பாஞ்சாலி சபதம் – 2.3.5

-மகாகவி பாரதி

நியாயம் சொல்ல வந்த பீஷ்மரும் துரியன் பக்கம் நிற்பது பாஞ்சாலிக்குத் தெளிவாகிறது.  “சீதையைக் கடத்தி வந்த ராவணனை அவனது அவையில் இருந்தோர் பாரட்டினார்களாம். அதுபோலிருக்கிறது உங்கள் செய்கை” என்கிறாள். மண்டபம் கட்டி அழைத்து வந்தது எங்கள் அரசாட்சியைப் பிடுங்கத் தானா என்று கேட்கிறாள்.    ‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ என்று ஒரு வேறொரு பாடலில் பாரதி பாடுவது உண்மைதான் என்பதை அவையில் பாஞ்சாலியின் தர்க்கம் காட்டுகிறது.  “பெண்டிர் தமையுடையீர்! பெண்களுடன் பிறந்தீர்! பெண்பாவ மன்றோ?  பெரியவசை கொள்வீரோ? கண்பார்க்க வேண்டும்!” என்று கையெடுத்துக் கும்பிடுகிறாள். கொடுமை கண்டு எதிர்க்கத் திறமில்லா, நாணமற்ற அவையினரைப் பார்த்து.

இரண்டாம் பாகம்

2.3. சபதச் சருக்கம்

2.3.5. திரௌபதி சொல்வது

‘சாலநன்கு கூறினீர் ஐயா, தருமநெறி
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின், கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
“தக்கதுநீர் செய்தீர்; தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும்” எனக் கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்.
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ
முற்படவே சூழ்ந்து முடித்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர்! பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள்.
வம்பு மலர்க்கூந்தல் மண்மேற் புரண்டுவிழத்
தேவி கரைந்திடுதல் கண்டே, சிலமொழிகள்
பாவி துச்சாதனனும் பாங்கிழந்து கூறினான். 67

வேறு

ஆடை குலைவுற்று நிற்கிறாள்; – அவள்
      ஆவென் றழுது துடிக்கிறாள். – வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் – அவள்
      மைக்குழல் பற்றி யிழுக்கிறான். – இந்தப
பீடையை நோக்கினன் வீமனும், – கரை
      மீறி எழுந்தது வெஞ்சினம்; – துயர்
கூடித் தருமனை நோக்கியே, – அவன்
      கூறிய வார்த்தைகள் கேட்டீரா? 68

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s