ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -4

-ரா.பி.சேதுப்பிள்ளை

IV

16. தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு

தமிழ்நாடு பலவகை நலங்களும் படைத்த நாடு. இந் நாட்டில் போதிய நீர்வளமும் நிலவளமும் உண்டு. நல்ல மலைவளமும் கடல் வளமும் உண்டு. இவ் வளங்கள் எல்லாம் அமைந்திருப்பினும் நாட்டிலுள்ளார் நலமுற்று வாழ்வதற்கு நல்லரசு வேண்டும் என்பது தமிழ்நாட்டார் கொள்கை. நாட்டில் வாழும் குடிகளுக்கு அரசனே உயிர் என்னும் கருத்தைப் பழைய தமிழ் நூல்களில் காணலாம்.

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்ப தறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே”

என்ற புறப்பாட்டு, மன்னன் நிலைமையையும் கடமையையும் நன்கு விளக்குகின்றது.

தமிழ்நாட்டில் அரசாங்கம் நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றது. ஆதியில் சேர சோழ பாண்டியர்கள் அரசு புரிந்தார்கள். அவர்கள் படைப்புக் காலமுதல் அரசாள்கிறார்கள் என்று தமிழ்ப் புலவர் கூறுவாராயினர். இவ்வாறு தமிழ்நாட்டிற் சிறப்பு வாய்ந்து விளங்கிய மூவேந்தரும் பெரும்பாலும் பொறுப்பு உணர்ந்தவர்களாகவே அரசு புரிந்தனர்.

நாட்டில் பசியும் பிணியும் பகையும் நீக்கிக் குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்புடையவன் அரசனே. பசிநோய் ஒழிய வேண்டுமாயின் உணவுப் பொருள்கள் போதிய அளவு நாட்டிலே விளைதல் வேண்டும். உணவுப் பொருள்கள் விளைவதற்கு மழை உரிய காலத்தில் பெய்ய வேண்டும். பருவத்தில் மழை பெய்யா தொழிந்தால் உயிர்கள் எல்லாம் பசியால் நலிந்து வருந்தும்.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்(து)
உண்ணின்று உடற்றும் பசி”

என்றார் திருவள்ளுவர். அரசன் அறநெறி தவறாமல் ஆண்டுவந்தால் மழை தப்பாமல் பெய்யும் என்பது தமிழ்நாட்டார் கொள்கை. எனவே, மழை பெய்து நாடு செழித்தால் குடிகள் மன்னனைப் போற்றுவர்; மழை பெய்யா தொழிந்தால் மன்னனைத் தூற்றுவர். இவ்வுண்மை,

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்”

என்னும் புறநானூற்று அடிகளால் அறியப்படும். இங்ஙனம் பசிநோயை நீக்கும் பொறுப்புடைய அரசன், பகைவரால் குடிகள் வருந்தாமலும் பாதுகாக்கும் கடமை யுடையவன் குடிகளைத் துன்புறுத்தும் பகைவர் நாட்டின் உள்ளேயும் இருப்பர்; வெளியேயும் இருப்பர். நாட்டின் உள்ளே இருந்து கொண்டு கொலையும் கொள்ளையும் கொடுமையும் புரிவோரை அடியோடு அழித்தல் அரசன் கடமை.

கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்”

என்று திருக்குறள் கூறுகின்றது. பசும் பயிர் செழித்து வளர்வதற்காக அதனிடையே முளைக்கும் களையைப் பறித்தெறிதல் போன்று,  நாட்டிலே குடிகள் நலமுற்று வாழ்வதற்காக அரசன் கொடியவர்களைக் கொன்று ஒழித்தல் வேண்டும் என்பது இக் குறளின் கருத்து. குடிகளைத் துன்புறுத்தும் கொடியவர்கள் இல்லாத நாடே நாடாகும்.

முற்காலத் தமிழரசர்கள் கள்வர்க்குக் கடுந்தண்டம் விதித்தார்கள். களவு செய்தவனுக்குக் கொலைத் தண்டனை விதித்தல் முறையாகக் கருதப்பட்டது. சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனுக்கு பாண்டியன் கொலைத் தண்டனை விதித்தான். கொலையுண்டிறந்த கோவலன் மனைவி, மாளிகையிற் போந்து மனந் துடித்துக் கண்ணீர் வடித்தாள். அதைக் கண்ட மன்னவன், “மாதே, நின் கணவன் களவு செய்தான்; அக் குற்றத்திற்காகக் கொல்லப் பட்டான். இதில் கொடுமை யொன்றும் இல்லையே.”

கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேற் கொற்றம் காண்”

என்று நீதி முறையை எடுத்துரைத்தான். இவ்வாறு கள்வர்க்குக் கடுந் தண்டனை விதித்தமையாலேயே முற்காலத்தில் களவு குறைந்திருந்தது போலும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஸ்ட்ராபோ (Strabo) என்னும் யவன ஆசிரியர், ‘பாரத நாட்டில் களவாடுவோர் இல்லை’ என்று எழுதியுள்ளார். இதனைப் பார்க்கும் பொழுது,

கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ”

என்று கம்பர் புனைந்துரையாகக் கூறினாரல்லர்; உண்மையே உரைத்தார் எனக் கொள்ளலாகும்.

இன்னும் நாட்டின் தலைவனாகிய அரசன் மாற்றரசர்களால் குடிகளுக்குத் துன்பம் நேராத வண்ணம் காக்கும் கடமையும் உடையவன். மண்ணாசை கொண்டு மாற்றரசர் படை எடுப்பாராயின் அவர் படையை வென்றழித்தல் மன்னவன் கடமை. முற்காலத்தில் மாற்றரசர் படை எடுப்புப் பெரும்பாலும் தரை வழியாகவே நிகழ்ந்தது. சில வேளைகளில் கடல் வழியாகவும் ஆகாய வழியாகவும் பகைவர் தாக்கியதாகத் தெரிகின்றது.

இவ்விதம் பசி நோயாலும் பகைவர் கொடுமையாலும் குடிகள் வருந்தாமல் பாதுகாப்பவன் அரசனே யாதலால் காவலன் என்னும் சொல்லின் பொருளைத் திருத்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிழார் தெளிவுற விளக்கிப் போந்தார்.

மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலை
தானத னுக்கிடை யூறு தன்னால் தன்பரிச னத்தால்
ஊன மிகுபகைத் திறத்தால் கள்வ ரால்உயிர் தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ”

என்பது சேக்கிழார் பாட்டு. காவலன் ஆகிய அரசன் அறத்தைக் காக்கின்றான் என்பது இப்பாட்டால் விளங்குகின்றது.

மறப் பகையைப் போக்கி அறப் பயனை நாட்டில் விளைப்பவனே காவலன் என்னும் பெயருக்கு உரியவன். இதனாலன்றோ ‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ என்ற வாசகம் எழுந்தது? அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும்’ என்பது இந் நாட்டில் நெடுமொழியாக வழங்குகின்றது. நாட்டில் குற்றம் நிகழ்ந்தால் அரசன் உடனே அதனை விசாரணை செய்வான். குற்றம் சாட்டப்பட்டவன் இன்னான் இனியான் என்று பார்ப்பதில்லை; அவனது குலத்தையும் குடியையும் கருதுவதில்லை. உற்றார் உறவினர் ஆயினும் மற்றோராயினும் நீதி செலுத்தும் முறையில் வேற்றுமையில்லை. சோழ நாட்டை ஆண்ட அரசன் ஒரு பசுவின் கன்றைக் கொன்ற அரசிளங் குமரனை ஒறுத்து, நீதியின் செம்மையை நிலை நிறுத்தினான். தவறு செய்தவன் தன் மைந்தன் என்று சிறிதும் திகைத்தானல்லன்; தன் பெருங் குலத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் எண்ணினாலல்லன்; நீதிநெறி வழுவாமல் குற்றம் செய்தவனை ஒறுத்தலே கடன் எனத் துணிந்தான். இங்ஙனம் நேர்மை குன்றாது மகனை முறை செய்து அறத்தினைக் காத்த மன்னன் பெருமையைத் தமிழ் இலக்கியம் வியந்து போற்றுகின்றது.

ஒருமைந்தன் தன் குலத்துக் குள்ளான் என்பது உணரான்
தருமந்தன் வழிச் செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் தேராழி உறஊர்ந்தான் மறுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதான்”

என்று சேக்கிழார் இம் மன்னன் செம்மையை வியந்து பாடினார்.

