-கவியரசு கண்ணதாசன்
திரு. கவியரசு கண்ணதாசன் (1927- 1981), மகாகவி பாரதிக்குப் பிறகு வந்த, உத்வேகமூட்டும் தமிழ்க் கவிஞர்; திரைப்பாடல்களுக்கு இலக்கிய மரியாதையை ஏற்படுத்தியவர். சுவாமி விவேகானந்தர் மீதான கவியரசரின் இனிய கவிதை இது…

இருள்வழி உலகம் சென்றே
இயல்வழி மறந்த நாளில்
பொருள்வழி மனிதர் உள்ளம்
புகைபடக் கிடந்த நாளில்
மருள்விழி மான்கள் போல
மனிதர்கள் நடந்த நாளில்
அருள்வழி விவேகா னந்தன்
அறமெனப் பிறந்தான் மாதோ! (1)
.
மந்தைகள் பறவைக் கூட்டம்
வாழ்வது போலே வாழ்ந்தார்
சந்தையில் இதயம் விற்கும்
சரித்திரம் படைத்தார் நாட்டில்
இந்துவென் றொருவன் சாற்றி
இயற்பெரும் தருமங் கூறி
சந்திரம் போலே வாழ்ந்த
சரித்திரம் விவேகா னந்தன்! (2)
.
தானிடர்ப் பாடும்போ தெல்லாம்
தாயகம் ஒருவன் நல்கும்
மானிடர் குலத்தில் இந்த
மாதவம் இயற்கைச் செல்வம்
ஊனிடர்ப் படுவ தோரா(து)
உயிரிடர்ப் படுவ தோர்ந்த
வானிடைத் தெய்வம் போன்றான்
மண்ணிடை விவேகானந்தன்! (3)
.
- நன்றி: ஸ்ரீ மீனாட்சி மலர் – 2010
$$$