அதிகமான் நெடுமான் அஞ்சி- 7

-கி.வா.ஜகந்நாதன்

7. கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்

திருக்கோவலூரில் மலையமான் திருமுடிக் காரி என்னும் வீரன் வாழ்ந்துவந்தான். ஒரு சிறிய நாட்டுக்குத் தலைவன் அவன். அந்த நாட்டுக்கு  ‘மலாடு’ என்று பெயர். மலையமான் என்பது அவனுடைய குடிப் பெயர். மலையமான்களுடைய நாடு மலையமான் நாடு. அந்தப் பெயர் நாளடைவிலே சிதைந்து மலாடு என்று ஆகிவிட்டது.

காரி சிறந்த வீரன். ஆற்றலும் ஆண்மையும் உள்ள பல வீரர்களை உடைய பெரும் படை ஒன்று அவனிடம் இருந்தது. தமிழ்நாட்டில் பெரிய மன்னர்களுக்குத் துணைப் படையாக அதைத் தலைமை தாங்கி நடத்திச்சென்று அம்மன்னர்கள் வெற்றியடையும்படி செய்வான் காரி. பாண்டியன் அழைத்தாலும் துணையாகப் போவான்; சோழன் அழைத்தாலும் போவான்; சேரமானுக்கும் துணையாகப் போவதுண்டு. அவன் யாருக்குத் துணையாகச் செல்கிறானோ அந்த மன்னன் வெற்றி அடைவது உறுதி என்ற புகழ் அவனுக்கு. இருந்தது.

வெற்றி பெற்ற மன்னர்கள் காரிக்கு மிகுதியான பொருளும் பொன்னும் தருவார்கள்; ஊரைக் கொடுப்பார்கள்; தேர், யானை, குதிரைகளை வழங்குவார்கள். ஆதலின், அவனுக்கு எதனாலும் குறைவு இல்லாமல் வாழும் நிலை அமைந்தது. அப்படிப் பெற்றவற்றை அவன் தனக்கென்று வைத்துக்கொள்வதில்லை; புலவர்களுக்குக் கொடுப்பான்; பாணர்களுக்கு வழங்குவான்; ஏழைகளுக்கு ஈவான்; கூத்தர்களுக்கு அளிப்பான். எத்தனை கிடைத்தாலும் அத்தனையையும் பிறருக்கு ஈந்து மகிழ்வது அவன் இயல்பு. *1

அவனுடைய வீரத்தை முடிமன்னர்களும் பாராட்டினார்கள். அவன் ஈகையைக் கலைஞர்கள் புகழ்ந்தார்கள். இரண்டையும் பாவாணர்கள் பாடல்களில் அமைத்துச் சிறப்பித்தார்கள்.

திருமுடிக் காரிக்கு சேரமான் நெருங்கிய நண்பனாக இருந்தான். அக் காலத்தில் வஞ்சிமா நகரத்தில் இருந்து அரசாண்டவன் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னன். அவன் காரியின் வீரத்தை நன்கு அறிந்து அடிக்கடி வரச் செய்து அளவளாவி இன்புறுவான்.

ஒரு முறை காரி வஞ்சி மாநகருக்குப் போயிருந்த போது, சேரமான் தன் மனத்தில் நெடு நாளாக இருந்த விருப்பம் ஒன்றை வெளியிட்டான். கொல்லி மலையைச் சார்ந்த பகுதிகளை ஓரி என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் விற்போரில் வல்லவன். அதிகமானுக்கும் அவனுக்கும் ஓரளவு உறவு இருந்தது. அதிகமான் நாளடைவில் தன்னுடைய நாட்டை விரித்துக்கொண்டு வருவதைப் பெருஞ்சேரல் இரும்பொறை கண்டான். அதைக் கண்டு பொறாமை உண்டாயிற்று. அவனை அடக்க வேண்டுமானால் அவனுடைய நாட்டுக்கு அருகில் தன் படை இருக்கவேண்டும் என்று கருதினான். ஓரியின் கொல்லிக் கூற்றம் அதிகமானுடைய நாட்டை அடுத்து இருந்தது. ஓரி பெரும் படையை உடையவன் அல்லன். அவனை அடக்கி அவன் நாடாகிய கொல்லிக் கூற்றத்தைத் தன் வசப்படுத்திக் கொண்டால் அதிகமானை அடுத்தபடி அடக்குவது எளிதாக இருக்கும் என்பது சேரனுடைய திட்டம்.

