-பேரா.அ.ச.ஞானசம்பந்தன்

4. பாரதிதாசன் (பகுதி-அ)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘ 1891 ஆம் ஆண்டு புதுவையில் பெரும் வணிகராம் கனகசபைக்குப் புதல்வராகத் தோன்றினார். இவர் இயற்பெயர் சுப்புரத்தினம் என்றாலும், ‘பாரதிதாசன்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. புரட்சிக் கவிஞர் என்ற அடைமொழி இவர் கவிதை எழுதத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் இவருக்குத் தரப்பெற்றது. இவருடைய கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளியிடப் பெற்றுள்ளன. மேலும், இவர் ‘குடும்ப விளக்கு’ என்ற குடிமக்கள் காப்பியம் ஒன்றும், ‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’ போன்ற காப்பியத் துணுக்குகள் சிலவும், பிசிராந்தையார் உள்ளிட்ட நாடகங்கள் பலவும் எழுதியுள்ளார். தேசியக் கவி பாரதியார் புதுவை சென்று தங்கியிருந்ததே பாரதிதாசனை வெளிக்கொணர்வதற்குரிய வாய்ப்பை நல்கியது. மற்றொரு வகையாகக் கூறவேண்டுமானால் பாரதியால் பாரதிதாசனும், பாரதிதாசனால் பாரதியாரும் பயன் அடைந்தனர் என்றே சொல்லலாம். பாரதிதாசனிடம் இயல்பாக அமைந்திருந்த கவிதை இயற்றும் ஆற்றலை சூழ்நிலைவசத்தால் பாரதியாரே வெளிக்கொண்டு வந்தார் என்று அறிகிறோம்.
அற்றைச் சூழ்நிலையில் இத்தகைய ஒரு தூண்டுதல் இல்லாது போயிருப்பின் புரட்சிக் கவிஞரிடம் குடி கொண்டிருந்த பேராற்றல் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டிருக்கலாம் என்றாலும், அவ்வளவு இளம் வயதில் வெளிப்பட்டிருக்கக் காரணம் இல்லை. அப்படியே வெளிப் பட்டிருப்பினும் பழமை பாராட்டி வந்த தமிழ்ப் புலவர் உலகம் அவரைக் கவிஞராக ஏற்றுக்கொண்டிருக்க முன்வந்திராது.
பாரதிதாசனார் தமிழ் இலக்கியத்தில் பாரதியாரைவிட ஆழ்ந்து பயின்றிருக்கின்றார். இவ்வாறு சொல்வதால் பாரதிக்குத் தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லையோ என்று யாரும் ஐயுற வேண்டாம். கம்பன், வள்ளுவன் ஆகிய இருவரிலும் ஈடுபட்ட பாரதி, சங்கப் பாடல்களில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவில்லை. அதற்குரிய வாய்ப்புகளும் அவருக்கில்லை. இதன் எதிராக வட நாட்டில் சென்று வடமொழியையும் வேத உபநிடதங்களையும் கற்று அவற்றுள் மூழ்கி விடும்படியான வாய்ப்பு பாரதிக்குக் கிடைத்தது. பாரதிதாசனுக்கோவெனில் புதுவையை விட்டு வெளிச் செல்ல வாய்ப்பு ஏற்படாமையின், தமிழ் இலக்கியச் சுனையில் ஆழ்ந்து மூழ்கித் திளைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சி இருவரையும் திசை திருப்பி நேர் எதிர் எதிரான பாதைகளில் செலுத்தி விட்டது. கவிதை ஆற்றலிலும், உணர்ச்சிப் பெருக்கிலும், சொல் ஆட்சியிலும், ஓசை நயத்திலும், பொருள் ஆழத்திலும் இருவரும் பேராற்றல் படைத்தவர்கள் என்றாலும், இளமையில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி ஒவ்வொருவருடைய ஆற்றலையும் வெவ்வேறு திசையில் திசை திருப்பி விட்டது என்பதில் ஐயமில்லை.
மேலை நாட்டுப் புலவர்களைப் பொறுத்தமட்டில் கூட ஐரோப்பா, இத்தாலி முதலிய இடங்களுக்குச் சென்று நேரிடையாக அவற்றில் ஈடுபாடு கொண்ட காரணத்தால் வார்டு பைரனின் கவிதைகள் பரந்து பட்ட ஒரு பண்பை அறிவிக்கின்றன. ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்கள் இத்தகைய வாய்ப்பை அதிகம் பெறாவிட்டாலும் பழைய கிரேக்க இலக்கியங்களையும், கிரேக்க வரலாற்றையும், கிரேக்க புராண இதிகாசங்களையும் ஆர்வத்துடன் கற்றறிந்தமையின் அவர்களுடைய பாடல்களிலும் இப்பரந்த மனப் பான்மை இலங்கக் காண்கின்றோம்.
பாரதிதாசன் பிரெஞ்சு மொழி கற்றார்; மேலை நாடுகளுக்கோ அன்றி வடநாட்டிற்கோ சென்று வடமொழி முதலியவற்றிலும் பாரதி போலப் புலமை பெற்றிருப்பின் அவருடைய கவிதைகள் எந்தத் திசை நோக்கிச் சென்றிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பதே சுவையுடையதாக இருக்கும். பாரதி வடமொழியை ஆழ்ந்து கற்றது போல் புரட்சிக் கவிஞரும் ஓரளவு பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தாரே, அப்படியிருக்க வெளி உலக அனுபவம் அவருக்குக் குறைந்து விட்டது என்று கூறுவது முறையா என்று சிந்திக்கத் தோன்றும். இந்த நிலையில் ஒன்றை மறவாமல் மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ளவர்கள் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம் கற்றது உண்மைதான். ஆனால், பெரும்பான்மை யானவர்கள் ஆங்கிலத்தைப் பிழைப்புக்கு வழி அல்லது இன்றியமையாத தேவையான ஒரு கருவி என்று கருதிக் கற்றார்களே தவிர, ஜான் ஸ்டூவர்ட் மில்லையும், ரஸ்கினையும் அவர்கள் காட்டிய புது வழிக்காகவோ அல்லது அவர்கள் நூலில் உள்ள இலக்கிய நயம் காரணமாகவோ கற்கவில்லை என்பது தெளிவு. ஆங்கில மூலம் அரசியல் கற்றவர்களும் இந்த விதிக்கு விலக்கானவரல்லர். மேலும், ஆங்கில ஆட்சியினால் நாடு அடிமைப்பட்டிருக்கிறது என்ற உணர்வு ஒவ்வொருவருடைய மனத்திலும் ஓரளவு குறைந்த அளவிலாவது இருந்த காரணத்தால் அம் மொழியின் மாட்டு இலக்கிய நயம் கருதியோ வேறு காரணத்தாலோ பற்று உண்டாகவில்லை. அதன் எதிராக விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் – இன்றியமையாத ஒரு கருவி என்ற கருத்திலேயே கற்குமாறு செய்தது.
