-பேரா. இரா.வன்னியராஜன்
பேரா. திரு. இரா.வன்னியராஜன், திருவேடகம் விவேகானந்த குருகுலக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் உறித்த கட்டுரை இது…

ஈன்றெடுத்த பெற்றோரை தெய்வமாகப் போற்ற வேண்டும், ஆசிரியரை தெய்மாகப் போற்ற வேண்டும், இல்லம் நாடி வரும் விருந்தினரை தெய்வமாகப் போற்ற வேண்டும் என உபநிஷதம் கூறுகிறது.
“மாத்ரு தேவோ பவ;
பித்ரு தேவோ பவ;
ஆசார்ய தேவோ பவ;
அதிதி தேவோ பவ.”
சுவாமி விவேகானந்தரோ, ஏழையும், முட்டாளும், பாமரனும், துயரத்தில் உழல்பவரும் உனது தெய்வம் ஆகவேண்டும் என்கிறார்:
“தரித்ர தேவோ பவ;
துக்கி தேவோ பவ;
மூர்க்க தேவோ பவ.”
இவர்களுக்கு ஆற்றும் சேவையே உயர்ந்த தர்மம் என்று சுவாமிஜி கூறுகிறார்.
சமுதாயச் சீர்திருத்தம் குறித்து விவேகானந்தரது பார்வை:
……… நான் தாழ்ந்த குலத்தினனாக இருந்தால் மகிழ்ச்சியே அடைவேன். ஏனென்றால் பிராமணர்க்கெல்லாம் பிராமணனாக இருந்துகொண்டு, ஒரு தாழ்ந்த குலத்தினனின் வீட்டைச் சுத்தம் செய்ய விரும்பிய ஒருவரது (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின்) சீடன் நான். அவன் இதை அனுமதிக்க மாட்டான்; ஒரு பிராமண சன்னியாசி தன் வீட்டிற்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்வதை அவன் எப்படி அனுமதிப்பான்? எனவே இந்த மனிதர் நள்ளிரவில் விழித்தெழுந்து யாருமறியாமல் அவனது வீட்டிற்குள் நுழைந்து கழிவறைகளைச் சுத்தம் செய்து, தம் நீண்ட தலைமுடியால் அந்த இடத்தைத் துடைக்கவும் செய்வார். எல்லோருக்கும் சேவகனாகத் தம்மை ஆக்கிக் கொள்வதற்காகப் பல நாட்கள் இவ்வாறு செய்தார். அவரது திருப்பாதங்களை என் தலைமீது தாங்கிக் கொண்டிருக்கிறேன். அவரே என் தலைவர். அவரது வாழ்க்கையைப் பின்பற்றவே நான் முயல்வேன்.
எல்லோரும் சேவகனாக இருப்பதன் மூலம் தான் ஓர் இந்து தன்னை உயர்த்திக்கொள்ள வழி தேடுகிறான். பாமரர்களைக் கைதூக்கிவிட இப்படித் தான் இந்துக்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, எந்த வெளிநாட்டுச் செல்வாக்கையும் எதிர்பார்த்து அல்ல.
நமது சீர்திருத்தவாதிகளுள் யாராவது தாழ்ந்த குலத்தினனுக்குச் சேவை செய்யத் தயாராக இருந்து, அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டட்டும்; அப்போது நான் அவர்களின் காலடியில் அமர்ந்து கற்றுக் கொள்கிறேன், அதற்கு முன்னால் அல்ல. ஒரு துளி செயல் இருபதாயிரம் வெற்றுப் பேச்சுக்களை விட சிறந்தது.
…….. பதினான்கு ஆண்டுகள் பட்டினியை நேருக்கு நேராகச் சந்தித்த ஒருவனை, அடுத்த வேளைக்கான உணவும் படுக்க இடமும் எங்கே கிடைக்கும் என்று தெரியாத ஒருவனை, அவ்வளவு சுலபமாகப் பயமுறுத்திவிட முடியாது. அவர்களை விடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதையும் இந்த சீர்திருத்தவாதிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடி வரையிலான மொத்தச் சீர்திருத்தத்தை விரும்புகிறேன். அந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில்தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப்பாதை; என்னுடையது ஆக்கப்பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியை நம்புகிறேன். என்னைக் கடவுள் நிலையில் வைத்துக்கொண்டு, “இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது’ என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன். ராமர் பாலம் கட்டும் போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட அந்த சிறிய அணிலைப் போல் இருக்கவே நான் விரும்புகிறேன். அது தான் என் நிலை”.
