அதிகமான் நெடுமான் அஞ்சி-1

-கி.வா.ஜகந்நாதன்

அறிமுகம்

அமரர் திரு. கி.வா.ஜகந்நாதன் என்ற கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன், சென்ற நூற்றாண்டின் மூத்த தமிழறிஞர்களுள் ஒருவர்; எழுத்தாளர், மேடைச் சொற்பொழிவாளர், கவிஞர், நாட்டுப்புறவியலாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகங்களை உடையவர்.

கி.வா.ஜ. (1906 ஏப். 11 – 1988 நவ. 4) தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் மாணவர்; சங்கர மடத்தால் ‘வாகீச கலாநிதி’ பட்டம் (1951) பெற்றவர். இவர் சுமார் 200 நூல்களை எழுதி இருக்கிறார். அவை ஒவ்வொன்றும் தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் சொத்தாகும். இவரது ‘வீரர் உலகம்’ நூலுக்கு 1967-இல் சாஹித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ‘கலைமகள்’ பத்திரிகையின் ஆசிரியராக கி.வா.ஜ. இருந்திருக்கிறார்

இவரது ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ என்னும் நூல் இங்கு கருவூலம் பகுதியில் பதிவாகிறது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் குறித்த நூல் இது.


நூல் விவரம்:

‘அதிகமான் நெடுமான் அஞ்சி’
கி.வா.ஜகந்நாதன்
அமுத நிலையம் லிமிடெட், தேனாம்பேட்டை, சென்னை- 18
முதற் பதிப்பு: நவம்பர், 1959; நான்காம் பதிப்பு: ஜூன் 1964
விலை ரூ. 1-00

$$$

முன்னுரை

தமிழ் இலக்கியங்களில் வீரமும் காதலும் இணைந்து ஒளிர்கின்றன. சங்க காலத்து நூல்களில் காதற் பாட்டுக்கள் ஐந்து பங்கும் வீரப்பாடல்கள் ஒரு பங்குமாக இருக்கின்றன. காதற் பாட்டுக்கள் எல்லாம் புனைந்துரைகள்; கற்பனைக் காட்சிகளை உடையன. ஆனால் வீரப் பாடல்கள் பெரும்பாலும் வரலாற்று உண்மைகளைக் கருவாகக் கொண்டவை.

எழு பெருவள்ளல்களில் ஒருவனும் ஒளவைக்குச் சாவா மூவா நிலைதரும் நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது. சங்கநூற் பாடல்களைக் கொண்டு அவன் பெருமையை வடித்து வடிவம் கொடுத்து எழுதியதே இந்தப் புத்தகம். புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களும், தகடூர் யாத்திரைப் பாடல்களும், கொங்குமண்டல சதகப் பாடலும் இந்த வரலாற்றையறியத் துணையாக இருந்தன. அன்றியும் அதிகமான் கோட்டையின் இரகசியத்தைச் சேரனுக்கு ஒரு வஞ்சகமகள் அறிவித்தாள் என்ற செய்தி அதிகமான் வாழ்ந்த தருமபுரிப் பக்கத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவருகிறது. அதையும் பயன்படுத்திக் கொண்டேன்.

ஆராய்ச்சி முறையில் எழுதியதன்று இது. படிப்பவர்கள் நெஞ்சில் அதிகமான் உருவமும் செயல்களும் ஓவியமாக நிற்க வேண்டும் என்ற கருத்தோடு உரையாடல்களையும் வருணனைகளையும் இணைத்து எழுதினேன். ஆயினும் தலைமையான நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஆதாரங்கள் உண்டு; அவற்றை அடிக் குறிப்பிலே தந்திருக்கிறேன்.

