-கவிக்கோ ஞானச்செல்வன்
திரு. கவிக்கோ ஞானச்செல்வன், தமிழகம் அறிந்த புலவர், சென்னையில் வசிக்கிறார்; தமிழாசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்; சிறந்த எழுத்தாளர். ‘பாரதி வாழ்கிறார், நீங்களும் கவிஞராகலாம், அர்த்தமுள்ள அரங்குகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தினமணிக்கதிரில் வெளியான ‘பிழையின்றித் தமிழ் எழுதுவோம்’ தொடர் தமிழ்மொழி மீதான இவரது பற்றை வெளிப்படுத்தும். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது….

சமயம் என்ற சொல் ‘பக்குவப்பட்டது’ என்னும் பொருளை உடையது. உணவைப் பக்குவப்படுத்துவதை சமையல் என்கிறோம். மனிதன், மனிதனாக வாழ்வதற்கு அவனைத் தகுதியாக்குவதே சமயம். எந்த உயிரிடத்தும் அன்பும், எவர் மீதும் வேற்றுமை காட்டாத – வெறுப்பற்ற பண்பும் தருவது சமயம்.
விலங்கு நிலை, மனிதம், தெய்வீகம் என்பவை படிநிலை வளர்ச்சிகள். பெறவரும் மானிடப் பிறப்பெடுத்த எவரும் தம்மினும் கீழான விலங்கைப் போல் இழிவுறாது, மனிதத்தின் மேலான தெய்வீகம் எய்துவதை நோக்கமாகக் கொள்ளுதல் வேண்டும். அந்த நோக்கத்தை எய்திடவே சமயம் உறுதுணை செய்கிறது.
‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்பு மின்’ என்பது சங்கப் பாடல்வரி. இவ்வாறே தெய்வமாக உயர முடிய வில்லையாயினும், முழுமையான மனிதனாக முற்பட வேண்டும். அத்தகைய விழுமிய மனித வாழ்வை நடத்திட விவேகானந்தம் வழிகாட்டுகிறது.
உலக அரங்கில் பாரத பூமியின் ஆன்மிக மேன்மையை – விழுப்பத்தை ஓங்கி உயர்த்திக் காட்டியவர் வீரமுரசு விவேகானந்தர். வெறும் சடங்குகளை அவர் ஒருபோதும் சமயத்தின் சாரமாக ஏற்றதில்லை. மனிதர்கள் ஒருவரோடொருவர் அன்பும் நேயமும் அக்கறையும், பிணைப்பும் கொண்டு வாழ்தலே விவேகானந்தம்.
பொய் மூடச் சாத்திரங்களை வள்ளலாரைப் போலவே மறுத்து வெறுத்தவர் விவேகானந்தர். தூய அன்பும் தன்னலமற்ற தொண்டும் பிறர் துன்பம் துடைத்திடுதலும், ஏழை எளியவர், அல்லற்படுவோர் துயர் போக்க முயல்தலும் கொண்டவன் ஆன்மிகன். ஆன்மிக ஞானம் எய்திடவிட்டால் அனைத்தும் எய்திடலாம். இந்தியா நிகரற்ற ஆன்ம ஒளியை உலகிற்கே அளிக்கும் என்னும் நம்பிக்கை ‘ஞானம் வந்திடில் வேறென்ன வேண்டும்?’
விவேகானந்தர், ‘தெய்வீகச் சிந்தனைகள் என்று தான் சொல்வது மேன்மை பொருந்திய சிறந்த தெய்வீகத் தத்துவங்கள் மற்றும் கொள்கைகளேயன்றி, பல நூற்றாண்டுகளாக நாம் மார்போடு தழுவிக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை அல்ல’ என்று தெளிவாக எச்சரித்துள்ளார். மேலும், ‘இத்தகைய மூட நம்பிக்கைகளை நாம் நமது தேசத்திலிருந்தே வேரறுக்க வேண்டும் என்பதோடு அவை மீண்டும் தலைதூக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்’ என்கிறார்.