அதேபோல பாரதிதாசனும் பிரெஞ்சு மொழி கற்றார் என்றால் – அதுவும் இளம் பிராயத்தில் அப் பள்ளியில் பயின்றார் என்றால் – அது ஆழ்ந்த மாறுதல் ஒன்றைக் கவிஞருடைய மனத்தில் செய்திருக்கும் என்று கூற முடியாது. இதன் எதிராகத் தமிழ்ப் புலமைத் தேர்வு பெற்ற அவர் 18-ஆம் வயதிலேயே கல்லூரித் தமிழ் ஆசிரியராகப் பணி புரியத் தொடங்கிவிட்டார்.
பாரதிதாசனை நினைக்கும்பொழுதும் அவரோடு பழகும் பொழுதும் அவருடைய கவிதைகளைக் கற்கும் பொழுதும் அவர் ஓர் உணர்ச்சிப் பிண்டம் என்பதை அறிய முடியும். கவிஞன் என்றாலே அவன் உணர்ச்சிப் பிண்டமாகத்தான் இருத்தல் கூடும். அறிவின் துணை கொண்டு ஆயத் தொடங்கினால் அங்கே கவிதை தோன்றுவதில்லை. உணர்ச்சியில் மூழ்கி அனுபவித்து. அந்த அனுபவத்தைப் பிறருக்கு வழங்க வேண்டும் என்ற கருத்துடன் உணர்ச்சிப் பெருக்குடையோன் தன் உணர்ச்சிக்குச் சொல்லின் மூலம் கொடுக்கும் வடிவமே கவிதை எனப்படும். எனவே, கவிதை என்பதே கவிஞருடைய உணர்ச்சியைச் சொற்களின் மூலம் நமக்குத் தருகின்ற ஒரு கருவி என்பது பெறப் படும். உணர்ச்சியில் பிறந்து, உணர்ச்சியில் வளர்ந்து, உணர்ச்சி வடிவாகவே வெளிவரும் கவிதை, கற்போர் மனத்தில் உணர்ச்சியையே ஊட்டும் என்பதில் தடை ஒன்றுமில்லை.
ஒரு கவிதை எவ்வளவு தூரம் கற்பவர் மனத்தில் உணர்ச்சியை ஊட்டும் என்பதற்கு அந்தக் கவிஞனுடைய உணர்ச்சியின் ஆழமும் அந்த உணர்ச்சி ஆழத்தை வெளியிட அவன் பயன்படுத்தும் சொல் ஆற்றலுமே சிறப்பான காரணங்கள் ஆகும். சாதாரண நிகழ்ச்சிகளைக் கூடக் கவிஞன் காண்கின்ற முறையே வேறு. நம் போன்றவர்கள் ஒரு நிகழ்ச்சியில் எவ்வளவு ஈடுபட்டாலும், ‘நாம்’ என்ற முனைப்பையும் ஈடுபடுகிறோம்’ என்ற நினைவையும் மறப்பதில்லை. ஆனால், கவிஞன் ஈடுபடும்போது அவன் தன்னை மறந்து உணர்ச்சியில் ஈடுபட்டுத் தான் வேறு அது வேறாக நில்லாமல், தானே அதுவாய் ஓர் அத்துவித நிலையை அடைந்து விடுகிறான். பின்னர் அதிலிருந்து வெளிப்பட்டு அந்த அனுபவத்தை மறுபடியும் சிந்தித்துப் பார்த்து சொற்களின் உதவி கொண்டு அனுபவத்தை வடிக்கத் தொடங்குகிறான்.
அங்ஙனம் தொடங்கும் பொழுது இதுவரை அடங்கியிருந்த அறிவாற்றலின் துணையும் தேவைப் படுகிறது. இந்த அறிவாற்றலின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தித் தேவையான அளவு வெளியிடுகிறான். ஒருசில கவிஞர்கள் குடத்தில் உள்ள நீரைக் குழாய் மூலம் வெளிப்படுத்துவது போலத் தம் உணர்ச்சியை ஓரளவு கட்டுப்படுத்தி வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் குடத்து நீரை அப்படியே கவிழ்ப்பதுபோலக் காட்ட முற்படுகின்றனர். இரண்டுமே நீரை வெளிப் படுத்துகின்ற இயல்பைப் பெற்றிருப்பினும், குழாய் மூலம் வெளியிடுவது போல் அப்படியே கவிழ்ப்பது விரும்பிய பயனை அளிப்பதில்லை.
இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு பாரதி, பாரதிதாசன் என்ற இருவருடைய கவிதைகளையும் ஆர அமர நினைந்து பார்ப்போமேயானால், இருவருடைய உணர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அறிய முடியும். இருவருடைய ஆற்றலும் பேராற்றல்கள் என்பதிலும் ஐயமில்லை. பலவிடங்களில் வாழும் மக்களிடம் பழகிய காரணத்தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் குழாய் மூலம் நீர் சொரிவது போலப் பாரதியின் கவிதைகள் வெளிப்பட்டன. தமிழர்களை அல்லாமல் பிற மக்களோடு பழகும் வாய்ப்பைப் பெறாத காரணத்தாலும் பிற இடங்களுக்கு அதிகம் சென்று தங்கி உறவு கொள்ளாத காரணத்தாலும் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் குடத்தைக் கவிழ்த்து நீரைச் சொரிவது போல உணர்ச்சியை அப்படியே கொட்டி விடுகின்றன.
