-தரம்பால்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அணிந்துரை
காந்திக்கு முன்பான இந்தியாவில்
அஹிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கம்
-ஜெயபிரகாஷ் நாராயணன்-

இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தவர்கள் ‘தன்னை அறிதலே மிக உயர்ந்த ஞானம்’ என்று கருதினார்கள். தன்னை அறிபவரை அனைத்தையும் அறிபவராக, அனைத்தையும் அடைபவராகக் கருதினர். தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல் இது தேசங்களுக்கும் பொருந்தும். தேசம் என்பதை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் வரையறுக்கலாம். அப்படி வரையறுப்பது எளிய விஷயம் ஒன்றும் அல்ல. எதுவாக இருந்தாலும் அதனுடைய ஆன்மாவானது வெளிப்புற அம்சங்களில் அல்ல. அந்த தேசத்தில் இருப்பவர்களின் மனதில் உள்ளார்ந்திருக்கும் உலகத்திலேயே இருக்கிறது. அந்த உள்ளார்ந்த அக உலகின் அம்சங்களில் மிக முக்கியமானது சுய அடையாளமே. ஒரு தேசத்தில் இருப்பவர்கள் தம்முடைய மற்றும் தம்முடைய முன்னோர்களின் சுய பிம்பமாக, அடையாளமாக எதைக் கருதுகிறார்களோ அதுவே மிகவும் முக்கியம்.
பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது ஏகாதிபத்திய ஆட்சியின் தேவைகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவையே நம்மை வழிநடத்தின. லோகாயதம், நல்லொழுக்கம், அறிவு ஆகியவற்றில் நாம் எல்லோரும் மிகவும் கீழானவர்கள் என்று அவர்கள் நம்மைச் சித்தரித்தனர். இந்திய தேசத்தை இப்படியாகத் திட்டமிட்டு அவமதித்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, தனது கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றை அந்த அந்நியர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான். எனவே, காலப்போக்கில் அரசியல் ஆதிக்கம் முழு வலிமை பெற்றதும் நாம் நம்மைப்பற்றி பிரிட்டிஷார் தீட்டிய இழிவான சித்திரமே நமது உண்மை உருவம் என்று ஏற்றுக்கொண்டுவிட்டோம். பிரிட்டிஷார் காட்டிய கண்ணாடியில் தெரிந்த நமது அவலமான முகமே நமது உண்மையான முகம் என்று நினைத்துவிட்டோம்.
சமஸ்கிருத இலக்கியம், இந்திய தத்துவம், கலை, அறிவியல் ஆகியவை பற்றி மேற்கத்திய அறிஞர்களில் சிலர் புகழ்ந்து சொன்ன விஷயங்கள் எதையுமே நமது சுதந்திரப் போராட்டத்துக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது கடந்த கால சாதனைகள் எல்லாம் மிகப் பெரிய அளவில் பூதாகரப்படுத்தப்பட்டு புதிதாக உருவாகி வந்த தேசிய மதிப்பீடுகளுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட்டன.
சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து சில காலம் நீடித்த பெருமித மயக்கங்களைத் தொடர்ந்து தன்னைத் தானே இழிவுபடுத்திக்கொள்ளும் சுய இழிவு மனப்பான்மை ஆரம்பமானது. குறிப்பாக மேற்குலகக் கல்வி பெற்றவர்கள் இந்தப் போக்கை முன்னெடுத்துச் சென்றனர். நவீனமயமாக்கம், அறிவியல் சிந்தனை என ஏதாவது ஒரு வழியில் இந்திய அடையாளங்கள், அம்சங்கள் ஆகியவற்றை ஓரங்கட்டினர். இந்தப் போக்கு இன்றும் முடிவுக்கு வந்துவிடவில்லை. இந்திய சமுதாயத்தில் அல்லது வரலாற்றில் இருந்த தவறுகள், தீமைகள் – இவற்றை நாம் மூடி மறைத்துவிட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் மாரில் அடித்துக்கொண்டு அழுதல், தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளுதல் போன்றவையெல்லாம் தேச நிர்மாணத்துக்குத் தேவையான மன உறுதியை, உந்துதலை ஒருபோதும் தரப் போவதில்லை. அடிமைத்தனமாக அந்நியர்களை நகலெடுப்பதும் எந்த வகையிலும் நமக்கு உதவப் போவதில்லை.