இச் சோழனைப் போலவே பாண்டியன் நெடுஞ்செழியனும் நீதி பரிபாலனம் செய்து வந்தான். நீதி முறைக்கு மாறாக இப் பாண்டியன் கண்ணகியின் கணவனாகிய கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்து விட்டான். தண்டனையும் நிறைவேறிவிட்டது. பின்பு கண்ணகி வழக்காடிய பொழுது நீதி தவறியது என்று நெடுஞ்செழியன் அறிந்தான்; அந் நிலையிலேயே தள்ளரிய துயரத்தால் உள்ளம் உடைந்து உயிர் துறந்தான்; தான் செய்த பிழையைத் தீர்ப்பதற்குத் தன்னுயிரையே கொடுத்தான். இதனையறிந்த அயல் நாட்டு வேந்தரும் பாண்டியரைப் பாராட்டினர். சேர மன்னனாகிய செங்குட்டுவன் மனம் வருந்தி,

செம்மையின் இகந்த சொல் செவிப்புலம் படாமுன்
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது”

என்று பாண்டியரைப் புகழ்ந்தான். எனவே, தவறு செய்தவர் யாவரேயாயினும், தமிழ் வேந்தர் நீதி செலுத்தத் தயங்கவில்லை என்பது நன்கு விளங்குகின்றது.

நாட்டில் நிகழ்ந்த குற்றங்களை விசாரணை செய்து நீதி செய்தது போலவே, அரசர் குடிகளுக்குள் நேர்ந்த வழக்குகளையும் தீர்த்து முடிவு செய்தார்கள். அரசன் நீதி மன்றத்தில் அமர்ந்து இரு திறத்தார் கூறும் வழக்கையும் நன்றாக மனத்தில் ஏற்று, நீதி வழங்கினான். நீதிமன்றத்தில் சென்று வழக்காடுதலை ‘மன்றாடுதல்’ என்பர். இப்பொழுதும் ‘மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்’ என்ற வாசகம் வழங்கக் காணலாம். கரிகால் சோழன் காலத்தில் நிகழ்ந்த ஒரு வழக்கைக் குறித்துத் தமிழ்நாட்டில் நெடுங்காலமாக ஒரு கதை வழங்கி வருகின்றது. கரிகால் சோழன் இளமையிலேயே அரசனாய்விட்டான். அவனிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தார்கள் இரண்டு கிழவர்கள். வழக்கோ மிகச் சிக்கலானது. மன்றாட வந்த முதியோர் இருவரும் மனம் தளர்ந்து ஊரம்பலத்திலே இரவில் தங்கியிருந்தார்கள்; வழக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘இளைஞனாகிய நம் அரசன் இவ் வழக்கை மனத்தில் வாங்கிக் கொள்ள வேண்டுமே! முறை தவறாமல் தீர்ப்புச் சொல்ல வேண்டுமே! எப்படியாகுமோ!’ என்று உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப் பேச்சு, மாறுகோலம் புனைந்து அவ்வழியாக வந்த மன்னன் செவியில் விழுந்தது. கவலையோடு அரண்மனையை அடைந்தான் அரசன்; மறுநாள் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது பெரிய அங்கியொன்றை அணிந்தான்; தலையில் அமைந்த கருமுடியை நரை முடியால் மறைத்தான்; இவ்வாறு முதுமைக் கோலம் புனைந்து கொண்டு நீதி மன்றத்திற் சென்று ஆசனத்தில் அமர்ந்தான். வழக்காளர் இருவரும் மன்றத்தில் புகுந்தார்கள்: அரசன் திருமுகத்தை நோக்கினார்கள்; முகத்தில் இளமையிருப்பினும் அரசன் தலை முதிர்ந்திருக்கக் கண்டு ஆனந்தமடைந்தார்கள்; ‘ஆண்டில் இளையவனாயினும் அறிவில் முதியவன் நம் அரசன்’ என்று மனந்தேறித் தம் வழக்கை எடுத்துரைத்தார்கள். இருதிறத்தார் வாய்மொழியையும் அமைதியாகக் கேட்டுத் தீர்ப்புரைத்தான் அரசன். அதுவே முறையான தீர்ப்பென்று வழக்காளர் இருவரும் மனமகிழ்ந்து சென்றார்கள். இக் கதை ‘பழமொழி’ என்ற தமிழ் நூலிற் குறிக்கப்படுகிறது.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப -நரைமுடித்துச்
சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமற் பாகம் படும்”

என்பது பழமொழிப் பாட்டு.

இவ் வண்ணம் முறை செய்து குடிகளைக் காப்பாற்றும் மன்னரைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதினர் தமிழ்நாட்டார். இறைவன் என்ற சொல் கடவுளையும் குறிக்கும், அரசனையும் குறிக்கும். “முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்” என்பது திருவள்ளுவர் வாக்கு தமிழ் நாட்டார் பொன்போற் போற்றும் நீதி நெறிகளை யெல்லாம் தொகுத்து ‘நீதிநெறி விளக்கம்’ என்ற நூல் இயற்றிய குமரகுருபர அடிகள், அரசனே எல்லார்க்கும் தெய்வம் என்ற கருத்தை,

குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் – அறவோர்க்கு
அடிகளே தெய்வம் அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை”

என்னும் வெண்பாவால் எடுத்துரைத்தார். ‘கற்புடைய மங்கைக்குக் கணவனே தெய்வம்; பாலர்க்கு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; அறவோர்க்குக் குருவே தெய்வம்; அனைவோர்க்கும் அரசனே தெய்வம்’ என்பது இப்பாட்டின் கருத்து. நாடாளும் அரசனிடம் தெய்வ ஒளி விளங்கும் என்று திருவள்ளுவர் அருளினார். உலகத்தைக் காப்பது அவ் வொளியே என்பது தமிழ் நாட்டார் கொள்கை.

“உறங்கு மாயினும் மன்னவன் தன்னொளி
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்”

என்று சிந்தாமணி கூறுகின்றது. அரசனிடம் தெய்வத்தன்மை அமைந்திருத்தலால் அன்றோ திருவாய் மொழியுடையார்,

திருவுடை மன்னரைக் காணின்
திருமாலைக் கண்டேனே என்னும்”

என்று திருவாய் மலர்ந்தருளினார்? ஆகவே, அரசனே அச்சந் தீர்ப்பவன்; அறங்காப்பவன்; முறை செய்பவன்; குறை தீர்ப்பவன். அவனே இறைவனாகும் என்பது தமிழ் இலக்கியத்திற் கண்ட கருத்து.

$$$

17. தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு

அரசாங்கம் இல்லாத நாடு இக் காலத்தில் இல்லை. அரசனுக்குரிய ஆறு அங்கங்களில் ஒன்று அமைச்சு என்று திருக்குறள் கூறுகின்றது. அமைச்சர் என்றாலும் மந்திரி என்றாலும் பொருள் ஒன்றே. ‘மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்’ என்ற வாசகம் நம் நாட்டில் வழங்கி வருகின்றது. முற்காலத்தில் மந்திரிகள் எவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை முதலிற் சிறிது பார்ப்போம்.

முற்காலத்தில் தமிழரசு, முடியரசு. ஆதலால் குடிகள் அமைச்சர்களைத் தெரிந்தெடுக்கும் முறைமை இல்லை. மன்னரே தமக்கேற்ற மந்திரிகளைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள்; நாட்டில் வாழும் குடிகளில் நல்லறிவும் நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களே பெரும்பாலும் மந்திரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களென்று தெரிகின்றது. இதைக் குறித்து பழைய தமிழ் நாட்டரசன் ஒருவன் பாடியுள்ள பாட்டைப் பார்ப்போம்:

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்”

என்பது பாண்டியன் நெடுஞ்செழியனது பாட்டு. கல்வியறிவின் பெருமையைக் கூறுகின்றான் கற்றறிந்த பாண்டியன். எல்லோரும் கல்வி கற்றல் வேண்டும்; பாடுபட்டும், பணம் கொடுத்தும் படித்தல் வேண்டும். கல்வியறிவு எல்லாச் சிறப்பையும் தரும். அறிவுடைய ஒருவனை அரசனும் வருக என்றழைத்து அமைச்சனாக்குவான்; அவன் சொல் வழியே அரசு புரிவான் என்று பாண்டி மன்னன் கூறுகின்றான். முற்காலத்து மன்னர் மந்திரிகளைத் தெரிந்தெடுத்த முறை இப் பாட்டால் விளங்குகின்றது. எக் குடியிற் பிறப்பினும் யாவனே யாயினும் மன்னவன் கற்றறிந்தவனையே ஆதரித்தழைத்து மந்திரியாக்குதல் வழக்கம். வயது குறைந்தவனாயினும், உருவிற் சிறியவனாயினும், அறிவு நிறைந்தவனாயிருந்தால் அவனையே அரசன் அமைச்சனாக்கிக் கொள்வான்.

