-மகாகவி பாரதி

(25 ஆகஸ்டு 1921)
மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை;
கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு.
கீர்த்தியடைந்தால், மஹான் ரவீந்திரரைப் போலே அடைய வேண்டும்.
ஜெர்மனி தேசம் இன்றைக்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வித்யா ராஜதானியாக விளங்குகிறது. ஜெர்மனியில் நமது பாரத கவீந்திரராகிய ரவீந்திரருக்கு நடத்தப்பட்ட உபசாரங்களெல்லாம் அவருக்குச் சேரமாட்டா. பாரத மாதாவின் பாத கமலங்களுக்கே சேரும். ஜெர்மனியில் உபசாரம் நடந்த மாத்திரத்திலே, அதைப் பின்பற்றி மற்ற முக்கியமான ஐரோப்பிய தேசங்களெல்லாம் அவருக்குப் பூஜை நடத்துமென்பது சொல்லாமலே விளங்கும். அங்ஙனமே நடத்தியுமிருக்கின்றன என்பதைக் கீழே நன்கு விவரணம் புரிவோம்.
1921-ஆம் வருஷம், மே மாஸம், 21-ந் தேதியன்று ‘ஹம்புர் கெர் ஜெய்துங்க’ என்ற பத்திரிகையில் ஒருவர் எழுதியிருக்கும் நிருபத்தில் ஸ்ரீமான் டாகுரைப் பற்றிப் பின்வரும் வசனங்கள் கவனிக்கத்தக்கன : “ஸ்ரீமான் ரவீந்திரநாத டாகுர் ஸபைக்குள் வந்து பிரவேசித்த மாத்திரத்திலே எங்கள் அறிவுக்கெட்டாத ஒரு சக்தி வந்து புகுந்தது போலிருந்தது. இந்த மனிதனுடைய வாழ்க்கையில் ஒற்றை க்ஷணமாவது இவர் எல்லையில்லாத ஜகத்துடன் லயப்பட்டு நில்லாத க்ஷணம் கிடையாதென்பது தெளிவாகப் புலப்பட்டது. அவருடைய ஆரம்ப வசனங்களே மிகவும் வியக்கத்தக்கனவாக இருந்தன. கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் நிகழ்ந்திருக்கும் ஸந்திப்பே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஸம்பவமென்று ரவீந்திரர் தம்முடைய முதல் வாக்கியமாகக் கூறினார். ஆசியா ஐரோப்பியாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய உண்மைகள், ஆசியா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய சக்திகள் பல இருக்கின்றன என்பதை ரவிந்த்ரர் மறுக்கவில்லை. இதனை மேற்றிசை உபந்நியாஸங்களிடையே அவர் பன்முறை அங்கீகாரம் செய்திருக்கிறார், இந்தியாவுக்கு வந்த பின்னர் சில ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர்களுக்குப் பேரானந்தம் விளையும்படி மிகவும் அழுத்தமான பாஷையில் வற்புறுத்தியிருக்கிறார்.
ஆனால், இஃதன்று அவருடைய முக்கியோபதேசம். நாம் மேற்றிசையாரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களைக் காட்டிலும், அவர்கள் நம்மிடம் கற்றுக் கொள்ளவேண்டிய அம்சங்கள் அதிகமென்பதே அவருடைய மதம். ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஒற்றுமைப்படுத்தினாலன்றி, உலகத்தில் யுத்தங்கள் நிற்கப் போவதில்லை. ஆசியாவும் ஐரோப்பாவும் ஸமத்துவம், ஸஹோதரத்துவம், அன்பு என்ற தளைகளாலே கட்டப்பட்டாலன்றி உலகத்தில் ஸமாதானத்துக்கிடமில்லை. ஸமாதானமே யில்லாமல், மனிதர் பரஸ்பரம் மிருகங்களைப் போலே கொலை செய்து கொண்டு வருமளவும், மனிதருக்குள்ளே நாகரிக வளர்ச் சியைப் பற்றிப் பேசுதல் வெற்றுரையேயாகுமென்று கூறி விடுக்க. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இங்ஙனம் ஒற்றுமைப் படுத்துதற்குரிய பல புதிய உண்மைகளையும் அறங்களையும், தம்முடைய அற்புதமான நூல்களாலும் உபந்நியாஸங்களாலும் தெளிவுபடுத்தி மஹான் டாகுர் இந்த பூமண்டலத்தையே தமக்குக் கடன்படுமாறு செய்து விட்டார். இதனை ஜெர்மனி முற்றிலும் நன்றாக உணர்ந்து கொண்டு, அதன் பொருட்டாக நம் ரவீந்த்ரரிடம் அளவிறந்த மதிப்புச் செலுத்துவதுமன்றி அபாரமான நன்றியும் செலுத்துகிறது.