நம்முடைய இந்த துரதிர்ஷ்ட மனநிலைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நமது வரலாற்றைப் பற்றி, குறிப்பாக நமது முன்னோர்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை குறித்த போதிய புரிதல் இல்லாததுதான். நமது முன்னோர்களின், பல வகைகளில் முக்கியமான குறைபாடு, வரலாறு குறித்த தெளிவான சிந்தனை இல்லாததும் வரலாற்றுத் தரவுகளை புராணங்கள் ஆக்கும் மனச்சாய்வு கொண்டிருந்ததும்தான். இதன் விளைவாக இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நவீன வரலாற்று ஆய்வுகள் பெருமளவுக்கு முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் நமது வரலாற்று அறிவானது மிகவும் மட்டுப்பட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக சமூக வரலாற்றுப் பிரிவில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.
அதோடு நமது கடந்த காலத்தில் ஏராளமான இடைவெளிகள், இருண்ட காலங்கள் பல இருக்கின்றன. அவை பற்றி நமக்குப் பெரிதாக எதுவுமே தெரியாது. அவற்றில் முக்கியமானது மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கும் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகை, பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் ஆகியவற்றுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியாது. அந்தக் காலகட்டம் உண்மையிலேயே அரசியல்ரீதியாக நாம் பிரிந்து சிதையத் தொடங்கியிருந்த காலகட்டம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ஸ்ரீ தரம்பால் ஆய்வு செய்து தொகுத்து வெளியிட்டிருக்கும் படைப்புகள், அரசுக்கு எதிராக மகத்தான போராட்டத்தை முன்னெடுத்த எளிய மக்களைப் பற்றி நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இரும்புக் கொல்லர்கள், மேஸ்திரிகள், ஜோலகிர்கள், ஹுஜம்கள், தர்சிகள், காகர்கள், பேரர்கள் என அனைத்துப் பாட்டாளி வகுப்பினரும் ஆட்சி அதிகாரம் எல்லை மீறிச் செல்வதாக உணர்ந்து கிளர்ந்து எழுந்துவிட்டனர் என்று 1810இல் பனாரஸில் இருந்த நீதிபதி குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்த 500க்கு மேற்பட்ட சமஸ்தானங்களில் இருந்த மன்னர்கள் மேற்கொண்ட ஆட்சியைப் பற்றிச் சொல்லும்போது “இந்து அரசு என்பது சர்வாதிகாரம் மிகுந்தது. வானளாவிய அதிகாரம் கொண்டது. அதனுடைய மக்கள் அடிமைகளாக அடங்கி ஒடுங்கிக் கிடந்தனர்’ என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்நிய மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் பலர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது நிலைமை முற்றிலும் வேறாக இருந்ததைப் பார்க்க முடியும். சில நேரங்களில் மக்கள் ஒன்றுதிரண்டு திறமையற்ற அரசரைப் பதவியிலிருந்து நீக்கியதும் கூட நடந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் ஏதோ லட்சியவாதப் புனைவுகள் என்றும், நடைமுறையில் அப்படி எல்லாம் இல்லை என்றும் சொல்பவர்களும் உண்டு.
இந்து சாஸ்திரங்களின் அடிப்படையில் பார்த்தால் அரசர் என்பவர் ஒருநாளும் சர்வ அதிகாரம் பெற்றவராக இருந்திருக்கவில்லை. தர்மத்துக்குக் கட்டுப்பட்டு அவர் ஆட்சி புரிய வேண்டி இருந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் காலகாலமாக உருவாகிவந்த கடமைகள், பொறுப்புகள், சலுகைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தர்ம மதிப்பீடுகளை, சம்பந்தப்பட்ட யாரும் முறையாகப் பின்பற்றியிருக்கவில்லை. தர்ம சாஸ்திரங்களை மீறி நடந்த சர்வாதிகார மன்னர்கள் இது விதிவிலக்கு என்பது போலல்லாமல் அதுதான் வழிமுறை என்பதாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதுண்டு.
ஸ்ரீ தரம்பால் இந்த நூலில் முன்வைத்திருக்கும் விஷயங்கள் வேறுவிதமான உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன. பனாரஸ், பாட்னா, சரூண், முர்ஷிதாபாத், பகல்பூர் போன்ற பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைவீதிகளை மூடி விதிக்கப்பட்ட புதிய வரிகளை எதிர்த்து மக்கள் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கம் பற்றிய தகவல்கள் அப்போதைய பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆவணங்களில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளன.
