-மு.நாகமணி
தினகரன் நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு.மு.நாகமணி, சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது….

சுவாமி விவேகானந்தர் எடுத்துரைத்த அனைத்துக் கருத்துகளும் ஆணித்தரமானவை; விழுந்து கிடக்கும் மனங்களை எழுந்து நடக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவை. அவர் எடுத்துரைத்த கருத்துகள் ஏராளம். இந்தியாவைப் பற்றி அவர் கூறிய நிதர்சனமான வாக்கியங்கள் அத்தனையும் செப்பேட்டில் எழுதப்பட வேண்டியவை.
இந்தியாவில் எத்தனை எத்தனை சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தம்மைச் சந்தித்த மக்களிடமும் அறிஞர்களிடமும் சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களிடமும் எடுத்துரைத்தவர் விவேகானந்தர்.விவேகானந்தரின் சிந்தனைகள் இதயத்தைத் தொடும்போது, நமது இதயத்தில் படிந்திருக்கும் துருப்பிடித்த சிந்தனைகளைத் துடைத்துவிடும். நாட்டுப்பற்று பற்றி அவர் கூறும் வார்த்தைகள் நாட்டுப்பற்றை மட்டுமல்ல, சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் தன்மை கொண்ட உன்னதமான கருத்துகள் பொதிந்தவை.நாட்டுப்பற்று பற்றிய விவேகானந்தரின் பார்வை இதுதான்:
‘நாட்டுப்பற்று, நாட்டுப்பற்று என்கிறார்களே, உண்மையில் அது என்ன? கண்மூடித்தனமான நம்பிக்கையா? உணர்ச்சிப் பெருக்கா? நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற பேரார்வம் தான் உண்மையான நாட்டுப்பற்று. இந்தியா முழுவதையும் பார்த்துவிட்டேன், எங்கு பார்த்தாலும் அறியாமையும், துன்பமும் ஒழுக்கக் கேடுகளும் தான் நான் கண்டதெல்லாம். என் உள்ளம் பற்றி எரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். கஷ்டப்படுபவர்களைப் பார்த்து, ‘அவர்களின் தீவினை அது. அதனால், கஷ்டப்படுகிறார்கள்’ என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள் சிலர். தயவுசெய்து அப்படி பேசாதீர்கள்! கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால், அதிலிருந்து விடுவிப்பது நமது கர்மம். கடவுளைக் காண வேண்டுமானால், மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால், பட்டினியால் பரிதவிக்கின்ற லட்சோபலட்சம் தரித்திர நாராயணருக்கு சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான நாட்டுப்பற்று’
-என்று கூறி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டும் என்பதை முன்பே உணர்த்தியவர் விவேகானந்தர்.
இந்திய தேசத்தில் இப்படி மிகப்பெரிய சீர்திருத்தங்களை, மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமானால், அது இளைஞர்களால் தான் முடியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் அவர். இளைஞர்களிடம் விவேகானந்தர் கொண்டிருந்த நம்பிக்கையின் பலம் அளவிட முடியாதது. அதனால் தான் அவர் விடுத்த அறைகூவல்களில் இளைஞர்களுக்கான முழக்கங்கள் பெரும்பான்மையாக இருந்தன.
