-மகாகவி பாரதி
பாஞ்சாலியை அவமதிக்க எண்ணிய கௌரவர் சோர்ந்து விழுந்ததைக் கண்டு அவை அமைதி காத்தது. அப்போது, பீமன் எழுந்து வெஞ்சினம் உரைக்கிறான். “கண்ணன் பதம் மீதும் கண்களின் கழலால் மதனனை எரித்த சிவனின் கழலடி மீதும் ஆணையிட்டு உரைக்கிறேன்” என்று சொல்லும் அவன், எங்கள் தேவியைத் தனது தொடை மீது அமரச் சொன்ன நாய்மகன் துரியோதனனை யுத்தக் களத்தில் தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்; துச்சாதனைன் தோள்களைப் பிய்ப்பேன். இது நான் சொல்லும் வார்த்தை அல்ல, தெய்வத்தின் வார்த்தை!” என்று சபதம் செய்கிறான்.

இரண்டாம் பாகம்
2.3. சபதச் சருக்கம்
2.3.11. வீமன் செய்த சபதம்
வேறு
வீமனெழுந்துரை செய்வான்; – ‘இங்கு
விண்ணவ ராணை, பராசக்தி யாணை;
தாமரைப் பூவினில் வந்தான் – மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் – எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன்பதத் தாணை;
காமனைக் கண்ணழ லாலே – சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடி மீதில் 99
‘ஆணையிட் டிஃதுரை செய்வேன்: – இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள் – எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி “வந்திரு” என்றான் – இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே, – என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே, 100
‘தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் – தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; – அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்.
நடைபெறுங் காண்பி ருலகீர்! – இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா!
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை, – இது
சாதனை செய்க, பராசக்தி!’ என்றான். 101
$$$