வருடத்தைக் கொஞ்சம் 110 – 120 வருடங்களுக்கு முன்னதாக மாற்றி, வரியின் பெயரை மாற்றி வேறுசில மேலோட்டமான மாற்றங்கள் செய்து கொண்டால் போதும். 1920கள், 1930களில் ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்களில் என்ன நடந்தனவோ அவை அப்படியே அந்த நூறு வருடங்களுக்கு முன்பாக நடந்திருக்கின்றன என்று ஸ்ரீ தரம்பால் சொன்னது முற்றிலும் சரியே. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சமகாலத்தில் இப்போது நடந்த நிகழ்வுகளுக்கு இணையாகவே இருக்கின்றன.
இந்த நூலில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களைப் பார்த்தால் இந்திய வரலாற்றில் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்பட்டவர்களுக்கும் இடையில் இரு தரப்பின் உரிமைகள் பொறுப்புகள் தொடர்பான ஒரு தெளிவான புரிதல் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது. எப்போதெல்லாம் இந்தப் பாரம்பரியமான வழிமுறைகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களால் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளனவோ அப்போதெல்லாம் குடிமக்கள் அமைதியான முறையில் ஒத்துழையாமை மூலமாகத் தமது எதிர்ப்பைப் பதிய வைத்துள்ளனர். எப்போதெல்லாம் அப்படியான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறதோ, ஆட்சியாளர்கள் அதை சட்டவிரோதமாக, கலகக்குரலாகவோ, அவிசுவாசம் என்றோ எதிர்த்திருக்கவில்லை. அந்த எதிர்ப்பை எந்த வழியிலாவது அடக்கிய ஆகவேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. அந்தப் போராட்டத்தை மிகவும் சரியான வழிமுறை என்று மதித்து பிரச்னைக்கு உடனடியாக, சுமுகமான தீர்வுக்கான முயற்சியை எடுத்திருக்கிறார்கள்.
இங்கு விவரிக்கப்பட்டிருக்கும் அமைதியான மக்கள் போராட்டமானது திடீரென்று முளைத்து விடவில்லை. நன்கு நிலைபெற்ற சமூக அரசியல் பாரம்பரியத்தில் அவற்றின் வேர்கள் கடந்த காலத்தில் அழுத்தமாக ஊன்றி இருந்திருக்க வேண்டும். இஸ்லாமியர்களின் மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சியானது பலகாலம் நீடித்திருந்த நிலையிலும், 19ஆம் நூற்றாண்டிலும் இந்த அமைதியான போராட்ட வழிமுறையானது நீடித்து வந்திருப்பதைப் பார்க்கும்போது இந்தப் பழம்பெரும் பாரம்பரியத்தின் வலிமையும் முக்கியத்துவமும் நன்கு புரிய வருகிறது.
இந்த அற்புதமான பழம்பெரும் போராட்ட வழிமுறையை பிரிட்டிஷார் எப்படி துல்லியமாகத் திட்டமிட்டு அழித்தார்கள் என்பதைப் பின்வரும் பக்கங்களில் ஸ்ரீ தரம்பால் வேதனையுடன் விவரிக்கிறார். பிரிட்டிஷார் இந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்துக்கு மிகப் பெரிய தொடர்ச்சியான தடைக்கல்லாக இந்த வழிமுறையைப் பார்த்திருக்கிறார்கள். ‘அரசின் கவுரவத்தை காப்பது’, ‘பொது சமூகத்தில் அமைதியை நிலைநாட்டுவது’, ’அரசாங்கத்தின் மீது மக்கள் சமூகம் வைத்திருக்க வேண்டிய மரியாதையை தக்கவைப்பது’ ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் பார்த்ததால் இப்படியான எதிர்ப்புகளுக்கு எந்த இடமும் தரக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள்.
