதற்குரிய சௌகரியங்கள் முற்காலத்தில் இல்லை. உண்மையில் அவர்கள் ஏக காலத்து வாழ்ந்தவர்களுமல்லர். ஒரு சில புலவர்கள் தம் காலத்திற்கு முன்பு வாழ்ந்த புலவர்களையும் அவர்கள் சரித்திரங்களையும் குறித்துப் பாடியிருக்கின்றனர்.
வெள்ளிவீதி போல நன்றும்
செலவயர்த் திசினால் யானே (அகம்.147)
இச்செய்யுளைப்பாடிய ஔவையார் வெள்ளிவீதியாரது சரித்திரம் பற்றிப் பாடியமை கவனிக்கத் தக்கது. இவ் இரு புலவர்களும் இயற்றிய செய்யுட்கள் சில நாம் ஆராய்ந்துவரும் குறுந்தொகையிலும் காணப்படுகின்றன.
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே (குறுந்.44)
இந்த அழகிய செய்யுளைப் பாடியவர் வெள்ளிவீதியே,
உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது இருப்பின்னம் மளவைத் தன்றே; வருத்தி வான்றோய் வற்றே காமம்; சான்றோ ரல்லர் யாம் மரீஇயோரே (குறுந்.102)
காதலென்னுங் கடுந்தீயின் பொறுக்கலாற்றாமையை இத்துணை வேகத்தோடு கூறுகின்றவர் ஔவையாரே. இவ் இருவரும் வேறு வேறு காலத்தினராதல் வெளிப்படை. வேறோர் உதாரணம் புறநானூற்றினின்றும் தருகின்றேன்.
மோசி பாடிய ஆயும்........எனவாங்
கெழுவர் மாய்ந்த பின்றை யழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
யிரந்தோ ரற்றந் தீர்க்கென (புறம். 158)
என்று குமணனென்னும் வள்ளலைப் பெருஞ்சித்திரனாரென்னும் புலவர் பாடினர். இங்குக் குறித்த மோசியார் பாடிய செய்யுட்கள் பல புறநானூற்றின்கண்ணேயே வருகின்றன. அவற்றுளொன்று கீழ் வருவது:
இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாஅ யல்லன்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட் டன்றவன் கைவண் மையே (புறம். 134)
இவ் இருவரும் வேறு வேறு காலத்தினர்; எனினும் ஒரு தொகைநூலின் கண்ணே இருவரது செய்யுட்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
மேற்காட்டியன போன்று பல வுதாரணங்கள் காட்டுதல் கூடும். எனவே சமகாலத்தினரது செய்யுட்களைத் தொகுத்த தொகைகளல்ல சங்க இலக்கியங்கள். உண்மை இவ்வாறிருப்பவும். காலவரையறை செய்யப் புகுந்தார் ஒரு சிலர், தொகுத்த காலமும் இயற்றிய காலமும் ஒன்றெனக்கொண்டு, பெரிதும் மயக்கத்தை விளைவித்தனர். புறநானூற்று முதற்பதிப்பின் முகவுரையில், ‘இந்நூற் செய்யுட்களால் பாடப்பெற்றவர்கள் ஒரு காலத்தாரல்லர்; ஒரு குலத்தா ரல்லர்; ஒரு சாதியா ரல்லர்; ஓரிடத்தாருமல்லர். பாடியவர்களும் இத்தன்மையரே’ என்ற பொருள் பொதிந்த வாக்கியம் வரையப்பட்டுள்ளமை நோக்கத் தக்கது.