இந்தக் கருத்தைக் காரியிடம் எடுத்துச் சொன்னான், பெருஞ்சேரல் இரும்பொறை; ‘தக்க செவ்வி பார்த்துக் கொல்லிக் கூற்றத்தின் மேல் படையெடுத்துச் செல்லலாமென்று இருக்கிறேன். அப்போது உம்முடைய உதவி வேண்டியிருக்கும்” என்றான்.

காரி புன்முறுவல் பூத்தான்.

“ஏன்? நான் கூறியது தக்கதாகத் தோன்றவில்லையோ?” என்று கேட்டான் சேரமான்.

“அப்படி எண்ணவில்லை. ஓரி மிகச் சிறியவன். காலில் தைத்த முள்ளையெடுக்கக் கோடரியை வீச வேண்டுமா? மன்னர்பிரான் திருவுள்ளத்தை நான் அறிந்து கொண்டேன். என்னுடைய படையோடு நான் சென்று பொருதால் இரண்டு நாளைக்கு அவன் நிற்க மாட்டான்.”

“ஒருகால் அதிகமான் அவன் துணைக்கு வந்தால்?”

“ஓரிக்கும் அதிகமானுக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒருக்கால் சேர நாட்டுப் படை சென்று தாக்கினால் அவன் இது தான் சமயம் என்று போருக்கு எழுந்தாலும் எழலாம். நான் தாக்கினால் அவன் கவலை கொள்ள மாட்டான்.”

“சரி; உமக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதையே செய்யலாம்” என்று சேரன்
காரியின் கருத்துக்கு உடம்பட்டான்.

காரி விடைபெற்றுத் திருக்கோவலூருக்கு வந்து போருக்கு ஆவனவற்றைச் செய்தான். ‘கொல்லிக் கூற்றத்தைச் சேரமானுக்குக் கொடுத்தால், அவனுக்கு அடங்கிய வேளாக ஆட்சி புரியலாம்; இல்லையானால் போருக்கு வருக’ என்று கூறி, காரி ஓரிக்குத் தூது போக்கினான். நெடுங்காலமாக உரிமை வாழ்வு வாழ்ந்தவனுக்கு ஒருவனுக்கு அடங்கி வாழ மனம் வருமா? அவன் உடம்படவில்லை.

காரி போர் முரசு கொட்டிவிட்டான். தன் படைகளை வகுத்து ஓரியின் நகரை முற்றுகையிட்டான். ஓரியிடம் விற்போரில் சிறந்த வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் மிடுக்குடன் காரியின் படையை எதிர்த்து நின்றார்கள். காரிக்குக் காரியென்ற பெயரோடு ஒரு கருங்குதிரை இருந்தது. அவன் அதன்மேல் ஏறிவந்தான். ஓரிக்கும் ஓரியென்ற பெயரையுடைய பரி இருந்தது. போர் முகத்தில் இரு சாரார் படையும் சந்தித்து மோதின. ஓரியின் நாடு ஆதலால் அங்குள்ள மக்களில் வலிமையுடைய இளைஞர்கள் அவன் படையில் சேர்ந்தார்கள். அறநெறி திறம்பிச் சேர மன்னனுடைய தூண்டுதலால் காரி படையெடுத்ததைப் பொறாமல் அவர்கள் கூட்டம் கூட்டமாகப் படையில் சேர்ந்து திறலுடன் போரிட்டனர்.

இரண்டு மூன்று நாட்கள் கடுமையாகப் போர் நடந்தது. காரி அதுவரையில் தன் பாசறையில் இருந்தபடியே இன்ன இன்னவாறு செய்ய வேண்டுமென்று கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். மூன்று நாட்களாக நடந்த போரில் யார் விஞ்சுவார்கள் என்று தெரியவில்லை. ‘இனி நாம் சும்மா இருத்தல் கூடாது’ என்று காரி தானே போர் முனைக்கு வந்தான்; காரியென்னும் குதிரையின் மேல் ஏறி அவன் போர்க்களத்தில் வந்து நின்றவுடன், அவனுடைய படை வீரர்களுக்குப் புதிய முறுக்கு ஏறியது. தம் வலிமையை யெல்லாம் காட்டிப் போர் புரிந்தனர்.