இந்தப் போராட்டங்களைப் பார்த்து பிரிட்டிஷார் பெருமளவுக்கு பயந்தார்கள் என்று இதுதொடர்பாக ஸ்ரீ தரம்பால் சொல்வதை நான் முழு மனதுடன் அங்கீகரிக்கிறேன். மக்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அடங்கி ஒடுங்கி இருந்தால்தான் நமக்கு மிகவும் நல்லது என்று அவர்கள் நினைத்தார்கள். இந்தப் பாதுகாப்பு உணர்வை அடைவதற்காக அவர்கள் ராணுவ பலத்தையே நம்பினார்கள். பிரிட்டிஷாரின் இந்த அணுகுமுறையே நம் நாட்டினரின் ஆன்ம பலத்தை அழித்து ஒழித்தது.
1930ல் காங்கிரஸ் செயற்குழு சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டபோது பொருளாதாரம், அரசியல், கலாசாரம், ஆன்மிகம் நான்கு தளங்களிலும் பிரிட்டிஷ் ஆட்சியினால் நம் தேசத்துக்கு ஏற்பட்ட அழிவு பற்றிக் குறிப்பிடும்போது இந்த விஷயத்தையே அது குறிப்பிட்டது. அதன் பின்னான ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26 அன்று ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்களில் இந்த விஷயமே பிரதானமாக முன்னிறுத்திப் பேசப்பட்டது. மக்களை நிராயுதபாணிகளாக ஆக்கி, அந்நிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் மூலமும் அவற்றின் கொடூரமான தாக்குதலின் மூலம் மக்கள் மனதில் எழும் போராட்டக் குணத்தை அழித்து ஒழித்தார்கள். அதுவே தேசத்தின் ஆன்ம பலத்தை அழியச் செய்தது.
இந்தப் புத்தகத்தின் சுவாரசியமும் மதிப்பு மிகுந்த முன்னுரையில் ஸ்ரீ தரம்பால், காந்திஜியின் சத்யாகிரக சிந்தனைகளின் வேர்களைப் பற்றி அலசிப் பார்த்து அதுபற்றிய புதிய ஒளிகளைப் பாய்ச்சியிருக்கிறார். காந்திஜியின் சத்யாகிரகக் கொள்கையின் அடிப்படையான அம்சமாக இருந்தது என்பது காலகாலமாக நம் தேசத்தில் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்பட்ட மக்களுக்கும் இடையில் இருந்த தொடர்புதான். அந்தத் தொடர்பு காந்திக்கும் நன்கு தெரிந்திருந்தது. காந்திஜி, தான் எழுதிய ’ஹிந்து ஸ்வராஜ்யம்’ நூலிலேயே தனது சத்யாகிரக சிந்தனைகளுக்கு நம் தேசத்தின் அந்தப் பழங்கால பாரம்பரியமே முக்கிய காரணம் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களும், அவரைப் பற்றி பிற நூல்கள் எழுதியவர்களும் அந்த சத்யாகிரகத்துக்கான வேர்களை எங்கெல்லாமோ தேடினார்களே தவிர, காந்தியடிகளின் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுத்திருக்கவில்லை.
காந்திஜியின் கூர்மையான அவதானிப்பு நீங்கலாக அந்தப் பழம்பெரும் போராட்ட வடிவத்தின் தடயங்கள் எதுவுமே இருந்திருக்கவில்லை என்பதால் ஒருவேளை இப்படி நடந்திருக்கலாம் (‘ஹிந்து ஸ்வராஜ்’ நூலில் சௌராஷ்ட்ராவில் இருக்கும் ஒரு குக்கிராமம் பற்றிக்கூட காந்திஜி விவரித்திருப்பார். அவருடைய பார்வை அவ்வளவு கூர்மையானது). அல்லது, பரந்து விரிந்த தேசம் முழுவதிலும் அப்படியான சாத்விகப் போராட்டமானது வாழ்வின் எல்லாத் தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டதற்குப் போதுமான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்திருக்கவில்லை. அல்லது ஆட்சியாளர்கள் நமக்கு நெருக்கடி தரும் செயல்களைச் செய்யும்போது அவர்களை எதிர்க்கும் மனநிலையை நாம் இழக்கத் தொடங்கி விட்டதாலோ என்னவோ, அந்தப் பழம்பெரும் ஒத்துழையாமைப் போராட்டம் பற்றி காந்தி சொன்ன சில மேலோட்டமான வாக்கியங்களை வழக்கம்போல அவர் கடந்த காலத்தை பற்றிச் சொல்லக் கூடிய லட்சியவாத, யுட்டோப்பியக் கனவு வார்த்தைகள் என்று புறமொதுக்கிவிட்டார்கள் போலிருக்கிறது.