தொகை நூல்களின் காலவரையறை பற்றிப் பொதுப்படப் பேசும் இந்தச் சந்தர்ப்பத்திலே ஆராய்ச்சியாளர் கொண்டிருக்கும் பிறிதொரு கொள்கையையுஞ் சிறிது ஆராய்தல் நலம். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு என்ற ஐந்து தொகை நூல்களிலும் வருங் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியன. எனவே, இப்பெருந்தேவனாரே இவற்றைத் தொகுத்தவராதல் வேண்டும் என்பர் ஒரு சிலர். பெருந்தேவனாரை 9-ம் நூற்றாண்டினராகக் கொண்டு, தொகைநூல்களும் அக்காலத்தில் தொகுக்கப் பெற்றனவென்றுங் கொள்ளுவர். இது சிறிதும் பொருந்தாமை எளிதில் உணரலாம்.
ஒருவர் இப்பொழுது சில தொகை நூல்கள் தொகுப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகைநூலுக்கும் கடவுள் வாழ்த்தாக அப்பர் திருப்பாட்டுகளினின்றும் ஒவ்வொரு செய்யுளை எடுத்துச் சேர்த்திருப்பதாகவும் கருதிக்கொள்க. கடவுள் வாழ்த்துக்கள் அப்பர் சுவாமிகள் செய்தருளியன என்ற ஒரு காரணம்பற்றி இத்தொகை நூல்கள் யாவும் அச் சுவாமிகள் தொகுத்தனவென்று கூறுதல் பொருந்துமா? இதுபோன்றதொரு கூற்றே பெருந்தேவனார் தொகுத்தாரென்று கூறுவதும். ஐந்து தொகை நூல்களிலும் அப்பெருந் தேவனாரது செய்யுட்கள் காணப்படுதல் பற்றி இம்முடிபுக்கு வருதல் ஒரு சிறிதும் தகாது. கபிலர் என்னும் புலவரது செய்யுட்கள் பரிபாடலொழிய ஏனைத் தொகை நூல்களனைத்தினும் வந்துள்ளன. இதுபற்றி கபிலர் இத்தொகைகளைத் தொகுத்தாரென்று கூறுதல் பொருந்துமா? அன்றியும் முழுவதும் கிடைத்துள்ள தொகை நூல்களிற் காணப்படும் இறுதிக் குறிப்பில் தொகுத்தாரும் தொகுப்பித்தாரும் கொடுக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிவர். இவ் இறுதிக் குறிப்பினைக் கற்பிதமென்று தள்ளுவதற்குக் காரணம் யாதும் இல்லை. இக்கூறிய காரணங்களால் பெருந்தேவனார் தொகைநூல் தொகுத்தாரென்னுங் கொள்கை அறவே விலக்குண்டொழிகின்றது.
இனி, குறுந்தொகை தொகுக்கப் பெற்றுள்ள காலத்தை நோக்குவோம். இந்நூலுக்கு உரைவகுத்தார் பேராசிரியர் என்பது முன்னே கூறப்பட்டது. பேராசிரியர், ஒட்டக்கூத்தர் காலத்தினராதல் ‘ஒட்டக்கூத்தர் உலாப் பாடியபோது பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பாடியது’ என்று தமிழ் நாவலர் சரிதையிற் குறிக்கப்பெறும் செய்தியால் விளங்கும். ஒட்டக்கூத்தர் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரென்பது சரித்திர மொப்பியதோருண்மை. எனவே, பேராசிரியர் காலமும் அதுவேயாக, குறுந்தொகை 12-ம் நூற்றாண்டிற்கு முன்பே தொகுக்கப் பெற்றுள்ளமை தெளிவாம். இனி, தொல்காப்பியத்திற்கு முதல் உரைகாரராகிய இளம்பூரணவடிகள் தமது பொருளதிகார வுரையிலே (களவியல், 12, உரை) ‘ஓம்புமதி வாழியோ’ என்னும் குறுந்தொகைச் செய்யுளைத் தந்து (235) ‘இக்குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடை வைத்துச் சேறுவான் கூறியது’ என்றெழுதினர். எனவே இளம்பூரணர் காலத்திற்கு முன்பே குறுந்தொகை தொகுக்கப்பட்டிருந்தமை நன்கு விளங்குகின்றது. இவ் உரைகாரர் காலம் 11-வது நூற்றாண்டெனக் கொள்ளுதல் தகும். எனவே, நாம் ஆராயும் நூல் 11-வது நூற்றாண்டிற்கும் முன்னரே தொகுக்கப் பெற்றதாம்.