இவ்வாறு கூறுவதால் புரட்சிக் கவிஞரின் பாடல்களுக்கோ அன்றி அவற்றின் சிறப்புக்கோ இழுக்கம் கூறுவதாக அன்பு கூர்ந்து யாரும் நினைத்துவிட வேண்டா. திறன் ஆய்வாளன் நடுநிலையோடு நோக்கும் போது இக் கவிஞர் தம் உணர்ச்சியை வெளியிடக் கையாண்ட முறை எது என்பதை எடுத்துக்காட்டவும் கடப்பாடு உடையவன் ஆவான். இங்ஙனம் வெளியிடுவது பாரதிதாசனுடைய தனிச் சிறப்பு ஆகும். உணவுப் பண்டங்களுள் இரு வேறு சுவையுடைய பொருள்கள் இருப்பதனால் ஒன்றைவிட ஒன்று உயர்வு என்றோ தாழ்வு என்றோ யாரும் கருதத் தேவையில்லை. அந்தந்தச் சுவை அந்தந்தப் பண்டத்திற்குத் தனிச்சிறப்பை நல்குகிறது. அதே போல உணர்ச்சியை அப்படியே கொட்டி நம்மையும் அதில் மூழ்கடித்துத் திளைக்குமாறு செய்தது புரட்சிக் கவிஞரின் தனிச் சிறப்பாகும்.
இது அவருடைய இயல்பு என்பதை அறிந்த பிறகு, இந்த இயல்புக்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்ற வினாவை எழுப்பிக் கொண்டு அவருடைய வரலாற்றைப் பார்க்கும் பொழுது, முன்னர்க் கூறியபடி அதிகம் வெளியே சென்று பிறரோடு பழகாத காரணத்தால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்குமோ என்று நினைக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு ஒப்பற்ற பண்பினர் புரட்சிக் கவிஞர். அவரால் ஏசப்படும் இனத்தவர் ஒருவருடன் ஒரு முறை கவிஞரைச் சென்று காண நேர்ந்தது. மூன்று மணி நேரம் உரையாடிய பின்னர் வந்திருந்தவர் யார் என்று அறிந்திருந்தும் தம் ஒப்பற்ற பண்புடைமையாலும் அன்பினாலும் வந்திருந்தவரைக் கவிஞர் கவர்ந்தே விட்டார். தனி மனிதனுடன் பழகும்பொழுதும் நண்பர்களுடன் பழகும்பொழுதும் இத்துணை அன்பும், பண்பும் காட்டுகின்ற கவிஞர், கவிதா மண்டலத்தில் நுழைந்தவுடன் உணர்ச்சியில் தம்மை மறந்து விடுகிறார். சுற்றுச் சூழ்நிலையை ஒரு சிறிதும் கவனியாமல் உணர்ச்சியில் மூழ்கி அந்த உணர்ச்சியை அப்படியே வெளியிடும் இயல்பு குழந்தைகளுடைய இயல்பாகும். புரட்சிக் கவிஞர் குழந்தை மனப்பான்மை கொண்டவர் என்பதையும் நாம் நன்கு அறிவோம். எனவே, மனத்தில் தோன்றும் வெறுப்பு விருப்புகளைத் தம் கவிதைகளில் அப்படியே கொட்டித் தீர்க்கிறார்.
உணர்ச்சிப் பெருக்கைக் கட்டுப்படுத்தாமல் வெளியிடுகின்ற இயல்பு உடையவர்களிடம் மற்றொரு குறையையும் காண்டல் கூடும். எந்த நேரத்தில் எந்த உணர்ச்சி மிகுதியாக இருக்கிறதோ அதை அப்படியே வெளியிடும் இயல்பு உடையவர்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பிறிதோர் உணர்ச்சியில் ஆட்படும் பொழுது முன்னர்க் கூறியதை மறந்துவிட நேரிடும். உதாரணமாக ஒன்றைக் காணலாம்: ‘தமிழ் இயக்கம்’ என்ற கவிதைத் தொகுப்பில் இருபத்து நான்கு பொருள்கள் பற்றிக் கவிதைகள் யாத்துள்ளார் கவிஞர். ஒன்பதாவது தொகுதியாகிய ‘புலவர்’ என்ற பகுதியில் 44 ஆம் பாடலும், 97 ஆம் பாடலும் ஓர் உணர்ச்சியில் நின்று பாடப் பெற்றவையாகும்.
முதுமைபெறு சமயமெனும்
களர் நிலத்தில் நட்டதமிழ்ப் பெருநூல் எல்லாம்
இதுவரைக்கும் என்ன பயன்
தந்ததென எண்ணுகையில் நான்கு கோடிப்
பொதுவான தமிழரிலே
பொன்னான தமிழ் வெறுத்தார் பெரும்பாலோராம்
புதுநூற்கள் புதுக் கருத்தால்
பொது வகையால் தரவேண்டும் புலவரெல்லாம்.
சமயமெனும் சூளையிலே
தமிழ்நட்டால் முளையாதென் றறிந்திருந்தும்
சமயநூல் அல்லாது
வழியறியாத் தமிழ்ப்புலவர் சமயம் பேசித்
தமிழ் அழிப்பார் எனினும் அவர்
தமிழ் வளர்ப்போம் என்றுரைத்துத் தமை வியப்பார்
தமிழ் வளர்ச்சி தடைப்பட்டால்
தம் வளர்ச்சி உண்டென்றும் நினைப்பார் சில்லோர்.
தமிழ் இலக்கிய வரலாற்றை ஓரளவு அறிந்தவர்கள் கூட இக்கூற்றுச் சரியான தன்று என்பதை நன்கு உணர்தல் கூடும். சங்க இலக்கியங்கள் நீங்கலாகச் சிலப்பதிகாரம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் பாரதி பாடல் வரையில் தோன்றிய அத்துணை இலக்கியங்களும் சமயத்தின் அடிப்படையில் தோன்றியவையே என்பதை மறத்தல் இயலாது. சங்க நூல்களுங்கூடக் கடவுள் கொள்கையைப் பேசத்தான் செய்கின்றன. ஆனால், அதனையடுத்துத் தோன்றிய இலக்கியங்களை ஒப்பு நோக்கும் பொழுது அவை சமயத்தைப் பற்றிக் குறைவாகப் பேசியுள்ளன என்று கூறலாமே தவிர, தொல்காப்பியம் தொடங்கி இன்று வரையில் உள்ள தமிழ் நூல்களில் சமய அடிப்படை இல்லாத நூலைத் தேட வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாடல்கள் உள்பட ஒன்றுமே இல்லை என்று தான் கூற நேரிடும். அவ்வாறிருக்க சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் ஈறாக அனைத்தையும் கரைத்துக் குடித்த புரட்சிக் கவிஞர், ‘முதுமை பெரு சமயமெனும் களர் நிலத்தில் நட்ட தமிழ்ப் பெரு நூல் எல்லாம் இதுவரைக்கும் பயன் தரவில்லை’ என்று பாடுவாரேயானால், ஏதோ ஓர் உணர்ச்சியில் உந்தப் பெற்றுப் பாடப் பெற்றதே தவிர அவருடைய ஆழ்ந்த மனத்தின் அடிப்படையில் தோன்றிய கருத்தன்று என்பதை அறிய முடியும்.
