-கி.வா.ஜகந்நாதன்

46. சென்னை வருகை
சில காலமாக ஆசிரியருக்கு உடல்நலம் சரியில்லாமையினால் சிதம்பரம் கல்லூரிப் பணியை விட்டுவிட்டுப் போகவேண்டுமென்ற எண்ணம் இருந்து வந்தது. வயிற்றில் அடிக்கடி வலி உண்டாயிற்று. உணவு ஜீரணம் ஆகவில்லை. எனவே, கல்லூரியிலிருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை செட்டியாருக்குத் தெரிவித்தார். அவர், “அந்தப் பதவிக்கு யாரை நியமிக்கலாம் என்று தோன்றுகிறதோ அவரை நியமித்துவிட்டு, உங்கள் விருப்பப்படி செய்யலாம்” என்று தெரிவித்தார். தமக்கு அடுத்தபடி மீனாட்சி கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொன்னோதுவார் என்பவரை முதல்வராக நியமிக்க ஏற்பாடு செய்துவிட்டு ஆசிரியர் அங்கிருந்து விலகிக்கொண்டார்.
$$$
47. நான் ஆசிரியரை அடைந்தது
சேந்தமங்கலம் என்ற ஊரில் நான் சிலருக்குத் தமிழ்ப் பாடம் சொல்லிக்கொண்டு தங்கியிருந்தேன். அப்போது நிஜானந்த சரஸ்வதி என்னும் துறவி, நான் தமிழில் செய்யுள் எழுதுவதைப் பார்த்து, “நீங்கள் ஐயரவர்களிடம் சென்றால் நன்றாகத் தமிழ் படிக்கலாம்” என்று சொன்னார். சேந்தமங்கலம் மிட்டாதாராக இருந்த ஐராவத உடையாருக்கும், அவ்வாறு செய்வது நலம் என்று தோன்றியது.
1927-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடலூருக்குச் சென்று அப்படியே சிதம்பரம் போய் ஆசிரியர் அவர்களைப் பார்த்துவர எண்ணினோம். அவ்வாறே நாங்கள் யாவரும் வடலூர் சென்று தைப் பூசத்தைத் தரிசித்துக்கொண்டு சிதம்பரம் சென்றோம். ஆசிரியரைப் பார்த்தோம்.
அப்போது நான் சட்டை அணிவதில்லை. கழுத்தில் ருத்திராட்சத்துடன் நெற்றியில் விபூதி பூசிக்கொண்டிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் ஒரு வகையான அன்பு ஆசிரியருக்கு உண்டாயிற்று. “இவர் நன்றாகக் கவிதை பாடுவார். தமிழில் நன்றாகப் பேசுவார். உங்களிடம் இருந்து பாடம் கேட்க விரும்புகிறார்” என என்னுடன் வந்தவர்கள் சொன்னார்கள்.
அப்போது ஆசிரியர் பிள்ளையவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். பாடம் கேட்கப் பலரும் அவரிடம் வந்ததையும், இடையிலே சென்றுவிட்டதையும் சொன்னார். “நான் இப்போது கல்லூரியிலிருந்து விலகிச் சென்னைக்கே போக இருக்கிறேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பமா? அல்லது என்னிடம் இருந்து படிக்க விருப்பமா? ‘ என்று கேட்டார். அவரிடம் இருந்தே படிக்க விரும்புவதாக நான் சொன்னேன்.
உடனே ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்படி சொன்னார். நான் ஒரு கம்ப ராமாயணப் பாடலைச் சொன்னேன். அதில் உள்ள நயம் என்ன என்று கேட்டார். அதையும் எடுத்துச் சொன்னேன். அதைக் கேட்ட ஆசிரியர் உள்ளத்திலே பேருவகை ஏற்பட்டிருக்க வேண்டும். “உணவுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு சென்னைக்கு வந்தால் என்னிடம் பாடம் கேட்கலாம்” என்று சொன்னார்.
1927-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி ஆசிரியப் பெருமான் சிதம்பரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பினார். இவர் பிரிவை எண்ணிப் பலர் வருந்தினார்கள், வழியனுப்பு விழா நடத்தினர்.