-கி.வா.ஜகந்நாதன்

‘காந்தமலை’, சென்னை – 28
13 – 11-1959

$$$

பொருள் அடக்கம்

1. முன்னோர்கள்
2. அதிகமானும் ஒளவையாரும்
3. வீரமும் ஈகையும்
4. அமுதக் கனி
5. படர்ந்த புகழ்
6. ஒளவையார் தூது
7. கோவலூர்ப் போரும் குமரன் பிறப்பும்
8. இயலும் இசையும்
9. சேரமான் செய்த முடிவு
10. போரின் தொடக்கம்
11. முற்றுகை
12. அந்தப்புர நிகழ்ச்சி
13. வஞ்சமகள் செயல்
14. போர் மூளுதல்
15. முடிவு

$$$

அதிகமான் நெடுமான் அஞ்சி

1. முன்னோர்கள்

தமிழ்நாட்டைப் பல மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். ஆயினும் அவர்களுக்குள்ளே மிகப் பழங்காலந் தொட்டு இடைவிடாமல் ஆண்டு வந்தவர்கள் சேர சோழ பாண்டியர்கள். இந்த மூவேந்தர்களின் பழமையை, ‘படைப்புக் காலந் தொட்டே இருந்து வருபவர்கள்’ என்று சொல்லிப் புலவர்கள் பாராட்டுவார்கள். தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பிரிந்திருந்தது. சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், சேர மண்டலம் என்பவை அவை. அவற்றை ஆண்டுவந்த மன்னர்கள் மூவரையும் முடியுடை மூவேந்தர் என்று இலக்கியம் கூறும். அவர்களுடைய தலைமையின் கீழும், தனியேயும் பல சிறிய அரசர்கள் சிறிய சிறிய நாடுகளைத் தங்கள் ஆட்சிக்குரிமையாக்கி ஆண்டு வந்ததுண்டு; ஆனால் அவர்களுக்கு முடி அணியும் உரிமை இல்லை. பழங்கால முதல் தமிழ்நாட்டை ஆண்டு வந்த சேர சோழ பாண்டியர்களுக்கே அந்த உரிமை இருந்தது.

இந்த மூன்று மன்னர்களுக்கும் தனித்தனியே அடையாளப் பொருள்கள் இருந்தன. அவற்றில் சிறப்பானவை மாலையும் கொடியும். சேரன் பனை மாலையையும் விற்கொடியையும் உடையவன். சோழன் அதிகமான் நெடுமான் அஞ்சி ஆத்தி மாலையையும் புலிக் கொடியையும் உடையவன். பாண்டியன் வேப்ப மாலையையும் மீன் கொடியையும் உடையவன். எல்லோரும் அணிகிற மாலைகளை அணிந்து கொண்டால் தனியாக அடையாளம் தெரியாது. ஆகையால் நாட்டில் உள்ள மக்கள் வழக்கமாக அழகுக்கும் இன்பத்துக்கும் அணிந்து கொள்ளும் மலர்மாலைகளை அவர்கள் தங்கள் அடையாள மாலையாக வைத்துக் கொள்ளவில்லை. பிறர் அணியாத மாலைகளாகத் தேர்ந்து தங்களுக்கு உரியன வாக்கிக் கொண்டார்கள். பனை மாலையையோ ஆத்தி மாலையையோ வேப்பமாலையையோ யாரும் மணத்துக்கென்றோ அழகுக்கென்றோ அணிகிறதில்லை. அவை தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கு உரியனவாகப் புகழ் பெற்றவை. தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கண நூலில் அவற்றின் பெருமையை அதன் ஆசிரியர் கூறியிருக்கிறார். *1

தமிழ்நாட்டின் வடக்கே உள்ள பகுதியைச் சோழ மன்னர்களும், தெற்கே உள்ள பகுதியை பாண்டிய அரசர்களும், மேற்கே மலை நாடு என்று வழங்கும் பகுதியை  சேர வேந்தர்களும் ஆண்டு வந்தார்கள். மலை நாட்டில் சேரர் பரம்பரை இன்றும் இருந்து வருகிறது. இப்போது சேர நாட்டில் மலையாள மொழி வழங்கினாலும் அக் காலத்தில் தமிழே வழங்கியது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே அந்த நாடு இருந்தது.