இஃது அவருடைய ஆழ்ந்த கருத்தன்று என்று ஏன் கூறுகிறேன் என்றால், அதே நூலில் பன்னிரண் டாவது கவிதையாக அமைந்துள்ள ‘கோயிலார்’ என்ற தலைப்பில் 59வது பாடலாக அமைந்துள்ளதைக் காண்டல் வேண்டும்.
சொற்கோவின் நற்போற்றித்
திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில்
கால் வைத்த தெவ்வாறு - சகத்ர நாமம்?
தெற்கோதும் தேவாரம்,
திருவாய் நன் மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென
வேதபாராயணமேன் திருக்கோயில் பால்?
இப் பாடலில் மாணிக்கவாசகப் பெருமானுடைய ‘போற்றித் திருவகவலையும், தேவாரம், திருவாய் மொழி ஆகியவற்றையும் தமிழ்த்தேன்’ என்று கூறுகிறார். தமிழ்த் தேன் ஆகிய இப் பாடல்கள் இருக்கச் ‘செக்கு ஆடும் பொழுது தோன்றும் இரைச்சலைப் போல வேத பாராயணம் எதற்காகச் செய்யவேண்டும்’ என்று கேட்கின்றார். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. என்றாலும் இவ் விரண்டு முரண்பட்ட கருத்துகளும் ஒரே கவிஞருடைய நாவில் முகிழ்த்தன என்றால் அதற்கு ஏதோ ஓர் அடிப்படைக் காரணம் இருத்தல் வேண்டும்.
‘கம்பனுடைய இராமாயணம் நாட்டுக்குப் பெருந் தீங்கு விளைவித்தது’ என்ற கருத்தைப் பல இடங்களிலும் கூறிச் சென்றுள்ளார்.
பன்னீராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள் பால் இன் தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ இல்லவே இல்லை
என்பதும் அவருடைய வாக்குத்தான். ‘சஞ்சீவ பர்வதத்தின் சாரல்’ என்ற கவிதையில்,
இராமாயணம் என்ற நலிவு தரும் கதை
பூமியில் இருப்பதை இப்பொழுதே அறிகின்றேன்
நம்பத் தகாத வெலாம் நம்ப வைக்கும்
என்றெல்லாம் பாடியவர், கம்ப ராமாயணப் பாடல்களை ஆய்ந்து வெளியிட்ட ரசிகமணி டி.கே.சி. அவர்கள் பல பாடல்களை இடைச்செருகல்கள் என்று கூறிப் புதிய பதிப்புப் போட்டதற்காகச் சீறுகிறார்.
கம்பனார் பதினோரா
வீரம்பாட்டில் முக்காலும் கழித்துப் போட்டு
நம்பினால் நம்புங்கள்
இவைதாம் கம்பன் செய்யுள் என அச் சிட்டு
வெம்புமா றளிக்கையிலும்
மேவாத செயல் இதனைச் செய்ய இந்தக்
கொம்பன் யார் எனக் கேட்க
ஆளில்லை யா புலவர் கூட்டந் தன்னில்?
உண்மையில் கம்ப ராமாயணத்தை வெறுப்பவர் அந்நூலின் அளவை ஒருவர் குறைத்தால் ‘அது ஒழிந்தது’ என்று மகிழ வேண்டியதற்குப் பதிலாக ஏன் சீற வேண்டும்? மேலாகப் பார்க்கும்பொழுது முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்ற இப்பாடல்களே புரட்சிக் கவிஞரின் அக மனத்தை ஆராய்வதற்கு நமக்கு வாய்ப்பு அளிக்கின்றன. முரண்பாடுடைய இப்பாடல்களை ஆர அமர இருந்து படித்தால் மற்றோர் உண்மை புலனாகும்.
தமிழ் என்று கூறினால், கவிஞர் தம் உயிரைவிட அதிகமாக அதை நேசிக்கின்றார் என்பது யாவரும் அறிந்த உண்மை. ‘தமிழுக்கு அமுது என்று பேர் ; இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று ஏனையோரும் பாடியிருக்க லாம். ஆனால், தமிழா, அவர்கள் உயிரா என்று சோதனை ஏற்பட்டிருக்குமாயின் அவர்கள் கூற்றுக்கள் ஏட்டுச் சுரைக்காயாக நின்று இருக்குமே தவிர, அக்கூற்றில் உண்மை இராது. ஆனால், புதுவைக் கவிஞரைப் பொறுத்தமட்டில் இந்தப் பாடல் கடுகளவும் உயர்வு நவிற்சி அன்று. தமிழ் என்று கூறினால் உண்மையிலே தம் உயிருக்கு நேர் என்று கருதினார். அவருடைய காலச் சூழ்நிலை அவரால் உயிர் என நேசிக்கப்பட்ட தமிழ் ஒதுக்கப்படுகின்ற கொடுங்காட்சியை அவருக்கு நல்கியது. அங்ஙனம் ஒதுக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்று கவிஞர் சிந்திக்கின்றார். இந்தச் சிந்தனை இவருக்கு மட்டும் மன்று: இவருடைய ஆசானாகிய பாரதிக்கும் இதே சிந்தனை ஓடியுள்ளது. உயிருக்கு நேராகிய இன்பத் தமிழ், சாக்கடையில் கொட்டப்பட்ட தீஞ்சுவைத் தேன் போல் கேட்பாரற்றுக் கிடக்கின்ற அவல நிலை அவர்கள் காலத்திய நிலை. இதன் காரணம் என்ன என்ற ஆராய்ச்சியை இருவருமே மேற்கொள்ளுகிறார்கள்; என்றாலும் இரண்டு கவிஞர்களும் இரு வேறு முடிவுகட்கு எடுத்துச் செல்கின்றார்கள். பாரதியைப் பொறுத்தமட்டில் அந்நிய நாட்டினுடைய ஆட்சி, அதன் கொடுமை, அதனால் அந்நியரின் மொழியின் மேல் ஏற்பட்ட மோகம் என்பவையுமே, தமிழுக்கு ஊறு செய்தன என்ற முடிவுக்கு வருகிறார்.