$$$
48. பல்கலைக் கழகத்தில் பேச்சு
சென்னைக்கு வந்தவுடன் பல்கலைக் கழகத்திலிருந்து பத்து நாட்கள் பழைய நூல்களைப் பற்றிப் பேசவேண்டுமென்று ஆசிரியருக்கு அழைப்பு வந்தது. 1827-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் ஐந்து நாட்களும், டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களும் அந்தச் சொற்பொழிவுகள் பல்கலைக் கழக செனட் மண்டபத்தில் நடைபெற்றன. அந்தச் சொற்பொழிவுக்காகப் பல்கலைக் கழகத்தார் 500 ரூபாய் வழங்கினர். அதுவரைக்கும் மண்ணெண்ணெய் விளக்கில் பணி செய்து கொண்டிருந்த ஆசிரியர் அந்தப் பணத்தைக் கொண்டு தியாகராச விலாசத்திற்கு மின்சார விளக்குப் போடச் செய்தார். கார்த்திகைத் தினத்தன்று மின்சாரத் தொடர்பு கிடைத்தது நல்ல சகுனமாக ஆசிரியப் பெருமானுக்குத் தோன்றியது.
$$$
49. நான் மாணவனாகச் சேர்ந்தது
1927 – ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு டாக்டர் அன்சாரி தலைமையில் சென்னையில் நடந்தது. அப்போது சேந்தமங்கலம் ஐராவத உடையார் என்னையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். தியாகராச விலாசம் சென்று ஆசிரியரைப் பார்த்தேன். அவரிடமே தங்கிப் பாடம் கேட்கும் விருப்பத்தைச் சொன்னேன். ஆசிரியப் பெருமான் என்னை ஏற்றுக்கொண்டார். உடல்நலம் இல்லாமையினால் அப்போது ஆசிரியர் எந்தப் பதிப்பு வேலையையும் செய்யவில்லை. நான் நாள்தோறும் 300, 400 பாடல்கள் பாடம் கேட்டேன். முதலில் திருவிளையாடல் புராணத்தைப் பாடம் கேட்டேன். பாடம் சொல்லும் போது பல நுட்பமான நயங்களை எடுத்துக் காட்டுவார். அரிய செய்திகளை எடுத்துச் சொல்வார். பிள்ளையவர்களைப் பற்றி மனம் நெகிழ எடுத்துரைப்பார். பிள்ளையவர்கள் விரைவில் கவிதை பாடியதைப் பற்றிச் சொல்லும் போது எனக்கு வியப்பு உண்டாயிற்று. சங்க நூல்களை எல்லாம் பதிப்பித்து, தமிழில் ஒரு புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கிய ஆசிரியப் பெருமான் அவர்கள், அந்த நூல்களைப் பற்றி எதுவுமே தெரிந்திராத தம் ஆசிரியரைப் பற்றி, தம்முடைய முதுமைப் பிராயத்திலும் மிகவும் பக்தியோடு எண்ணிப் பேசுவதை அறிந்து நான் மிகவும் மன நெகிழ்ச்சி அடைந்தேன். ஞானாசிரியரிடம் கூட ஒரு மாணாக்கருக்கு இவ்வளவு பக்தி இருப்பதில்லை. ஆசிரியப் பெருமானுக்குப் பிள்ளையவர்களிடமிருந்த பக்திக்கு வேறு உவமை எதுவும் சொல்ல முடியாது.
அந்தாதிகள், கோவைகள், உலாக்கள் முதலிய பிரபந்தங்களை எல்லாம் நான் இவரிடம் வரிசையாகப் பாடம் கேட்டேன்.
$$$
50. வேறு நூற்பதிப்புகள்
அந்தக் காலத்தில் மாயூரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அந்தக் கும்பாபிஷேகப் பத்திரிகையை நல்ல முறையில் அச்சிட வேண்டும் என்று திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் விரும்பினார். நான் அப்போது ஆசிரியருடன் அங்கே போயிருந்தேன். அதன் பிறகு மாயூரம் சம்பந்தமாக ‘மயிலைத் திரிபந்தாதி’ என்னும் நூலை ஆசிரியர் வெளியிட்டார் சிறிய நூலாக இருந்தாலும் அதில் முகவுரை முதலியன சிறப்பாக அமைந்தன.
திருப்பனந்தாளில் அப்போது காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான் காசி மடத்தின் தலைவராக இருந்தார். அவருடைய இளவரசாகச் சாமிநாதத் தம்பிரான் இருந்தார். அவர் நன்றாகப் படித்தவர். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பரம்பரையில் வந்தவர். அவர் ஒருமுறை சென்னைக்கு வந்து சேத்துப்பட்டில் தங்கியிருந்தார். ஆசிரியப் பெருமான் அவரைப் போய்ப் பார்த்தபோது சிவக்கொழுந்து தேசிகர் பாடல்களைப் பற்றிய பேச்சு எழுவது உண்டு. அவருடைய நூல்களை ஆசிரியப் பெருமான் பதிப் பித்தால் தமிழ் உலகத்திற்கு மிகவும் பயன்படும் என்று அவர் சொன்னார். அப்படியே செய்வதாக ஆசிரியப் பெருமான் ஒப்புக் கொண்டார்.
(தொடர்கிறது)
$$$