அழகிய போராட்டம் (பகுதி- 1)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அறிமுகம்

இந்திய மூல சிந்தனையாளரும் வரலாற்று ஆராய்ச்சியாளருமான ஸ்ரீ. தரம்பாலின் நூற்றாண்டு இது. நம்மிடையே வாழ்ந்து மறைந்த கடைசி காந்திய சிந்தனையாளர் இவர்.

உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கன்டாலா எனப்படும் சிறிய நகரத்தில் 1922 பிப். 19-இல் பிறந்தவர் தரம்பால்.  இளைஞர்களுக்கு மகாத்மா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று 1942-43ல் பட்டப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். அவர் 1948 ஆம் ஆண்டு இந்திய கூட்டுறவு சங்கத்தின் (Indian Cooperative Union) நிறுவன உறுப்பினராக இருந்தார்.

காந்தியடிகளின் சீடர்களுள் ஒருவரான மீரா பென்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்போது இந்திய பஞ்சாயத்து பரிஷத் மற்றும் தன்னார்வக் குழுக்களின் கிராமப் புனர் நிர்மாணப் பணிகளுக்கான அமைப்பில் (AVARD) 1958 முதல் 1964 வரை அவர் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். காந்தியப் போராளியான ஜெயபிரகாஷ் நாராயணனுடனும் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

2001இல் தேசிய பசுப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் (1990) இரு முறை உறுப்பினராக இருந்துள்ளார்.

தரம்பாலின் வாழ்நாள் சாதனை என்பது, பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முந்தைய பாரதத்தின் கல்வி நிலை, கலை, அறிவிய, தொழில்நுட்ப சாதனைகள் தொடர்பாக, ஆங்கிலேயரின் ஆவணங்களைக் கொண்டே, காத்திரமான ஆய்வு முடிவுகளை நூல்களாக எழுதி வெளியிட்டதாகும். இவர் எழுதிய 1. Indian Science and Technology in the Eighteenth Century (1971), 2. Civil Disobedience and Indian Tradition (1971), 3. Panchayat Raj and India’s Polity (1962), 4.  The Madras Panchayat System: A General Assessment (1973), 5. The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century (1983), 6. Understanding Gandhi (2003), 7. The British Origin of Cow-slaughter in India With Some British Documents on the Anti-Kine-Killing Movement 1880-1894 (2003) ஆகியவை முக்கியமான ஆராய்ச்சி நூல்களாகும்.

இவற்றில் சில மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான திரு. பி.ஆர்.மகாதேவனால் அழகிய நதி (1), அழகிய போராட்டம் (2), அழகிய மரம் (5) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அழகிய மரம், அழகிய நதி ஆகியவை கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி உள்ளன. தனது நூல்களுக்கு தரம்பால் எழுதிய  முன்னுரைகளின் தொகுப்பையும் ’அழகிய இந்தியா’ என்ற நூலாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகே பாரதத்தில் கல்வி, அறிவியல், தொழில் வளர்ச்சி சாத்தியமானது என்ற கண்மூடித்தனமான வாதங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பவை தரம்பாலின் நூல்கள். பாரதத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்த அறிவியக்கத்தை அறுத்தெறிந்ததே ஆங்கிலேயரின் சாதனை என்பது தரம்பாலின் ஆய்வு முடிவு.

வாழ்வின் இறுதிப்பகுதியில் மஹாராஷ்டிரத்தின் சேவாகிராமத்தில் தங்கியிருந்த தரம்பால், 2006 அக். 24-இல் மறைந்தார். இந்த ஆண்டு, ஸ்ரீ. தரம்பாலின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது.

மொழிபெயர்ப்பாளர் பி.ஆர்.மகாதேவன்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த திரு. பி.ஆர்.மகாதேவன், 20 ஆண்டுகளுக்கு மேலாக இதழியல், பதிப்புத் துறையில் இயங்கி வருகிறார். கணையாழி, காலச்சுவடு, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தற்போது கிழக்கு பதிப்பகத்தில் 12 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

1. தென்னாபிரிக்காவில் சத்யாகிரகம் (மகாத்மா காந்தி), 2. கத்தியின்றி ரத்தமின்றி (கிருஷ்ணம்மாள் – ஜெகந்நாதன்), 3. வேத கால பாரதம் (பாளா சாஸ்த்ரி ஹரிதாஸ்), 4. தற்செயல் பிரதமர்: மன்மோகன் சிங் (சஞ்சய் பாரு), 5. அழகிய மரம்: 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி (தரம்பால்), 6. அழகிய நதி: 18-ம் நூற்றாண்டு இந்தியாவின் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (தரம்பால்), 7. பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை (டாக்டர் அம்பேத்கர்), 8. சிலை திருடன் (எஸ்.விஜயகுமார்), 9. வானமே எல்லை (கேப்டன் கோபிநாத்), 10. இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு (ராய் மாக்ஸம்) உள்ளிட்ட 15 நூல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