‘இளைஞர்களே! என்னுடைய நம்பிக்கை உங்களிடம் தான் உள்ளது. தாய்த்திருநாட்டின் அறைகூவலுக்கு செவிசாய்ப்பீர்களா? உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்துக்கிடக்கிறது என்பேன். எதற்கும் கலங்காத நம்பிக்கை, எதற்கும் தளராத தன்னம்பிக்கை வேண்டும். சிறுவனாக இருந்தபோது என்னிடம் அத்தகைய தன்னம்பிக்கை இருந்தது. உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களிடத்தில் நம்பிக்கை வேண்டும். அளப்பரிய ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிலும் அடங்கிக் கிடக்கிறது என்பதில், உங்கள் முயற்சியால் இந்தியா மறுமலர்ச்சி பெறும், புதிய இந்தியா உருவாகிடும் என்பதில் உங்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை வேண்டும்! அப்படி எழுந்து நீங்கள் செயல்படுவீர்களானால், அப்போது நினைத்துப் பாருங்கள்! உலக நாடுகளெல்லாம் அவற்றின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் நாம் சென்று, உலா வருவோம். உலக நாடுகளிலே அவற்றை உருவாக்கும் பலவகை ஆக்க சக்திகளுக்கு, ஆற்றல்களுக்கு நம் தத்துவக் கருத்துகள் துணையாக இருந்து உதவி செய்யப்போவதை விரைவிலேயே காண்போம். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்துவரும் மனித இனத்தின் வாழ்க்கையிலும் இந்த சீரிய கருத்துகள் இடம்பெற வேண்டும். இதை சாதிப்பதற்கு இடையறாது பாடுபட வேண்டும். அதற்காக உங்களைப் போன்ற வீரமும் தீரமும் மிக்க இளைஞர்கள் இப்போது எனக்குத் தேவை! இளைஞர்களே! விழித்திருங்கள்! உலகம் உங்களை இருகரம் நீட்டி அழைக்கிறது. ஊக்கம் உங்கள் ரத்தத்தில் கிளர்ந்தெழ எழுவீர்களா? ஏழை என்றோ, நண்பர்கள் யாரும் இல்லை என்றோ நினைத்து வருந்த வேண்டாம். பணமா மனிதனைப் படைக்கிறது? இதுவரை அப்படி யாரையாவது அப்படி கண்டதுண்டா? மனிதனல்லவா செல்வத்தை ஆக்குகிறான். இந்த உலகம் அனைத்தும் மனித சக்தியால் உருவாகியிருக்கிறது! ஊக்க உணர்வினால் உருவாகியிருக்கிறது!’
-என்று இளைஞர்களின் மனதில் வலிமையை விதைக்கும் எழுச்சிமிக்க சிந்தனைகளை வேரூன்றச் செய்தவர் விவேகானந்தர். அதனால்தான் இந்தியாவின் எந்த மூலைமுடுக்கிலும் இளைஞர்கள் சமுதாயத்தைப் பற்றிப் பேசும் யாராக இருந்தாலும் விவேகானந்தரை நினைவுகொள்ளாமல், மேற்கோள் காட்டாமல் இருக்க முடியாது.
வலிமையின் அவசியத்தையும் இளைஞர்களுக்கு மனதில் பசுமரத்தாணிபோல் பதித்திட எப்போதும் அவர் போதித்து வந்தார்.
‘வலிமையோடு இருங்கள்; மூடக்கொள்கைகளை உதறித்தள்ளுங்கள். வலிமை, அளவற்ற வலிமை – இதுவே நமக்கு இப்போது தேவை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இரும்பு போன்ற தசைகளும், எஃகு போன்ற நரம்புகளும், எதனாலும் தடுக்க முடியாத வஜ்ராயுதம் போன்ற அளவற்ற மனவலிமையும் கொண்டவர்களே நம் நாட்டுக்குத் தேவை. இந்த, அண்டசராசரத்தின் அந்தரங்க ரகசியங்களை எல்லாம் ஊடுருவி ஆழ்ந்து அறியக்கூடிய மனவலிமை, ஆழமான கடலின் அடித்தளத்துக்குப் போகவேண்டி இருந்தாலும் எடுத்த காரியத்தை எவ்வாறேனும் முடிக்கும் வலிமை நமக்கு இப்போது வேண்டும். உணவுமுறை, வாழ்க்கைமுறை, எண்ணம், மொழி ஆகிய அனைத்தினாலும் ஆற்றல் பொங்கித் ததும்பி நிரம்பி வழிய வேண்டும். நீ உன் உடலையும் வலிமை உள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் அவ்விதமே செய்யும்படி சொல்லித்தர வேண்டும். இப்போதும்கூட நான் அன்றாடம் தோள்களை வலிமையாக்கும் கர்லாக்கட்டைகளைக் கொண்டு உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கவில்லையா!’
– என்று உத்வேகம் அளிக்கும் வீரம் செறிந்த கருத்துகளை இளைஞர்கள் உள்ளத்தில் விதைத்தார்.
ஆதலால் எதிர்காலம் செம்மையாக, இந்தியாவின் கலாசாரம் பண்பாடு அழிந்திடமால் காத்திட, விவேகானந்தரின் 150 -வது ஜெயந்தி விழா கொண்டாடப்படும் இந்த ஆண்டில் (2013) இன்றைய இளைஞர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்திடுங்கள். இன்று நீங்கள் திருத்தும், திருத்திக்கொள்ளும் விஷயம்தான் நாளை உங்கள் சந்ததிகளுக்கு நிறைவான நிம்மதியான வாழ்வளிக்கும் என்பதை மறந்திடாதீர்கள்.
$$$