இனி, வீரசோழிய வுரையிலே ‘அளவாற் றொக்கது குறுந்தொகை’ (அலங். 36, உரை) என்று கூறப்பட்டுள்ளது. இவ்வுரையும் வீரசோழியம் என்னும் இலக்கணமும் வீரசோழனென்னும் வீரராசேந்திரன் காலத்து எழுதப்பட்டனவாம். இவ்வரசன் கி.பி.1062-ல் பட்டமெய்தினான். எனவே இக்காலத்திற்கு முன்னரே குறுந்தொகை தொகுக்கப் பெற்றதென்று துணிந்த மேலைமுடிபு பிறிதொரு வகையாலும் உறுதியடைகின்றது.
இனி, இறையனாரகப் பொருளுரையிலே கடைச்சங்க வரலாறு கூறுமிடத்து ‘அவர்களாற் (கடைச்சங்கத்துப் புலவர்களாற்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும் குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும்.. என்றித் தொடக்கத்தன’ என்று வருகின்றது. இவ்வுரையிலே கி.பி.7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரிகேசரியென்றும், நின்றசீர் செடுமாற நாயனார் என்றும் பெயர் சிறந்த பாண்டியப் பேரரசர் மீது இயற்றிய பாண்டிக்கோவைச் செய்யுள்கள் பல காணப்படுகின்றன. எனவே இவ்வுரை கி.பி. 7-ம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாதல் வேண்டும். எழுதப்பெற்ற காலம் எதுவாயினும், உரை தோன்றிய காலம் பத்துத் தலைமுறைக்கு முன்னென்பது உரை வரலாறு கூறும் பகுதியால் உணரலாகும். எனவே உரை தோன்றிய காலம் 5-ம் நூற்றாண்டின் முற்பகுதி [*1] யாமென்பது அனுமானித்துகொள்ளக் கிடக்கின்றது.
எனவே குறுந்தொகை தொகுக்கப்பெற்ற காலம் 5-ம் நூற்றாண்டிற்கும் முன்னென்பது போதரும். பாண்டிக்கோவையிற் குறுந்தொகைச் செய்யுட்களின் கருத்துக்கள் பல இடங்களிற் காணப்படுதலும் இங்கே நோக்கத்தக்கது. உதாரணம்:-
செல்வா ரல்லரென் றியான் இகழ்ந் தனனே;
ஒல்வா ளல்லளென் றவர் இகழ்ந் தனரே;
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே (குறுந். 43)
என்ற செய்யுளோடு,
செல்வா ரவரென்றி யானிகழ்ந் தேன்கரஞ் செல்லத்தன்கண்
ஒல்லா னவளென் றவரிகழ்ந் தார்மற் றுரையிரண்டும்
கொல்லா ரயிற்படைக் கோனெடுமாறன் குளந்தைவென்ற
வில்லான் பகைபோசெனதுள்ளந் தன்னை மெலிவிக்குமே
என்ற பாண்டிக்கோவைச் செய்யுளை ஒப்பிடுக.