ஓரி தன் குதிரையின்மேல் ஏறிவந்து போர் செய்தான். அவன் படையில் இப்போது தளர்ச்சி நிழலாடியது. படைத் தலைவர்களிலே சிலர் வீழ்ந்தனர். ஓரி தன் குதிரையை முன்னே செலுத்திக் காரி யிருந்த இடத்தை அடைந்தான். இப்போது காரியும் ஓரியும் நேருக்கு நேராக நின்று போர் செய்தார்கள். காரி வைரம் பாய்ந்த மரம் போன்றவன்; எத்தனையோ பெரும் போர்களைச் செய்து வெற்றி கண்டவன். அவனுக்கு முன் நிற்பதென்பது எத்துணைப் பெரிய வீரனாயினும் இயலாத செயல். ஓரியால் எப்படி நிற்க முடியும்? ஆனால் அவன் சிறிதும் பின்வாங்கவில்லை. தளர்வு தோன்றினாலும் தன் உயிரைப் பிடித்துக்கொண்டு தாக்கினான். என்ன பயன்? கடைசியில் காரியின் வாளுக்கு அவன் இரையானான். காரி வென்றது வியப்பே அன்று. ஓரி ஓடாமல் ஒளியாமல் நேர் நின்று போர் செய்து உயிரை விட்டதைக் கண்டு யாவரும் வியந்தனர். அவனுடைய நாட்டை அடிப்படுத்திய காரி அதைச் சேரமானுக்கு ஈந்தான். *2  “சேரமான் தக்க அதிகாரிகளையும் படைத் தலைவரையும் கொல்லிக் கூற்றத்துக்கு அனுப்பித் தன் ஆட்சியைச் செலுத்தலானான்.

சேரமான் செய்த இந்தச் செயலைச் சான்றோர்கள் போற்றவில்லை. அதிகமானுக்குச் சேரமான் பால் கோபம் மிக்கது. அவனுக்குக் கருவியாக இருந்து ஓரியைக் கொன்ற காரியை உடனே போய்க் கொன்றுவிட்டு வரவேண்டும் என்ற ஆத்திரம் உண்டாயிற்று. ஓரி கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்ட அந்தக் கணத்திலேயே அவன் காரியைப் பழிவாங்க வேண்டும் என்ற வஞ்சினத்தைச் செய்தான். ஆறப் போட்டுக் காரியோடு பொருவதைவிட உடனே தன் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று துடித்தான். *3

அதற்கு ஒரு தடை இருந்தது. அவனுடைய மனைவி கருவுற்றிருந்தாள். பல காலம் மகவு இல்லாமல் இருந்த அவளது கலி தீரும் பருவம் வந்தது. அந்தச் சமயத்திலா போர் புரியப் போவது? இதை அதிகமானைச் சேர்ந்த பெரியோர்கள் எடுத்துச் சொன்னார்கள். அவன் அரசியலில் வல்லவன். மாற்றான் வலியை அறிந்து வைத்து அவன் சோர்வுற்ற செவ்வி கண்டு தாக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவன். கொல்லிக் கூற்றத்தில் நிகழ்ந்த போரில் அவனும் அவன் படையும் ஈடுபட்டுச் சோர்வடைந்திருந்த காலம் அது. அதுவே எளிதில் திருக்கோவலூரின் மேல் படையெடுக்கத் தக்க செவ்வி என்பது அவன் எண்ணம். ஆதலின், இப்போதே படையெழுச்சி நடக்க வேண்டும் என்றான். அவன் உறவினர்கள் அவனுக்கு எதிராகச் சொல்லும் ஆற்றல் உடையவர்கள் அல்லரே! அவர்கள் ஒளவையாரை அணுகித் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். அவர் அதிகமானிடம் சென்று போரைச் சிறிது தாழ்த்து மேற்கொள்ளலாமே என்றார். “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். சிறிது தாழ்த்தால் காரி மறுபடியும் ஊக்கம் பெற்று வலிமையுடையவனாகி விடுவான்” என்றான் அதிகமான்.

“இறைவன் திருவருளால் உனக்கு மகவு பிறக்கப் போகிறது. குழந்தை பிறந்தவுடன் பார்க்க வேண்டியது தந்தையின் கடமை. நீ அங்கே போரில் ஈடுபட்டிருக்கும்போது, இங்கே குழந்தை பிறந்தால் உன்னால் எப்படிக் காண முடியும்? அதோடு, போரின் முடிவு என்னாகுமோ என்று உன் மனைவி அச்சத்தோடு இருப்பாளே! கருவுற்ற பெண்கள் மனம் மகிழ்ச்சி யோடு இருப்பது இன்றியமையாதது.”

“போர் செய்வதே வாழ்க்கையாகப் போய்விட்ட எனக்குப் புதிய போர் என்றால் ஊக்கம் உண்டாகிறது. வீரக் குலத்திலே புகுந்த என் மனைவி நான் போருக்குச் செல்வது கண்டு அஞ்சுவதானால், அதைவிட இழுக்கான செயல் வேறு இல்லை. அவள் அப்படி அஞ்சுபவள் அல்லள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவள் உவகையுடன் போய் வாருங்கள் என்று விடை கொடுத்தனுப்புவாள் என்றே நம்புகிறேன்.”

