-எஸ்.எஸ்.மகாதேவன்

வேர்களை நிஜமாகவே தேடி
பள்ளிக்கூடம் விட்டதும் பொட்டல் வெளியில் கம்பு தள்ளி, காலாந்திரி ஆட்டங்கள் ஆடிக் களைத்த பின் அங்கங்கே தலைகாட்டும் பப்படப் புல் சேகரிப்போம். ஒரு கை நிறையப் புல் சேர்ந்ததும் பலசரக்குக் கடை அண்ணாச்சியிடம் கொண்டுபோய்க் கொடுப்போம். கைநிறைய பொரிகடலையோ ஒரு துண்டு கருப்பட்டியோ கிடைக்கும். வீடு போய்ச் சேருகிற வரை அது முன்பசிக்கு ஆகும். பப்படப் புல் எதற்கு ஆகும்? கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் போகும். அதாவது ஒரு மூலிகை, அது குணப்படுத்தும் வியாதி எல்லாம் அறிந்த ஐம்பதுகளின் தொடக்கப் பள்ளி மாணவர்களாகத் திரிந்தோம்.
பட்டணத்துப் பெரியவர் ஒருவர். 50 வயது இருக்கும். குளிக்கலாம் என்று ஆற்றுக்குப் போனார். தாமிரபரணிக் கரையில் சிந்துபூந்துறை அருகே நெடுநெடுவென்று வளர்ந்த பருத்த மரங்கள். விபூதிக் காப்பு சாத்திய சிவலிங்கம் போல. வெண்சாம்பல் நிறத்தில் மரப்பட்டை. என்ன மரம் இது என்று பார்த்தபடி நின்று விட்டார். பக்கத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் “குளிக்க இறங்காம ஏன் மருத முறச்சுக்கிட்டு நிக்கிறீக, பாட்டா?” என்று கேட்ட கேள்வியில் தன் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் இருந்ததை பெரியவர் நாணத்தோடு கவனித்துக்கொண்டார். ஆம், அது மருத மரம்.
எல்லா மரம் செடி கொடிகளையும் எல்லோருக்கும் அடையாளம் காண முடிகிறதா என்ன? ராமாயணத்தில் அனுமனுக்கும்தான் தெரியவில்லை. அதனால்தானே சஞ்சீவி பர்வதத்தையே தூக்கிக்கொண்டு போனார்? ஊர்ப்புறங்களில் தடுக்கி விழுந்தால் எருக்கஞ்செடி, தும்பை, குப்பைமேனி தலைகாட்டும். எல்லாம் மருந்துக்கு ஆகும். மருந்துக்கு ஆகாதது என்று ஏதாவது உண்டா என்ன? இல்லை என்கிறது “நாஸ்தி மூலம் அனவ்ஷதம்” (ஔடதத்துக்கு ஆகாத வேர் இல்லை) என்ற பழைய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று. தகுதி இல்லாதவர் என்று யாரும் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்த வந்த ஸ்லோகம் அது.
குறைந்தது ஆயுர்வேதம், சித்தா போன்ற நம் பாரம்பரிய மூலிகை வைத்தியம் பற்றி அழுத்தமான நம்பிக்கையோடு எடுத்துச் சொல்லும் தகுதியையாவது நாம் எல்லோருமே வளர்த்துக்கொள்ள வேண்டிய காலம் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. ஐ.நா.சபையின் சுமார் 200 நாடுகளில் 90 சதவீத நாடுகள் பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கடைப்பிடிப்பவை. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான ஒருங்கிணைந்த மையம் வேண்டும் என்று அந்த நாடுகள் கேட்டதால் உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.ஹெச்.ஓ) பாரதத்தில் அந்த மையத்தை நிறுவ விரும்பியது. பாரதம் சம்மதித்தது. குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான உலகு தழுவிய மையம் அண்மையில் நிறுவப்பட்டது. எனவே நமது மூலிகை வைத்தியத்தை முழு நம்பிக்கையோடு நாம் பிரசாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
நம்பிக்கை முக்கியம். அவரவர் சொந்த அனுபவம் மட்டுமே நம்பிக்கைக்கு வலு சேர்க்கும். ஓடும் ரயிலில் நெரிசலான ஒரு பெட்டியில் கைக்குழந்தை ஒன்று நீண்ட நேரம் உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருக்கிறது. அதன் தாய் குழந்தையை சமாதானப்படுத்தச் செய்த முயற்சி எதுவும் பலிக்கவில்லை. பெட்டியில் உள்ள மற்ற பயணிகளால் சும்மா இருக்க முடியவில்லை. அவரவர் வீட்டில் குழந்தைக்கு செய்த பக்குவத்தை அந்த தாயிடம் எடுத்துச் சொல்கிறார்கள். இப்படி பத்து பேராவது அங்கே வைத்தியம் சொல்வார்கள் காரணம், அவர்களுடைய வைத்தியத்தில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கை. பிரதமர் மோடி ஆயுர்வேத வைத்தியர்களின் அகில பாரத மாநாடு ஒன்றில் பேசுகையில் சொன்ன சம்பவம் இது. வைத்தியர்களாகிய உங்களுக்கு முதலில் வைத்தியத்தில் அந்த அளவுக்கு உறுதியான நம்பிக்கை அவசியம் என்று, அவர் முத்தாய்ப்பு வைத்தார்.
சுதேசி வைத்தியத்தில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள தேசபக்தி அவசியம். மனிதர்களுக்கு ஆயுர்வேதம், மரங்களுக்கு விருட்ச ஆயுர்வேதம், யானைகளுக்கு கஜாயுர்வேதம், குதிரைகளுக்கு அஸ்வ ஆயுர்வேதம் என்று இயற்கை அன்னை பெற்ற எல்லாப் பிள்ளைகளுக்கும் பரிவு காட்டி அரவணைக்கும் பாரம்பரியம் கொண்டது எங்கள் நாடு என்று நியாயமாகவே மார்தட்டிச் சொல்ல நமக்கு நிச்சயம் அருகதை உண்டு. மார்தட்டிச் சொல்ல மக்களை ஆயத்தப்படுத்தும் கடமை அரசுக்கு உண்டு.
நம்மூருக்கு வருவோம். தமிழகத்தில் 30 சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில் சித்தா பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது. பல்கலைக்கழகம் என்றால் துணைவேந்தர் இருப்பார். மாநில அரசின் சுகாதாரத் துறையின் கீழ் வரும் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்குக் கொள்ளை ஆசை. அதில் தவறு இல்லை. மக்களுக்கு சித்த வைத்தியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுத்த என்ன வழி என்று அரசு முதலில் யோசிக்கட்டும். அதுவும் தவிர, ஆயுர்வேத ஞானத்தை தமிழகத்தில் பரப்ப தமிழக அரசு கடமைப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால் வானம் இடிந்து தலையில் விழுந்து விடாது.
$$$