‘செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது; தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன’ என்று பாரதியார் பாடும் பொழுது தமிழ் மொழியின் தாழ்வுக்கு அயல் மொழி மேல் பற்றே காரணம் என்ற கருத்தை வெளியிடுகிறார். ஒரோவழித் தமிழ் கற்றவர்களும் வெறும் எழுத்தையும் சொல்லையும் கற்றார்களே தவிரத் தமிழ்ப் பண்பை அறிந்தார்கள் இல்லை என்று பாடுகிறார் பாரதி. இத்தகைய இழிநிலைக்குத் தமிழன் வரக் காரணம் தமிழ்ப் பண்பாட்டை அறியாத தமிழர்கள் பழமையில் கொண்ட பற்றுக் காரணமாகத் தவறு செய்கின்றார்கள் என்று பாடினார். இப் பெருமைகளையெல்லாம் வரிசைப் படுத்தி,
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர் (சுய சரிதை: 26)
என்று பாடிச் செல்கிறார், பாரதி.
தமிழும் தமிழரும் அடைந்திருந்த கீழ்நிலை, பாரதி, பாரதிதாசன் என்ற இருவருக்கும் புரிந்தது உண்மைதான் என்றாலும், அதற்குரிய காரணத்தைக் கவியரசர் பாரதியார் கண்ட அடிப்படை வேறு; புரட்சிக் கவிஞர் கண்ட அடிப்படை வேறு.
புரட்சிக் கவிஞர் – பிரெஞ்சு இந்தியப் பகுதியாகிய புதுவையிலேயே பிறந்து வளர்ந்துவிட்ட காரணத்தால் ஆங்கில ஆட்சியால் ஏற்பட்ட கொடுமையை அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லாது போய்விட்டது. எனவே, தமிழின் கீழ்நிலைக்குக் காரணம் அந்நியர் ஆட்சிக் கொடுமை என்ற அடிப்படை புரட்சிக் கவிஞருக்குப் புலப்படவில்லை. அதன் எதிராகத் தமிழர்களின் தவறான பழக்க வழக்கங்களும் சாதிக் கட்டுப்பாடுகளுமே இந் நிலைக்குக் காரணம் எனப் புரட்சிக் கவிஞர் சிந்திக்கலானார்.
தமிழரிடம் உள்ள இத் தவறான பழக்க வழக்கங்கள் அவர்கள் இழிந்த நிலைக்கு ஓரளவு காரணம் என்பதைப் பாரதியாரும் உணர்ந்திருந்தார். ‘சிலப்பதிகாரமும் திருக்குறளும் தோன்றிய நாட்டில் தமிழச் சாதி மிக உயர்ந்த நிலையில் இருக்கும் என்று நினைத்தேனே! முன்பு நான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன். ஒரு பத்தாயிரம் சனிவாய்ப்பட்டும் தமிழச் சாதி தான் உள் உடைவின்றி உழைத்திடும் நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருந்தேன். அந்நிலை மாறி இந் நிலைக்கு வந்ததே’ என்று வருந்திய கவியரசர் ‘விதியே; விதியே, தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின் றாயடா’ என்று பாடிச் செல்கிறார். இக்குறைபாட்டின் காரணம் தமிழர்கள் ஆகிய நம்மிடத்திலேயே இருக்கிறது. என்று நினைத்துப் பாடினார் பாரதியார். ஆனால், இக்குறைபாட்டுக்கு முழுக் காரணம், என்றோ நிகழ்ந்துவிட்ட ஆரிய நாகரிகக் கலப்பு என்று முழுவதுமாக நம்பினார் புரட்சிக் கவிஞர்.
சங்க இலக்கியத்தையும் தொல்காப்பியத்தையும் நன்கு கற்றிருந்த புரட்சிக் கவிஞர் இவ்வாறு நினைத்தது விந்தைதான். எந்தக் காலத்தில் ஆரியக் கலப்பு ஏற்பட்டது என்பதை இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் சொல்ல இயலாத நிலையில் இருக்கின்றது. என்றோ ஒரு நாள் தமிழ் நாகரிகம். தலை தூக்கியிருந்தது என்பதும் அந் நாகரிகம் ஆரிய நாகரிகத்தையும் திருத்தும் அளவிற்கு அவர் இடையே புகுந்து பல நன்மைகளை விளைத்தது என்பதும் உண்மைதான். ஆனால், இவை இரண்டும் இரண்டறக் கலந்து எது எது என்று பிரித்துக் கூற முடியாதபடி கலந்து சில ஆயிரம் ஆண்டுகள் ஆயின. பின்னர் சரித்திரத்தின் போக்கில் நிகழ்ந்துவிட்ட இக் கலப்பை இன்று நினைந்து வருந்துவதாலும் அதைக் குறை கூறுவதாலும் பயன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. நம் பால் காணப்படும் குறையை எடுத்துச் சொல்லித் தீர்த்துவிட வேண்டுமென்ற சிறந்த நோக்கத்தில் புரட்சிக் கவிஞர் திகழ்ந்தார் என்பதில் ஐயமே இல்லை. தம் உயிரைவிட மிகுதியாக நேசித்த தமிழ் மொழிக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் இழுக்கு நேர்ந்தபோது அதைப் போக்க வேண்டுமென்று கவிஞர் விரும்பியதால் போராட்டம் தொடங்கியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அதற்கு அவர் மேற்கொண்ட வழிதான் ஓரளவு விந்தையானது. இன்று எங்கும் காணப்படாத ஆரிய நாகரிகம் என்ற ஒன்றைத் தன் பகை எனக் கருதிச் சாடப் புறப்படுகிறார். இராமாயணம் போன்ற இதிகாசங்கள் நாட்டை நலிவு செய்து வந்தவை என்று கருதிவிட்டார்.