தேசப்பற்று பற்றி சுவாமிஜியின் கருத்து:
எல்லோரும் தேசப்பற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். நானும் தேசப்பற்றில் நம்பிக்கை உள்ளவன். தேசப்பற்றைப் பற்றி எனக்கென்று சொந்தக் கருத்தும் உண்டு. எந்த மகத்தான சாதனைகளுக்கும் மூன்று விஷயங்கள் அவசியமானவை:
முதலில் இதயப்பூர்வமான உணர்ச்சி. அறிவிலும் ஆராய்ச்சியிலும் என்ன இருக்கிறது? அது சில அடிகள் செல்லும், பிறகு நின்றுவிடும். ஆனால் இதயத்தின் மூலம் தான் உத்வேகம் பிறக்கிறது. திறக்க முடியாத கதவுகளை எல்லாம் அன்பு திறக்கிறது.
எனவே உணர்ச்சி கொள்ளுங்கள். என் எதிர்கால சீர்திருத்தவாதிகளே, வருங்கால தேசபக்தர்களே, நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பரம்பரையில் வந்த கோடானுகோடிப் பேர் மிருகங்களுக்கு அடுத்த நிலையில் வாழும் கொடுமையை உணர்கிறீர்களா? பட்டினியால் இன்று லட்சக் கணக்கானோர் வாடுவதையும் காலங்காலமாக லட்சக் கணகானோர் பட்டினியால் துடிப்பதையும் உணர்கிறீர்களா?
இந்த நாட்டின் மீது ஒரு கரிய மேகம் போல் அறியாமை கவிந்துள்ளதை உணர்கிறீர்களா? இந்த உணர்ச்சி உங்களை அமைதியிழந்து தவிக்கச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்களை தூக்கம் கெட்டு வாடச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் நாடி நரம்புகள் தோறும் ஓடி, உங்கள் இதயத் துடிப்புடன் கலந்து துடிக்கிறதா? அது உங்களை ஏறக்குறைய பைத்தியமாகவே ஆக்கிவிட்டதா? உங்கள் பெயர், உங்கள் புகழ், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் சொத்து, ஏன் உங்கள் உடம்பு என்ற எல்லாவற்றையும் மறந்து விட்டீர்களா? இதை நீங்கள் செய்து விட்டீர்களா? இதுதான் தேசப்பற்று உடையவன் ஆவதற்கு முதற்படி.
நீங்கள் உணரலாம். ஆனால் வெட்டிப்பேச்சில் உங்கள் ஆற்றல்களை வீணாக்குவதற்குப் பதிலாக, ஏதாவது வழி கண்டுபிடித்தீர்களா? அவர்களை நிந்திப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கு, அவர்களின் துன்பங்களைத் தணிக்கின்ற சில இதமான வார்த்தைகளைக் கூறுவதற்கு, அவர்கள் நடைப்பிணங்களாகிக் கடக்கும் கேவல நிலையிலிருந்து மீட்க ஏதாவது செயல்முறை வழி கண்டீர்களா? இது தேசப்பற்றுக்கு இரண்டாவது அம்சம்.
அதோடு தேசப்பற்று முடிந்து விடுவதில்லை. மலைகளை ஒத்த எதிர்ப்புகளை வெல்வதற்கான மன உறுதி உங்களிடம் இருக்கிறதா? கையில் வாளுடன் இந்த உலகம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரி என்று நினைப்பதை செய்து முடிக்கின்ற தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் மனைவியும் பிள்ளைகளும் எதிர்த்தாலும், உங்கள் பணம் எல்லாம் கரைந்து போனாலும், உங்கள் பெயர் அழிந்து செல்வம் எல்லாம் மறைந்தாலும் அதையே உறுதியாகப் பற்றி நிற்பீர்களா? அதையே உறுதியாகத் தொடர்ந்து, உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்வீர்களா? இது மூன்றாவது விஷயம்.
