பாரதியும் பாரதிதாசனும் – 3 இ

பேரா. அ.ச.ஞானசம்பந்தன்

3. பாரதி (பகுதி-இ)


கவிஞர் வாழ்ந்த காலம், விஞ்ஞானத்தின் துணை தமக்கு இருந்துவிட்ட காரணத்தாலும், எல்லை யில்லாச் செல்வம் கொழித்த காரணத்தாலும் ஆங்கிலேயர்கள் தங்களால் முடியாத காரியமே ஒன்றுமில்லை என்று செருக்குக் கொண்டு தங்களுடைய மொழி அறிவையும் விஞ்ஞான அறிவையும் பெற்றாலொழிய உலகத்திற்கு உய்கதி இல்லை என்று நினைந்து இறுமாந்து பேசிய காலமாகும். இந்நிலையில் தோன்றிய கவிஞர் பிரான்  ‘மூன்று காதல்கள்’ என்ற பகுதியில் ‘சரஸ்வதி காதல்’,  ‘லட்சுமி காதல்’,  ‘காளி காதல்’ என்று பாடிச் செல்லுகிறார். இதில் வியக்கத் தகுந்த ஓர் உண்மை இருப்பதை இப்பாடல்களைக் கற்றவர்கள் நன்கு அறிதல் கூடும். சரஸ்வதியைப் பற்றிப் பாடும் பொழுது  ‘அடி என்னோடு இணங்கி மணம் புரிவாய்’ என்று பேசிய கவிஞர், லட்சுமி காதலில்,  ‘நெஞ்சம் ஆரத் தழுவிட வேண்டு கின்றேன்’ என்று பேசிய கவிஞர்  ‘காளி காதலி’ல் வேறுவிதமாகப் பாடத் தொடங்கி விடுகிறார். லட்சுமி – சரஸ்வதி என்ற இரண்டு காதல்களிலும் இப்பெயர்கள் குறிக்கப் பெறுகின்ற தெய்வங்களைப் பற்றிப் புலவன் பாடவில்லை என்பது தெளிவு. தெய்வங்களாகக் கருதியிருப்பாரேயானால்  ‘ஆரத் தழுவுதல்’ பற்றிய பேச்சுக்கு இடமே இல்லை. எனவே, சரஸ்வதியை அறிவின் அடையாளமாகவும், லட்சுமியைச் செல்வத்தின் அடையாளமாகவும் கொண்டு கவிஞர் பாடுகிறார் என்று அறிய முடிகிறது என்றால், இதன் கருத்தைச் சற்று ஆழச் சிந்திக்க வேண்டும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அறிவு, செல்வம் என்ற இரண்டையும் தன் முயற்சியினாலும் இயற்கையாகவும் பெறுகின்றான் என்பது உண்மை. என்றாலும், இவ்விரண்டைப் பெறுகின்ற மனிதன் இவை தன்னால் பெறப்பட்ட பொருள்கள் என்றும், பெறுகின்ற தான் தான் தலைவன் என்றும் அறிந்து இவற்றை ஆள்வதைவிட்டு இவற்றால் தான் ஆட்கொள்ளப்பெற்று இவற்றிற்கு அடிமையாகி விடுகின்றான். அறிவுக்கு அடிமையாகித் தம் நிலையை மறக்கின்றவர்களும், செல்வத்திற்கு அடிமையாகித் தம் நிலைமை மறக்கின்றவர்களும் இவ் வுலகிடை என்றும் உளர். நம்மால் ஆட்சி செய்யப்பட வேண்டிய பொருள்கள் நம்மை அடிமைப்படுத்தினால் விளைகின்ற பேராபத்துப் பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. மோட்டார் வாகனத்தை நாம் செலுத்த வேண்டுமே தவிர, நம்மை அது செலுத்தத் தொடங்கினால் முடிவு அழிவு என்று சொல்லவும் வேண்டுமோ?

இந்தப் பேருண்மையைத் தான் கவிஞர் சரஸ்வதி, லட்சுமி காதல்களில் வெளியிடுகின்றார். அறிவும் செல்வமும் நம்மால் விரும்பிச் சம்பாதித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவைதாம். என்றாலும், நாம் தலைவனாக இருத்தல் வேண்டுமே தவிர அவற்றிற்குத் தலைமை தந்துவிடக் கூடாது என்ற உண்மையை விளக்குகிறார். தம்முடைய 22 வயது வரையில் அறிவையே தலையாயதாகக் கருதிச் சித்தம் தளராமல் பித்துப் பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அதனிடை வைத்து அதே நினைவாகப் பிற வாஞ்சையில்லாமல் இருந்ததாகக் கவிஞரே கூறுகிறார் என்றால், பல்வேறு மொழிகளையும் விஞ்ஞானப் புதுமைகளையும் கற்கின்ற பருவத்தில் இவற்றைத் தவிர வேறு வாழ்க்கையில் அடைய வேண்டிய பொருள் ஒன்றுமே இருத்தற்கில்லை என்ற கருத்தில் அறிவுக்கு அடிமையாகிக் கவிஞர் இருந்த வரலாற்றைக் காண முடிகின்றது. அதேபோல ஓயாது வறுமையில் உழல்கின்ற கவிஞருக்கு ஒவ்வொரு சமயம் பொருள் கையில் கிடைப்பதும் அது உடனே அழிவதும் இயல்பாக இருந்தது போலும். இதை மனத்தில் இருத்தி,

