-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
9. உள்ள மலரால் அர்ச்சிப்போம்
.
கபீரே காஸாரே விச’தி விஜனே கோரவிபினே
விசா’லே சை’லே ச ப்ரமதி குஸுமார்த்தம் ஜடமதி:/
ஸமர்ப்யைகம் சேதஸ்ஸரஸிஜ-முமாநாத பவதே
ஸுகேனாவஸ்தாதும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ//
.
ஆழமான நீர்நிலையில் ஆளில்லா காடுகளில்
உயரமான மலைமேலே உழல்கின்றார் மலர்தேடி
அங்கிங்கே அலையாமல் மனமென்னும் பூவதனை
உமாபதியே உமக்களிக்க அறிவிலிகள் அறியாரே.
.
நம்மைக் கடைத்தேற்றும் தெய்வத்தை அறிந்தாகி விட்டது. அதனை எப்படி பூஜிப்பது? சிவனை அர்ச்சிக்கும் மலரைக் கொய்வதற்காக ஆழம் நிறைந்த நீர்நிலைகளிலும், ஆள்புக அஞ்சுகின்ற காடுகளிலும், ஏறுவதற்கு சிரமம் தரும் உயரமான மலை மீதும் எனப் பல்வேறு இடங்களில் விவரம் அறியாத பக்தர்கள் உழல்கின்றனர். ஆனால், எங்கேயும் அலையாமல் தனது மனமாகிய மலரால் உமையின் நாதனே உன்னை அர்ச்சிப்பதற்கு அந்த அறிவிலிகள் அறியவில்லையே? என்று நமக்காகப் பரிதாபப்படுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
சிவபெருமான் எவ்வளவு பெரியவரோ அந்த அளவுக்கு எளிமையானவர். தெளிந்த மனம் போதும் அவரை உபசரிக்க; அழகும், மணமும் நிறைந்த பூக்கள் அவசியமில்லை.
$$$