இனி, களவியலுரை கண்ட வரலாறு இன்னும் உறுதியாகக் குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலத்தை அறுதியிடுவதற்கு உதவுகின்றது. ‘உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்கு உரையென்பாரும் உளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டார் என்க, மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு, குமாரசுவாமியாற் கேட்கப்பட்டதென்க’ என்பது அகப்பொரு ளுரைப்பகுதி. இப்பகுதியிலுள்ள பிற்பட்ட வாக்கியத்தில் நமது கவனம் இப்பொழுது செல்ல வேண்டுவதில்லை. முற்பட்ட வாக்கியமே மிக முக்கியமானது. அதன்கண் வரும் உருத்திர சன்மன் அகநானூறு தொகுத்தனென்பது அந்நூலின் இறுதிக்குறிப்பாற் புலனாம். எனவே அகப்பொருளுரை கண்ட காலமும் அகநானூறு தொகுக்கப்பட்ட காலமும் 5-ம் நூற்றாண்டின் முற்பகுதி யென்பது ஒருவகையாற் புலனாகின்றது. குறுந்தொகை நூலினைத் தொகுத்தவன் பூரிக்கோவாதலாலும் இப்பூரிக்கோ என்பான் உப்பூரிக்குடி கிழானாக இருத்தல் கூடுமாதலாலும், இத்தொகைநூல் உருத்திரசன்மனது தந்தையால் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றதெனக் கொள்ளூதல் தக்கதாகின்றது.
நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களனைத்தும் இம்முடிபினையே வலியுறுத்து வனவாம். தமிழிலக்கியச் சரிதப் போக்கும் நிச்சயமாய்த் தெரிகின்ற சரித்திர விஷயங்கள் முதலியனவும் இம்முடிபினையே கொள்ளும்படி வற்புறுத்துகின்றன. இதனோடு ஒருபுடை யொத்துச்சென்று வேறு வகையான முடிபிற்கு நம்மை யியக்கின்ற ஒரு சில பிரமாணங்களும் இல்லாமற் போகவில்லை. மேற்காட்டிய களவியலுரையின் பிற்பகுதி இத்தகைய பிரமாணங்களுள் ஒன்றாம். அதனை ஆதாரமாகக் கொள்ளின், கடைச்சங்கப் புலவராகிய நக்கீரரும் இக்காலத்து வாழ்ந்தவரென்று கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வாறு கொண்டு கடைச் சங்ககாலமும் 5-ம் நூற்றாண்டின் தொடக்கமென முடிபு கட்டிய அறிஞருமுளர். ஆனால் இதற்குக் காட்டும் பிரமாண வாக்கியம் பற்றிப் பற்பல ஆசங்கைகள் தோன்றுகின்றன. வாக்கியம் நோக்கிய வளவில் மக்கள் செயலில் தெய்வங்கள் கலந்துறவாடிய செய்தி கூறப்படுகின்றமை காணலாம். இதுபோன்ற ஆதாரங்களை உண்மையெனக் கொள்ளுவார் இக்காலத்து அரியர். ஒருவகையான ஆட்சேபத்திற்கு மிடமின்றிப் பொருத்தமுற்று நிற்பது யான் குறித்த முடிவேயாகும். ஆகவே குறுந்தொகை தொகுக்கப் பெற்ற காலம் 4-ம் நூற்றாண்டின் பிற்பகுதியென்றே கொள்ளற்பாலது.
இனி, நூலிலுள்ள செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வரையறுக்க முயலுவோம். பாடினோர் பல காலத்தவரும் பலதேயத்தவருமாவர். ஆதலால் செய்யுட்களியற்றியது குறித்த ஒருகாலத்தன்று என்பது வெளிப்படை. குறுந்தொகையிலுள்ள செய்யுளொவ்வொன்றும் தோன்றிய காலத்தை வரையறுத்தலும் இயலாததொரு காரியம். செய்யுட்களின் ஆசிரியர்களுடைய பெயர்களே மறைந்து விட்டன. 18 செய்யுட்களை இயற்றியோர்க்கு அவரவரது செய்யுட்களில் வந்துள்ள அருந்தொடர்களே பெயராக அமைந்துள்ளன. எஞ்சிய செய்யுட்களினும் கால வரையறை செய்ததற்குப் பயன்படும் ஆதாரங்களையுடையன மிக மிகச் சிலவேயாம். அவற்றுளொன்றை யெடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து காலத்தை அறுதியிட்டு அக் காலத்திற்கு முன்னாகப் பின்னாக இந்நூற் செய்யுட்கள் இயற்றப் பெற்றனவென்று கோடலே இயலுவதாம். இந்நெறியையே பின்பற்றி மேல்வரும் ஆராய்ச்சியை நிகழ்த்துகின்றேன்.
