-கி.வா.ஜகந்நாதன்

தமிழ்த் தாத்தா
(டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும் இலக்கியப் பணியும்)
நன்றி:
இந்திய இலக்கியச் சிற்பிகள் – சாகித்திய அகாதெமி
சாகித்திய அகாதெமி முதல் வெளியீடு: 1983
சாகித்திய அகாதெமி, ரவீந்திரபவன், புது தில்லி 110001
கிளை அலுவலகம்: 29, எல்டாம்ஸ் சாலை, சென்னை- 600 018
விலை: ரூ. 4.
$$$
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் (1855-1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். அறுபதாண்டு காலத்துக்கு மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றியபடியே, பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் உயர் காப்பியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத் தந்தவர். பழந்தமிழர் வாழ்க்கை உயர்வை இலக்கியச் செய்திகள் வாயிலாக உணர்த்தியவர். இலக்கியப் பதிப்புத் துறையில் பாடுபட்டு ஏடு தேடிய இவரது உழைப்பின் பயனாக புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வரலாற்றுச் செய்திகளைச் சுவையான நவீன சிறுகதை போலச் சொல்ல வல்லவர். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் தமிழிலே ஒரு வழிகாட்டி இவர். இன்றைய தமிழர் சிந்தனைக் கருத்துக்களையும், தமிழ் எழுத்தாளர் நடையையும் ஐயரவர்கள் வெளியீடுகள் பெரிதும் பாதித்துள்ளன எனலாம்.
இளமையில் நீண்ட காலம் ஐயரவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி.வா.ஜகந்நாதன் பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர்; இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப் பெறும் ஆசிரியர். ஐயரவர்களின் சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பணியையும் இந்த நூலில் தெளிவாக உணர்த்துகின்றார்.
$$$
முன்னுரை
சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த இரண்டு பெரும் புலவர்கள் தமிழுக்கு ஆக்கத்தை அளித்துப் புகழ் படைத்தனர். ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்; மற்றொருவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள். பாரதியார் அற்புதமான புதிய கவிதைகளைப் பாடி தமிழ் மகளை அலங்கரித்தார். ஐயரவர்களோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய சங்க நூல்களையும் வேறு பழைய காவியங்களையும் கண்டெடுத்து ஆராய்ந்து அருமையான முறையில் பதிப்பித்து உதவினார். அந்த நூல்களால் உலகம் முழுவதும் தமிழின் தொன்மையையும் பெருமையையும் பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் தெரிந்து கொண்டது. வெவ்வேறு நாடுகளில் உள்ள பேரறிஞர்கள் தமிழில் ஈடுபட்டு ஆராய்ச்சி செய்யலானார்கள். அதன் பயனாக உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன, இனியும் நடைபெறும்.
கம்ப ராமாயணம், வில்லி பாரதம் போன்ற நூல்களோடு நின்றிருந்த தமிழ் இலக்கியத்தின் விரிவு புலப்பட்டது. இவ்வளவு பழைய காலத்திலே தமிழ் நாட்டின் நாகரிகம் இத்தகைய சிறப்புடன் இருந்தது பெரு வியப்புக்குரியது என்று பலரும் பாராட்டினார்கள். தொன்மையான நூல்களாக இருந்தாலும் சங்க நூல்கள் இன்றும் கற்பவர்களுக்கு இனியனவாய் உள்ளன.
இத்தகைய சங்க நூல்களைக் கண்டெடுத்து உதவிய டாக்டர் ஐயர் உரைநடையிலும் பல நூல்களை எழுதினார். அவர் பதிப்பித்த மணிமேகலைக்கு அங்கமாக, மணிமேகலைக் கதைச் சுருக்கத்தையும், புத்தர், சங்கம், தர்மம் என்னும் மும்மணிகளைப்பற்றியும் எழுதினார். பெருங்கதைக்கு அங்கமாக உதயணன் சரித்திரத்தை எழுதினார்.
இவற்றையெல்லாமல் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றையும் வேறு பலருடைய வரலாறுகளையும் எழுதி உதவினார். ஏடு தேடியபோது தாம் பெற்ற அனுபவங்களை எடுத்துரைத்தார். சங்க நூல்களில் கண்ட பல செய்திகளைக் கட்டுரை வடிவில் எழுதினார். அவர் பதிப்பித்த நூல்களில் உள்ள முகவுரையே அவருடைய உரைநடை வளத்துக் சான்று பகரும். அவற்றோடு மேலே கண்ட வகைகளில் அவர் எழுதிக் குவித்தவை தமிழுக்குக் கிடைத்த களஞ்சியம் ஆகும்.