உங்களிடம் இந்த மூன்று விஷயங்களும் இருக்குமானால், நீங்கள் ஒவ்வொருவரும் பிறர் பிரமிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள். செய்தித்தாள்களில் எழுத வேண்டியதில்லை. மேடையேறிப் பிரசங்கம் செய்ய வேண்டியதில்லை. எங்கள் முகமே ஒளிவீசித் துலங்கும். நீங்கள் ஒரு குகையுள் வாழலாம். ஆனால் உங்கள் சிந்தனைகள் அந்தப் பாறைச் சுவர்கள் வழியாக ஊடுருவி வந்து உலகம் முழுவதுமே நூற்றுக் கணக்கான ஆண்டுகள் அதிர்ந்து பரவிக் கொண்டிருக்கும். என்றாவது அவை ஏதாவதொரு மூளையில் புகுந்து செயல்படும். உண்மையான, தூய்மையான லட்சியத்தைக் கொண்ட சிந்தனையின் ஆற்றல் அத்தகையது.
உண்மையான வழிபாடு:
மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது. இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழையிடமும், பலவீனரிடமும், நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான்.
விக்ரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்பநிலையில் உள்ளது. ஓரே ஓர் ஏழைக்காயினும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல், அவனிடம் சிவபெருமானைக் கண்டு அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் திருப்தி கொள்கிறார்.
நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதல் பாவம் ஆகும். ‘நானே முதலில் உண்பேன். மற்றவர்களை விட எனக்கு அதிகமான பணம் வேண்டும். எல்லாம் எனக்கே வேண்டும். மற்றவர்களுக்கு முன்னால் நான் முக்தி பெறவேண்டும்” என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி.
சுயநலமற்றவனோ, ‘நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் அதற்கும் தயாராக இருக்கிறேன்’ என்கிறான்.
இத்தகைய சுயநலமற்ற தன்மையே ஆன்மீகத்திற்கான உரைகல். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மீகவாதி, அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந்தாலும், படிக்காதவனாக இருந்தாலும், அவன் அறிந்தாலும் அறியவில்லை என்றாலும் அவனே மற்ற அனைவரையும் விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.
சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களை தீட்டிக் கொண்டிருந்தாலும், அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.
எதிர்கால பாரதம்:
ஆன்மிகம் தான் நமது தேசிய லட்சியம். நமது வாழ்க்கையின் இந்த லட்சியம் தடைப்படாதவரை எதுவும் நம் நாட்டை அழிக்க முடியாது. ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அந்த ஆன்மிகத்தை விலக்குவீர்களானால், விலக்கிவிட்டு மேலைநாட்டின் உலகியல் நாகரிகத்திற்குப் பின்னால் செல்வீர்களானால் மூன்று தலைமுறைகளுள் உங்கள் இனம் ஒன்றுமே இல்லாமல் அழிந்துபோகும். ஏனெனில் நாட்டின் முதுகெலும்பு முறிந்து விடும்; தேசிய மாளிகை எழுப்பப்பட்டுள்ள அஸ்திவாரம் தகர்க்கப்பட்டுவிடும். அதனால் எல்லாம் அழிந்தே தீரும்.

ஆகையால் நீங்கள் ஆன்மிகத்தை நம்புகிறீர்களோ இல்லையோ, நம் தேசிய வாழ்விற்காகவாவது ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டு அதை ஒரு கையால் பற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மற்றொரு கையை நீட்டி, மற்ற இனங்களிடமிருந்து எதையெல்லாம் பெற முடியுமோ அவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவை எல்லாமே உங்கள் வாழ்வின் ஒரே லட்சியமாகிய ஆன்மிகத்திற்கு அடுத்தபடியில் தான் இருக்க வேண்டும். அத்தகைய உன்னதமான வாழ்க்கையிலிருந்து எதிர்கால பாரதம் உருவாகும்.
இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்பிடம் அத்தகைய பாரதம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பழங்கால ரிஷிகள் அனைவரை விடவும் மகத்தான ரிஷிகள் தோன்றப் போகின்றனர். மற்ற உலகங்களில் வாழ்கின்ற உங்கள் முன்னோர் தங்கள் வழித்தோன்றல்களாகிய உங்களின் புகழையும் கீர்த்தியையும் கண்டு திருப்தி மட்டும் அடையவில்லை. பெருமையும் அடைவார்கள் என்தை நான் காண்கிறேன்.
என் சகோதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால பாரதம் நம்முடைய உழைப்பைப் பொறுத்தே அமையப் போகிறது. இப்போது பாரதத்தாய் தயாராகக் காத்திருக்கிறாள். தூக்கத்தில் இருக்கிறாள். அவ்வளவு தான். எழுந்திருங்கள், விழித்திருங்கள்! அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமையோடும் முன் எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.
$$$