இலக்கிய உலகில் நேர்ந்த இந்த ஒரு குழப்பம் சமுதாய உலகிலும் தலைகாட்டத் தொடங்கியது. தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தும் அம் மொழி தெரியாவிட்டாலும் வடமொழியே தமக்குத் தாய்மொழி என்று பேசியும் நடந்தும் வந்த பிராமணர்களை எதிர்த்துக் கட்சி ஒன்று வலுவாகச் செயல்படத் தொடங்கியது. அற்றை நாளில் பாரதிதாசன் என்ற தனி மனிதர் இக் கட்சியின் சார்பு உடையவராக முழு மூச்சாக அதன் வளர்ச்சிக்குப் பாடு பட்டதில் தவறு ஒன்றுமில்லை.
இருபதாம் நூற்றாண்டில் கவிஞர் என்று சொல்ல தகுந்தவர்கள் யார் இருப்பினும் தம்மையும் அறியாமல் ஏதோ ஒரு கட்சியில் கால் கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை அரசியல் கட்சிகள் என்று சொல்லத் தக்கவை இவ்வளவு பெரிய வளர்ச்சியையும் ஆழத்தையும் கிளர்ச்சியையும் அடைந்திருந்தது இல்லை. பொது மக்களுடைய மனங்களைப் பற்றி ஈர்க்கின்ற அளவுக்கு அரசியல் கட்சிகள் எதுவும் அற்றை நாளில் இருந்ததில்லை. எனவே, கவிஞர்கள் என்று சொல்லப்படுபவர்களும் பொதுமக்கள் தொடர்பு அதிகம் இல்லாமல் தாம் உண்டு தம் கவிதை உண்டு என்ற நிலையில் இருந்து விட்டனர். அவர்களால் எழுதப்பட்ட கவிதைகளும் பொதுமக்களோடு அதிகம் தொடர்பு உடையனவாக இருந்ததில்லை. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் ஒன்று மட்டுமே சாதாரணக் குடிமகனைத் தலைவனாகக் கொண்டு திகழ்ந்தது. அதற்கு முன்னரும் பின்னரும் இத்தகைய நிலை ஏற்படவில்லை. பெரிய புராணக் காப்பியம் சாதாரண குடிமக்களையே தலைவர்களாகக் கொண்டு விளங்கினும் அவர்களுடைய அரசியல் வாழ்வு, சமுதாய வாழ்வு என்பன பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் – பக்தர்களா அதுவும் சிவ பக்தர்களா என்று கேட்ட அளவிலே அதுவும் நின்று விட்டது. எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கவிஞர்கட்கு அரசியல் பிரச்சினையோ கட்சிப் பிரச்சினையோ பற்றிச் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை.
ஆனால், இந்த நூற்றாண்டின் சூழ்நிலையே வேறாக அமைந்து விட்டது. மிகப் பெருஞ் செல்வர்களிலிருந்து பட்டிதொட்டிகளில் வாழும் அன்றாடங் காய்ச்சிகள் வரையில் அரசியல் சூழ்நிலையில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கில ஆட்சியின் கடைசிப் பகுதியிலிருந்து இன்று வரை சாதாரணக் குடிமகனின் வாழ்விலும் அரசியல் புகுந்து விட்டது. துறவியர் கூடக் காட்டுக்கு ஓடினாலொழிய அரசியலிலிருந்து தப்பி வாழ முடியாது என்ற உண்மை நாம் அறிந்த ஒன்று. இத்தகைய ஒரு சூழ்நிலையில் உணர்ச்சிப் பெருக்குடைய கவிஞன் ஒருவன் அரசியலில் சேராமல் வாழ்ந்தான் என்று கூறினால், அஃது இயலாத காரியமே என்று சொல்லி விடலாம். முழு மூச்சாக அரசியலில் ஈடுபடாமல் கவிமணி தேசிக விநாயகம் போல் ஒரு சிலர் இருந்திருக்கலாம். என்றாலும், சமுதாயச் சூழ்நிலையை எந்தக் கவிஞனும் சந்தித்துத்தான் தீர வேண்டும். சமுதாயமே அமைதி இழந்து அரசியலில் பங்கு கொள்ளுகின்ற ஒரு நிலை இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டு விட்டது. எனவே, அரசியலைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயத்தை மட்டுமே தொடர்பு கொள்ளுகின்றான் என்று நினைக்கின்ற கவிஞன் கூடச் சமுதாயத் தொடர்பு காரணமாக அரசியல் தொடர்பையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு புரட்சிக் கவிஞரின் வாழ்க்கையைப் பார்ப்போமேயானால் ஓர் உண்மை புலப்பட்டே தீரும். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதாவது ஒரு கட்சியில் அவர் புகுந்திருக்க வேண்டிய சூழ்நிலை அன்று இருந்தது. நாட்டின் விடுதலையை முதன்மையாகக் கருதினார் கவி அரசர் பாரதியார். எனவே, அவர் காங்கிரசில் சார்ந்தவராய், அதற்குரிய பாடல் பாடுபவராய், மிதவாதக் கட்சியினர்களை எள்ளி நகையாடுபவராய் மாறினார். இதன் எதிராக, சமுதாயத்தையும் அதன் சீர்திருத்தங்களையுமே தம் தலையாய குறிக்கோளாகக் கொண்ட புரட்சிக் கவிஞர் நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனவே, நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயச் சீர்திருத்தம் ஒன்றையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். ஆதலின் திராவிடக் கட்சியில் புரட்சிக் கவி ஒன்றிப் போனார். இந்த அளவு வரையில் கவி அரசரும் புரட்சிக் கவிஞரும் ஒரே நிலையில் தான் இருக்கின்றனர். இருவருடைய குறிக்கோளும் வெவ்வேறாக அமைந்து விட்டன. எனவே, அந்தந்தக் குறிக்கோளுக்குரிய கட்சிகளில் அவரவர் அமைந்துவிட்டனர்.