பண்டை நூற்பதிப்பு, வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி, அனுபவக் கட்டுரைகள் என்று பல துறைகளில் தம்முடைய இலக்கியப் பணியைச் செய்த அப்பெருமான் எண்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்து 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்தார். நினைவு தெரிந்தது முதல் தமிழைப் பயின்றும், பயிற்றுவித்தும், பிறகு பண்டை நூல்களைப் பதிப்பித்தும் தமிழுக்கு வளம் ஊட்டி வாழ்ந்த அப்பெரியாருடைய வரலாறு பல பல அரிய உண்மைகளை வெளியிடுகிறது.
அப்பெருமானுடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமே இந்த வெளியீடு. அவருடைய வாழ்க்கையில் மாணவப்பருவம், ஆசிரியத் தொண்டு, பதிப்புத்துறை, எழுத்துப்பணி என்ற பகுதிகள் அமைந்தன. அவற்றையெல்லாம் ஒருவாறு சுருக்கமாக இந்த நூலில் எழுதியிருக்கிறேன். இறுதியில் அவருடைய உரைநடையைப் பற்றிய பகுதியையும் எழுதிச் சேர்த்திருக்கிறேன்.
கவியரசர் பாரதியார் ‘பொதிய மலைப் பிறந்த தமிழ் வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில், துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே!’ என்று ஐயரவர்களைப் பற்றிப் பாடினார். ஆம், அப்பெருமான் என்றும் வாழ்வார். தமிழுள்ள காலமெல்லாம் அவர் புகழ் நின்று நிலைக்கும்.
-கி.வா.ஜகந்நாதன்
4-11-1982
$$$
பொருளடக்கம்
1. தமிழ்த் தாத்தா
2. இளமைக் கல்வி
3. மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல்
4. பெயர் மாற்றம்
5. திருவாவடுதுறைக் காட்சி
6. பட்டீச்சுரத்தில்
7. திருவாவடுதுறைக் குருபூஜை
8. பிள்ளையவர்களின் அன்பு
9. வேலையை மறுத்தல்
10. புராணப் பிரசங்கம்
11. பிள்ளையவர்கள் மறைவு
12. புதிய வீடு
13. முதலில் பதிப்பித்த நூல்
14. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது
15. சீவக சிந்தாமணிப் பதிப்பு
16. சுப்பிரமணிய தேசிகர் மறைவு
17. பத்துப்பாட்டுப் பதிப்பு
18. சிலப்பதிகார வெளியீடு
19. புறநானூறு வெளியீடு
20. மணிமேகலையை வெளியிட்டது
21. கிராமதானத்தை மறுத்தது
22. ஹாவ்லக் பிரபு விஜயம்
23. சென்னைக்குப் போவதை மறுத்தது
24. பாராட்டுத் தாள்
25. ஐங்குறுநூறு வெளிவரல்
26. சென்னையை அடைதல்
27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம்
28. தியாகராச லீலை
29. மகாமகோபாத்தியாயப் பட்டம்
30. தோடாப் பெறுதல்
31. பாரதியார் பாடல்
32. வீட்டை விலைக்கு வாங்கியது
33. பழைய திருவிளையாடல்
34. பிற நூல்களின் வெளியீடு
35. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கடிதம்
36. அச்சகம் வாங்க விரும்பாமை
37. கார்மைகேல் சந்திப்பு
38. திருக்காளத்திப் புராணம்
39. பரிபாடல் வெளியீடு
40. வேலையிலிருந்து ஓய்வு பெறுதல்
41. தாகூர் தரிசனம்
42. திருவாவடுதுறை வாசம்
43. பெருங்கதைப் பதிப்பு
44. மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல்
45. தாக்ஷிணாத்ய கலா நிதிப் பட்டம்
46. சென்னை வருகை
47. நான் ஆசிரியரை அடைந்தது
48. பல்கலைக் கழகத்தில் பேச்சு
49. நான் மாணவனாகச் சேர்ந்தது
50. வேறு நூற்பதிப்புகள்
51. தமிழ்விடு தூதும் பிற நூல்களும்
52. தக்கயாகப் பரணி
53. பிள்ளையவர்கள் சரித்திரம்
54. டாக்டர் பட்டம்
55. கலைமகளை அணி செய்தல்
56. சதாபிஷேகம்
57. ராஜாஜியின் பாராட்டு
58. காந்தியடிகளைக் கண்டது
59. குறுந்தொகைப் பதிப்பு
