-சேக்கிழான்

பாரதம் அருளாளர்களின் ஜென்மபூமி. இமயம் முதல் குமரி வரை எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு அருளாளரின் புனிதத்தலத்தை தரிசிக்க முடியும். இந்த அருளாளர்கள் அனைத்து வகுப்பினரிலும் அவதரித்திருப்பதையும் காண முடியும்; சமுதாயத்தை ஒருங்கிணைக்க இறைவனே நடத்திய திருவிளையாடல்களின் பல கதைகளை நாம் கேட்க முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மராட்டிய மண்ணில் உதித்து பக்திப்பயிர் வளர்த்த பக்தப் பரம்பரை தான்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் தான் இந்த மகாபக்தர்களை உலகிற்கு அடையாளம் காட்டியது. அன்னிய ஆதிக்கம் வட பாரதத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது, சமுதாயத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்ட இறைவனே இவர்களை அனுப்பிவைத்தாரோ என்று தோன்றும், இவர்களது சரித்திரங்களைக் கேட்டால்.
இந்த மகாபக்தர்களின் சரிதங்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியச் செய்பவை; நம்மை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தி, ஆன்ம அனுபூதி கிடைக்கச் செய்பவை. பண்டரிபுரத்தில் அருளாட்சி புரியும் பாண்டுரங்க விட்டலனின் பக்தர்களின் சரிதத்தை அருண் சரண்யா அற்புதமாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதை கல்கி பதிப்பகம் ஓர் அற்புதமான படையலாக வெளியிட்டிருக்கிறது. கண் கவரும் வேதாவின் ஓவியங்களும், ஸ்ரீஹரியின் புகைப்படங்களும் இந்நூலுக்கு மெருகு சேர்க்கின்றன.
பண்டரிபுரத்தில் விட்டலனை எழுந்தருளச் செய்த புண்டலீகன் கதை முதல், பூனைக்குட்டிக்காக குலத்தொழிலை தியாகம் செய்த ராகாகும்பர் வரை, நூலின் ஒவ்வொரு பக்கமும் பக்திப் பிரவாகமாகப் பெருக்கெடுத்தோடுகிறது. இத்தகைய மகான்கள் பிறந்த மகத்தான பூமியிலா நாம் வாழ்கிறோம்? பல இடங்களில், படிக்கப் படிக்க நெஞ்சு விம்முகிறது.
நூலின் மற்றொரு சிறப்பு மகாபக்தர்களின் அபங்கங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கி இருப்பது. பக்த நரஹரி, உத்தவரின் மறுபிறப்பான நாமதேவர், மராத்தி இலக்கியச் சிற்பிகளுள் ஒருவரான ஞானேஸ்வரர், இசையுலகின் பிரம்மா புரந்தரதாசர், சிவாஜியின் குருநாதர்கள் சமர்த்த ராமதாசர், துக்காராம், கனிகையர் குலத்துதித்த பக்த கணோபாத்ரா உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட மகான்களின் திவ்ய சரிதமும், அவர்களுடன் விட்டலன் நிகழ்த்திய திருவிளையாடல்களும் நிறைந்த நூல் இது. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அற்புதமான புத்தகம் இது.
$$$
நூல் விவரம்:
தீராத விளையாட்டு விட்டலன்
–அருண் சரண்யா
240 பக்கங்கள், விலை: ரூ. 200.
கல்கி பதிப்பகம்,
கல்கி பில்டிங்ஸ், 47-என்.பி, ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல், சென்னை- 600 032.
போன்: 044- 4343 8844.
$$$