இதனையடுத்து இருவருடைய வளர்ச்சியும் வெவ்வேறு திசை நோக்கிச் சென்றவுடன் இருவருடைய அடிப்படையுமே ஓரளவு மாறத் தொடங்கி விட்டது. பாரதியைப் பற்றிப் பேசிய பேச்சில் அரவிந்தருடைய தொடர்பால் – சக்தி வழிபாட்டில் மனத்தைச் செலுத்தி அதன் பயனாக, இறை உணர்வு மிகுந்த கவியரசராய் ஆகிவிட்டாராகலின் அவருடைய பாடல்களும் திசை திரும்பி விட்டன என்று கூறினோம். இதன் எதிராக புரட்சிக் கவிஞர் தொடக்கத்திலிருந்து இறுதிவரை சமுதாயச் சீர்திருத்தம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தும் பாடியும் விட்டார். தாம் விரும்பிய சமுதாயச் சீர்திருத்தம் செய்வதற்குத் தடையாக உள்ளன எவை என்ற சிந்தனை புரட்சிக் கவிஞரின் உள்ளத்தில் கால் கொண்டவுடன் நாட்டில் நடைபெறுகின்ற நலிவுக்குக் காரணமாக இருக்கின்ற கசடர்கள், தாம் செய்கின்ற தவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்குரிய நொண்டிச் சாக்குக் கூறுவோர், ‘இவையெல்லாம் கடவுள் செயல்; இவையெல்லாம் விதியின் பயன்; இவையெல்லாம் சாத்திரங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன” என்பவர்கள் ஆகியோர் அவர் முன் காட்சியளிக்கின்றனர்.
இத்தகைய நொண்டிச் சமாதானங்களைக் கண்ட பாரதியார், சாத்திரங்களை ஓரளவு அறிந்தவராகலின் அவற்றுக்கெல்லாம் அங்கு இடமில்லை என்பதை உணர்ந்து, ‘தமிழர்களாகிய நாம் தான் இக் குறைபாடுகட்குக் காரணமே தவிரப் பழமையைச் சொல்லிப் பயனில்லை’ என்று சொல்லியதுடன் நிறுத்திக் கொண்டார். ஆனால், புரட்சிக் கவிஞர் இந்த நொண்டிச் சமாதானங்களைச் சொன்னவர்கள் பொய்யர்கள், தாம் செய்கின்ற தவறுகளை மறைப்பதற்காக அவற்றைச் சொல்கிறார்கள்’ என்பதை விட்டுவிட்டு, அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தவை யெல்லாம் மெய்போல் நினைத்து அவர்களுடன் அந்தச் சாத்திரங்களையும் சேர்த்துச் சாடத் தொடங்கிவிட்டார். இந்தச் சாத்திரங்களும் இராமாயணம் போன்ற கதைகளும் அவற்றை நம்புகின்றவர்களும் நாட்டை விட்டு ஒழிந்தால், நன்மை தானே குடிபுகும் என்று நம்பிவிட்டார். இவை யனைத்தும் இல்லாமலுங் கூடத் தவறு செய்கின்ற மனப்பான்மை, பிறரை அடிமைப்படுத்துகின்ற மனப் பான்மை பிறருக்குத் தீங்கு செய்து வாழ்கின்ற மனப்பான்மை மனிதனுக்கு இயல்பாக உள்ளது என்ற முறையில் சிந்திக்காமல் பழமை என்று சொல்லப் பெற்ற எவற்றையுமே சாடி ஒழிக்க வேண்டுமென்ற முறையில் புகுந்து விட்டார் புரட்சிக் கவிஞர்.
இதற்கேற்ப ரஷ்யாவில் தோன்றிய புரட்சியும், இப் புரட்சிக்குத் தலைவனான லெனின் கொள்கைகளும் பாரதிதாசன் மனத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன. புரட்சிக் கவிஞரும் புரட்சி செய்ய வேண்டுமென்று விரும்பினார். லெனினும் புரட்சி செய்தார். எனவே, புரட்சி என்ற அளவில் – அதுவும் சமுதாயத்தைச் சீர்திருத்துகின்ற அளவில் – லெனின் செய்கைகள் பாரதிதாசனுக்குப் பெரிதும் ஈடுபாட்டை நல்கின. இதில் வேடிக்கை என்ன வென்றால், லெனினுடைய புரட்சியில் பாரதியாரும் முதலில் ஈடுபட்டார். என்றாலும், வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அந்தப் புரட்சி நிலை பெற முடியாது என்பதை இறுதியில் கண்டு, அதனால் புதியதோர் ஆட்சி முறையை மக்களிடையே வன்மையாகப் புகுத்தலாமே தவிர, அஃது இயல்புடையதாக அமையாது என்ற உண்மையை ‘செல்வம்’ என்ற கட்டுரைகளில் பாரதியார் எழுதியுள்ளார்.
ஆனால், பாரதிதாசனோவெனில் லெனினுடைய புரட்சியின் அடிப்படையில் உள்ள அரசியல் கோட்பாடு பற்றிக் கவலைப்படாமல் அப்புரட்சியின் ஒரு பகுதியாகிய சமுதாயப் புரட்சி ஒன்றையே பெரிதும் ஏற்றுக் கொண்டார். அச் சமுதாயப் புரட்சிக்கு மக்களின் பழைய நம்பிக்கைகளைத் தகர்த்தெறிய வேண்டு மென்றே லெனின் விரும்பினார். சமுதாயப் புரட்சி செய்ய விரும்புகின்ற அனைவரும் இதை ஒரு கருவி யாகக் கொள்ளுவர் என்பதில் ஐயமே இல்லை. ரூஸோ, லெனின், இன்றைய சீன நாட்டு மா – சே துங் ஆகிய அனைவரும் மக்களின் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டுப் புதிய முறையில் சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்று விரும்பினர். இதற்கு இடையூறாக இருப்பது மக்களுடைய மனத்தில் ஆழப் பதிந்து அவர்கள் குருதியில் கலந்துவிட்ட சமய உணர்ச்சியே என்பதைக் கண்டனர். இந்தச் சமய உணர்ச்சியைப் போக்கினாலொழியத் தம்முடைய புதிய கருத்துகளை மக்கள் மனத்தில் ஊன்ற முடியாது என்று கருதிய லெனின், ‘சமயம் மக்களுக்கு அபின் போன்ற தாகும் (Religion is the opium of the people) என்று கூறிச் சென்றார்.