முந்திய பிரசங்கத்தில்,
நீ கண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ
வெண் கோட்டி யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே (குறுந். 75)
என்ற செய்யுளைக் குறித்து ஒருசில கூறும்படி நேர்ந்தது. குறுந்தொகையை முதலிற் பதிப்பித்தவராகிய சௌரிப் பெருமாளரங்கனார் ‘வெண்கோட்டியானை பூஞ்சுனைபடியும், பொன்மலிபாடிலி பெறீ இயர்’ என்று பதிப்பித்தனரென்றும் உண்மையான பாடம் மேலே தந்துள்ளதேயென்றும் பலமுகத்தா லாராய்ந்து தமிழிலும் (கலைமகள்) ஆங்கிலத்திலும் (டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நினைவுமலர் வெளியீடு) சில வருடங்கட்கு முன்னரே என்னால் எழுதப்பட்டது. டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்களும் தனிப்பட வாராய்ந்து உண்மைப் பாடத்தை அவர்களது பதிப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். எனது முடிவும் அவர்களது பாடமும் ஒன்றாதல் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன்.
இன்று இச்செய்யுளின் பாடபேத விசாரனையிற் புகும் அவசியம் இல்லை. இதன்கண் காணப்படும் சரித்திரச் செய்தியே நாம் ஆராய்தற்குரியது. சோணைநதிக் கரையிலே பொன்மிகுதியாற் சிறப்புற்று விளங்கும் பாடலியென்னும் வளமிக்க நகரத்தை நீ பெறுவாயாக என்று தலைமகன் வரவுணர்த்திய பாணனை நோக்கித் தலைமகள் கூறுகின்றாள். எனவே, இச்செய்யு ளியற்றப் பெற்ற காலத்தே பாடலிபுத்திரம் வளஞ் சிறந்த பெருநகரமாய் விளங்கிய தென்பது புலனாம். எக்காலத்து இவ்வாறு விளங்கியது? இதனை நிச்சயித்தற்குப் பாடலிபுத்திர நகரத்தின் சரிதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.
பாடலியென்பது முதலிற் பெயர் விளக்கமற்ற ஒரு சிற்றூராக இருந்தது. இதற்குக் குஸுமபுரமென்ற பெயர் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. லிச்சவி என்னு மரபினர்கள் படையெடுத்துவர வொட்டாது தடுப்பதன் பொருட்டு, அஜாதசத்ரு என்னும் அரசனால் கோட்டை யொன்று கட்டப்பெற்றது. இவ்வரசன் கி.மு. 500 முதல் கி.மு.475 வரை ஆட்சிபுரிந்தான். இவனது பெயரனாகிய உதயன் (உதயணனென்றும் இவனை வழங்கினர்) இச்சிற்றுரை ஒரு நகரமாக்குவதற்கு கி.மு. 450-ல் அடிகோலின னென்று கூறப்படுகின்றது. பின்னர் சந்திரகுப்த னென்னும் மௌரிய வரசன் இதன்கண் சில காலங்களில் வசித்து வந்தான். இவன் கி.மு. 322 முதல் 298 வரை அரசாட்சி செய்து வந்தான். இவ்வரசாட்சிக் காலத்திலே கி.மு. 302-ல் மெகாஸ்தினீஸ் என்னும் கிரேக்க ரொருவர் ஸெல்யூக்கஸ் என்னும் அரசனால் தூதாக அனுப்பப்பெற்று, பாடலிபுத்திரத்திலே வெகுகாலம் வாழ்ந்துவந்தார். இவர் இந்நகரத்தை விஸ்தாரமாக வருணித்திருக்கின்றனர்.