“வீரக் குலத்து உதித்த பெண்களின் பெருமையை, பாடிப் பரிசில் பெற்று வாழும் பெண்ணாகிய யான் எப்படி அறிவேன்? ஆயினும், பிறந்தவுடன் குழந்தையைத் தந்தை பார்க்க வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.”

“நான் போர்க்களத்தில் இருக்கும்போது செய்தி வந்தால் உடனே வந்து பார்க்கிறேன்.”

அதிகமான் தான் எண்ணிய எண்ணத்தில் திண்ணமுடையவனாக இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார் ஒளவையார். மேலே ஒன்றும் பேசவில்லை. முறைப்படி போருக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. அதிகமான் படையெடுத்து வருவதை காரி அறிந்தான்.

பெண்ணையாற்றங்கரையில் இருப்பது திருக்கோவலூர். அதிகமான் படைகள் அங்கே சென்று சூழ்ந்து கொண்டன. மலையமான் ஓரியைக் கொன்று வந்த பெருமிதத்தாலும், பெருஞ்சேரலிரும் பொறையிடம் பரிசில்கள் பெற்ற மன நிறைவினாலும் கூத்தும் பாட்டும் கேட்டு இன்புற்றிருந்தான். மற்றொரு போருக்கு அவன் ஆயத்தமாக இருக்கவில்லை. ஆனாலும் வாயில் கதவை எதிரி வந்து தட்டும்போது சும்மா இருக்க முடியுமா? அவனும் போர் வீரர்களைக் கூட்டினான்; போர் செய்யலானான்.

ஓரியின் படை நிலை வேறு; அதிகமான் படை நிலை வேறு. அதிகமான் பெரிய நாட்டை உடையவன். பெரிய படை அவனுடைய கட்டளையை நிறைவேற்றக் காத்திருந்தது. பல போரிலே வெற்றி பெற்ற படை அது. காரியின் படையும் தாழ்ந்ததன்று. ஆயினும் அணிமையில் போரிட்டுக் களைப்புற்றிருந்த சமயம் அது. ஆதலின் இயல்பாக உள்ள ஊக்கம் அப்போது இல்லை. இருப்பினும் மானம் படவரின் உயிர் விடுவது இனிதென்ற கொள்கையினராதலின் கொதித்து எழுந்தனர் வீரர். “என் அயல் நாட்டுத் தலைவனும் என் நண்பனுமாகிய ஓரியை அறநெறி திறம்பிக் கொன்றதற்காகவே இப்போது கோவலூரைத் தாக்குகிறேன்” என்று முரசறையச் செய்தான் அதிகமான்.

போர் மூண்டது; இருபடையும் மிடுக்குடன் ஒன்றை ஒன்று தாக்கின. காரியின் படை தளர்ச்சி காட்டியது. அந்தச் சமயம் பார்த்து அதிகமான் வீரர்களைத் தூண்டினான், காரி இந்த நிலையை நன்றாக அளவிட்டு அறிந்தான். மேற்கொண்டு போரிட்டால் தனக்குத் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தான். தான் ஓரியைக் கொன்றதற்கு ஈடாக அதிகமான் தன்னைக் கண்டால் கொன்றுவிடுவான் என்ற அச்சமும் அவனுக்கு உண்டாயிற்று. அதனால் அவன் இல்லாத பக்கமாகச் சென்று போர் செய்தான். இனி எதிர்த்தால் உயிருக்கு ஊறு பாடு நிகழும் என்ற நிலை வந்தவுடன் திருக்கோவலூரை விட்டுவிடத் தீர்மானித்தான். அவனும் அவன் படைவீரர் சிலரும் பின்வாங்கி ஓடி ஒளிந்தனர். ஏனையவர்கள் சரண் அடைந்தனர்.

வெற்றி மாலையைப் புனைந்து நின்ற அதிகமானுக்கு மற்றொரு களிப்புச் செய்தி காத்திருந்தது. தகடூரிலிருந்து வந்த தூதுவன் ஒருவன் அவனுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்ற மங்கலச் செய்தியைச் சொன்னான். கோவலூர் வெற்றியோடு இந்தச் செய்தியும் சேர்ந்து அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை உண்டாக்கின.