சமுதாயப் புரட்சி செய்ய விரும்பிய பாரதிதாசனுக்கு, லெனினுடைய இந்தச் சொற்கள் தாரக மந்திரமாக அமைந்து விட்டன. எனவே, தமிழ்நாட்டில், தமிழரிடத்தில், தமிழர் வாழ்வில் உள்ள தவறுகளை, குறைகளைப் போக்க வேண்டுமானால் தமிழர்கள் சமய நம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும் மென்ற முடிவுக்கு வந்தார் புரட்சிக் கவிஞர். இந்த முடிவு சரியா, தவறா என்பது இங்கு ஆராய்ச்சி அன்று. சரியோ தவறோ இந்த முடிவுக்கு ஒருவர் வந்துவிட்ட பிறகு இதனையடுத்து வருகின்ற முடிவுகள் தருக்க முறையில் நியாயமானவை.
சமயம் ஒழிய வேண்டும்; சமயத்தின் ஆணி வேராக இருக்கின்ற நம்பிக்கைகள் ஒழிய வேண்டும்; இந்த நம்பிக்கைகளை வளர்ப்பதற்குரிய சாத்திரம் புராண, இதிகாசப் பகுதிப் பாடல்கள் ஒழிய வேண்டும்; சாத்திர, புராண, இதிகாசங்கள் பெரும்பாலானவை வடமொழியில் இருக்கின்றன. எனவே, வடமொழியும் ஒழிய வேண்டும். வடமொழிக் கலப்பினால் தமிழ் மொழி பாதிக்கப்பட்டது என்ற கருத்துடையவர் ஆதலின் வடமொழியையும் எதிர்த்துச் சாடினார். வடமொழி என்றுமே எந்த நாட்டாராலும் பேசப்படுகின்ற மொழியாக இருந்த தில்லை. என்றாலும், வடமொழியையும் வட நாட்டாரையும் ஆரியம், ஆரியர் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட புரட்சிக் கவிஞர், இந்தச் செல்வாக்கும் நாட்டைவிட்டு ஒழிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், இவையனைத்தையும் முழுமனத்தோடு கவிஞர் நம்பினார். ஆதலின், சமய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்களைக் கூட வெறுத்து ஒதுக்கினார். சமய இலக்கியம் அவரால் போற்றிப் புகழப்படுபவை தமிழ் மொழியில் இருப்பினும் கூட அவையும் நாட்டிற்கு நலிவு செய்பவையே என்று கருதினார். சமயம் என்று சொல்லக்கூடிய களர் நிலத்தில் நட்ட தமிழ்ப் பெருநூல்கள் எல்லாம் இதுவரைக்கும் பயன் தரவில்லை என்று பாடினார்.
தமிழருக்கு ஊறு செய்பவை என்ற பொது நோக்கில் இதனைப் பாடினாரே தவிர, இவற்றையும் கவிஞர் நன்கு கற்றிருந்திருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. எனவே, இவை பயனற்றவை என்று ஒரு பாடலில் பாடினாலும் மற்றொரு பாடலில் ‘தேவாரம் திருவாய் நன் மொழியான தேன்’ என்றும் பாடுகிறார்.
இதிலிருந்து கவிஞரின் மனநிலையை நாம் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. தமிழில் இயற்றப்பட்ட எதுவாக இருப்பினும் – அது சமய இலக்கியமாகக்கூட இருப்பினும் – தமிழாக இருக்கின்ற காரணத்தால் கவிஞர் அதில் ஈடுபட்டிருக்கிறார். அவரையும் அறியாமல் அதனைத் ‘தேன்’ என்று சொல்லுகின்ற அளவுக்குச் சென்றிருக்கிறார். எனவே, அவருடைய தமிழ்ப்பற்று ஏனையோர் பற்றைப் போல் மேடைப் பற்றாக, சொற்பொழிவுப் பற்றாக பிறரை ஏமாற்றுகிற பற்றாக அமையாமல், உண்மையிலேயே உயிர்ப் பற்றாக இருந்தது என்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது. கம்பன் கவிதை முழுவதும் நாட்டிற்கு ஊறு செய்பவை என்று பாடுகிறார் ஓர் இடத்தில்; அப்படி நாட்டிற்கு ஊறு செய்கின்ற ஒன்றில் ஒருவர் பல பாடல்களை நீக்கிவிட்டு இவைதாம் கம்பனுடைய பாடல் என்று சொன்னால், நூல் முழுவதுமே வேண்டாவென்று சொல்லுகின்ற கவிஞனுக்கு ஏன் இதில் சினம் பிறக்க வேண்டும்?… இராமன் கதை கவிஞருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், “மேவாது இதனைச் செய்ய இந்தக் கொம்பன் யார் எனக் கேட்க ஆள் இலையா புலவர் கூட்டம் தன்னில்?” என்று பேசும் பொழுது தமிழ்ப் பாடல் அவரை ஆட்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமே இல்லை.
இறுதியாக ஒன்றை நன்கு மனத்தில் இருத்த வேண்டுகிறேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தெய்வ நம்பிக்கையோ, சமய நம்பிக்கையோ இல்லாதவர் என்று நினைப்பதைவிடப் பெருந் தவறு அவருக்கும், தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் வேறு செய்ய முடியாது. உண்மையில் அவர் கடவுள் நம்பிக்கை உடையவரே; கடவுள் நம்பிக்கை உடையவர் என்று சொன்னவுடன் ஊரிலுள்ள காளி, மூளி, காட்டேரி, சங்கிலிக் கருப்பன் ஆகிய அனைத்தையும் நம்பி, ஆடு அறுத்து பூசை போடுகிறவர்களோ அல்லது கோயிலுக்குச் சென்று பால் அபிஷேகம் செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்கின்றவர்களோதாம் கடவுள் பக்தி உடையவர்கள் என்று தயவு கூர்ந்து யாரும் நினைத்துவிட வேண்டாம். இவை அனைத்தையும் செய்கின்றவர்கள், ஊர் அறியச் செய்கின்றவர்கள், மாதந்தோறும் விடாமல் செய்கின்றவர்கள் கடவுள் பக்தி என்பதைக் கனவிலும் கருதாத வெளிவேடக்காரர்களாக இருக்கலாம். இதன் எதிராக இப்படி ஒன்றையும் நம்பாத புரட்சிக் கவிஞர் இவையெல்லாம் வெளிவேடம் என்று நம்புகிற கவிஞர், மக்கட் பண்பு இல்லாமல், பிறரிடத்தில் அன்பு இல்லாமல், அவற்றையெல்லாம் செய்கின்றவர்கள் தம்மையும் பிறரையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார்.
$$$