தன் பொருட்டாகச் சேகரிக்கப்படும் கீர்த்தியொரு கீர்த்தியாகுமா? ஒரு தேச முழுமைக்கும் கீர்த்தி சேகரித்துக் கொடுப்போனுடைய புகழே புகழ். ரவீந்த்ரநாதர் இந்தியாவை பூலோக குருவென்று பூமண்டலத்தார் கண்முன்னே நிலைநாட்டிக் கொடுத்தார். அவருடைய திருவடி மலர்கள் வாழ்க.
இந்தியாவின் ஞானோபதேசமாகிய அமிர்தத்துக்கு ஐரோப்பாவில் உயர்ந்த தரத்து மேதாவிகள் எத்தனை வேட்கையுடன் காத்திருந்தனரென்பது மேலே கூறிய ஆஸ்திரிய நிருபரின் கடிதத்திலே மற்றொரு பகுதியில் பின்வரும் வசனத்தாலே விளக்கப்படுகின்றது :- “இந்த நூற்றாண்டின் சிதறுபட்ட குழந்தைகளாகிய நாம் (ஐரோப்பியர்) இப்போது ஒற்றுமையை நாடித் தவிப்பது போல் எப்போதும் தவித்தது கிடையாது. நரகவாதனைப் படுகிற நாம் இன்றும் எதிர்காலத்தில் இந்த மண்மீது தேவலோக அனுபவங்களெய்துவோம் என்று கனவுகள் காண்பதை விடவில்லை. இப்படியிருந்த எங்கள் முன்னே மற்றொரு லோகத்திலிருந்தொரு மனிதன் வந்தது போலே டாகுர் வந்தார். அவரை நல்வரவு கூறி உபசரிப்பதற்கு இப்போது நாம் தகுதி பெற்றிருப்பது போல் இதுவரை எப்போதுமிருந்ததில்லை. இப்போது ஆயத்தமாக இருப்பது போல், இதுவரை எப்போதும் ஆயத்தமாக இருந்தது கிடையாது. இஃது நேற்று அவருக்கு நடந்த உபசாரங்களாலே நன்கு விளங்கிற்று’’ என்று அந் நிருபர் கூறுகிறார்.
இனி பிரான்ஸ் முதலிய மற்ற தேசங்களில் இந்தக் கவீசுவரருக்கு நடந்த உபசாரங்களைப் பற்றிப் பேசு முன்னர், இவர் இந்தியாவின் எந்த உண்மையைத் தெரிவித்தபடியாலே இங்ஙனம் பாரத பூமிக்கு பூலோக குருத்தன்மை ஏற்படுத்திக் கொடுக்க வல்லோர் ஆயினர் என்பதைச் சற்றே ஆராய்ச்சி புரிவோம்:-
அஃது பழைய வேத உண்மை; எல்லாப் பொருள்களும் ஒரே வஸ்துவாகக் காண்பவன் ஒருவனுக்கு மருட்சி யேது? துயரமேது? எல்லாம் ஒரே பொருளென்று கண்டவன் எதனிடத்தும் கூச்சமேனும், வெறுப்பேனும், அச்சமேனும் எய்தமாட்டான். அவன் எல்லாப் பொருள்களிடத்தும் அன்பும், ஆதரவும், ஸந்துஷ்டியும், பக்தியும் செலுத்துவான். எல்லாப் பொருளிலும் திருப்தி பெறுவோன் எப்போதும் திருப்தியாயிருப்பான். இங்ஙனம் மாறாத சந்தோஷ நிலையே முக்தி நிலை என்றும் அமரபதமென்றும் கூறப்படுவது. இதனை மனிதன் அப்யாஸத்தாலும் நம்பிக்கையாலும் இந்த உலகத்தில் எய்திவிட முடியும். அஃதே வேத ரஹஸ்யம்.
இந்த ஆத்ம ஐக்யமான பரம தத்துவத்தை மிக இனிய தெளிந்த வசனங்களாலே ஐரோப்பாவுக்கு எடுத்துக் கூறியது பற்றியே ரவீந்த்ர கவிச்சக்ரவர்த்திக்கு ஐரோப்பா இங்ஙனம் அற்புத வழிபாடு செலுத்தியது.
- சுதேசமித்திரன் (25.08.1921)
$$$