புன்னகை செய்திடுவாள் - அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்து இருப்பேன்; சற்று என்
முன் நின்று பார்த்திடுவாள் - அந்த
மோகத்திலே தலை சுற்றிடும் காண் பின்னர்
என்ன பிழைகள் கண்டோ - அவள்
என்னைப் புறக்கணித்து ஏகிடுவாள்

என்று பேசும் பொழுது ஒவ்வொரு சமயம் செல்வமே அனைத்தும் என்று கருதி வாழ்ந்த வாழ்க்கையையும் கவிஞர் நினைவுகூர்கின்றார்.

ஆனால், இறைவன் அருளால் இந்த அறியாமை விரைவில் கவிஞனை விட்டு நீங்கிவிடுகிறது. அறிவின் துணை கொண்டும் செல்வத்தின் துணை கொண்டும் பரம்பொருளைக் காண முடியாது என்ற பேருண்மையைக்  ‘காளி காதலில்’ மிக அழகாகப் பேசுகிறார். அறிவும் செல்வமும் போல், அவை பெண்ணாகிக் கனவில் காட்சி அளித்தது போல், மூன்றாவது நாளும் கனவில் ஒரு பெண் வந்ததாகவும் இதுவும் கன்னி வடிவம் என்று அருகில் சென்று பார்த்தவுடன் இது அறிவு, செல்வம் என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் வடிவம் என்று அறிந்ததாகவும் அழகாகப் பேசுகிறார்:

அன்னை வடிவமடா இவள்
ஆதிபரா சக்தியடா- இவள்
இன்னருள் வேண்டுமடா - பின்னர்
யாவும் உலகில் வசப்பட்டு போமடா

என்றும்,

நித்தம் தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா

என்றும் பாடுவது திருவண்ணாமலை வரலாற்றை நினைவூட்டுவது போல், அறிவும் செல்வமும் என்ற இரண்டற்கும் அப்பாற்பட்டது பரம்பொருள் என்ற பேருண்மையைக் கவிஞர் காணுமாறு செய்கிறது. செல்வத்தைக் காட்டிலும் அறிவில் அதிக ஈடுபாடும் நிறைந்த அளவும் பெற்று இருந்தாராகலின் அடிக்கடி அறிவினாலும் கல்வியினாலும் மட்டும் பயன் பெற முடியவில்லை என்ற பேருண்மையை விளக்கிக் செல்கிறார்  ‘முத்துமாரி’ என்ற பாடலில்:

பல கற்றும் பல கேட்டும்
பயன் ஒன்றுமில்லையடி முத்துமாரியம்மா
துணி வெளுக்க மண் உண்டு
தோல் வெளுக்கச் சாம்பல் உண்டு.
மணி வெளுக்கச் சானை உண்டு முத்துமாரியம்மா
மனம் வெளுக்க வழியிலையே

என்று பாடிய கவிஞர்,

நிலையெங்கும் காணவில்லை எங்கள் முத்து மாரியம்மா
        எங்கள் முத்து மாரியம்மா
நின் பாதம் சரண் புகுந்தோம்

என்று முடிக்கின்றார்.

தோத்திரப் பாடல்கள் நீங்கலாக கவிஞரின் உத்தியையும் புலமைத் திறத்தையும் காண வாய்ப்பு அளிப்பது ’கண்ணன் பாடல்கள்’ ஆகும். பழைய இலக்கிய மரபை கவிஞர் நன்கு அறிந்திருக்கிறார். பரம்பொருளைப் புருஷோத்தமன் என்றும், உயிர்கள் எல்லாம் தலைவிகள் என்றும் கருதி, நாயக – நாயகி பாவத்தில் பாடல்கள் எழுதுவது பண்டைய மரபு தான். இடைக்காலத்தில் பரம்பொருளைக் குழந்தையாகக் கருதி  ‘பிள்ளைத் தமிழ்’ பாடுகின்ற மரபும் தோன்றிற்று. இருபதாம் நூற்றாண்டு வரையில் இந்த இரண்டு முறைகள் தவிர வேறு புது வழி வகுப்பார் எவரும் இலர். ஆனால், கடவுளைத் தாயாய், தந்தையாய், தோழனாய், அரசனாய், சற்குருவாய், காதலனாய், காந்தனாய். ஆண்டானாய் பாரதியார் பாடியிருக்கின்ற புதுமைகள் ஒருபுறமிருக்க – பண்டைக் கவிஞர்கள் நினைத்துப் பார்ப்பதற்கும் அஞ்சுகின்ற முறையில் கண்ணனைச் சீடனாய், சேவகனாய், காதலியாகவும் வைத்துப் பாடிய பெருமை பாரதிக்கே உரியது.