60. குமரகுருபரர் பிரபந்தங்கள்
61. காசிமடத்தின் தலைவருடைய அன்பு
62. என் சரித்திரம்
63. எலும்பு முறிவு
64. வாழ்க்கை நிறைவு
65. உரைநடை
$$$
1. தமிழ்த் தாத்தா
சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தமிழ்த் தாய்க்கு அணி செய்தவர்கள் இரண்டு பெரியவர்கள். ஒருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க நூல்கள் என்னும் பழைய அணிகலன்களைத் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பித்து அன்னையின் திருமேனியில் அணிவித்தார். மற்றொருவர் தாமே புதிய கவிகளை இயற்றி அணி செய்தார். முன்னவர் என்னுடைய ஆசிரியப் பிரான் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள், பின்னவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். டாக்டர் ஐயர் முயற்சியால் முதலில் சீவகசிந்தாமணி வெளிவந்தது. பிறகு பத்துப்பாட்டு, அடுத்து பெளத்த காவியமாகிய மணிமேகலை வெளியாயின. எட்டுத்தொகையில் ஐந்து இலக்கியங்களை அவர் ஆராய்ந்து வெளியிட்டார். அவரோடு தொடர்புடையவர்கள் மற்ற நூல்களை வெளியிட்டார்கள்.
டாக்டர் ஐயர் தமிழ் இலக்கியத்தில் பழைய அணிகளை வெளியிட்ட பிறகு தமிழ்நாட்டில் ஒரு புத்துணர்ச்சி உண்டாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையையும், அவர்களது பண்பாட்டு நிலையையும், பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்வதற்கு அந்த நூல்கள் கருவிகளாக விளங்குகின்றன. உலகம் முழுவதும் உள்ளவர்கள் சங்க நூல்களைக் கண்டு விம்மிதம் அடைந்தார்கள். அவர்கள் அந்த நூல்களைப் படித்து ஆராயத் தொடங்கினார்கள். மிகப் பழங்காலத்தில் தோன்றிய அந்த நூல்கள், இன்றைய மாணவர்களும் படித்து, ஆராய்ந்து இன்புறுவதற்கு ஏற்றவாறு இருந்தது. வியப்பில் ஆழ்த்தியது. நாளடைவில் பழைய நூல்கள் எல்லாம் பயனற்றுப் போக, இன்றைய நூல்களுக்கு மதிப்பு உண்டாவது உலக இயற்கை. பழைய நூல்களைக் கண்காட்சியில் தான் காணலாம். ஆராய்ச்சியாளர் மாத்திரம் ஆராய்ந்து வருவார்கள். ஆனால் சங்க நூல்கள் அத்தகையன அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினாலும் அவற்றைப் படிக்கவும், ஆராயவும், அனுபவிக்கவும் முடிகிறது. அதனால் கம்பராமாயணம் முதலிய காப்பிய நூல்களோடு சங்க நூல் ஆராய்ச்சியும் எங்கும் நடைபெறலாயிற்று. அதன் பயனாகத் தமிழ் மாநாடுகளும், உலக விழாக்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. சங்க நூல்களின் பெருமையை மற்ற நாட்டிலுள்ளவர்களும் தெரிந்துகொள்ளும்படி அவற்றின் மொழிபெயர்ப்பைச் சிறந்த அறிஞர்கள் செய்து வெளியிட்டார்கள்.
இவ்வாறு, தமிழகத்தில் ஒரு புதிய யுகத்தை உண்டாக்கிய பேராளர் டாக்டர் ஐயர். அவர் இறைவன் திருவருளால் 87 ஆண்டுகள் வாழ்ந்தார்; தமிழுக்கு வளம் சேர்த்தார். தம்முடைய இளமைக் காலத்தில் அவர் காணாத காட்சியை அவர் தம் முதுமையில் கண்டார். பாரி என்றும், அதிகமான் என்றும் வெறும் பெயர்களைக் கேட்டுக் கொண்டிருந்த நிலையை மாற்றி, அவர்களால் தமிழ் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாயிற்று என்பதைப் பள்ளிக்கூட மாணவர்களும் தெரிந்து கொள்ளும் நிலை உண்டாயிற்று. காப்பிய இன்பத்தை நுகர்ந்த தமிழ்ப் புலவர்கள் சங்க இலக்கியங்களைப் பாராட்டினார்கள். தமிழ் மிகப் பழமையானது, மிகச் சிறந்த பண்பாட்டை உள்ளுறையாகக் கொண்டது என்பதைப் புலவர்கள் எல்லாம் ஆராய்ந்தறிந்து சொன்னார்கள்.
