செல்வம்-I

-மகாகவி பாரதி

ரஷ்யாவில் நிகழ்ந்த பொதுவுடைமைப் புரட்சி குறித்த மகாகவி பாரதியின் அதியற்புதமான கட்டுரை இது. ரஷ்யாவில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சியால் இந்தியாவில் ஏன் வளர முடியவில்லை என்பதையும் கேள்வியாகக் கேட்டு 105 ஆண்டுகளுக்கு முன்னர் (1907) அவர் எழுதிய கட்டுரை இது...

(28 நவம்பர் 1917)


ருஷ்யாவில் ‘சோஷலிஸ்ட்’ கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிவிடக் கூடுமென்று தோன்றுகிறது. சோஷலிஸ்ட் கட்சியென்பதைத் தமிழில் ஸமத்துவக்கட்சி என்று சொல்லலாம். அதுகூட சரியான மொழிபெயர்ப்பாகாது. சொத்து விபாகம் செய்திருப்பதில் இப்போது சிலர் செல்வரென்றும் பலர் ஏழைகளென்றும் ஏற்பட்டிருப்பதை மாற்றி உலகத்திலுள்ள சொத்தை அதாவது பூமியை உலகத்து ஜனங்களுக்கு ஸமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், தொழில் விஷயத்தில் இப்போது போட்டிமுறை இருப்பதை மாற்றிக் கூடியுழைக்கும் முறையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் மேற்படி கட்சியாருடைய முக்கியமான கோட்பாடு. ஆதலால் இந்தக் கட்சிக்கு ஐக்கியக்கட்சி என்று பெயர் சொல்லுவது பொருந்தும் என்று தோன்றுகிறது. இதை ‘பேதக் கட்சி’ என்று சொல்வாருமுளர்.

இந்தக் கட்சி இந்தியாவில் ஏன் இதுவரை ஏற்பட்டு விருத்தியடையவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். முதலாவது காரணம் ஹிந்து ஜன ஸமூக அமைப்பில் ஐரோப்பாவில் இருப்பதுபோலவே அத்தனை அதிகமான தார தம்மியம் இல்லை. முதலாளி, தொழிலாளி, செல்வன், ஏழை இவர்களுக்கிடையே ஐரோப்பாவில் உள்ள பிரிவும் விரோதமும் நம் தேசத்தில் இல்லை. ஏழைகளை அங்குள்ள செல்வர் அவமதிப்பதுபோலே நமது நாட்டுச் செல்வர் அவமதிப்பது கிடையாது. ஏழைகளுக்குத் தானம் கொடுப்பது என்ற வழக்கம் நமது தேசத்தில் இருக்குமளவு அந்தக் கண்டத்தில் கிடையாது. லண்டன் நகரத்தில் பிச்சைக்காரனைப் போலீஸ்காரன் பிடித்துக்கொண்டு போவான். பிச்சைக் குற்றத்திற்காக மாஜிஸ்டிரேட் தண்டனை விதிப்பார். நமது தேசத்தில் ‘தேஹி’ என்று கேட்டவனுக்கு ‘நாஸ்தி’ என்று சொல்கிறவனை எல்லோரும் சண்டாளன் என்று தூஷிப்பார்கள்.

இங்கிலீஷ் நாகரீகம் நமது தேசத்தில் நுழையத் தொடங்கியதிலிருந்து, இங்கும் சில மூடர் பிச்சைக்காரரை வேட்டையாடுவது புத்திக் கூர்மைக்கு அடையாளமென்று நினைக்கிறார்கள். பிச்சைக்காரன் வந்தால் “ஏண்டா தடி போலிருக்கிறாயே: பிச்சை கேட்க ஏன் வந்தாய்? உழைத்து ஜீவனம் பண்ணு’’ என்று வைது துரத்துவார்கள். “உழைத்து ஜீவனம் பண்ணு’’ என்று வாயினால் சொல்லி விடுதல் எளிது. உழைக்கத் தயாராக இருந்தாலும், வேலையகப்படாமல் எத்தனை லக்ஷலக்ஷம் பேர் கஷ்டப்படுகிறார்கள் என்ற விஷயம் மேற்படி நாகரீக வேட்டை நாய்களுக்குத் தெரியாது.

சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். இதை யெல்லாம் நான் மறுக்கவில்லை. ஆனாலும், பிச்சை யென்று கேட்டவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை; வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை.

சோம்பேறி! பிச்சைக்காரன் மாத்திரம்தானா சோம்பேறி? பணம் வைத்துக் கொண்டு வயிறு நிறையத் தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளை சீர்திருத்தப் போவது விசேஷம். பொறாமையும் தன் வயிறு நிரப்பிப் பிற வயிற்றைக் கவனியாதிருத்தலும், திருட்டும். கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வர் செய்யும் அநியாயம் அதிகம். இதைக் கருதியே ப்ரூதோம் என்ற பிரெஞ்சு தேசத்து வித்துவான் ‘உடைமையாவது’ களவு என்றார்.

ஏழைகளே இல்லாமற் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும் கொள்ளை யிடுவதிலும் உபயோகப் படுத்துகிறார்கள். ஐரோப்பிய யந்திரத் தொழிற்சாலைகள் ஏற்பட்டதிலிருந்து ஏழைகளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கின்றனவே யன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை.

ஏழைகளைக் கவனியாமல் இருப்பது பெரிய ஆபத்தாக முடியும். கிறிஸ்துவ வேதத்தில் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் முதல் மனிதனகிய ஆதாம் என்பவனுக்கும் அவனுடைய பத்தினியாகிய ஏவாளுக்கும் இரண்டு புத்திரர் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. மூத்த குமாரன் பெயர் காயீன். இளையவன் பெயர் ஆபேல். காயீன் ஆபேலிடம் விரோதமாய் ஆபேலைக் கொன்று விட்டானாம், அப்போது கடவுள் காயீனை நோக்கி- ‘உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?’ என்று கேட்டாராம். அதற்குக் காயீன் ‘எனக்குத் தெரியாது. சகோதரனுக்கு நான் காவலாளியோ?’ என்றானாம்.

அதுபோல உலகத்துக்குச் செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கிட்டெடுத்துக் கொண்டு பெரும் பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேட்டால், “அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழையாயிருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா?’’ என்று கேட்கிறார்கள். உலகம் மாறுகிறது. ஏழைகளுக்கு நியாயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாளிகள் ஒரு சபை கூடி அந்தக் கிராமத்திலுள்ள ஏழைகளின் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய யோசனைகள் பண்ணி நிறைவேற்ற வேண்டும். அன்பினால் உலகத்தின் துயரங்களை எளிதாக மாற்றிவிடலாம். அங்ஙனம் செய்யாமல் அஜாக்கிரதையாக இருந்தால், ஐரோப்பாவைப்போல் இங்கும், ஏழை செல்வர் என்ற பிரிவு பலமடைந்து விரோதம் முற்றி அங்கு ஜனக்கட்டு சிதறும் நிலைமையிலிருப்பது போல், இங்கும் ஜனசமூஹம் சிதறி மஹத்தான விபத்துக்கள் நேரிட இடமுண்டாகும்.

பொருளாளிகள் இடைவிடாத உழைப்பையும், அன்பையும், ஸமத்துவ நினைப்பையும் கைக்கொண்டால், உலகத்தில் அநியாயமாக உத்பாதங்கள் நேரிட்டு உலகமழியாமல் காப்பாற்ற முடியும். பராசக்தி மனுஷ்ய ஜாதியை அன்பிலும் ஸமத்துவத்திலும் சேர்த்து நலம் செய்க.

  • சுதேசமித்திரன் (28.11.1917)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s