கற்பனை கடந்து நிற்கின்ற பரம்பொருளின் உயர்வற உயர்ந்திருக்கின்ற நலத்தை நன்கு அறிந்தவர்களே யாயினும் நம்முடைய முன்னோர்கள் இத்துணை உயர்ந்த பரம்பொருள், அடியவர்களைப் பொறுத்தமட்டில் எளிவந்த தன்மையுடையது என்ற கருத்தைப் பேசியும் சொல்லியும் வந்துள்ளனர். காட்டில் வாழும் யானை ஒன்றின் பொருட்டாகப் பரம்பொருள் இரங்கி இறங்கி வந்தது என்று வரலாறு வகுக்கும் பொழுது இறைவனுடைய எளிமைக்கு (செளலப்பியத்திற்கு) ஓர் எல்லை வகுப்பதாக அக் குறிப்பு அமைகிறது. இந்த அளவுக்கு எளிவந்த தன்மையைப் பேசிய பிறகு அப்படி வருகின்ற பொருளை ஏன் சீடனாக, சேவகனாக, காதலியாகக் கொள்ளக் கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் அகங்கார, மகங்காரங்களை விட்ட ஓர் ஆன்மா. பரம்பொருளோடு ஒன்றியிருக்கின்ற இயல்பைப் பெற்று விடுகிறது; ஆதலில் இவ்விரண்டின் இடையே சேவகன் என்றோ சீடன் என்றோ காதலி என்றோ ஓர் உறவு முறையைக் கற்பிப்பதில் தவறு ஒன்றுமில்லை. பல துறைகளில் புது வழி வகுத்த கவிஞர் இத்துறையிலும் புது வழி வகுக்கின்றார். என்றாலும், பழமையை மறவாமல் பாடுகின்ற இயல்பையும் காண முடிகின்றது.  ‘கண்ணன் என் தோழன்’ என்ற பகுதியில், வள்ளுவப் பெருந்தகை நட்பிற்குக் கூறிய இலக்கணம் அனைத்தையும் மனத்தில் கொண்ட கவிஞர் பாடலை இயற்றுகிறார்:

நெஞ்சம் ஈனக் கவலைகள் எய்திடும் போதில்
இதம் சொல்லி மாற்றிடுவான்
உழைக்கும் வழி, வினையாளும் வழி, பயன்
உண்ணும்வழி உரைப்பான்
லேகருவம் கொண்ட போதினில்
ஓங்கி அடித்திடுவான் -- நெஞ்சில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னால் அங்குக்
காரி உமிழ்ந்திடுவான்

நட்பிற்கு இலக்கணம் கூறும் பொழுது – நட்புப் பொழுதுபோக்குவதற்கு அன்று; தவறு நிகழ்கின்ற காலத்தில் இடித்துச் சொல்வதற்கே ஆகும் என்ற கருத்தில்,

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்று பொதுமறை பேசிச் செல்வதை இப் பாடலில் காண்கின்றோம். இதனையடுத்துக்  ‘கண்ணன் என் சீடன்’ என்ற பகுதியில் கவிஞனின் சுயசரிதத்தை, அவனுடைய வளர்ச்சி முறையை ஓரளவு காண முடிகின்றது:

உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும்
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும்
சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்
தன்னுளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன் இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலா மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கு எனைத்
தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,
பலவகை யால் அகப் பற்றுறச் செய்தான்.