மன்னருக்கு நன்னெறி காட்டும் பொறுப்புடையவர்கள் மந்திரிகளேயாவர். ஆதலால், எப்பொருள் எத் தன்மையதாயினும் அப் பொருளை அமைச்சர்கள் நன்கு ஆராய்ந்து தெளிவார்கள்; அவ்விதம் ஆராய்ந்து கண்ட கொள்கையை நேர்மையாகவும் இனிமையாகவும் மன்னனிடம் எடுத்துரைப்பார்கள்; தாம் கொண்ட கொள்கையை அரசன் கொள்வானோ, அன்றித் தள்ளுவானோ என்று கருதி நெஞ்சம் குலைய மாட்டார்கள். நாட்டின் நலத்தையும், அரசன் நலத்தையும் கண்ணும் கருத்துமாகக் காக்கும் நல்லமைச்சர் நடந்து கொள்ளும் முறையை கலிங்கத்துப்பரணி என்னும் சிறந்த நூலிற் காணலாம். கலிங்க தேசத்தைச் சிற்றரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் சோழ மன்னனுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை உரிய காலத்தில் செலுத்தத் தவறிவிட்டான். அதையறிந்த சோழன், சீற்றம் கொண்டு கலிங்கத்தரசனை வெல்லுமாறு தன் பெருஞ் சேனையை அனுப்பினான். கருங்கடலில் எழுந்து வரும் அலைபோல் சோழ மன்னன் படை அணியணியாகக் கலிங்க நாட்டின் எல்லையை வந்தடைந்தது.

இடிகின் றமனதில், எரிகின் றனபதி
எழுகின் றனபுகை, பொழிலெல்லாம்
மடிகின் றனகுடி , கெடுகின் றனம் இனி
வளைகின் றன்படை பகையென்றே”

குடிகள் எல்லோரும் ஓலமிட்டார்கள். அவ்வோலம் கலிங்கத்தரசன் செவியில் விழுந்தது. தன் பலமும் மாற்றான் பலமும் அறியாத அவ் வரசன் வீரம் பேசத் தொடங்கினான் :

கான் அரணும் மலையரணும் கடலரணும் சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தான்அரண முடைத்தென்று கருதாது வருவதும் அத்தண்டு போலும்

என்று அமைச்சனை நோக்கி இறுமாந்து பேசினான். அப்பொழுது, அரசன் ஆராய்ந்து அறியாமல் சினம் தலைக்கொண்டு அறிவு கலங்கினான் என்பதை அமைச்சன் நன்கு உணர்ந்தான்; தன் கருத்தை எடுத்துரைத்தலே கடமை என்று கருதினான்; மன்னன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், எழுந்து நின்று பதறாமல் சிதறாமல் பேசத் தொடங்கினான் :

அரசர் சீறுவ ரேனும் அடியவர்
உரைசெ யாதொழி யார்கள் உறுதியே”

என்று தொடங்கி, சோழர் படையை வெல்ல முடியாதென்று தக்க காரணம் காட்டி நிறுவினான்:

இன்று சீறினும் நாளை அச் சேனைமுன்
நின்ற போதினில் என்னை நினைத்தியால்

என்றும் அழுத்தமாக உரைத்தான். இம்மொழிகளைக் கேட்ட அரசன் அளவிறந்த சீற்றமுற்றான்; அமைச்சனை இகழ்ந்தான்:

என்னுடைய தோள்வலியும் என்னுடைய வாள்வலியும்
யாதுமறி யாது பிறர்போல்
நின்னுடைய பேதைமையி னால்உரைசெய் தாய் இது
நினைப்பளவில் வெல்ல அரிதோ”

என்று மந்திரியின் சொல்லை உதறியெறிந்து போர் தொடுத்தான். கலிங்கத்துப் படை காற்றிலகப்பட்ட பஞ்சுபோல் சிதறிப் பறந்தது. சிற்றரசன் சீரும் சிறப்பும் இழந்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.

இத்தகைய நல்லமைச்சர் அயோத்தி அரசனது சபையில் இருந்து அணிசெய்தார்கள் என்று கம்ப ராமாயணமும் கூறுகின்றது.

தம்முயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்
செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்”

என்று அயோத்தி அமைச்சர்களைக் குறிக்கின்றார் கம்பர். அந் நாட்டு அமைச்சர்கள் தம் சுய நலத்தைக் கருதியவரல்லர்; மன்னன் கருத்திற்கு மாறாகப் பேசினால் தம் சீரும் சிறப்பும் சிதையுமே என்று சிந்தித்தவரல்லர்; அமர்க்களத்தில் அஞ்சாது நின்று போர்புரியும் வீரரைப்போல் அரசனது அவைக் களத்தில் நீதி முறையை அஞ்சாது எடுத்துரைத்தார்கள். இத் தன்மை வாய்ந்த அமைச்சரைத் துணைவராகப் பெற்றமையாலேயே தசரத மன்னன் நெடுங்காலம் செங்கோல் செலுத்துவானாயினான்.

இதற்கு நேர்மாறான முறை இலங்கை யரசாங்கத்தில் அமைந்திருந்தது. இலங்கையிலிருந்த அரசு ஒரு வல்லரசு. அந் நாட்டுக் குடிகள் அனைவரும் வீரர்கள். வேந்தனோ வீரருள் வீரன். அவன் சபையிலும் அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் அரசன் கருத்தறிந்து அதற்கிசைந்து பேசுபவர்; இச்சகம் பேசும் கொச்சை அமைச்சர். இத் தன்மையைச் சீதையின் வாய்மொழியால் காட்டுகின்றார்:

கடிக்கும்வல் லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும்ஈது அடாதென்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை, உள்ளார் எண்ணிய தெண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது முடிவன்றி முடிவ துண்டோ”

என்று இராவணனைப் பார்த்துச் சீதை பேசுகின்றாள். ‘இலங்கை அரசனாகிய நீ வெறிகொண்டு திரிகின்றாய். தீ நெறியிலே திளைக்கின்றாய். தவறு செய்யும் உன்னைத் தடுத்துரைப்பார் எவரும் இந் நாட்டில் இல்லையே! தக்கது இது, தகாதது இஃது என்று வகுத்துரைக்க வல்லார் இங்கில்லையே! அமைச்சர் என்று பேர் படைத்தவர்கள், நீ எண்ணியதையே எண்ணுகின்றார்கள்; உன் செவிக்கினிய சொற்களையே சொல்லு கின்றார்கள். அன்னார் உனக்கு உறுதி கூறுகின்றா ரல்லர்; இறுதியே சூழ்கின்றார்கள். இத்தகைய போலி அமைச்சரைத் துணைக்கொண்ட உனக்கு நாசம் வருமேயல்லாமல் நலம் உண்டாகுமோ’ என்பது சீதையின் வாய்மொழி.

ஒரு நாட்டின் மன்னன் நெடுங்காலம் அரசு வீற்றிருந்து ஆள்வதற்கும் மந்திரியே காரணம்; அவன் நிலைகுலைந்து அழிவதற்கும் மந்திரியே காரணம் என்று திருவள்ளுவர் அருளிப் போந்தார். தவறான நெறியிலே அரசனைச் செல்லாமல் தடுக்க வல்லவன் அமைச்சனே. ஆதலால், இச்சகம் பேசும் போலி அமைச்சனைத் துணைக்கொள்ளாது இடித்துச் சொல்லித் திருத்தும் மந்திரியைத் துணைக்கொண்ட மன்னவன் கேடுறமாட்டான் என்பது திருவள்ளுவர் கொள்கை.

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்”

என்னும் திருக்குறளால் இவ் வுண்மை விளங்கும். இக் கருத்தைப் பின்னும் வற்புறுத்துகின்றார் திருவள்ளுவர். தவறான வழியில் தலைப்படும் அரசனை இடித் துரைத்துத் திருத்தும் அமைச்சர் இல்லாவிட்டால் பாகனில்லாத யானைபோல் நெறியல்லா நெறிச் சென்று அரசு தானே கெடும்.

இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்

என்பது திருவள்ளுவர் வாக்கு. பொது நலமும் நீதியும் பேணும் அமைச்சரே நல்லமைச்சர்; சுயநலமும் சூழ்ச்சியும் உடைய அமைச்சர் போலி அமைச்சர். அறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு நல்லமைச்சரை நாடும்; மறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு போலி அமைச்சரையே பொறுக்கிக் கொள்ளும். நல்லமைச்சரை ஆளும் அரசே வாழும்; போலி அமைச்சரை ஆளும் அரசு வீழும். இதுவே சிறந்த தமிழ் நூல்களின் கருத்து.

$$$

18. தமிழ் இலக்கியத்திற் கண்ட தூது

நாட்டில் தொன்றுதொட்டுத் தூது என்பது உண்டு. அரசர்கள் தூதனுப்பியுள்ளார்கள்; அன்பர்கள் தூது விடுத்துள்ளார்கள்; புலவர்கள் தூது போக்கியுள்ளார்கள். ஞானிகளும் தூது முறையைக் கையாண்டிருக்கிறார்கள் என்றால் தூதின் தன்மை அறியத்தக்கதன்றோ?

அரசர்க்குரிய சிறந்த அங்கங்களில் தூதும் ஒன்றாகும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார். இரு மன்னர்க்கிடையே மாறுபாடு நிகழ்ந்தால் அப் பிணக்கத்தைத் தீர்த்து இணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பு. தூதர்க்கே உரியதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையும் தூதருக்கு இன்றியமையாத நலங்கள் என்று திருக்குறள் கூறுவதாயிற்று. இத்தகைய தூதர் பெருமையைக் காவியங்களிலும் காணலாம்.

பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் பிணக்கம் நேர்ந்த பொழுது பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது சென்றான் கண்ணன். அப் பெருமான் தூது நடந்த செம்மையை,

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றத்
தொடர்ந்தா ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னாத நாவென்ன நாவே

என்று சிலப்பதிகாரம் பாராட்டுகின்றது. பாண்டவர் தூதனாகிய கண்ணனைப் போன்று இராம தூதனாயினான் அனுமன். நிறைந்த பேரன்பும், சிறந்த கலைஞானமும் நிகரற்ற சொல்வன்மையும் வாய்ந்த அநுமன் இராமனுக்காகத் தூது சென்று, அரும் பெருஞ் செயல்களைச் செய்தான்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்”

என்ற இராமதூதன் இன்றுகாறும் போற்றப்படுகின்றான்.

இனி, அன்பர்கள் அனுப்பும் தூதைச் சிறிது அறிவோம்:

நலமெல்லாம் நிறைந்த ஒரு நங்கையிடம் நளன் அன்னத்தைத் தூது விட்டான் என்பது பழங்கதை. சிவனடியார்களாகிய நாயன்மார்களும், திருமாலடியார்களாகிய ஆழ்வார்களும் இறைவன்பால் வைத்த இன்ப அன்பைத் தூதின் வாயிலாக வெளியிட்டுள்ளார்கள். மென்னடை யமைந்த அன்னங்களையும், மழலை மொழி பேசும் இளங்கிளிகளையும், தோகையை விரித்தாடும் மயில்களையும், இனிய பாட்டிசைக்கும் குயில்களையும், இன்னும் இவை போன்ற பல பறவைகளையும் பரிந்தழைத்துப் பரமனிடம் தூது விடும் முறையிலமைந்த பாசுரங்கள் பலவாகும்.

திருச்செங்காட்டங்குடியிலே கோவில் கொண்டருளும் தலைவனிடம் செங்கால் நாரையைத் தூதனுப்புகின்றார் திருஞானசம்பந்தர்.

கான் அருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்
மீன் இரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேன்அமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடி மேய
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்றுரையாயே”

என்பது அவர் பாடிய தேவாரத் திருப்பாசுரம். ‘வளமார்ந்த சோலைகளிலும், வயல்களிலும், கடற்கரைகளிலும் வயிறார இரை கொள்ளும் இள நாராய்! சிறுத்தொண்டன் பணி செய்த திருச் செங்காட்டங்குடியில் என்னையாளுடைய தலைவன் அமர்ந்திருக்கின்றான். அவனைக் காணாது நான் வாம் வருந்துகின்றேன். சடை முடி சூடிய அப் பெருமானிடம் போந்து என் வருத்தத்தை எடுத்துரையாயோ’ என்று தலைவி முறையில் வேண்டுகின்றார் திருஞானசம்பந்தர்.

இவ் வண்ணமே திருமாலிடம் நாரையைத் தூது விடுகின்றார் நம்மாழ்வார் :

காதல்மென் பெடையோடு உடன்மேயும் கருநாராய்
வேத வேள்வி ஒலிமுழங்கும் தண்திரு வண்வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்டநம் பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே

என்று ஆழ்வார் பேசுகின்றார். ‘காதலின் சுவையறிந்த கரு நாராய்! வளமார்ந்த வண்வண்டூர் என்னும் மலை நாட்டுத் திருப்பதியிலே எம்பெருமான் வாழ்கின்றான். அப் பதியை எளிதில் நீ அறிந்து கொள்ளலாம். வேத கீதம் அங்கு முழங்கிய வண்ணமாயிருக்கும் அவ்விடம் சென்று நம் பெருமான் அடிதொழுது நான் படும் பாட்டை எடுத்துரைக்க வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்கிறார்.

இனி, புலவர் விடும் தூதின் தன்மையைப் பார்ப்போம். ஓர் ஏழைப் புலவர் சோழ நாட்டிலுள்ள சத்தி முற்றத்தை விட்டு, பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரைக்குச் சென்றார்; பாண்டி மன்னனைக் கண்டால் கலிதீரும் என்று கருதி மாளிகையின் வாயிலை அடைந்தார். ஆனால், உள்ளே செல்ல முடியவில்லை. காலமோ கார் காலம். போர்த்துக்கொள்ள ஆடையின்றி வாடையால் நடுங்கினார் புலவர்; பொதுவிடமாகிய அம்பலத்திற் போந்து மாலைப்பொழுதில் மனம் வருந்தியிருந்தார். வறுமை நோயால் வாடிப் பாடுபடும் தன் மனைவியின் துயரம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. அப்பொழுது அவர் ஆகாய வழியாக ஒரு நாரை தன் பெடையோடு வடக்கு நோக்கிப் பறந்து செல்லக் கண்டார். அந் நாரையை நயந்து நோக்கித் தம் மனைவியிடம் தூதுவிடத் துணிந்தார் சத்திமுற்றப் புலவர்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி
பாடு பார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே

என்று பாடிய பாட்டு உருக்கம் வாய்ந்ததாகும்.

இனி, கணவனைப் பிரிந்த காதல் மனையாள் கடுந்துயருற்று வருந்தும் நிலையில் தூது விடும் தன்மையைக் காண்போம்:

பஞ்சவடியிலமைந்த பர்ண சாலையிலே தன்னந் தனியாயிருந்த சீதையை இராவணன் சாலையோடு கவர்ந்தான்; விமானத்தி லேற்றி இலங்கையை நோக்கி விரைந்தான். நாடும் காடும் நதியும் கடந்து விமானம் பறக்கின்றது. சீதை கலங்குகின்றாள்; தனக்கு நேர்ந்த துன்பத்தை இராம லட்சுமணர்களிடம் அறிவிப்பார் எவரும் இல்லையே என்று ஏங்குகின்றாள்; மலைகளும் மரங்களும் ஒடுவன் போல் தோன்றுகின்றன. மயில்களும் குயில்களும் யானைகளும் மான்களும் தோன்றி மறைகின்றன. அவற்றை நோக்கிச் சீதை பேசுகின்றாள்:

மலையே மரனே மயிலே குயிலே
மலையே பிணையே களிறே பிடியே
நிலையா உயிரே நிலைதே றினிர்போய்
உலையா வலியார் உழைநீர் உரையீர்”

என்று வேண்டுகின்றாள். ‘மலைகளே , மரங்களே, மயில்களே , குயில்களே, மான்களே, மற்றுமுள்ள உயிர்களே! நீங்களே என் நாயகரிடம் சென்று என் நிலைமையை எடுத்துரைக்க வேண்டும்’ என்று கூறுகின்றாள். அந் நிலையில் விரிந்து பரந்த கோதாவரி யாற்றின் மீது விமானம் விரைந்து செல்கின்றது. அவ்வாற்றைப் பார்த்துச் சீதை பேசுகின்றாள்:

கோதா வரியே குளிர்வாய் குழைவாய்
மாதா அனையாய் மனனே தெளிவாய்
ஓதா துணர்வார் உழைஓ டினைபோய்.
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ”

என்று விண்ணப்பம் செய்கின்றாள்.