$$$
2. இளமைக் கல்வி
இவ்வாறு தமிழுக்கு ஒரு புது மலர்ச்சியை உண்டாக்கிய டாக்டர் ஐயரைத் தந்த பெருமை உத்தமதானபுரத்தைச் சார்ந்தது. ஓர் அரசர் அந்த ஊரை 48 அந்தணர்களுக்கு உத்தமதானமாகக் கொடுத்தார். இந்தப் பெரும் புலவரைத் தமிழ் உலகத்திற்கு அளித்துள்ள தன்மையினால் அப்பெயர் பின்னும் பொருளுடையதாக ஆயிற்று. ஐயர் அந்தணர் வகுப்பில் அஷ்டசகஸ்ரம் என்ற பிரிவைச் சார்ந்தவர். அவருடைய பாட்டனார் வேங்கடாசலையர் என்பவர். வேங்கட நாராயணையர் என்பவருடைய மூத்த குமாரர். வேங்கடாசலையருக்கு வேங்கட சுப்பையர், சீனிவாசையர் என இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வேங்கட சுப்பையரின் குமாரர் தாம் டாக்டர் ஐயர்.
19-2-1855-ஆம் நாளன்று இந்தப் புலவர் பெருமான் திரு அவதாரம் செய்தார். அந்த ஆண்டுக்கு ஆனந்த வருஷம் என்று பெயர். அந்த ஆண்டு, தமிழுக்கு ஆனந்தம் தரும் இந்தப் பெரியவரை உதவி, தன் பெயருக்குரிய புதுப் பொருளை உடையதாயிற்று.
இளம் பருவத்தில் பாட்டனாரிடத்தில் இவர் அரிச்சுவடி படித்தார். அதன் பிறகு துதி நூல்களை எல்லாம் கற்றுக்கொண்டார். வேங்கடசுப்பையருடைய தாயாரின் அம்மான், கனம் கிருஷ்ணையர் என்ற இசைப் பெரும் புலவர். அவர் சங்கீத மார்க்கங்களாகிய கனம், நயம், தேசிகம் என்னும் வகைகளுள் கனமார்க்கத்தைப் பயின்று அதில் மிக்க தேர்ச்சி பெற்றார். வேங்கட சுப்பையர் அவரிடம் இசை பயின்றார். தம்முடைய குமாரரும் இசை பயின்று பெரிய சங்கீத வித்துவானாக வேண்டுமென்று கனவு கண்டுவந்தார். ஆனால் இந்தப் பெரியவருக்கு இசையில் ஓரளவு விருப்பம் இருந்தாலும் இவருடைய எண்ணமெல்லாம் தமிழை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றே இருந்தது.
அரியலூரில் வாழ்ந்து வந்த வேங்கட சுப்பையர் அதன் பக்கங்களிலுள்ள பல ஊர்களுக்குச் சென்று இராமாயணப் பிரசங்கம் செய்வார்; இராமாயண நாடகக் கீர்த்தனங்களைப் பாடிப் பிரசங்கம் செய்வார். அதனால் ஆங்காங்கு அவருக்குப் பொருள் உதவி கிடைத்தது. அந்த வகையில் தம்முடைய பிள்ளையும் இசையோடு கூடிய பிரசங்கம் செய்து வாழ்க்கையைச் செவ்வையாக நடத்துவார் என்று நம்பியிருந்தார். டாக்டர் ஐயர் நாராயண ஐயர், சாமிநாதையர் என்பவர்களிடம் தம் இளமைக் கல்வியைப் பெற்றார். அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளையே அவர்களிடம் கற்றுக்கொண்டார். மணலில் எழுதுவதும், ஏட்டில் எழுதுவதும் அக்காலத்து வழக்கமாக இருந்தன. சாமிநாதையர் என்னும் ஆசிரியர் இசையிலும் வட மொழியிலும் தேர்ந்தவர். அவர் சில சிறிய வடமொழி நூல்களை இவருக்குக் கற்பித்தார். இவருடைய சிறிய தகப்பனார் தம் வீட்டிலேயே இவருக்குப் பாடம் சொல்லித் தந்தார்; சங்கீதப் பயிற்சியும் செய்து வைத்தார். அந்தச் சின்னப் பிராயத்தில் இந்தப் பெரியாருக்குச் சித்திரம் எழுதுவதில் விருப்பம் இருந்தது. காகிதங்களில் பூக்களைப் போலக் கத்தரித்து அமைக்கும் பழக்கம் உண்டாயிற்று. கற்பனை சிறந்த கவிஞர்கள் இயற்கையின் எழிலைக் கண்டு அனுபவித்து அப்படியே அதைக் கவிதையில் வடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதுபோல, இந்தப் பெரியாரும் இயற்கையைக் கண்டு கண்டு இன்புற்றார்.