இதன் பின்னர் அசோக சக்ரவர்த்தியால் அரசாங்கத் தலைநகராகக் கொள்ளப்பட்டது. இச்சக்ரவர்த்தி கி.மு. 273 முதல் 233 வரை அரசாண்டனர். இவர்தாம் தமிழ்த் தேசங்கள் முதலியவற்றிற்கு முதன்முதல் பௌத்த தரிசனத்தைப் பரவச் செய்யும் பொருட்டுத் தூதர்களை அனுப்பி, அங்கங்கே பௌத்தப் பள்ளிகளை நிருமித்தவர். இவர் ஆட்சிபுரிந்து 50 வருஷங்களுக்குப் பின்னர், கி.மு. 185-ல் மௌரிய வமிசம் அழிவுற்று சுங்க வமிசத்தினர் கையில் மகத ராஜ்யமும் அதன் தலைநகராகிய பாடலிபுத்திரமும் சென்றன. இவ்வமிசத்தின் முதலரசன் புஷ்யமித்திர னென்பவன். இவன் காலத்தில் பாக்டீரியா அரசனான இயூக்ரேட்டிஸ் என்பவனது சுற்றத்தானும் காபூல் தேசத்து அரசனுமாகிய மிநாண்டர் என்பவன் வடஇந்தியாவிற் படையெடுத்து வந்து பாடலிபுத்திரத்தையே முற்றுகை செய்வான் போல நெருங்கினான். எனினும் கி.மு. 75-வரை அரசாண்ட சுங்க வமிசத்தினரது தலைநகராகவே பாடலிபுத்திரம் இருந்துவந்தது. இவ்வமிசத்திற்குப் பின் காண்வ வமிசத்தினர் கி.மு.27-வரை மகதத்தில் அரசு புரிந்தனர். இவ்வமிசத்திற்குப் பின் மகத தேசம் அதன் தலைநகராகிய பாடலியுடன் ஆந்திர வமிசத்தினர் கைப்பட்டது. இவ்வமிசத்தினர் கி.பி. 225-வரை ஆட்சி புரிந்தனர். இதற்கப்புறம் பாடலிபுத்திரம் லிச்சவி மரபினரால் கொள்ளப் பட்டதாயிருத்தல் வேண்டும். கி.பி. 320-ம் வருடம் முதற்கொண்டு ஆண்டுவந்த குப்த அரசனுக்குப் பாடலி லிச் சவிகளிடமிருந்தே கிடைத்தது. குப்த அரசனான சந்திரகுப்தன் (320-360) பாடலியைத் தலைநகராகக் கொண்டு அரசு புரிந்து வந்தான். இவனுக்குப் பின் சமுத்திர குப்தனால் (360-375) பாடலி புறக்கணிக்கப்பட்டது. பின்னர் குப்தர்களுக்குரிய முக்கியமான நகரங்களுளொன்றாகப் பாடலி இருந்தபோதிலும் தலைநகரென்ற பதவியை அது இழந்துவிட்டது.
பின்னர் கி.பி.405-411 வரை இநதியாவிலிருந்த சீன யாத்திரிகன் பாடலி நல்ல நிலைமையி லிருந்ததாகவே கூறுகின்றான்.
கி.பி.640-ல் இந்தியாவிற்கு வந்த ஹ்யூன் த்ஸாங் (Hiouen Thsang) பாடலி முற்றும் அழிந்து விட்டதாகக் கூறுகின்றான்.
இச்சரிதத்தால் அசோக சக்கரவர்த்தி காலத்திற்குப் பின்பு கிறிஸ்துவப்தத்தின் ஆரம்ப காலங்களில் பாடலியிருந்த நிலைமையை மேலைச் செய்யுள் குறிப்பதாகக் கொள்ளலாம். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு குறுந்தொகைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலமெனக் கருதுதல் தவறாகாது.
.
அடிக்குறிப்பு மேற்கோள்:
1. இதனைக் குறித்து எனது காவிய காலத்திற் காண்க.
$$$