இங்ஙனம் அறியும் பொருள்களையும் அறியாப் பொருள்களையும், அசையும் பொருள்களையும், அசையாப் பொருள்களையும், பேசும் உயிர்களையும், பேசாப் பிராணிகளையும் நோக்கித் துன்ப முற்றவர்கள் உரையாடுதலால் அன்னார் மனத்திலுள்ள ஆற்றாமை ஒருவாறு தீரும்; உள்ளத்தைக் கவர்ந்து எழுகின்ற உணர்ச்சிக்கு ஒரு போக்கு விட்டவாறாகும்.

இந் நலங்கள் அமைந்திருத்தலால் தூது என்பது நாளடைவில் தமிழ் மொழியில் ஒருவகைப் பிரபந்த மாயிற்று. தூதுக்குத் தெரிந்தெடுத்த பொருளைப் பரிந்தழைத்து முகமன் கூறி, தலைவனுடைய நலங்களை அதனிடம் எடுத்துரைக்கும் முறையில் அமைந்தது  ‘தூது நூல்’ எனப்படும். இத்தகைய நூல்கள் தமிழிலே பலவுண்டு. மலர்களைத் தூது விட்டார் சிலர்; மேகத்தையும் தென்றலையும் தூதுவிட்டார் சிலர்; பாடுபட்டுத் தேடும் பணத்தைத் தூது அனுப்பினார் ஒரு தமிழ்ப் புலவர். பண்புடைய பசுந் தமிழையே தூதுவிட்டார் மற்றொரு தமிழ்ப் புலவர். ‘பண விடு தூது’ என்னும் நூலில் பணத்தின் சிறப்பும், பாட்டுடைத் தலைவனாகிய மாதை வேங்கடேசனது மாண்பும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. தூதுப் பொருளாகிய பணத்தை நோக்கி,

வாழ்வதும் உன்னுடைய வாழ்வாமே வாழ்வொழித்துத்
தாழ்வதுவும் உன்னுடைய தாழ்வாமே – கூழ்குடித்துக்
கட்டப் புடைவையின்றிக் கந்தையுமாய்ச் சென்று செல்வர்
கிட்டப் பலகாலும் கெஞ்சிப்போய் – முட்டமுட்டத்
தாங்குவா ரற்றுத் தடுமாறி ராப்பகலாய்
ஏங்குவார் ஏக்கம் உன் ஏக்கமே – ஓங்கும்
பணமென்னும் உன்னைப் படைக்காத சென்மம்
பிணமென்பர் கண்டாய் பெரியோய்”

என்று புலவர் கூறுகின்றார்.

இனி, மதுரைச் சோமசுந்தரக் கடவுளிடம் காதல் கொண்ட ஒரு தலைவி தமிழ் மொழியை அவரிடம் தூதனுப்பும் பான்மையில் அமைந்தது ‘தமிழ்விடு தூது’ என்னும் பிரபந்தம். இந் நூலில் கூறப்படும் தமிழின் சிறப்பைச் சிறிது காண்போம் :

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

என்று தம் தமிழ் ஆர்வத்தை அறிவிக்கும் புலவர்,

எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
வல்லாய், உனக்குரைக்க வல்லேனோ – சொல்லியவுன்
ஈரடிக்குள் ளேஉலகம் எல்லாம் அடங்குமெனின்
நேரடிக்கு வேறே நிலனுண்டோ”

என்று தமிழில் தலைசிறந்த நூலாகிய திருக்குறளைப் போற்றிப் புகழும் முறை புதியதோர் இன்பம் தருவதாகும்.

$$$ 

19. தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ்நாடு இவ் வுலகத்திலே பெருமையுற்று விளங்கிற்று. தமிழ்நாட்டுச் செல்வம் பிற நாட்டாரால் நன்கு மதிக்கப் பெற்றது. திரை கடலோடியும் திரவியம் தேடினர் தமிழர்; கடல் சூழ்ந்த நாடுகளிற் குடியேறினர்; பாழாய்க் கிடந்த இடங்களைப் பண்படுத்தினர்; மெய் வருந்தி உழைத்து அந் நாடுகளையும் செழிக்கச் செய்தனர். சுருங்கச் சொல்லின் தமிழர் சென்ற இடம் எல்லாம் சீருற்றது; அமர்ந்த இடம் எல்லாம் அழகுற்றது. இக் காலத்தில் இது கனவாகத் தோன்றலாம். ஆயினும் எத் திசையும் புகழ் மணக்க இந் நாடு முன்னொரு காலத்தில் இருந்தது என்பது எவரும் மறக்க முடியாத உண்மையாகும்.

முற்காலப் பெருமையைப் பேசுவதால் பயன் என்ன? பழமை, பழமை என்று பன்னுவது எற்றுக்கு என்று சிலர் எண்ணலாம். பழமையை அறிவதில் பயன் உண்டு. பழம் பெருமையை அறியுந்தோறும் நம் உள்ளத்தில் புதியதோர் ஊக்கம் பிறக்கின்றது. தற்காலத்தில் தேம்பியிருக்கும் தமிழ்நாட்டை முற்காலப் பெருமைக்குத் தக்கவாறு மேம்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சி பிறக்கின்றது. இதனாலேயே பாரதியார்
செந்தமிழ் நாட்டைப் போற்றும் பொழுது,

சிங்களம் புட்பகம் சாவகம் ஆகி
தீவுகள் பலவினும் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

என்று பாடி மகிழ்ந்தார். கடல் சூழ்ந்த நாடுகளில் சோழநாட்டுப் புலிக்கொடியும், பாண்டி நாட்டு மீன் கொடியும் பறந்த செய்தியை அறியும் பொழுது சிறந்த இன்பமும் ஊக்கமும் நம் முள்ளத்திலே பிறக்கின்றன வல்லவோ?

தமிழ்நாடு இவ் வண்ணம் ஏற்ற முற்றிருந்த காலமே தமிழ் மொழியும் தழைத்தோங்கிய காலமாகும். படைத்திறம் படைத்த பண்டைத் தமிழரசர்கள் பெருங் கொடைத் திறமும் வாய்ந்தவராக விளங்கினார்கள்; அறிஞரையும் புலவரையும் ஆதரித்துப் போற்றினார்கள். கரிகால் வளவன் என்னும் பெருந் தமிழ் வேந்தன், ஒரு தமிழ்ப் பாட்டின் சுவையறிந்து, மனமகிழ்ந்து அதைப் பாடிய பாவலர்க்குப் பதினாறு இலட்சம் பொன் பரிசளித்தான் என்று சொல்லப்படுகின்றது. இத்தகைய பரிசு பெற்ற பாட்டு,  ‘பட்டினப்பாலை’ எனப்படும்.

இவ்வாறு பெருநில மன்னரும் குறுநிலத் தலைவரும் தமிழறிந்தோரை ஆதரித்தமையால், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் இனிது வளர்ந்தன. மதுரை மாநகரில் தமிழ்ச் சங்கம் அமைத்துப் பாண்டி மன்னர் தமிழை வளர்த்தார்கள். கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த புலவர்கள் அச் சங்கத்தின் அங்கத்தினராய் இருந்தார்கள். இத்தகைய சங்கத்தார் நன்றென ஏற்றுக்கொண்ட நூல்களை நாட்டு மக்கள் போற்றிப் படித்து இன்பமும் பயனும் அடைந்தார்கள். இவ்விதம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆன்ற மதிப்பைப் பெற்ற நூல்களுள் தலை சிறந்தது திருக்குறள் என்று கூறலாம். சில காலம் கழிந்த பின்னர்ச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்கள் எழுந்தன. பண்டைத் தமிழ்நாட்டின் அறமும் பிறவும் இக் காவியங்களால் நன்கு விளங்கும். சாதி சமயம் முதலிய வேற்றுமைகளால் தடையுறாது, நல்லறிஞர் தமிழ்ப்பணி செய்வாராயினர். சைவரும், வைணவரும், சமணரும், சாக்கியரும் ஒருமனப்பட்டுத் தமிழை வளர்த்தார்கள்.

