-டி.ஐ.அரவிந்தன்
பத்திரிகையாளர் திரு. டி.ஐ.அரவிந்தன், ‘தி இந்து தமிழ்’ நாளிதழில் 2014-இல் எழுதிய பதிவு, இங்கு மீள்பதிவாகிறது.

ஓர் ஆளுமை என்னும் அளவில் எப்போதும் வியப்புக்குரியவர் விவேகானந்தர். 39 வயதிற்குள் அவர் வாசித்த நூல்கள், ஆற்றிய உரைகள், எழுதிய பக்கங்கள், கையாண்ட விஷயங்கள், மேற்கொண்ட பயணங்கள், நிறுவிய அமைப்புகள் என ஒவ்வொன்றும் பிரமிப்பூட்டுபவை. இதில் ஏதாவது ஒன்றை ஒருவர் 40 வயதிற்குள் செய்திருந்தாலே அவரைச் சாதனையாளர் என்று சொல்லிவிடலாம். எல்லாவற்றையும் செய்திருக்கும் விவேகானந்தரை என்னவென்று சொல்வது?
இந்தியாவின் மரபின் மீது பெருமிதமும் கறாரான விமர்சன நோக்கும் அவரிடம் இருந்தன. நவீன வாழ்வின் அனைத்து விதமான சலனங்களுக்கும் இந்தியாவைத் தயார்ப்படுத்தியவர் அவர். மரபின் சட்டகத்துக்குள் நின்று சீர்திருத்தம் பேசியவர்களின் முன்னோடி. பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் உலகைப் பார்க்க முற்பட்டவர்.
ஆழ்ந்த அக்கறையின் விளைவாக உண்மையாகவும் இயல்பாகவும் வெளிப்பட்ட அவரது கருத்துகள் அனைத்தும் ஒருவருக்கு உவப்பானவையாக இராது. அவரது எழுத்துகளை முழுமையாக வாசிக்கும் ஒருவர் பரவசம் கொள்ளும் இடங்களும் கூர்மையான வலியை உணரும் இடங்களும் கணிசமாக இருக்கும். இந்தியாவை ஆன்மிக நாடு என்றும் சமயம்தான் அதன் ஆதாரம் என்றும் அவர் அறிவிக்கும்போது சிலருக்கு உவப்பாக இருக்கும். இந்நாட்டின் ஆதிக்கச் சாதியினரை இறந்த காலத்தின் எலும்புக்கூடுகள் என அவர் வர்ணிக்கும்போது வலிக்கும். இந்தியா உலகுக்கு வழிகாட்டும் என்று சொல்லும்போது உவகை கொள்ளும் ஒருவரது மனம் சேரிகளின் குடிசைகளிலிருந்து மீனவக் குப்பங்களிலிருந்தும் புதிய பாரதம் எழுச்சி பெறும் என்று சொல்லும்போது சுணக்கம் கொள்ளலாம்.
ஒரே தரப்பில் நின்று ஒன்றையே திரும்பத் திரும்பப் பேசும் ஒற்றைக் குரல் அல்ல விவேகானந்தரின் குரல். அது பன்முகத்தன்மை கொண்டது. அதனாலேயே அது இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது.
சமூக மாற்றம் குறித்தும் சமயம் குறித்தும் அவரது குரலை இங்கே கேட்கலாம்….