இப்பெருமானுடைய தாயாரின் தந்தையாகிய கிருஷ்ண சாஸ்திரிகள் சிறந்த பக்திமான்; எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக்கொண்டிருப்பார். தம் பேரரிடம், எதை மறந்தாலும் சிவநாமத்தை மறக்காதே என்று உபதேசம் செய்தார். அக்காலம் முதல் இப்புலவர்பிரான் இறுதிக் காலம் வரையில் சிவ நாமத்தை மறக்கவில்லை. வேலை ஒழிந்த நேரங்களில் எல்லாம் பல ஆயிரம் தடவை சிவநாமத்தை உருப்போடுவது வழக்கம்.
அந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. இந்தப் பெரியவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று தந்தை எண்ணினார். ஆனால் அதில் இவருக்கு உள்ளம் செல்லவில்லை. இசையில் பயிற்சி உடையவர்கள் அக் காலத்தில் தெலுங்கு கற்றுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அவ்வாறே இவருக்குத் தெலுங்கு கற்றுக்கொடுக்க ஏற்பாடாயிற்று. ஆனால் அதிலும் இவருக்கு மனம் செல்லவில்லை.
அக்காலத்தில் அந்தப் பக்கங்களில் கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனை எங்கும் பரவியிருந்தது. இந்த இளைய மாணாக்கருக்கு அதில் ஈடுபாடு. அதிலுள்ள கீர்த்தனைகளிற் பெரும்பாலும் பாடம் ஆயின. இவரே பாடிப் பாடி இன்புறுவார். அரியலூரில் இவருடைய தந்தையார் இருந்தார். அப்போது சடகோபையங்கார் என்பவருடன் பழக்கம் உண்டாயிற்று. அவர் ஸ்ரீவைஷ்ணவர்; கவிஞரும் கூட; தமிழை ஓரளவு நன்றாகப் பயின்றவர். அவரிடத்தில் ஆசிரியப் பெருமான் சில காலம் தமிழ் கற்றுக் கொண்டார். பாடம் சொல்வதில் சடகோபையங்கார் மிகவும் ஊக்கம் உள்ளவர்; நயமாகப் பொருளைச் சொல்பவர். பாகவதம், கம்ப ராமாயணம் முதலிய நூல்களை நன்றாகச் சொல்லித் தருவார். ஆசிரியப் பெருமான் தம் இளமைப் பருவத்தில் அந்தப் பெரியவரிடம் பாடம் கேட்டதனால் தமிழில் மிக்க சுவை உண்டாயிற்று.
இளம் பருவத்தில் அந்தணருடைய வழக்கப்படி இவருக்கு உபநயனம் நடைபெற்றது. அப்போது இவருக்கு வேங்கடராம சர்மன் என்று நாமகரணம் செய்தார்கள். அந்தப் பெயராலேயே இவரை அழைத்து வந்தார்கள். எனினும் அந்தப் பெயர் இவருடைய முன்னோரின் பெயராய் இருந்ததனால் உறவினர்கள் அதைச் சொல்லி அழைக்காமல் ‘சாமா’ என்று சொல்லி அழைத்தார்கள். திருவேரகத்திலுள்ள சுவாமிநாதன் என்பதையே சுருக்கி அப்படி அழைப்பது வழக்கம்.