சேர நாட்டின் தலைநகரம் வஞ்சி. இப்போது திருவஞ்சைக் களம் என்று வழங்கும் ஊரும் கொடுங்கோளூர் என்ற ஊரும் சுற்று வட்டாரங்களும் சேர்ந்த பெரிய நகரமாக விளங்கியது வஞ்சி. சேர அரசர்களின் அரசிருக்கை நகரமாகிய அங்கே அயல் நாட்டு வாணிகர்களும் வந்து மலை நாட்டு விளைபொருள்களை வாங்கிச் சென்றனர். அவர்கள் சரக்குகளை ஏற்றிச் செல்லுவதற்கு ஏற்றபடி முசிறி என்ற பெரிய துறைமுகப் பட்டினம் அந் நாட்டில் இருந்தது. சேரர்களுடைய பெருமையை மட்டும் தனியே பாடுகிற சங்க காலத்து நூல் ஒன்று இருக்கிறது. அதற்கு ‘பதிற்றுப் பத்து’ என்று பெயர். அது பத்துச் சேர அரசர்களின் புகழை பத்துப் பத்துப் பாடல்களால் வெளியிடுகிறது. ஒவ்வொரு பத்தையும் ஒவ்வொரு புலவர் பாடி, சேர மன்னர் வழங்கிய பரிசைப் பெற்றார். சேர மன்னர்களிற் சிலர் தமிழ்ப் புலமையிற் சிறந்தவர்களாக இலங்கியதுண்டு. அவர்கள் பாடிய தண்டமிழ்ப் பாடல்கள் சிலவற்றை இன்றும் நாம் படித்து இன்புறலாம்.

இவ்வாறு புகழுடன் விளங்கிய சேரர் குலத்தில் மிகப் பழைய காலத்தில் ஒரு சிறு கலகம் விளைந்தது. சேரர் குலத்து அரசுரிமையைப் பெறும் திறத்தில் சகோதரர்கள் இருவரிடையே விளைந்தது அது. ஒவ்வொருவரும் அரசுரிமை தமக்கே என்று வாதிட்டனர்; போர் புரிந்தனர். இறுதியில் ஒருவரே வென்றார். தோல்வியுற்றவர் தம்முடைய படைப்பலத்தைக் கொண்டு சேர நாட்டை அடுத்துள்ள தகடூர் என்ற ஊரில் தங்கி, அதையே தமக்குரிய தலைநகராக ஆக்கிக்கொண்டார். கோட்டை கொத்தளங்களை அமைத்துச் சிற்றரசராக வாழலானார். சேரன் வழி வந்தவர் என்ற பெருமையை விட அவருக்கு மனம் இல்லை. ஆதலால் தமக்கும் பனை மாலையையே அடையாள மாலையாக வைத்துக் கொண்டார். அப்படி ஒரு புதிய அரசைத் தோற்றுவித்தவரின் பெயர் அதிகமான் என்பது; அதியமான், அதியன் என்றும் அவரைச் சொல்வதுண்டு. அவருக்குப் பின் தகடூரை இராசதானியாகக் கொண்டு ஆண்டவர்களை அதியன் குலத்தினர் என்றும், அதியரையர் என்றும் பெயர் சூட்டி மக்கள் வழங்கி வந்தார்கள். அவர்களுடைய ஆட்சியில் இருந்தது குதிரை என்னும் மலை. புலவர்கள் அதை ஊராக் குதிரை என்று புகழ்ந்தார்கள். ‘மக்கள் ஏறிச் செலுத்தும் குதிரை அன்று இது; இது மலை”*2 என்பதை நினைப்பூட்டி அப்படிப் பாடினார்கள்.

