-மகாகவி பாரதி
இக்கவிதை பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுதிகளில் காணப்படாதது. ‘சக்கரவர்த்தினி’ மகளிர் மாத இதழிலும், ‘சுதேசமித்திரன்’ நாளிதழிலும் வெளியான பாரதி பாடல் இது…

ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டவெம்
அன்னையின் மீதுதிகழ்
அன்பெனு மென்கொடி வாடிய காலை
யதற்குயிர் தந்திடுவான்
மாரியெ னும்படி வந்து சிறந்தது
வந்தே மாதரமே
மாணுயர் பாரத தேவியின் மந்திரம்
வந்தே மாதரமே
வீரிய ஞான மரும்புகழ் மங்கிட
மேவி நல் ஆரியரை
மிஞ்சி வளைந்திடு புன்மையிருட்கணம்
வீவுற வங்கமகா
வாரிதி மீதி லெழுந்த இளங்கதிர்
வந்தே மாதரமே
வாழிந லாரிய தேவியின் மந்திரம்
வந்தே மாதரமே! 1
.
காரடர் பொன்முடி வாணி மயந்தரு
கங்கை வரம்பினிலும்
கன்னியை வந்தொரு தென்றிசை யார்கலி
காதல் செயா யிடையும்
வீரர்கள் மிஞ்சி விளங்கு புனாமுதல்
வேறுள வூர்களிலும்
விஞ்சை யெனும்படி யன்புடன் யாரும்
வியந்திடு மந்திரமும்
பாரத தேச விரோதிகள் நெஞ்சு
பதைத்திடு மந்திரமும்
பாதக ரோதினு மேதக வுற்றிடு
பண்புயர் மந்திரமும்
வார முறுஞ் சுவை யின்னற வுண்கனி
வான் மருந்தெனவே
மாணுயர் பாரத தேவி விரும்பிடும்
வந்தே மாதரமே! 2
.
-சக்ரவர்த்தினி (பக்கம் 168) சுதேசமித்திரனில் 24-2-1906-ல் திரும்பவும் பிரசுரம் செய்யப்பட்டது. (பாடபேதம்: பொன்முடி. கன்னி- கன்னியாகுமரி)
$$$