இங்ஙனம் தன்மாட்டு உள்ள குறைகளை அறிந்து கொள்ளாத குரு ஒருவன் உலகத்தை யெல்லாம் சீர்திருத்தி நிலை நிறுத்திவிட வேண்டுமென்ற நினைவில் ஆழ்ந்து தன் மாட்டுக் கழிவிரக்கம் கொண்டு தன்னையே திருத்திக் கொள்ள வேண்டிய ஒருவன் அவற்றையெல்லாம் மறந்து தான் ஒரு சீடனைத் தகைமை சால் கவிஞனாக ஆக்க முற்படுகின்ற அவலக் கதைதான்  ‘கண்ணன் என் சீடன்’ என்ற பகுதியாகும். குரு சொல்லிய எந்த ஒன்றையும் சீடன் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்ற நிலை வரும்பொழுது சீடன் மாட்டு ஆசிரியனுக்குச் சினம் பிறக்கின்றது. ஆனால், அந்தச் சினத்தின் அடிப்படையைப் பார்க்கும் பொழுது உண்மை விளங்கி விடுகிறது. சீடன் திருந்தவில்லையே என்ற காரணத்தால் ஆசிரியனுக்குச் சினம் தோன்றுமேயானால், அதில் மனக் காழ்ப்புத் தோன்ற வழியில்லை. அதன் எதிராகத் தான் சொல்லியதைச் சீடன் கேட்கவில்லை என்பதனால் சினம் தோன்றினால் அச் சினத்தின் அடிப்படையில் சீடனுக்கு நன்மையில்லை. அதன் எதிராகத் தன்னுடைய அகங்காரம் அழிந்து விடுவதைக் கண்ட கவலை தான் ஆசிரியனுக்குப் பிறக்கின்றது. இக் கருத்தைத்தான் கவிஞர்,

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுறை
யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்

என்று பேசுகிறான். ஆசிரியரின் முயற்சிகள் அனைத்தும் தோற்று இறுதியில் தன்னைத் தான் மறக்கின்ற அளவுக்கு அகங்காரம் விசுவரூபம் எடுத்ததன் பயனாய்

சீச்சீ பேயே சிறிதுபோழ் தேனும்
இனி என் முகத்தின் எதிர்நின் றிடாதே.
போபோ

என்று இடிபோல் பேச வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. மாயக் கண்ணன் ஒரு சிறிதும் கவலைப்படாமல் புறப்பட்டுப் போய்விட்டான். தன் பெருமையை அறிந்த சீடன், தான் இவ்வாறு பேசியவுடன் மீண்டு விடுவான் என்று நினைக்கின்றது, அகங்காரம். ஆசிரியன் எதிர்பாராத வகையில் சீடன் புறப்பட்டுப் போய்விட்டான் என்பதைக் கண்டவுடன் அகந்தை முற்றும் அழிந்த ஆசிரியன் கீழ்வருமாறு பேசுகிறான்:

மகனே, போகுதி, வாழ்க நீ, நின்னைத்
தேவர் காத்திடுக நின்றனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதெதோ செய்தேன்.
தோற்றுவிட் டேனடா சூழ்ச்சிக ளழிந்தேன்
மறித்தினி வாராய் , செலுத்தி, வாழி நீ
எனத் துயர் நீங்கி, அமைதியோ டிசைத்தேன்.

இம்முறையில் அகந்தை முற்றிலும் அழிந்தவுடன் ஆசிரியன் அமர வாழ்வு பெறுகின்றான். இப்படி யான், எனது என்பது அற்றவிடத்தில் மோன வடிவான இறைவன் தோன்றுவான் என்பதை இறுதி அடிகள் தெரிவிக்கின்றன:

சென்றனன் கண்ணன், திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்
“ஐயனே, நின்வழி யனைத்தையும் கொள்வேன்.
தொழில் பல புரிவேன், துன்பமிங் கென்றும்
இனிநினக் கொன்னால் எய்திடா” தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்.
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்;

‘மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல்
அழித்திட லெல்லாம் நின்செய லன்று காண்;
தோற்றே னென நீ உரைத்திடு பொழுதிலே
வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெலாம்.
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து..
வாழ்க நீ’ என்றான் வாழ்கமற் றவனே

இவ் உலகம் தோன்றிய நாள் தொட்டு மக்கள் எத்தனையோ புதுமைகளைக் கண்டு மனம் மறுகுகின்றனர். அவற்றுள் ஒன்று ஆண்டவனை நம்பி யிருப்பவர்கள் அவதிப்படுவதும்,  ‘கடவுளாவது கத்திரிக்காயாவது’ என்று பேசுபவர்கள் வளமாக இருப்பதுமாகும். உலகில் என்றுமே உள்ள இந்தப் புதுமையைக் கண்டு எல்லாக் காலத்திலுமுள்ள பெரியவர், நடு வயதினர், சிறுவர் ஆகிய அனைவருமே வியப்பு அடைந்திருக்கின்றனர். மிகத் தொண்டு கிழவராகிய திருநாவுக்கரசர் இந்தப் புதுமையை நினைந்து.

“நினைந்து உருகும் அடியாரை நையவைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்”

என்று பாடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இப் பெருங் கிழவரின் பின்னர் எட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த பச்சிளங் குழந்தையாகிய நம்மாழ்வார்,

நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்க
எண்ணாராத் துயர்விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை?