காந்திஜி ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்ல. எனினும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களைவிட மிக அழுத்தமான உள்ளொளி கொண்டவர். மக்கள் தலைவராக அவர் அபாரமான வெற்றி பெற்றதற்கு இந்த உள்ளுணர்வுதான் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது.
சுதந்திரத்துக்குப் பிந்தைய, ஜனநாயக இந்தியாவில் சத்யாகிரகத்துக்கு இருக்கும் இடம் பற்றிய ஸ்ரீ தரம்பாலின் சிந்தனைகளும் மிகவும் முக்கியமானதும் சுவாரசியமானதும் ஆகும்.
சுதந்திர இந்தியாவில் இருக்கும் ஆட்சியைப் பற்றி அடிக்கடிச் சொல்லப்படும் விமர்சனம் என்னவென்றால், காலனிய சக்திகள் பொருளாதாரச் சுரண்டலுக்கும் அதிருப்திகளை ஒடுக்குவதற்கும் எந்த அதிகாரவர்க்கத்தைப் பின்பற்றினார்களோ அதுவே எந்தவித மாற்றமும் இல்லாமல் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த அதிகார வர்க்கத்தின் மிக மோசமான எதிர்பார்ப்புகளில் ஒன்று என்னவென்றால் ‘மக்களின் முதல் கடமை அடங்கி ஒடுங்கி நடப்பதுதான்’. அதன் பிறகே எதிர்ப்பை வெளிப்படுத்தலாம் என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிந்தனையே இப்போது நிலவுகிறது.
அதோடு இப்போது இருக்கும் அதிகார வர்க்கம் அந்நிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அல்ல; ஜனநாயகரீதியாக நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய அரசுதான் என்ற வாதமும் அந்த அதிகார வர்க்கத்தின் தவறுகளை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே எப்போதாவது அரசை எதிர்த்து யாராவது உண்ணாவிரதம் இருந்தாலோ, ஒத்துழைக்க மறுத்தாலோ வேலை செய்யாமல் இருந்தாலோ அவர்கள் அந்தப் போராட்டத்தைக் கைவிடும் வரை அல்லது அரசால் அடக்கி ஒடுக்கப்படும் வரை அரசு எந்திரம் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை. பிரச்னையைத் தீர்க்க எந்த நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இதன் விளைவாக பாதிக்கப்பட்ட மக்கள் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். அதன் பிறகு அரசாங்கம் அவர்களுக்கு அடிபணிகிறது; சமரசத்துக்கு முன்வருகிறது.
சத்யாகிரக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு சிற்சில அரசியல் ஆதாயங்கள் பெறப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் மட்டும், மக்கள் தங்களுக்கு எதிரானதாகவும் அதிருப்திகரமாகவும் இருக்கும் விஷயங்களை எதிர்க்கவும் அமைதியான முறையில் போராடவும் அனுமதித்திருந்தால் கடந்த 25 ஆண்டுகளில் மக்களின் போராட்டச் செயல்பாடுகளிலும் சில நியாயமான கட்டுப்பாடுகளை, ஒழுக்கங்களைக் கொண்டுவந்திருக்கும். அதேபோல அரசாங்கத்தின் அணுகுமுறையிலும் நியாயமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும். ஜனநாயக அமைப்பில் மக்கள் விரோத அரசுகளை அடுத்துவரும் தேர்தலில் அப்புறப்படுத்தும் அதிகாரம் மக்கள் வசமே உண்டு என்று பொதுவாகச் சொல்லப்படும் விஷயத்துக்கு ஆச்சார்ய கிருபளானி ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீ தரம்பால் அதை முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்:
எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அடுத்த தேர்தல் வரும் வரையில் அல்லது ஒரு ஆட்சியை தூக்கி எறியும் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அந்தப் பிரச்னையானது உடனே தீர்த்தாக வேண்டிய வாழ்வா சாவா பிரச்னையாக இருக்கக்கூடும். சத்தியாகிரக வழியில் போராடும் உரிமையை மறுப்பது என்பது நீண்ட காலத்துக்கு, சர்வாதிகார சக்திக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அடங்கி ஒடுங்கியிருக்க வேண்டும் என்று சொல்வதற்கு இணையானது.
-ஜெயபிரகாஷ் நாராயண்
(தொடர்கிறது)
$$$