-அ.இளங்குமர் சம்பத்

இன்று டாக்டர் அம்பேத்கரின் பெயரையும் படத்தையும் எல்லோரும் பயன்படுத்தி அவரைத் தங்களவர் என்று காட்டிக் கொள்ள முயல்கின்றனர். இது வெறும் அரசியல் என்பது வெளிப்படை. குறிப்பாக, இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் புரட்சியாளர் அம்பேத்கரைத் தங்கள் உடமைபோல் ஆக்கிக் கொண்டு, அவர் படமில்லாமல், பெயரை உச்சரிக்காமல் எந்த நிகழ்ச்சியும் நடத்துவதில்லை. இளைய தலைமுறையினருக்கு டாக்டர் அம்பேத்கர் கம்யூனிஸவாதி போன்ற சிந்தனையை இன்றைய கம்யூனிட்டுகளும் பிற இடதுசாரி அமைப்பினரும் ஏற்படுத்தி வருகின்றனர்.
உண்மையில் டாக்டர் அம்பேத்கர் கம்யூனிஸ ஆதரவாளரா?
இல்லை. புரட்சியாளர் அம்பேத்கர் ஒருபோதும் கம்யூனிஸ சிந்தனையால் கவரப்பட்டவர் அல்ல. அவர் கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் தம் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்ததிலிருந்து இதை நாம் அறிய முடியும். தொழிலாளர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக, தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக டாக்டர் அம்பேத்கர் கம்யூனிஸ்ட் கட்சியை ஒருபோதும் நாடவில்லை. அதே சமயம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக, அவர்களின் நலனிற்காக 1936-ஆம் ஆண்டு ‘சுதந்திர தொழிலாளர் கட்சி’யை டாக்டர் அம்பேத்கர் நிறுவினார்.
அம்பேத்கர் ஏன் கம்யூனிஸத்தை எதிர்த்தார்?
- ‘மதம்’ மக்களுக்கு ‘அபின்’ போன்றது என்ற கருத்தைக் கொண்டிருந்தது கம்யூனிஸம்.
- முதலாளித்துவமே நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்; அதை ஒழித்தால் போதும் என்றும் வர்க்கப் போராட்டமே அனைத்தையும் தீர்க்கும் சர்வ வல்லமை பெற்றது என்பதும் கம்யூனிஸ்டுகளின் நம்பிக்கை.
-இந்த இரண்டு விஷயங்களையும் அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. டாக்டர் அம்பேத்கரைப் பொறுத்தமட்டில், மனிதர்களுக்கு மதம் அவசியமானது, ஏனெனில் ‘மனிதர்களைப் பண்படுத்துவது, நல்வழிப்படுத்துவது மதம் மட்டுமே’ என்ற கருத்தை ஆழமாக உள்வாங்கியிருந்தார்.
1938 பிப்ரவரி 12 அன்று, பம்பாயில் ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர்கள் மாநாட்டில் ‘மதத்தை அலட்சியமாக நினைக்கும் இளைஞர்கள் எனக்கு மிக மிக வருத்தத்தைத் தருகிறார்கள். யாரோ சொன்னது போல் மதம் அபினல்ல’ என்று கூறியவர் மேலும், ‘என்னிடமிருக்கும் நல்ல பண்புகளுக்கும் என் கல்வியால் சமுதாயத்திற்குக் கிடைத்த நல்ல பயன்களுக்கும் என் மத உணர்வுகளே காரணம். மதம் எனக்கு தேவை” என்று அம்பேத்கர் உறுதிபடக் கூறியுள்ளார். அதே சமயம் மதத்தின் பேரால் கபட வேடம் போடுவதும் எனக்குப் பிடிக்காது’ என்று சாடியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களுக்கான இயக்கமல்ல. தொழிலாளர்களைச் சுரண்டும் இயக்கம் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
1951 அக்டோபர் 6-இல் ஷெட்யூல்டு வகுப்பின் சம்மேளன செயற்குழு கூட்டத்தில், ‘தனிப்பட்டவரின் சுதந்திரம், நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்து, அதற்கு பதிலாக, எதேச்சாதிகாரத்தைக் கொண்டு வருவதை லட்சியமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் எந்த உறவையும் வைத்துக் கொள்ளாது’ என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தினார்.
இந்திய கம்யூனிஸம் மட்டுமல்ல, சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிஸம் கோலோச்சிய நாடுகளையும் அம்பேத்கர் நம்பவில்லை.