என்று பாடிச் செல்கிறார். எனவே, மிகப் பெரிய கிழவருக்கும் மிகச் சிறிய குழந்தைக்கும் இப் புதுமை வியப்பை உண்டாக்குகிறது. இறைவனை முழுவதுமாக நம்பி,  ‘நீயே சரணம்’ என்று சொல்லுகின்ற அடியார்கள் மனம் நைந்து உருகும் படியான அளவு சோதனை செய்யப்படுகிறார்கள் என்று பேசுகின்ற கருத்தைத் தான் இந்த இரண்டு பெருமக்களும் கூறியுள்ளனர். நம்முடைய காலத்தில் வாழ்ந்தவராகிய பாரதியாரும் இந்த உலகியல் நடைமுறையைக் கண்டு வியப்பு அடைகிறார்.  ‘கண்ணன் என் தந்தை’  என்ற பகுதியில் கீழ்வருமாறு பாடுகிறார்:

பல்வகை மாண்பினிடையே - கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு;
நல்வழி சொல்லு பவரை - மனம்
நையும்வரை சோதனை செய் நடத்தையுண்டு,

இந்த மூன்று பெருமக்களும் கூறியதைப் பார்க்கும் பொழுது நம்முடைய மனத்தில் ஒரோவழித் தோன்றுகின்ற ஐயம் பெரியதாக வளர்ந்து, ஆண்டவனைச் சரண் அடைவதைக் காட்டிலும், வேண்டாமென்று ஒதுக்கியிருப்பதே மேலான வாழ்க்கை போலும் என்று நினைக்கத் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஐயத்தைப் போக்கும் முறையில்தான் திருநாவுக்கரசர் தம் பாடலில் முதல் அடியில் இந்த வினாவை எழுப்பி, இரண்டாவது அடியில் அதற்குரிய விடையையும் பகர்கின்றார். இத்தகைய பெருந்துயரம் ஏன் தோன்றுகிறது என்றால், அடியார்களுடைய வினையைப் போக்குவதற்கே துன்பங்கள் தரப்படுகின்றன என்று இறைவனுடைய மறக்கருணை பற்றிப் பேசப் பெறுகிறது. இக்கருத்தையும் பாரதி நன்கு அறிந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

பாரதி கவிதைகளில் தனியே நின்று சிறப்புப் பெறுகின்ற பெருமையுடைய பகுதி  ‘பாஞ்சாலி சபதம்’. பெருங்காப்பியம் பாட வாய்ப்பு இல்லாத கவிஞர்  பாஞ்சாலி சபதம் ஆகிய காப்பியத் துணுக்கு ஒன்றைப் பாட முனைகின்றார். பெருங்காப்பியத் தில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு ‘பாஞ்சாலி சபதம்’ என்ற பகுதியில் ஒரு காப்பியத் துணுக்கை இணைக்கின்றார்.

பாரத சமுதாயத்தில் இராமாயணம், பாரதம் என்ற இரண்டு இதிகாசங்களும் பரவலாகப் பயிலப்பட்டு இருந்தவைதாம். பழைய சங்கப் பாடல்களிலும் இந்த இரண்டு கதைகளும் ஓரளவு பேசப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் பாரதத்தைவிட இராமகாதையில் – அதிலும் கம்பனுடைய இராம காதையில் – கவிஞர் பெரிதும் ஈடுபட்டவர்.  ‘யாம் அறிந்த புலவரிலே’ என்ற பாடலில் கம்பனுக்கு ஓர் இடம் கொடுத்திருக்கிறார் என்பதையும், கம்ப ராமாயணத்தின் உட்பொருளைப் பலரும் அறியாத முறையில் அறிந்த கம்பனுடைய குறிக்கோளே மானிடத்தின் சிறப்பைப் பாடுவது தான் என்ற பெருண்மையை உணர்ந்து கம்பனுக்கு ஒரு பட்டம் கொடுக்க விரும்பிய பாரதியார் ஏனையோர் போல் ‘கவிச் சக்கரவர்த்தி’ என்று பழைய பட்டத்தைத் தாராமல் இன்றும் நாம் நினைந்து வியக்கின்ற ஓர் அற்புதப் பட்டத்தைக் கம்பனுக்கு வழங்கியிருக்கிறார் என்பதையும் அறிதல் வேண்டும். கம்பன் என்று ஒரு மானுடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் என்ற அடியில்  ‘மானுடன்’ என்ற – சொல்லை ஒப்பற்ற முறையில் பொருள் ஆழத்துடன் பயன்படுத்திச் செல்கிறார். கவிச் சக்கரவர்த்தி கம்பம், நாடன்  ‘வேறு உள குழுவை யெல்லாம் மானுடம் வென்றதம்மா’ என்று பாடி மனிதத் தன்மை  தெய்வத் தன்மையை அடுத்து நிற்பதாகும் என்ற பெருண்மையை விளக்கியுள்ளார். கம்பனுடைய இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்த பாரதி மானிடத்தின் பெருமை பேசிய கம்பனை  ‘மானுடன்’ என்றே அழைத்து மகிழ்கின்றார். இவ்வளவு தூரம் கம்பனில் ஈடுபட்ட பாரதியார் அந்தக் கம்பனிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு தம்முடைய காப்பியத் துணுக்கைப் பாடாமல் பாஞ்சாலி சபதத்தை எடுத்துக் கொண்டதில் அவருடைய மனப்போக்கை நாம் அறிய முடிகிறது.