இவ்விதம் சமயப் பொறுமையும் தமிழ் ஆர்வமும் சிறந்து விளங்கிய தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் பிணக்கம் தலைகாட்டத் தொடங்கிற்று. சமண மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பகைமை முதிர்ந்தது. தமிழ்நாட்டு அரசர்களிற் சிலர் சமண சமயத்தை மேற்கொண்டார்கள். சிலர் இந்து சமயத்திலே நின்றார்கள். ஆகவே, எங்கும் குழப்பமும் பிணக்கமும் நிறைந்திருந்தன. இந்த நிலையில் இந்து சமயத்தை ஆதரிப்பதற்கு ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றினார்கள். பக்திரசம் நிறைந்த பாடல்களைப் பாடினார்கள்; ஊர் ஊராகச் சென்று உருக்கமான பாட்டிசைத்தார்கள்; கோவில் கண்ட இடமெல்லாம் குழைந்து குழைந்து பாடித் தொழுதார்கள். பக்திச் சுவை சொட்டும் பாடல்களால் உள்ளக் கிளர்ச்சி உண்டாயிற்று. எங்கும் சமய உணர்ச்சியே பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது. அந் நிலையில் சமண சமயத்தார்க்கும் இந்து சமயத்தார்க்கும் பெரும்போர் மூண்டது இரு திறத்தார்க்கும் வாக்குவாதம் மிகத் தாக்காக நடைபெற்றது. அதன் பயனாகச் சமண சமயம் ஆதிக்கம் இழந்தது. சைவமும் வைணவமும் வீறு பெற்றன. சைவ சமயத் தலைவர்களாகிய நாயன்மார்களும், வைணவ சமயத் தலைவர்களாகிய ஆழ்வார்களும் மக்கள் உள்ளத்தைப் பக்தி மார்க்கத்தில் செலுத்த முயன்றார்கள்; எல்லாம் வல்ல இறைவனையே பாடவேண்டும் என்று பணித்தார்கள். இறைவனது மெய்யான புகழே தமிழ்ப் பாட்டில் அமையத்தக்க பொருள் என்று அறிவுறுத்தினார்கள். பொய்ப் பொருள் உடைய மன்னரையும் செல்வரையும் பாடாது, மெய்ப் பொருளாகிய கடவுளையே பாடும் வண்ணம் நம்மாழ்வார் புலவர்களை வேண்டுகின்றார்.

வம்மின் புலவீர்நும் மெய்வருந்திக் கைசெய்து உய்ம்மினோ
இம்மன்னுலகில் செல்வர் இப்போ தில்லை நோக்கினோம்
நும் இன் கவிகொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமா லுக்குச் சேருமே”

என்பது திருவாய்மொழி. அருமை வாய்ந்த புலவர்களை நம்மாழ்வார் நயந்து நோக்கி, ‘வாக்கு வளம் பெற்ற கவிகளே, இங்கே வாருங்கள்! மெய் வருந்த உழைத்துப் பிழையுங்கள். பொருளுடையவனைப் பாடி வாய் விளைந்து உண்ண விரும்பாதீர்கள். இனிய கவி பாடி உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். அவ் வழிபாடு முழுமுதற் கடவுளையே சேரும்’ என்று வழி காட்டியருளினார்.

மண்ணரசாளும் உரிமை பெற்ற மன்னரும் இந்த மனப்பான்மை யுடையராய் இருந்தார் என்று தெரிகின்றது. சேரநாட்டு மன்னராய் விளங்கினார் குலசேகரப்பெருமாள். மாநிலமாளும் மன்னனாய்ப் பிறப்பதிலும்,

தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும்

பேறு பெற அவர் விரும்புகின்றார். அரியாசனத்தில் அமர்ந்து அரசாளுவதிலும் திருமால் நின்றருளும் திருவேங்கட மலையில் ஒரு படியாய்க் கிடந்து அவர் பவளவாயைக் காண ஆசைப்படுகின்றார். இன்னும் அவர் மனத்தில் அமைந்த ஆர்வம்,

கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையோன் ஆவேனே”

என்னும் பாட்டால் இனிது விளங்குகின்றது.

இவ்வாறு நரனைப் பாடாது நாராயணனையே பாடிய ஆழ்வார்களும், சீவர்களைப் பாடாது சிவனையே பாடிய நாயன்மார்களும், நாள்தோறும் தமிழை வளர்த்தார்கள். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தரை, ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர்’ என்று ஆன்றோர் போற்றினார்கள். தமிழ்நாட்டு மலையும் நதியும், மற்றைய இயற்கைப் பொருள்களும் அவர் தேவாரப்பாட்டிலே படமெடுத்துக் காட்டப்படுகின்றன. மந்தமாருதம் வந்துலாவும் திருக்குற்றால மலையில் வாழும் மந்திகளை அவர் பாட்டிலே காணலாம். ‘பூவார் சோலை மயிலால, புரிந்து குயில்கள் இசைபாட, காமர் மாலை அருகசைய நடந்து செல்லும் காவேரி’ யாற்றின் அழகினை அவர் பாட்டிலே காணலாம்; இன்னும் கண்ணுக்கினிய நிறமும், காதுக்கினிய மொழியும் வாய்ந்த கிளியைக் காணலாம். சோலையிலே பறந்து திரியும் ஒரு பசுங் கிளியை நோக்கி, அவர் பேசும் முறையினைக் காண்போம் :

சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடு பால்
முறையாலே உணத்தருவேன், மொய்பவளத் தொடுதரளம்
துறையாரும் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.

என்ற தேவாரப் பாட்டில் தமிழ் மணமும் தெய்வ மணமும் கமழக் காணலாம். பறந்து வரும் பசுங்கிளியைப் பார்த்து, ‘இளங் கிளியே, இங்கே வா; பாலும் தேனும் கலந்து உனக்குப் பருகத் தருவேன். நீ உனது இனிய மொழியால் எனது ஈசன் திருநாமத்தை ஒரு முறை பேசாயா,’ என்று திருஞானசம்பந்தர் வேண்டுகின்றார்.

இவ்வாறு சைவ வைணவப் பெரியார்கள் அருளிச் செய்த பாடல்களால் இயற்றமிழும் இசைத் தமிழும் ஏற்றமுற்றன. பண்ணின் திறம் உணர்ந்த பாணர்கள், அப் பாடல்களை இன்னிசைக் கருவிகளில் அமைத்துப் பாடினார்கள். பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் நாடெங்கும் மதிக்கப்பட்டார்கள். இவ் வண்ணம் தெய்வத் தமிழ் மணம் எங்கும் பரந்து கமழ்ந்த காலம் கி.பி. ஐந்நூறு முதல் எண்ணூறு வரை என்று பொதுவாகக் கூறலாம்.சங்க காலத்தில் கற்றறிந் தோர்க்கு மட்டும் இன்பம் பயந்த தமிழ் மொழி இத் காலத்தில் கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளுங் களிப்பாய் நிலவிற்று. பொதிய மலையில் வாழும் அகத்தியரால் ஆதரிக்கப்பட்டு, சங்கப் புலவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் மாது, இப் பொழுது எல்லார்க்கும் இனியளாய்த் தமிழ் நாட்டில் இனிது உலாவினாள். பெருஞ் செல்வத்தால் வரும் இன்பத்திலும் தமிழ்ப் பாட்டால் வரும் இன்பமே பெரிதாக மதிக்கப்பட்டது.

இவ்வாறு பெரியோர் பொருட் செல்வத்தால் வரும் சிறப்பை விரும்பாது அருட் செல்வத்தை நாடி நின்றமையால் தமிழ் நாடெங்கும் பக்திமயமாயிருந்தது. இறைவனைப் பாடாத நாளெல்லாம் பயனற்ற நாள் என்று பாவலர் கருதுவாராயினர். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களும், ஆழ்வார்களின் மங்களா சாசனம் பெற்ற திருப்பதிகளும் பெருஞ் சிறப்படைந்தன. புதிய கோயில்கள் பல எழுந்தன. கோயில் இல்லா ஊரில் குடியிருத்தல் ஆகாது என்னும் கொள்கை நிலை பெறுவதாயிற்று. மன்னரும் செல்வரும் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டார்கள். தஞ்சாவூர் இராஜராஜ சோழன் பெரியதொரு கோவிலைக் கட்டி முடித்தான். அவன் மைந்தனாகிய கங்கை கொண்ட சோழன் தன் பெயரால் அமைந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் சிறந்ததோர் ஆலயம் எடுத்தான்.