காளையார் கோவில் ரதம் (சிறுகதைத் தொகுப்பு), 2. மறைக்கப்பட்ட பாரதம், 3. யார் வைத்த நெருப்பு (இலங்கைப் பிரச்னை), 4. சரஸ்வதி மேரி டீச்சர், 5. ஸ்வாமி அம்பேத்கர் (நாடகத் தொகுப்பு), 6. இந்து மதம்: நேற்று இன்று நாளை, 7. பாரதம்: நேற்று இன்று நாளை, 8. ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள்- உள்ளிட்ட 13 நூல்களையும் இவர் எழுதி இருக்கிறார்.  ‘பொருள் புதிது’ இணையதளத்தின் ஆசிரியர் குழுவில் வழிகாட்டி வருகிறார்.

இங்கு தொடராக வெளியாக உள்ள  ‘அழகிய போராட்டம்’, இதுவரை தமிழில் வெளிவராத நூல். தரம்பாலின் Civil Disobedience and Indian Tradition (1971) நூலே இங்கு திரு. பி.ஆர்.மகாதேவனால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

$$$

நூலாசிரியர் உரை

1965ல், இந்தியா தொடர்பான பிரிட்டிஷாரின் 1819ம் நூற்றாண்டு ஆவணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தபோது, 1874ல் நடைபெற்ற தக்காணக் கலவரம் பற்றிய சில தரவுகளைப் பார்க்க நேர்ந்தது. அஹமது நகர் மற்றும் புனேயில் இருந்த சில மாவட்டங்களில் நடந்த அந்தப் போராட்டத்தின்போது, சில கிராம சமூகங்கள் ஒத்துழையாமை மற்றும் பிற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்தது பற்றி அந்த ஆவணம் குறிப்பிட்டிருந்தது. அந்தப் போராட்டம் முக்கியமாக வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்தப் போராட்டங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் எல்லாமே சமீப காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றைப் போலவே இருந்தன. இது தொடர்பாக மேலும் ஆராய்ந்து பார்த்தபோது இந்தியாவின் பல பகுதிகளில் இதுபோல பல ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்புப் போராட்டங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.

நான் இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. இது என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. காந்தியடிகள் இவை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று அவருடைய கட்டுரைகள் சிலவற்றை மறு வாசிப்பு செய்தேன். இந்தக் காலகட்டம் வரை ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பு இயக்கமும் சமீப காலத்திய போராட்ட வடிவம் என்றும், காந்தியடிகளே அதை ஆரம்பித்துவைத்தவர் என்றும் நினைத்திருந்தேன். காந்தியடிகள் இந்தப் போராட்ட வழிமுறையைச் செழுமைப்படுத்தி கூர்மைப்படுத்திப் பயன்படுத்தினார் என்றாலும், இதை அவர் தொரோ, டால்ஸ்டாய், ரஷ்கின் போன்ற ஐரோப்பியரிடமிருந்துதான் பெற்றுக்கொண்டிருந்தார் என்றும் கருதினேன். ஆனால் காந்தியடிகளின்  ‘ஹிந்து ஸ்வராஜ்ஜியம்’ நூலை மீண்டும் படித்துப் பார்த்தபோது, காந்தியடிகள் இதுபற்றிச் சொல்லியிருக்கும் விஷயம் ஒன்றைப் பார்த்தேன்: இந்தியாவில் அமைதி வழியிலான போராட்டங்கள் வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தேசம் முழுவதிலுமே இருந்து வந்துள்ளன. ஆட்சியாளர்களுடன் அதிருப்தி ஏற்பட்டால் ஒத்துழைக்க மறுப்பது இந்தியர்களின் குணமாக இருந்திருக்கிறது.

காந்தியடிகளுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த, அவரை நன்கு அறிந்திருந்த, ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கெடுத்திருந்த அவருடைய பல நண்பர்களுக்கு இந்தப் பத்தியை அனுப்பிவைத்தேன். இந்தச் செய்தியைப் படித்ததும் அவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். எனினும் அவர்களுக்கு ஆச்சரியத்தோடு ஒருவித சந்தேகமும் கூடவே எழுந்திருந்தது. இந்தியாவில் முன்னமே அமைதி முறையிலான போராட்டங்கள் இருந்திருப்பதாக காந்தியடிகள் சொல்லியிருப்பதை அவர்கள் பெரிதாக நம்பவில்லை. கடந்த கால இந்தியாவை உயர்வாகச் சொல்ல வேண்டும் என்ற காந்தியடிகளின் லட்சியவாத நோக்கமே இதில் வெளிப்படுகிறது; மற்றபடி ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் போன்றவை இருந்திருப்பதற்கான ஆதாரமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்.