உடனே, தன் படைத் தலைவர்களிடம் வேண்டியவற்றைச் செய்யும்படி சொல்லிவிட்டுத் தன் குதிரையில் ஊர்ந்து போர்க்கோலத்துடனே விரைவாகச் சென்றான் அதிகமான். தகடூரை அடைந்து நேரே அந்தப்புரத்தை அணுகினான். அவன் உள்ளூரில் இருந்திருந்தால் நீராடிப் புனைவன புனைந்து, பூசுவன பூசி, பெரியோர்களை முன்னிட்டுக்கொண்டு வந்திருப்பான். இப்போதோ நேரே வெற்றிக் களத்திலிருந்து ஓடிவந்திருக்கிறான். அவன் மனைவி தவமகனைப் பெற்றிருந்தாள். அவனோ வெற்றி மகளைப் பெற்று வந்தான். ஆர்வத்தோடு புகுந்து நின்ற அதிகமானுக்கு அவன் குலத்தை விளக்க வந்த குழந்தையைக் கெண்டுவந்து காட்டினார்கள். ஒளவையார் அருகிலே நின்று கொண்டிருந்தார்.

வெற்றி மிடுக்குடன் போர்க்கோலத்தைக் களையாமல் வந்து நிற்கும் அதிகமானை அவர் கண் எடுத்துப் பார்த்தார். அவன் தோற்றம் அவருக்கு வியப்பைத் தந்தது. அவன் எப்படிக் காட்சி அளித்தான்?

கையில் வேல்; காலில் கழல்; உடம்பிலே வேர்வை; அவன் கழுத்திலே பச்சைப்புண். அவன் தலையிலே பனைமாலை;  போர் செய்ய அணிந்த வெட்சி மாலை, வேங்கைக் கண்ணி இவற்றை அவன் முடியிலே சூடியிருந்தான். புலியோடு பொருத ஆண் யானையைப்போல இன்னும் அவனுக்குப் பகைவர்பால் உண்டான சினம் அடங்க வில்லை. அவனோடு பொருதவர்களில் யார் உய்ந்தார்கள்? பகைவர்களைக் கண்டு சினத்தாற் சிவந்தகண் இன்னும் சிவப்புத் தீரவில்லை; ஆம், தன் தவக்கொழுந்தாகிய மகனைப் பார்த்தும் கண் சிவப்பு வாங்கவில்லை.

வீரமே இப்படி உருவெடுத்து வந்ததோ என்று வியந்தார் ஒளவையார். அவருடைய வியப்புணர்ச்சி உடனே பாடல் வடிவத்தை எடுத்தது.

கையது வேலே; காலன புனைகழல்:
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்.
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோடு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறது சினனே ! அன்னோ !
உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆ னாவே
. *4

[வியர் – வேர்வை. மிடறு – கழுத்து.வட்கா – பகைவர். போகிய – அழிவதற்குக் காரணமான போந்தை-பனை . உச்சி- மரத்தின் உச்சி. ஊசி வெண் தோடு- ஊசி போன்ற முனையையுடைய குருத்து ஓலை. விரை இ-கலந்து. சுரி இரும் பித்தை- சுருண்ட கரிய தலை மயிர். வரிவயம்- புலி. வயக்களிறு- வலிமையுடைய ஆண் யானை . இன்னும் ஆறாது என்று பிரிக்கலாம். அன்னோ- அந்தோ; இரக்கக் குறிப்பு, உடற்றியோர் எதிர்த்தவர்கள். செறுவர்- பகைவர்களை. சிறுவனை- மகனை. ஆனா- நீங்கவில்லை.]

மகனைக் கண்டு மகிழ்ந்த அதிகமான், திருக்கோவலூரில் தக்க படைத்தலைவரை நிறுவ ஏற்பாடு செய்தான். பிறகு மகன் பிறந்ததற்குப் பெருவிழாக் கொண்டாடினான். படை வீரர்களுக்குப் பொன்னும் பண்டமும் வீசினான். புலவர்களுக்குப் பரிசில் பல வழங்கினான். பாணரும் விறலியரும் கூத்தரும் பல வகைப் பொருள்களைப் பெற்றார்கள். அதிகமானுடைய நாடு முழுவதுமே களிக் கூத்தாடியது. திருக்கோயில் களில் சிறப்பான பூசனைகளும் விழாக்களும் நடந்தன.

பிறந்த மகனுக்குப் பொகுட்டெழினி என்ற பெயரைச் சூட்டினான் அதிகமான். அவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தன் பிள்ளைப்பருவ விளையாடல்களால் பெற்றோர்களையும் மற்றோர்களையும் மகிழச் செய்தான். அதிகமான் குலம் மங்காமல் இவனால் ஒளிரும் என்று சான்றோர்கள் இன்புற்று உள்ளங்கனிய வாழ்த்தினார்கள்.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

  1. புறநானூறு 122.
  2. சிறுபாணாற்றுப்படை 110-111.
  3. அகநானூறு  209
  4. புறநானூறு 100.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s