இந்தியா விழிப்படைய வேண்டும் என்று பல முறை எழுதியும் பேசியும் இருக்கிறார். எத்தகைய விழிப்பு அது? தூங்கிக் கொண்டிருப்பவர் விழித்துக்கொள்வது போலவா? இல்லை, இமாலயத்திலிருந்து வீசும் இனிய காற்றாக, நாம் நினைத்துக் கொண்டிருக்கும் – இறந்துபோனதாக எண்ணிக் கொண்டிருக்கும் எலும்புகளுக்குள்ளும் சதைகளுக்குள்ளும் பரவி நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் சோம்பேறித்தனத்தை விரட்டியடிப்பதாக அது அமைய வேண்டும்.
“உங்களுக்குள் இருக்கும் சக்தியை பசி, தூக்கம், தாகம், குளிர் வெப்பம் அனைத்தையும் தாங்கக் கூடிய தெய்வீக சக்தியைத் தட்டியெழுப்புங்கள். மகத்தான செயல்கள் அனைத்தும் தியாகத்தினால் செய்யப்பட்டவையே. உங்களுடைய புகழ், பணம், ஆடம்பரங்கள் அனைத்தையும் துறந்துவிட்டு லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கைக் கடலைக் கடப்பதற்குப் பாலமாகச் செயற்படுங்கள். ஜாதி, மதம், வர்ணங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அத்தனை வருணங்களையும் திரட்டி, வெண்மையை உருவாக்குங்கள். வெண்மை அன்பின் அடையாளம்”.
‘எத்துனையும் பேதமுறாத எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்’ எவரோ அவர் மனம்தான் இறைவனின் இருப்பிடம் என்று வள்ளலாரும், “நெஞ்சகமே கோவில் நிறைவே சுகந்தம் அன்பே மஞ்சை நீர்” என்று தாயுமானவரும் அருளிய வரிகள் நம் நினைவில் எழுகின்றன.
நம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முதலில் களைய வேண்டும். நமது பொய்முகங்களை நாம் கழற்றிவிட வேண்டும். இறைவன் எங்கும் இருக்கிறார்; இயற்கை அழகு அனைத்திலும், இயற்கையின் மேன்மை அனைத்திலும் இறைவன் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

இயற்கைக்கு மாறான எல்லாம் செய்கிறோம். இயற்கை அழகை அழிக்கின்றோம். மரங்களை வெட்டுகிறோம், பாறைகளை உடைக்கிறோம். மணலைக் கொள்ளையிடுகிறோம். தூய காற்றில் நச்சுக்காற்றைப் பரப்புகிறோம்; நன்னீரில் சாயநீர் – கழிவு நீர் கலக்கவிட்டு நாசப்படுத்துகிறோம். நாட்டையே குப்பைக்கூடையாக்கி வருகிறோமே, இது முறைதானா?
“இந்தியாவில் சீரழிவுகள் ஏற்பட்டதற்குக் காரணம் பழைய பழக்க வழக்கங்களும், சட்ட திட்டங்களும் தரமற்றவை – பயனற்றவை என்பதல்ல, அவற்றை இறுதிவரை – சரியான பலன்கிட்டும் வரை பயன்படுத்தாமல் அரைகுறையாக விட்டதனால் தான்” என்பது விவேகானந்தர் தரும் விளக்கம்.
சுவாமிகள் மேலும் நமக்குத் தரும் வீரவுரை ஒன்றுண்டு. அதனைச் சுட்டிச் சொல்லாமல் விட்டுவிட முடியாது, “எல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டுமே புதிய நிர்மாணம் ஏற்பட்டுவிடாது. ‘போதும்’ என்ற அளவுக்குக் குறைகள் கண்டுபிடித்தாயிற்று; விமர்சனங்கள் செய்தாயிற்று. இப்போது ஒற்றுமைக்கும் ஒருங்கிணைதலுக்குமான காலம் வந்தாகிவிட்டது. தனித்தனியாகப் பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒன்றுதிரட்டி, சிந்தனை ஒன்றாக்கி இந்தத் தேசத்தை – அடிமைப்பட்டுக் கிடந்த தேசத்தை – வளர்ச்சிப் பாதையில் தூக்கி நிறுத்தவேண்டும்”.
அந்நியச் சக்திகளை வளர்க்காமல் சுயமான சொந்தச் சாதனைகளைச் செய்து உயர்வோம்; நாட்டை உயர்த்திடுவோம்.
$$$