தேசியப் பெரும்பாவம்! சாதாரண மக்களைப் புறக்கணித்ததே நமது தேசியப் பெரும்பாவம் என்று கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். ஏழைக்கோ, தாழ்ந்தவனுக்கோ, பாவிக்கோ நண்பர்கள் இல்லை, உதவுபவர்கள் இல்லை. என்ன தான் முயன்றாலும் அவர்களால் முன்னேற முடிய வில்லை. நாளுக்கு நாள் அவர்கள் அதோகதியில் ஆழ்ந்துவருகின்றனர். கொடிய சமுதாயம் தங்கள் மீது பொழிகின்ற அடிகளை அவர்கள் உணர்கிறார்கள். ஆனாலும், அந்த அடிகள் எங்கிருந்து வருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்துக்கும் வேராக இருக்கின்ற ஒரே விஷயம், ஏழைகளின் நிலைமை. புரோகித ஆதிக்கமும், அந்நியரின் ஆக்கி ரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர்களைக் கீழே தள்ளி மிதித்துவந்துள்ளன. இறுதியில், தாங்கள் மனிதப் பிறவிகள் என்பதையே இந்தியாவின் ஏழைகள் மறந்துவிட்டனர். மக்கள் ஏமாற்றப்பட்டனர் நாடு மூழ்கிக்கொண்டே இருக்கிறது. கோடிக் கணக் கான தாழ்த்தப்பட்ட மக்களின் சாபம் நம் தலை மீது இருக்கிறது… அவர்களிடம் நாம் அத்வைதத்தை வாயளவில் பேசி, அதே வேளையில் முடிந்த அளவு அவர்களை வெறுக்கிறோம். உலக வழக்கு என்ற கொடுமையை அவர்களுக்காக ஏற்படுத்தியிருக்கிறோம். நாம் எல்லோரும் சமம், பரம்பொருளுடன் ஒன்றுபட்டிருக் கிறோம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுகிறோம், அதில் அணுவளவுகூடச் செயல்முறையில் இல்லை. மதத்தின் பெயரில் மக்கள்மீது அடக்குமுறை மனிதனின் மகிமையை இந்து மதத்தைப் போல் உலகின் வேறு எந்த மதமும் இவ்வளவு உயர்வாகக் கூறவில்லை; அதே வேளையில், உலகிலுள்ள எந்த மதமும் இந்து மதம் செய்வதுபோல், ஏழைகள் மற்றும் தாழ்ந்தவர்களின் கழுத்தை நெரிப்பதும் இல்லை. மதத்தால் மட்டும் இயலாது சோஷலிசம், அது இது என்று எந்தப் பெயரிலாவது அழையுங்கள். மக்களால் ஆளப்படுகின்ற ஏதோ ஒன்று நடைமுறையில் இருப்பதை ஒவ்வொன்றும் காட்டுகிறது. பொருட் தேவைகளைப் பெறுதல், குறைந்த நேர வேலை, எதிர்ப்பின்மை, போரின்மை, அதிக உணவு முதலியவற்றை மக்கள் அதிகம் விரும்புவார்கள். மதத்தின் மீது, மனிதனின் நல்லியல்பின் மீது நிறுவப்படாத இந்த நாகரிகமோ, எந்த நாகரிகமோ நிலைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? கல்வி – முதல் தேவை கல்வி, கல்வி, கல்வி ஒன்றே காரணம். ஐரோப்பாவில் பல நகரங்களின் வழியே யாத்திரை செய்தபோது, அங்கு வாழ்கின்ற ஏழைகளுக்கு உள்ள வசதிகளையும் கல்வியையும் கண்டேன். அப்போதெல்லாம் நம் ஏழைகளை நினைத்துப் பார்த்து நான் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறேன். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? கல்வி என்ற விடையே நான் கண்டது. கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது, தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விழித்தெழுகிறது. நம்முள் இருக்கும் ஆன்மாவோ மெல்ல மெல்ல செயலிழந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்குக் கல்வி ஆணவம், அரச ஆணை இவற்றின் துணையுடன், விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் எல்லா கல்வியும் புத்தி நுட்பமும் உடமையாக்கப்பட்டது தான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். உழைக்கும் வர்க்கத்தினர்கள் எழுவார்கள். ஒரு காலம் வரும். அப்போது சூத்திரர்கள் தங்கள் சூத்திரத்தன்மையுடனேயே முக்கியத்துவம் பெறுவார்கள். அதாவது, அவர்கள் வைசிய, சத்திரிய இயல்புகளைப் பெற்று வலிமையை வெளிப்படுத்துகிறார்களே, அதுபோல் அல்ல; சூத்திர இயல்பு மற்றும் வழக்கங்களுடனேயே எல்லா நாடுகளிலும் சமுதாயத்தில் ஆதிக்கத்தை அடைவார்கள். அந்த உதயத்தின் முதல் கிரணம் மேற்கு உலகில் இப்போதே மெல்லமெல்லத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவு என்ன ஆகுமோ என்று எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள்.
- நன்றி: தி இந்து தமிழ் (14.01.2014)
$$$