அதியர் குலத்தில் வந்தவர்கள் சிவபக்தி நிரம்பியவர்கள், மற்ற தெய்வங்களையும் வழிபட்டு வேண்டிய கடமைகளை ஆற்றுகிறவர்கள். வேள்வி செய்து தேவர்களுடைய அன்பைப் பெற்றவர்கள். சிவபிரானைப் பூசை செய்கையில் அப்பிரானுக்கு அருச்சனை செய்த வில்வத்தைப் பூசை முடிந்த பிறகு தம் தலையில் வைத்துக்கொள்வது ஒரு வழக்கம். அதியர்குல மன்னரில் தலைவர் அப்படிச் செய்தார். பூசை முடிந்து வெளியிலே வந்து வேறு செயல்களை ஆற்றும்பொழுதும் அவர் முடியில் அந்தக் கூவிளம் விளங்கியது. நாளடைவில் அதுவே அவருக்குரிய அடையாளக் கண்ணியாகிவிட்டது. மார்பிலே தம் குலப் பழமையை நினைவூட்டும் பனை மாலையையும் தலையிலே தம் சிவபக்திச் சிறப்பைக் காட்டும் கூவிளங் கண்ணியையும் அணிந்து வந்தார் *3. பின் வந்த அரசர்களும் இந்த வழக்கத்தையே மேற்கொண்டனர்.

இந்தக் குலத்தில் வந்த ஒரு மன்னர் தம் நாட்டில் வேளாண்மையை வளப்படுத்த எண்ணினார். தகடூருக்கு அருகில் வாய்ப்பான பேராறு ஏதும் இல்லை. ஏரிகளும் குளங்களும் இருந்தன. அவற்றால் நெற்பயிர் விளைந்தது. நிலத்துக்கு நெல்லும் கரும்பும் சிறப்பை அளிப்பவை; “நிலத்துக் கணி என்ப நெல்லும் கரும்பும்” என்று ஒரு புலவர் பாடியிருக்கிறார். அக் காலத்தில் நீர்வளம் மிக்க சோழ நாட்டிலும், பாண்டி நாட்டில் சில பகுதிகளிலும் கரும்பைப் பயிர் செய்து வந்தார்கள். தம்முடைய நாட்டிலும் நெல்லைப் போலக் கரும்பையும் கொண்டு வந்து பயிராக்கி நலம் செய்ய வேண்டுமென்று அந்த மன்னர் எண்ணினார். சோழ நாட்டுக்குத் தக்கவர்களை அனுப்பி அங்குள்ள வேளாளர்களை அழைத்து வரச் செய்தார். அவர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து கரும்பைப் பயிர் செய்யும் முறைகளைத் தெரிந்து கொண்டார். சிறந்த கரும்புக் கரணைகளைச் சோழ நாட்டிலிருந்து கொண்டுவரச் செய்து பயிர் செய்தார். அவை நன்றாக வளர்ந்தன. அதுகாறும் காணாத புதுமையாக அதியர் நாட்டில் கருப்பந் தோட்டங்கள் ஓங்கி வளர்ந்தன. இதனை ஓர் அதிசயமாகவே மக்கள் பாராட்டினார்கள். அந்த வேந்தரை, கரும்பு தந்த காவலர் என்று போற்றிப் புகழ்ந்தார்கள் *4

இந்தக் குலத்தில் தோன்றிய மன்னர்கள் வீரத்திலும் கொடையிலும் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள். கொங்கு நாட்டின் பல பகுதிகளைத் தம்முடைய ஆட்சிக்கு உட்படுத்தினார்கள். மேற்குப் பகுதியாகிய மலை நாட்டில் அவர்களுடைய அரசு பரவாவிட்டாலும் கிழக்குப் பகுதியில் அது விரிந்தது.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

  1. தொல்காப்பியம், புறத்திணையியல், 5.

2. புறநானூறு 168.

3. புறநானூறு 158.

4. புறநானூறு 99.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s