-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

பிறந்த போதே
தொப்புள் தழும்பு போல
ஒட்டிக்கொண்டது காலம்.
.
துயிலெழவும்
துயில்கொள்ளவும்
உணவுண்ணவும்
கழிவு நீக்கவும்
கற்றறியவும்
கலை புரியவும் என
ஒவ்வொன்றுக்கும்
உடனிருந்தது காலம்.
.
காலம் பார்த்து கல்வி
காலம் பார்த்து காரியம்
காலம் பார்த்து உணவு
காலம் பார்த்து உறவு
காலம் பார்த்து பிரிவு
கலவியிலும் நுழையும் காலம்.
காலம்… காலம்… காலம்.
.
பரமனின் கரத்திலொட்டிய
பிரம்மனின் கபாலமாய்
மனதிலொட்டிய காலத்தை
சுமந்தலைகிறது வாழ்வு.
.
வேறு வழியில்லை…
பிரம்ம தோஷம் நீங்க
கபாலத்துடன் அலைந்தான் சிவன்.
பிறவிதோஷம் தொலைய
காலத்துடன் அலைகிறான் இவன்.
$$$