பாரதியார் காலத்தில் வெள்ளையர்களாலும் சுதேச சமஸ்தான மன்னர்களாலும், அடிமைப் புத்தி படைத்த நம்மவர்களாலும் துகில் உரிந்து. மானபங்கம் செய்யப் பெறுகின்ற நிலையில் பாரதத் தாய் இருந்தாள். அவளுடைய ஆறாத் துயரத்தைப் பெருகுகின்ற கண்ணீரைத் துடைக்க யாரும் முன்வரவில்லை. முப்பது கோடிப் பிள்ளைகளைப் பெற்ற அப் பெருமாட்டியின் துயர் துடைக்க யாரும் வாராத கொடுமையை நினைக்கின்றார் கவிஞர். அவர்களுள் அறிவுடையோர். வீரம் உடையோர், மானம் உடையோர். பகையினை வெல்லும் பண்புடையோர் இல்லாமல் போய்விட்டார்களோ – இருந்தால் அவர்கள் வாய் மூடியிருப்பதன் தத்துவம் என்ன என்ற வினாக்கள் கவிஞரின் உள்ளத்தில் தீயாகச் சுடுகின்றன. இத்தகையதொரு கொடுமை இதற்கு முன்னர் எங்கேனும் நடந்தது உண்டா என்று அவர் மனம் சிந்திக்கின்றது. ஆம்; இணையற்ற வீரர்களை, உலகம் போற்றும் உத்தமர்களை, நீதி நெறி தவறாத நேர்மையாளர்களைக் கணவர்களாகப் பெற்றிருந்தும் ஒரு பெருமாட்டி இதேபோல் பண்டைய காலத்தில் அல்லலுற்றாள். இந்த ஒருமை காரணமாக இதிகாசங்களில் வரும் பாஞ்சாலியின் நினைவு கவிஞனுக்கு வருகின்றது. நாட்டு வளங்கள் அனைத்தும் நிறைந்த இந்தப் பாரத தேவி, பெண் நலம் அனைத்திற்கும் கொள்கலமாக உள்ள பாஞ்சாலியை நினைவூட்டுகிறாள். லஜபதிராய், திலகர், மகாத்மா போன்ற வீரர்கள் தாயின் துயர் துடைக்க நிற்பதைப் போலப் பாஞ்சாலியின் கணவர்களும் அவள் துயர் துடைக்க நிற்கின்றனர். துச்சாதனன் உரிகின்ற துகிலைப் போல் வெள்ளையர்கள் இப் பாரதத் தாயின் பண்பைக் குலைத்து அவளுடைய உயிர்ச் சத்தைச் சுரண்டிக் கொண்டு இருக்கின்றார்கள். மேலே கூறிய மகாத்மா போன்ற வீரர்கள் ஒருசிலரைத் தவிர, முப்பது கோடி மக்களும் ஆட்டு மந்தைகள் போல் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இயல்பு, துரியோதனன் அவையில் கங்கை மகன் (பீஷ்மர்) போன்றவர்கள் வாய்மூடி மெளனியாக இருந்த நிலையை நினைவூட்டுகின்றன.

சுதேச மன்னர்கள் என்ற பெயரில் இருந்த சிலர் தங்களால் ஆளப் பெறுகின்றவர்கள் தங்களைப் போன்ற மனிதர்களே என்ற நினைவுகூட இல்லாமல் மக்கள் பட்டினியால் வருந்திச் சாகின்ற கொடுமையான சூழ்நிலையில் தங்களால் வளர்க்கப்படுகின்ற நாய்களுக்குத் திருமண விழாக் கொண்டாடி அவற்றுக்காக லட்சக்கணக்கில் ரூபாய் செலவழிக்கின்ற வீணர்களைச்  சுதேச மன்னர்களாகப் பெற்றிருந்த கொடுமையைக் கவிஞர் காண்கின்றார். அவரையும் அறியாமல் உள்ளம் கொதிக்கின்றது. அவருடைய சினம் முழுவதும் கொட்டித் தீர்ப்பதற் குரிய கொள்கலமாகப்  ‘பாஞ்சாலி சபதம்’ அமைகின்றது. பழைய வியாசனும் புதிய வில்லிபுத்தூரானும் ஒரு சில வரிகளில் பாடிச் சென்ற பாஞ்சாலியின் துயரம் ஒரு பெரிய காப்பியத் துணுக்காகக் கவிஞரிடம் முகிழ்கிறது. பழைய கதையைப் பாடிச் சென்றாலும் ஓர் உள்ளுறை கதையாக  (allegory) கவிஞர் இதனை அமைக்கின்றார். காப்பியம் பாடி வருகின்ற கவிஞர் பாத்திரங்களைப் பேச விடல் வேண்டும்; நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்திச் சொல்ல வேண்டும் – என்ற இரண்டு நிலை போகத் தம்முடைய கருத்தைச் சொல்லப் புகுந்து மற்றொன்றை விரித்தல் என்ற குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பதனை பாரதியார் அறியாதவர் அல்லர். என்றாலும், எத்தனையோ இடங்களில் தம்மையும் மறந்து ஆறாத்துயரில் ஆழ்ந்து பாஞ்சாலியை மறந்து பாரத தேசத்தை நினைந்து பாடத் தொடங்கி விடுகிறார். எனவே, தருமன் நாட்டை வைத்துச் சூதாடித் தோற்றான் என்று சொல்ல வந்த கவிஞர், அந்தக் கொடுமையைப் பேசிய பிறகு அவன் காலத்தில் வாழ்ந்த அரசர்களின் போக்கை இடித்துப் பேசுகிறார்:

கோயிற் பூசை செய்வோர் - சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் - வீட்டை
வைத்திழத்தல் போலும்
ஆயிரங்க ளான - நீதி
யவையுணர்ந்த தருமன்
தேயம் வைத் திழந்தான்; - சீச்சீ
சிறியர் செய்கை செய்தான்.

நாட்டு மாந்த ரெல்லாம் - தம்போல்
நரர்க ளென்று கருதார்;
ஆட்டு மந்தை யாமென் றுலகை
அரச ரெண்ணி விட்டார்.
காட்டு முண்மை நூல்கள் - பல தாங்
காட்டினார்க ளேனும்,
நாட்டு ராஜ நீதி - மனிதர்
நன்கு செய்ய வில்லை.

பாரதியின் நாட்டுப் பற்று – நாட்டின் நலனைக் கவனியாதவர் மாட்டு அவர் கொண்ட அலட்சியம் – நாட்டுக்குத் தீங்கிழைப்பார்மாட்டு அவர் கொள்ளும் சீற்றம் – கடமை மறக்கும் ஆட்சியாளரை அவர் சாடுகின்ற திறம் ஆகிய அனைத்தும் சிறந்த கவிதை வடிவில் அமைந்திருப்பது பாஞ்சாலி சபதம்.

இவற்றையல்லாமல் தனிப்பாடல்கள் என்ற பெயரிலும் பல பாடல்களைப் பாரதி பாடியிருக்கிறார். நல்ல கற்பனை வளம், சொல்லாட்சி முதலிய வற்றுக்கு இவருடைய பாடல்கள் அனைத்துமே. சான்றாக நிற்பினும், தனிப்பாடல்களுள்  ‘கவிதா தேவி அருள் வேண்டல்’,  ‘அந்திப் பொழுது’ முதலிய பகுதிகளில் மிகச் சிறந்த பாடல்களைப் பாடியிருக்கின்றார்.

 ‘பாரதியின் கட்டுரைகள்’ என்ற பெயரில் தத்துவக் கட்டுரைகள், மாதர், சமூகம் என்ற தலைப்புகளில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளும் வந்துள்ளன. பாரதியின் உரைநடை 19 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய தமிழ் உரை நடைக்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். கவிதைகள் பாடிய பாரதியின் சொல்லோட்டம் – உரைநடையில் காணப் பெறவில்லை. சாதாரணமாகத் திண்ணையில் அமர்ந்து பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் இரண்டு பெரியவர்கள் அல்லது மூதாட்டிகள் அன்றைய நிலையில் எப்படிச் சாதாரணச் சொற்களின் மூலம் தம்முடைய உரையாடல்களை நடத்துவார்களோ அதேபோல் தான் கவிஞரின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