வரலாற்றுக்கு முந்தைய பன்னெடுங் காலத்திலிருந்தே இந்திய மக்கள் எல்லாருமே யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு முழுவதும் அடிபணிந்துதான் இருந்திருக்கிறார்கள் என்றே காந்தியடிகளின் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே சொன்னார்கள். அன்றைய மக்களுக்கு சமூகப் பிரச்னை, அரசியல் பிரச்னை போன்ற சாதாரண விஷயங்களில் அக்கறையே இருந்திருக்கவில்லை என்றே அவர்கள் சொன்னார்கள். காந்தியடிகளுக்கு மிக நெருக்கமாக இருந்து அவருடன் போராட்டங்களில் பங்குபெற்றவர்கள் மட்டுமல்ல, அவரை மறுதலித்து நின்றவர்களுமே கூட இந்த எண்ணங்களைத் தான் கொண்டிருந்தனர்.

இப்படியான சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதிலை மிக விரிவாக பல்வேறு ஆவணங்களை அலசிப் பார்த்து ஆதாரபூர்வமாகவே சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் 1966 வாக்கில் லண்டனில் இருந்த இந்தியா ஆஃபீஸ் லைப்ரரியின் வருவாய் மற்றும் சட்ட ஆவணங்களை ஆராய்ந்து அவற்றில் இருந்து எடுத்தவையே. இந்த அமைதிப் போராட்டங்கள் குறித்த முதல் தரவானது டாக்டர் சஷி பூஷன் சௌத்ரி எழுதிய  ‘சிவில் டிஸ்டர்பன்சஸ் ட்யூரிங் பிரிட்டிஷ் நூல் இன் இந்தியா: 1765 -1857′ என்ற நூலில் இருந்துதான் எனக்குக் கிடைத்தது.

மேற்கு வங்காள ஆவணக் காப்பகம், இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி, தில்லியில் இருக்கும் காந்தி சமாரக் சங்க்ராலயா போன்ற பல்வேறு அமைப்புகளின் பணியாளர்களுக்கு இந்த ஆய்வில் எனக்கு உதவி புரிந்தமைக்காக நன்றிகள் பல.

இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் எல்லாம் 1966லேயே சேகரிக்கப்பட்டுவிட்டன என்றாலும், அவற்றின் உள்ளீடுகளைப் புரிந்துகொண்டு முழுவடிவில் ஒருங்கிணைத்து முடிந்தது, காந்தி பீஸ் பவுண்டேஷன் வழங்கிய உதவிகளின் மூலம்தான். இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி மற்றும் இந்தியா ஆஃபீஸ் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இருந்து இங்கு வெளியிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் எல்லாம் லண்டனில் இருக்கும்  ‘கன்ட்ரோலர் ஆஃப் ஹெர் மெஜஸ்டி’யின் அனுமதி பெற்றே வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மற்றும் அவை தொடர்பான விளக்கங்கள், புரிதல்கள் பற்றி பல நண்பர்கள் மிகுந்த அக்கறையுடன் ஆலோசனைகளும் விமர்சனங்களும் வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பெர்னி ஹோரோவிட்ஸ், முஹம்மது ரஃபீக் கான், ராதாகிருஷ்ணா ஆகியோர் அதிக நேரம் செலவிட்டு அக்கறையுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு விசேஷ நன்றிகள். இந்தப் புத்தகத்தின் தயாரிப்பில் உதவிய நரேந்திர கோயலுக்கும் நன்றிகள்.

பனாரஸில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கல்கத்தாவில் இருந்த ஃபோர்ட் வில்லியம் பிரிட்டிஷ் மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள், பெங்கால் பிரிட்டிஷ் அதிகாரிகள் லண்டனுக்கு அனுப்பிய கடிதங்கள் ஆகிய இந்த ஆவணங்கள் எல்லாம் நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைக்கிரமமாக இங்கு வெளியிடப்பட்டுள்ளன. பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்த சம்பவங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் நோக்கில் அப்படியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மூல நூலில் இருந்த அதே உச்சரிப்பு, எழுத்துப் பிழைகளுடனே இந்த ஆவணங்கள் (ஆங்கிலத்தில்) அப்படியே வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இந்தப் பிழைகளினால் அர்த்தம் புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

 -தரம்பால்

ஜூலை, 1971.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s