கோயில், எங்கும் தோன்றியபொழுது சிற்பக்கலை சிறந்து வளர்ந்தது. ஓவியக்கலை உயர்வடைந்தது. இசையும் நடனமும் ஏற்றமுற்றன. தமிழ்நாடு தெய்வ மணமும் கலைமணமும் ஒருங்கே கமழும் திருநாடாகத் திகழ்ந்தது.

$$$

20. தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள்

தெய்வம் உண்டு என்று வாதிப்பாரும், இல்லை என்று சாதிப்பாரும் இவ்வுலகில் எந்த நாளும் உண்டு. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தெய்வம் இல்லை என்பார் மிகச் சிலரே. தெய்வத்தை முன்னிட்டே எந்த வேலையையும் தமிழ் நாட்டார் தொடங்குவார்கள். வேலை இல்லாமல் வெறுமையாய் இருக்கும் பொழுதும் சிவனே என்றிருப்பார்கள்; அல்லது தெய்வமே என்றிருப்பார்கள்; தெய்வத்திற்குரிய கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க விரும்ப மாட்டார்கள். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது இந் நாட்டுப் பழமொழி.

கடவுள் என்ற சொல்லாலேயே கற்றோரும் மற்றோரும் தமிழ் நாட்டில் தெய்வத்தைக் குறிக்கின்றார்கள். தெய்வத்தின் தன்மையை அச்சொல் தெளிவாகக் காட்டுகின்றது. கடந்து உள்ள பொருள் எதுவோ அது கடவுளாகும். எதைக் கடந்து உள்ள பொருள் என்று ஆராய்வோமானால் கடவுள் என்ற சொல்லின் தன்மை சிறந்து தோன்றும். பிறப்பு, இறப்பு என்னும் இரண்டையும் கடந்த பொருள்; நல்வினை, தீவினை என்னும் இரண்டையும் கடந்த பொருள்; காலமும் கணக்கும் கடந்த பொருள்; இவ்வாறெல்லாம் கடவுள் என்ற சொல்லின் பொருளை விரித்துரைப்பார் கற்றறிந்தோர். கவியரசராகிய கம்பரும் இக் கருத்தை விளக்கியுள்ளார்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்”

அவனே கடவுள் என்பது கம்பர் கட்டுரை.

இவ்வாறு எல்லாவற்றையும் கடவுள் கடந்தவரே யாயினும் அவர் இல்லாத இடம் இல்லை, அவரன்றி ஓர் அணுவும் அசையாது என்பது இந்நாட்டார் கொள்கை. இவ்வுண்மையை அறியாது செருக்குற்றுச் சீரழிந்தவர் பலர் ஆவர். அவர்களில் ஒருவன் இரணியன். அவன் மகனாகிய பிரகலாதன் கடவுளே கதியென்று நம்பியிருந்தான். ஒரு நாள் இரணியன் தன் மகனைப் பார்த்து, ‘உன் கடவுள் எங்கிருக்கிறான்? இத் தூணில் இருக்கின்றானோ?’ என்று எதிரே நின்ற கம்பத்தைக் காட்டிக் கடுகடுத்து வினவினான்; அதற்கு மறுமொழி கூறலுற்றான் பிரகலாதன்:

 “சாணினும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சதகூ றிட்ட
கோணினும் உளன்மா மேருக் குன்றினும் உளன், இந் நின்ற
தூணினும் உளன், முன் சொன்ன சொல்லினும் உளன்

என்று கூறினான். அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நிறைந்த கடவுள், நாம் எண்ணும் ஒவ்வோர் எண்ணத்தினும் உள்ளான், சொல்லும் ஒவ்வொரு சொல்லினும் உள்ளான்; செய்யும் ஒவ்வொரு செயலினும் உள்ளான் என்று அறிந்து நடப்பவரே சிறந்தோராவர். பஞ்ச பூதங்களாகிய மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், நெருப்பிலும், காற்றிலும் கலந்து நிற்பவர் கடவுள். இத்தகைய கடவுளை,

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

என்று திருவாசகம் போற்றுகின்றது.

இங்ஙனம் காணுமிடமெல்லாம், கருதுமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுளுக்கு ஒரு நாமம் இல்லை; ஓர் உருவம் இல்லை. எல்லாம் அவர் திருநாமமே; எல்லாம் அவர் திரு உருவமே.

“ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில் லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”

என்றார் மாணிக்கவாசகர். ஆகையால், நாம பேதங்களையும் உருவ பேதங்களையும் பெரிதாகக் கொண்டு ஒரு மதத்தார் மற்றொரு மதத்தாரைப் பகைக்க வேண்டுவதில்லை; பழிக்க வேண்டுவதில்லை என்பது மெய்யறிவுடையோர் கருத்து. கவிஞராகிய பாரதியார், இக் கருத்தைத் தெளிவாகப் பாடிப் போந்தார்:

தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் ஓங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் – நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே – நின்று
கும்பிடும் ஏசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள் ளேதெய்வம் ஒன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்

என்பது பாரதியாரின் அறிவுரை.

அன்பே கடவுளின் வடிவம் என்று எல்லாச் சமயங்களும் இசைந்து கூறுகின்றன. எனவே, அன்பு வடிவாகிய கடவுளை அறிவதற்கும், அவர் அருளைப் பெறுவதற்கும் அன்பையே சாதனமாகக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். ‘எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு’ என்று இவ் வுண்மையைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தார் ஒரு பெரியார். அன்பு, தெய்வத்தன்மையுடையதாதலால் அதற்கு எல்லையில்லை; உற்றார் மற்றார் என்ற வேற்றுமை இல்லை; சாதி குலம் முதலிய பேதங்கள் இல்லை. எல்லாரும் ஓர் குலம்; எல்லோரும் ஓரினம் என்பதே அன்புடையார் கொள்கை. கடவுளிடத்து நாம் செலுத்தும் அன்பு, பக்தி யென்று சிறப்பித்துச் சொல்லப்படும். பக்தி முதிர்ந்த நிலையில் தெய்வப் பித்து வந்து எய்தும். இவ் வுலகில் எல்லாரும் பித்தரே என்றார் ஒரு பெரியார். சிலர் பொருளாசை பிடித்த பணப்பித்தர். சிலர் பெண்ணாசை பிடித்த பெரும் பித்தர். சிலர் புகழாசை பிடித்த புகழ்ப் பித்தர். ஒரு சிலர் கடவுள் வெறி பிடித்த தெய்வப் பித்தர். தெய்வப் பித்தராகவே வாழ விரும்புவர் பக்தர். கடவுளைப் பெரும் பித்தன் என்று பாடினாரும் உண்டு.

தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும் பித்தன் காணேடீ

என்பது திருவாசகம். சிவனடியார்களுள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி தம்மை ஆட்கொண்டருளிய பெருமானே,
“பித்தா பிறைசூடி, பெருமானே அருளாளா”

என்றெடுத்து,

“அத்தா உனக்காளாய் இனியல்லேன்”

என்று திருப்பாசுரம் பாடினார்.

கடவுளை வணங்குவதற்கு ஏற்ற இடங்கள் கோவில் என்ற பெயரால் குறிக்கப்படும். தமிழ்நாட்டில் அழகிய சோலைகளே ஆதியில் கோவில்களாக அமைந்தன. கண்ணுக்கினிய பசுமை நிறமும், செவிக்கினிய இயற்கையொலியும், நாசிக்கினிய நறுமணமும், நாவிற்கினிய நற்கனியும், உடம்பிற்கினிய குளிர் நிழலும் பொருந்திய சோலைகளில் நம் முன்னோர் கடவுளை வணங்கினார்கள்; பூஞ்சோலையிலுள்ள அழகிய மலர்களைக் கடவுளுக்கு அணிந்தார்கள்; கொம்பிலே பழுத்த பழங்களைக் கையுறையாக அளித்தார்கள்; இளந்தளிர்களையும் தழைகளையும் கொண்டு அருச்சனை செய்தார்கள். இத்தகைய சோலைகள் பிற்காலத்தில் கற்கோயில்கள் ஆயின.