இந்தக் காரணத்தால் அவருடைய உரைநடையைப் படிக்கும் பொழுது அவர் சொல்லுகின்ற கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறதே தவிர, உணர்ச்சியூட்டும் ஆற்றல் அதிகம் அவருடைய உரைநடைக்கு இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.  ‘ஞானரதம்’ ஒன்று மட்டும் இந் நிலைக்கு மாறுபட்டுள்ளது. நீளமான வாக்கியங்கள் இல்லாமல் மிகக் குறுகிய வாக்கியங்களிலேயே உரைநடையை அமைத்துள்ளார். கவிதையில் காண முடியாத அளவு அதிகமான வடசொற்கள் அவருடைய உரைநடையில் காட்சியளிக்கின்றன. மணிப்பிரவாள நடை என்று கூறக்கூடிய அளவிற்குப் பிற சொற்கள் கலந்து அமைக்கப்பெற்ற அந்தக் கட்டுரைகள் தம் கருத்தைக் கற்பார்க்கு அறிவுறுத்துகின்றனவே தவிர, வீறு நடை போடவில்லை; நொண்டுகின்றன என்றாலும் 1920 வாக்கில் சோஷலிச சமுதாயத்தைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை இன்று நம்முடைய மனத்தில் வியப்பை உண்டாக்குகிறது. ‘செல்வம்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரை எல்லோருடைய நாவிலும் சோஷலிசம் ஆட்படும் இற்றைநாளில் கூடப் புதுமையை விளைவிப்பதாய் அமைந்துள்ளது. 1917-இல் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சிக்குப்பின் மூன்றே ஆண்டுகள் கழித்து – அந்தப் புரட்சியை ஓரளவு அறிந்த பிறகு – வன்முறையோடு கூடிய சோஷலிசம் பயன் அளிக்காது என்ற பேருண்மையை விளக்கிப் புதுவகையான சோஷலிச சமுதாயத்தை எழுதிச் செல்கிறார். “கொலையைக் கொலையால் தான் நிறுத்த முடியும். அநியாயம் செய்வோரை அநியாயத்தால்தான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே யொழிய அதை நீக்க வல்லது ஆகாது. அநியாயத்தை அநியாயம் விருத்தி பண்ணுமே யொழியக் குறைக்காது” என்று எழுதிச் செல்லுகின்ற பாரதியார்  “ரஷ்யாவிலும் கூட இப்பொழுது ஏற்பட்டிருக்கிற சோஷலிச ராஜ்யம் எக் காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையது என்று கருத வழியில்லை” என்ற ஒரு தீர்ப்பையும் சொல்லிவிட்டுப் போகிறார்.

இவ் உரைநடைப் பகுதி நீங்கலாக நெடுங்கதையும், சிறுகதையும் பல எழுதியிருக்கிறார் கவிஞர்.  ‘நவ தந்திரக் கதைகள்’,  ‘சந்திரிகையின் கதை’ முதலியவை மிக அழகான படைப்புகள் என்றாலும், சிறுகதைகள், நெடுங்கதைகள் என்பவற்றிற்கு நாம் வகுக்கும் இலக்கணத்திற்கு இவை பொருந்தி வரா.  எனவே, வாழ்க்கையில் அனுபவிக்க முடியாத சுக போகங்களையெல்லாம் கற்பனையில் அனுபவிக்க வேண்டுமென்று கருதிய கலைஞர் கற்பனைப் படைப்பை ‘ஞானரதம்’ என்ற பெயரில் படைக்கின்றார். துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மனம் அதிலிருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றுத் துயரத்தை மறந்திருப்பதற்காகப் படைக்கின்ற கலையை – Escapism Art – துயர் தப்பு நெறிக் கலை என்று மேனாட்டார் கூறுவர். பாரதியின்  ‘ஞான ரதம்’ அத் தொகுப்பைச் சேர்ந்தது என்று கூறல் இயலாது. ஆனால், அக் கற்பனை தொடங்குகின்ற விதம் அவ்வாறு எண்ண வைக்கிறது என்று கூறினால் தவறு இல்லை.

அவல நிலையிலிருந்து சிறிது விடுதலை பெற வேண்டும் என்று நினைக்கின்ற மனம் கற்பனையில் இறங்குவது மனித இயல்பு. அப்படிக் கற்பனையில் உலாவும் பொழுது கந்தர்வ லோகத்தையும் சத்திய லோகத்தையும் பிரம லோகத்தையும் கற்பனை செய்வதில்லை. மூட நம்பிக்கை, பெண்ணடிமை, பெண்ணுக்கு மட்டும் கற்பு என்பவை நிரம்பியுள்ள இந்த உலகத்தை மாற்றியமைக்க விரும்புகிறார் கவிஞர். அவருடைய பாடல்களில் இக் கருத்துக்கள் நிரம்ப வருகின்றன. என்றாலும், இவை இவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறிக் கூறி அலுத்துப்போன கவிஞருக்குத் தாம் விரும்பும் முறையிலேயே அனைத்தும் அமைந்துள்ள ஓர் உலகத்தைப் படைக்கத் தோற்றுகிறது.

கால தத்துவத்தின் எதிரொளியாய் – காலத்துக்குரிய தேவையின் எதிரொலியாய்க் கவிஞன் தோன்றுகின்றான் என்பர். அத்தகைய கவிஞன் தொன்னெறியில் வேரூன்றி, புதுநெறி வகுக்கும் திறனுடையன் என்றும் கூறுவர். பாரதியாரின் கலைத்திறனை இந்நோக்கில் ஆராய்ந்து பார்த்ததன் விளைவே இச் சொற்பொழிவு.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s