சீனா பற்றி அம்பேத்கர்
இந்தியாவும் சீனாவும் இப்போது நட்பு நாடாக இருந்தாலும், இந்த நட்புறவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை திட்டவட்டமாகக் கூற முடியாது. இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது” என்று ‘மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள்’ என்ற நூலில் (1955) அம்பேத்கர் கூறியுள்ளார்.
மேலும், ‘அரசியலில் பஞ்சசீலக் கொள்கைக்கு இடமேயில்லை. கம்யூனிஸ நாட்டின் அரசியலில் பஞ்சசீலக் கொள்கை இடம் பெறவே முடியாது. கம்யூனிஸ நாடுகளில் ஒழுக்கநெறிகள் மாறிக் கொண்டேயிருக்கும். அவர்கள் மாறுபட்ட வாழ்வியல் கோட்பாடுகளையும் அரசமைப்பு முறைகளையும் பின்பற்றுபவர்கள். ஆகவே நாம் சுதந்திர நாடுகள் என்று கருதப்படும் நாடுகளுடன் கூட்டு வைத்துக் கொள்வது நல்லது’ என்றும் கூறினார். அம்பேத்கரின் தீர்க்க தரிசனம் சீனா 1962-இல் நம் தேசத்தின் மீது படையெடுத்தபோது வெளிப்பட்டது.
ரஷ்யா பற்றி அம்பேத்கர்
‘ரஷ்யா பல நாடுகளை இல்லாமல் ஆக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விடுதலை அளிப்பது என்ற கோட்பாட்டில், மற்ற நாடுகளைத் தன் நாட்டுடன் சேர்த்துக் கொள்கிறது. மற்ற நாடுகளுக்கு ரஷ்யா வழங்கும் விடுதலை என்பது, அடிமைத்தனம். விடுதலைக்குப் பிறகு அங்கே சுதந்திரம் முளைப்பதில்லை. இதனால் யாதொரு பயனுமில்லை. ரஷ்யா என்ற பூதம் வாயைத் திறந்து இரை கேட்கும் போதெல்லாம், அதற்குப் பிற நாடுகள் பலியாக்கப்படுகின்றன’ என்றும் கூறினார்.
மேலும், ‘தென்கிழக்கு ஆசிய நாடுகள் அவசரப்பட்டு ரஷ்ய வலையில் வீழ்ந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நாளைய தினம் ரஷ்யாவில் சர்வாதிகாரம் தோல்வி அடைந்தால் அங்கே என்ன நடக்கும்? நாட்டின் சொத்தை கபளீகரம் செய்து கொள்வதற்கு ரஷ்ய மக்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டு ரத்தக் களரியில் ஈடுபடுவார்கள். ஏனென்றால், அவர்கள் தாங்களாகவே முன்வந்து கம்யூனிஸ அமைப்பு முறையை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்றார்.
டாக்டர் அம்பேத்கரின் தீர்க்க தரிசனம், 1989-இல் ரஷ்யா சிதறுண்டபோது நிகழ்ந்தது. மக்கள் உரிமைக்காக மட்டுமல்ல; ரொட்டிக்காகவும் அடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
1952 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி அம்பேத்கரைத் தோற்கடித்தது. இதற்கு ஒருபடி மேலே சென்று, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டாங்கே, ‘எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை; அம்பேத்கருக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று பிரச்சாரம் செய்தார் என்பது மறுக்கமுடியாத வரலாற்றுப் பதிவு.
கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்ட்களையும் அம்பேத்கர் தம் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்தார். தொழிலாளர்கள் நலனுக்காக ‘சுதந்திர தொழிலாளர்கள் கட்சி’யை டாக்டர் அம்பேத்கர் நிறுவினார்.
‘கம்யூனிஸ்டுகளைக் கண்டு மயங்கிவிடாதீர்கள். புத்தரைப் போல் நாம் விழிப்படைவோமானால் அன்பு, நீதி, நல்லெண்ணம் என்னும் வழிமுறைகளைப் பின்பற்றி, இதைவிட சாதனைகளை நம்மாலும் புரியமுடியும் என்பதில் எனக்கு பரிபூரண நம்பிக்கை உண்டு’ என்று குறிப்பிட்ட அம்பேத்கர், தம் மக்களை, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை கம்யூனிஸ சித்தாந்தத்திற்கு ஆட்படுத்தவில்லை.
$$$