-சேக்கிழான்

குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்ட புதினம் எழுதுவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்தத் துறையில் மூழ்கி முத்தெடுப்பது என்பது ஒரு கலை. இதை மிக அற்புதமாகச் சாதித்திருக்கிறார் ஹிந்தி எழுத்தாளர் சுரேந்திர வர்மா.
வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், தான் சார்ந்த நாடகத் துறையின் பலம்- பலவீனங்கள், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் ஒன்றாகக் கலக்கி, தெளிவான நீரோடை போன்ற கதையுடன் அவர் 1993-இல் படைத்த ‘முஜே சாந்த் சாஹியே’ புதினம், ஹிந்தி எழுத்துலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியதுடன் முன்னுதாரணமான புதினமாகவும் மாறியது. 1996-இல் இதற்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.
உத்தரப்பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஷாஜகான்பூரின் சுல்தான்கஞ்சில் ஏழை பிராமண ஆசிரியரின் மகளாகப் பிறந்த யசோதா சர்மா, துரதிருஷ்டத்தின் வடிவாகக் கருதப்படுகிறாள். சில்பில் (மக்கு) என்று அழைக்கப்படும் அவள், தனது கலைக்கனவால் உந்தப்பட்டு வர்ஷா வசிஷ்ட் என்று பெயர்மாற்றம் செய்துகொள்ளும்போது புதினம் தொடங்குகிறது.
வர்ஷாவின் கலைப்பயணம் அவளது பார்வையிலேயே விரிகிறது. தனது பாதையில் திசைகாட்டியாக வரும் ஆசிரியை திவ்யா, சகோதரி காயத்ரி, கலையுலகப் போட்டியாளர்களான ஷிவானி, அனுபமா, சாருஸ்ரீ, சஞ்சனா, நண்பியாக இருந்து எதிரியாக மாறும் சுஜாதா எனப் பல பெண்கள் வர்ஷாவின் நினைவடுக்குகளில் விரிகிறார்கள். தந்தை கிஸன்தாஸ் சர்மா, அண்ணன் மகாதேவ், டாக்டர் சிம்ஹல், காதலன் ஹர்ஷ், டாக்டர் அடல், மிட்டு, ரோஹன், சதுர்புஜ், சிநேகன், சூரியபான், பாண்டே, சித்தார்த் என வர்ஷாவின் வாழ்வில் எதிர்ப்படும்- துணை நிற்கும் ஆடவர்களும் கச்சிதமாகப் புனையப்பட்டிருக்கிறார்கள்.
தனது துணிச்சல், நேர்மை, பணிவு, தற்காப்புத் தன்மை, பண்பாட்டைக் கைவிடாத நேர்த்தி ஆகிய குணங்களாலும், சுயேச்சையான நடிப்புத் திறனாலும், பிற்போக்கான எளிய குடும்பத்தைச் சார்ந்த வர்ஷா தேசிய அளவில் புகழ் பெறும் தாரகை ஆகிறாள். இந்தப் பயணத்தில் அவள் அடையும் வேதனைகள், சோதனைகள், இழப்புகள், பெருமிதங்கள் அனைத்தையும் நுண்ணிய சித்திரிப்புகளுடன் பதிவு செய்கிறார் ஆசிரியர். தேசிய நாடகப் பள்ளியில் பல்லாண்டு காலம் பணியாற்றிய அவரது அனுபவம் புதினம் முழுவதிலும் மிளிர்கிறது.
பாரம்பரிய சமஸ்கிருத இலக்கியத்திலும் மேற்கத்திய நவீன இலக்கியத்திலும் ஒருசேர அவர் பெற்றிருக்கும் ஞானம் புதினத்தின் ஒவ்வொரு காட்சியிலும் புலப்படுகிறது. காளிதாஸனும் செகோவும் ஆங்காங்கே வந்து போகிறார்கள். வலிந்து திணிக்காத, மென்மையான அவரது நகைச்சுவை உணர்வும் அடிக்கடி புன்னகைக்க வைக்கிறது. அடைப்புக்குறிக்குள் வரும் வாக்கியங்கள் அனைத்தும் தனியே கவனிக்கத் தக்கவை.
இப்புதினத்தை தடையற்ற தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.சுசீலா.
முத்ரா ராட்சஸஸும், மேகதூதமும், சாகுந்தலமும் இந்தியக் கலையுலகின் அடிப்படை என்பதை இப்புதினத்தில் உணர்கிறோம். இதேபோல, தமிழின் காப்பிய வர்ணனைகளுடன் இயல்பான ஒரு தமிழ்ப் புதினம் உருவாக முடியுமா என்ற ஏக்கம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
$$$
நூல் விவரம்:
எனக்கு நிலா வேண்டும்
ஹிந்தி மூலம்: சுரேந்திர வர்மா
தமிழாக்கம்: எம்.சுசீலா
960 பக்கங்கள், விலை: ரூ. 550.
வெளியீடு: சாஹித்ய அகாதெமி,
குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018.
$$$