ஆயினும், பழைய சோலையின் அடையாளம் பலவிடங்களில் உண்டு. திருச்சிராப்பள்ளிக்கு அருகே திருவானைக்கா என்னும் சிவஸ்தலம் உள்ளது. அங்கு ஆதியில் ஒரு செழுமையான நாவல் மரத்தில் மக்கள் கடவுளை வணங்கினார்கள். அதனால் ஜம்புகேஸ்வரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது. ஜம்பு என்பது வடமொழியில் நாவல் மரத்தின் பெயர். தென்னாட்டிலுள்ள திருக்குற்றாலத்தில் ஒரு குறும்பலா மரத்தில் ஈசன் கோவில் கொண்டார். அப்பலா மரத்தைத் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிப் போற்றினார். மதுரைக்கு அருகேயுள்ள அழகர் மலையின் பழம் பெயர் திருமால் இருஞ்சோலை என்பது. இப்போது. கற்கோவில்களாக விளங்கும் ஆலயங்களிற் காணப்படுகின்ற ஸ்தல விருக்ஷமே முற்காலத்திலிருந்த சோலையைக் காட்டும் அடையாளம் என்பர்.

ஆண்டவன் என்பது கடவுளைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. தமிழ் நாட்டு மகமதியரும் ஆண்டவன் என்ற பெயரைப் பெரிதும் வழங்குகின்றார்கள். பழனியிலுள்ள முருகனைச் சைவர்கள் பழனி ஆண்டவன் என்பர். ஆண்டவன் என்னும் சொல் தலைவன் என்ற பொருளைத் தரும். ஆண்டவன் கடமை அடியார்களைத் தாங்குதல். அடியவர் கடமை ஆண்டவனுக்குத் தொண்டு செய்தல். இக் கருத்து, தேவாரம், திருவாய்மொழி முதலிய தெய்வப் பாடல்களில் தெளிவாக விளங்குகின்றது. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்,

நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே”

என்று அருளிப் போந்தார். ஆண்டவன் திருவடியே கதியென்று அடைக்கலம் புகுந்தோரை அவர் அருள் கைக்கொண்டு காக்கும். சரணாகதி என்பது இதுவே; மனக்கவலையை மாற்றுவதற்கு இதுவே சிறந்த வழியெனக் காட்டினார் திருவள்ளுவர்.

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது”

என்பது அவர் அருளிய திருக்குறள். தனக்குவமை இல்லாத தலைவனே ஆண்டவன். அவன் திருவடியைச் சரணடைந்தாலன்றிப் பிறப்பால் வரும் துன்பத்தைப் போக்க இயலாது என்பது திருவள்ளுவர் கருத்து. சரணாகதியின் பெருமையைத் தமிழ் இலக்கியங்களிற் பரக்கக் காணலாம்.

குலசேகர ஆழ்வார் என்னும் பெரியார் திருமால் திருவடியே சரணம் என்று திருத்தமாகப் பாடியுள்ளார்.

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை
விரைகுழுவும் மலர்பொழில்சூழ் வித்துவக்கோட்டம்மானே
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றிருந்தேனே

என்பது அவர் திருப்பாசுரம். உடல் பொருள் ஆவியென்னும் மூன்றையும் கடவுளிடம் ஒப்புவித்தலே சரணாகதியாகும். அவ்வாறு ஒப்புவித்த பெரியாருள் ஒருவர் மாணிக்கவாசகர். அவர் சரணாகதியின் தன்மையைத் திருவாசகத்தில் உணர்த்துகின்றார் :

அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்னோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே

என்று பாடினார்.

கடவுளிடம் அடைக்கலம் புகும் சரணாகதி முறை கிறிஸ்தவ சமயத்திலும் உண்டு. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே ஏசுநாதர் சேவையில் ஈடுபட்ட பெஸ்கி என்னும் வீரமா முனிவர் கொள்ளிட நதியின் வட கரையில் ஒரு கோயில் கட்டினார். தேவமாதாவாகிய மேரியம்மையின் திருவுருவத்தை அங்கு நிறுவினார்; அம்மாதாவை அடைக்கல மாதா என்று அழைத்தார்; அவர் காவலில் அமைந்த ஊருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; திருக்காவலூரில் வாழ்ந்த கிறிஸ்தவருக்கு அடைக்கலம் அளித்த மாதாவின்மீது ஒரு கலம்பகம் பாடினார். அப் பாமாலை திருக்காவலூர்க் கலம்பகம் என்று வழங்கப்படுகின்றது.

இன்னும் தமிழ்க் காவியங்களில் சிறப்புற்று விளங்கும் கம்பராமாயணம் சரணாகதியின் செம்மையை விரித்துரைப்பதாகும். இராமன் கானகம் புகுந்த பொழுது அரக்கரது கொடுமையால் வருந்திய முனிவர்கள் வந்து சரணம் அடைந்தார்கள். அப்பால் தன் தமையனாகிய வாலியின் கொடுமையால் வாடி வருந்திய சுக்ரீவன் என்ற வானரத் தலைவன் வந்து சரணம் புகுந்தான். பின்னர் இராவணன் தம்பியாகிய விபீஷணன் வந்து சரணாகதியடைந்தான். இங்ஙனம் அடைக்கலமாக வந்தடைந்தோரையெல்லாம் இராமன் ஆதரித்து ஏற்றுக் கொண்டான்; அவர் மனக்கவலையை மாற்றி யருளினான். ஆகவே, அடைக்கலத்தின் பெருமையை விளக்கும் காவியம் இராமாயணம் என்பது மிகையாகாது. அக் காவியத்தின் உட்கருத்தைக் கம்பர் முதற் கவியிலேயே குறிப்பாகக் கூறியுள்ளார்:

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே

என்பது கம்பர் அருளிய கடவுள் வாழ்த்து. ‘உலகங்களை யெல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும் விளையாடும் பெருமானே ஆண்டவன். அவனே எல்லார்க்கும் அடைக்கலம் அளிப்பவன்’ என்று இராமாவதாரத்தின் உட்பொருளை உணர்த்தினார் கம்பர்.

ஆண்டவனாகிய கடவுளின் திருவருளைப் பெறுவதற்குப் பல வழிகளைப் பெரியோர் வகுத்துள்ளார்கள். அவ் வழிகளை மார்க்கம் என்றும் சொல்வதுண்டு. இம் மார்க்கங்களே மதங்கள் என்றும், சமயங்கள் என்றும் போற்றப்படுகின்றன. தமிழ் நாட்டில் ஆறு வகைப்பட்ட சமயங்கள் உண்டு என்று அறிந்தோர் கூறுவர். அவற்றுள் சைவமும் வைணவமும் சாலப் பழமை வாய்ந்த சமயங்கள், சமணமும் சாக்கியமும் சில காலம் சிறந்திருந்து நிலை குலைந்தன. தற்காலத்தில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் வளர்ந்தோங்கி வருகின்றன. இங்ஙனம் சமயங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஆண்டவன் காரணமாகச் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளலாகாது என்பதே சான்றோர் கொள்கை.

பண்டைத் தமிழ்நாட்டில் சமயப் பொறுமை தலைசிறந்து விளங்கிற்று. ஒரு குடும்பத்தில் தமையன் சைவனாகவும், தம்பி சமணனாகவும் இசைந்து வாழக் கண்ட நாடு தமிழ்நாடு, சேர நாட்டையாண்ட செங்குட்டுவன் என்பவன் சிறந்த சைவன். அவன் தம்பியாகிய இளங்கோவடிகள் சிறந்த சமண முனிவர். அம் முனிவரே சிலப்பதிகார ஆசிரியர். அவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய நல்லோர் வாழ்ந்த காலம் சங்க காலம் என்று சொல்லப்படுகின்றது. சமயச் சண்டையும் சச்சரவும் இல்லாதிருந்த சங்க காலமே தமிழ்நாடு எல்லா வகையினும் ஏற்றமுற்றிருந்த காலம். இக்காலத்திற்குப் பின் சமயச் சண்டைகள் மூண்டன. ஆண்டவன் பெயரால் சண்டையிட்டு மாண்டார் பலர். சமயச் சண்டை இக் காலத்தில் அவ்வளவாக இல்லை. சமரச சன்மார்க்கமே இந்நாளில் அறிவுடையோர் போற்றும் சமயம், தர்க்கமும் குதர்க்கமும் ஒழிந்து சமரசம் பரவும் காலத்தை ஆர்வத்தோடு எதிர் நோக்கினார் தாயுமானார்.

தர்க்கமிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம் விட்டு
நிற்கும் அவர் கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ”

என்று பாடினார் அப் பெரியார். அந் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாள் ஆகும்.

“வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்”

(நிறைவு)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s