குன்னம் என்ற ஊரிலுள்ள சிதம்பரம் பிள்ளையிடம் சில காலம் பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அங்கே சில சிறிய நூல்களையும், திருவிளையாடல் புராணத்தையும் பாடம் கேட்டார். பல தனிப் பாடல்களைப் பாடம் பண்ணிக்கொண்டு அவற்றின் சுவையில் ஆழ்ந்தார்.
கார்குடியிலிருந்து வந்திருந்த கஸ்தூரி ஐயங்கார் என்பவர் இப் பெருமானுக்குத் தமிழில் இருந்த தேர்ச்சியையும், ஆர்வத்தையும் அறிந்து, தம் ஊருக்கு வந்து தங்கினால் தமக்குத் தெரிந்தவற்றையும் சொல்லித் தருவதாகச் சொன்னார். அப்படியே அந்த ஊருக்குத் தந்தையாருடன் இவர் சென்றார். கஸ்தூரி ஐயங்கார் இவருக்குச் சில நூல்களைப் பாடம் சொன்னார். அந்த இளம் பருவத்திலேயே செய்யுள் இயற்றும் பயிற்சி இவருக்கு ஏற்பட்டது.
இளம் பருவத்திலேயே திருமணம் செய்து வைப்பது அந்தக் கால வழக்கமாதலின், இவருக்குத் தக்க இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற கவலை இவருடைய தந்தையாருக்கு உண்டாயிற்று. 16-6-1868-ஆம் நாளன்று இவருக்கும் மதுராம்பாள் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்தது.
செங்கணம் சின்னப்பண்ணை விருத்தாசல ரெட்டியார் என்பவர் யாப்பருங்கலக்காரிகையை நன்றாகப் படித்தவர். அவரிடம் இவர் பாடம் கேட்டார். ரெட்டியார் பாடம் சொல்லும் போது பல புலவர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வார். அக் காலத்தில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்து, அக்காலக் கம்பர் என்று எல்லோராலும் போற்றப்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் புகழ் எங்கும் பரவியிருந்தது. விருத்தாசல ரெட்டியார், அவர் பெருமையைப் பற்றி அடிக்கடி பேசுவார். அதனைக் கேட்கக் கேட்க இவருக்கு, ‘அந்தப் பெருமானிடம் போய்ப் பாடம் கேட்கும் வாய்ப்பு வருமா? இறைவன் திருவருள் அதைக் கூட்டி வைக்குமோ?’ என்று எண்ணினார்.
பல பல இடங்களில் சில சில நூல்களைக் கேட்டும் இவருக்குத் தமிழ்ப் பசி தீரவில்லை. அது மேலும் மேலும் வளர்ந்து வந்தது. இவருடைய பெரும் பசியைப் போக்குவதற்குரியவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களே என்று சிலர் எடுத்துச் சொன்னார்கள். எப்படியாவது அவரிடம் போய்ப் பயின்றால், இவர் நன்றாகக் கற்று முன்னுக்கு வரலாம் என்று பலரும் சொன்னதைக் கேட்டு, இவருடைய தந்தையாருக்கும் இவரைப் பிள்ளையவர்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது அவசியம் என்ற எண்ணம் உண்டாயிற்று. பிள்ளையவர்கள் அப்போது மாயூரத்தில் இருந்ததனால், ‘இவர் மாயூரத்தில் போய்ப் படிக்க வேண்டுமே! அதற்கு வேண்டிய வசதிகளுக்கு என்ன செய்வது?’ என்று எண்ணிக் கவலை கொண்டார். ஆனால் இறைவன் திருவருள் செய்வான் என்ற தைரியம் இருந்தது. ‘எப்படியாவது பிள்ளையவர்களிடம் இவனைச் சேர்த்துவிட்டால் மேலும் மேலும் முன்னுக்கு வருவான். தமிழ்க் கல்வியில் சிறந்த புலவனாகலாம்’ என்ற நம்பிக்கை மாத்திரம் இருந்தது. ஆகவே, எப்படியாவது மாயூரத்திற்குப் போகலாம் என்று முடிவு செய்தார். அப்போது கோபாலகிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் வாழ்ந்து வந்தார். தமிழ் இலக்கியத்தைப் படிப்பதோடு பாரதியாரிடம் இசையையும் பயிலச் சொல்லலாம் என்ற விருப்பம் தந்தையாருக்கு இருந்தது. ஆகவே, எப்படியாவது மாயூரத்திற்குப் போய்ச் சேருவது என்ற தீர்மானம் செய்தார்.
(தொடர்கிறது)
$$$