-ஜி.மீனாட்சி
திருமதி ஜி.மீனாட்சி, பத்திரிகையாளர்; ‘ராணி’ வார இதழின் ஆசிரியர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது….

பல நூற்றாண்டுகளைக் கடந்த நமது இந்தியப் பாரம்பரியம், இளைஞர்களின் ஒட்டுமொத்த சக்தியால் தான் தழைத்துச் செழித்து வளர்ந்து வந்திருக்கிறது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் இளைஞர் சக்தியை, வலிமையை ஒருங்கிணைத்து ஒரு குறிக்கோளை நோக்கி அவர்களை நகர்த்திச் செல்வதில் மாபெரும் வெற்றி பெற்ற மகான்கள் அவதரித்த தேசம் இது.
காலங்காலமாய் இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்கும் மகத்தான மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். சுயநலம் கிஞ்சித்தும் இல்லாமல், ஒட்டுமொத்த நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு உழைத்திருக்கிறார்கள். அவர்களுள், இளைஞர்களின் முன்னுதாரணமாக (Roll Model), ஊக்கசக்தியாக எக்காலத்திலும் திகழும் ஓர் அவதார புருஷர் தான் சுவாமி விவேகானந்தர்.
அவர் தோன்றி 150 ஆண்டுகளான பிறகும், இப்போதும் இளைஞர்கள் மனதில் உந்து சக்தியாக, பின்பற்றத்தக்க ஆளுமையாக, பிரகாசமான துருவ நட்சத்திரமாகத் துலங்கிக் கொண்டிருக்கிறார்.
தட்டி எழுப்பும் வீரவரிகள்:
இன்றைய இளைஞர்களுக்குள் புதைந்து கிடக்கும் மன அழுத்தங்கள், அவநம்பிக்கைகளை விரட்டும் ஒரே சக்தி, விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகளுக்கு மட்டுமே உள்ளது. அவரது ஒவ்வொரு சொல்லும் இளைஞர்களின் உள்ளத்தைச் சுண்டியிழுக்கும் மந்திரச் சாட்டையாய் சுழல்கின்றன. “எழுமின், விழிமின், இலக்கை எட்டும் வரை ஓயாது உழைமின்” என்ற வீர வரிகளின் மூலம், உற்சாகமிழந்து, மனச் சோர்வடைந்து கிடக்கும் இளைஞர்களைத் தட்டி எழுப்புகிறார் சுவாமிஜி.
அடிமைப்பட்டுக் கிடந்த பாரதத்தை மீட்க இளைஞர்கள் ஒன்று திரண்டால் மட்டுமே முடியும் என்று முழுமையாக நம்பினார் அவர். தாழ்வுற்று வறுமையில் உழன்று கிடந்த ஏழைகளைக் கைதூக்கிவிடும் ஆற்றல் இளைய சமுதாயத்துக்கு இருப்பதாகக் கருதினார். உடல், பொருள், அறிவு மூன்றையும் உலக நன்மைக்கு அர்ப்பணிக்கும்படி இளைஞர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஏழைகளுக்குச் சேவை செய்ய வலிமையான இளைஞர்களே தேவை என்றுணர்ந்த அவர், “வலிமையும், உத்வேகமும், தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் மிக்க இளைஞர்களே எனக்குத் தேவை. அப்படிப்பட்ட இளைய பாரதத்தினரே வாருங்கள்” என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார்.
எந்தவித லட்சியங்களுமின்றி வெட்டியாய்ப் பொழுதைப் போக்கும் இளைஞர்களைக் கண்டு தான் வேதனைப்படுவதாகக் கூறினார். ஆர்ப்பாட்டமும், அலட்டலும் இல்லாத துறவு வாழ்க்கையைத் தானே வாழ்ந்து தன் வயதொத்த இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார்.
இன்று நாடு விடுதலையடைந்து 65 ஆண்டுகள் ஆன போதிலும், நம் இளைஞர்களின் அடிமைத்தனம் மாறவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமல்லவா? இன்றைய இளைஞர்கள் தங்களிடமிருந்தே இன்னமும் விடுதலை பெறவில்லை என்பதல்லவா உண்மை? மேற்கத்திய நுகர்வோர் கலாசாரமும், பாரதப் பண்பாட்டிற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களும் இன்றைய இளைஞர்களிடையே வேரூன்றிக் கிடப்பதை மறுக்க முடியுமா?
பணத்தால், அதிகாரத்தால், பதவியால், வன்முறையால் எதையும் சாதித்துவிடலாம் என்ற மனப்போக்கு இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றிருக்கும் இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள சுவாமி விவேகானந்தரிடம் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
“புத்தகத்தில் இருக்கிறது. பிறர் சொன்னார்கள் என்றெல்லாம் எந்தத் தத்துவத்தையும் ஏற்காதீர்கள். பகுத்து சோதனை செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அவர்களின் உள்ளத்தின் அடியாழத்தில் பதியும்படி அழுத்தமாகக் கூறுகிறார் விவேகானந்தர். படிக்கும் வயதில் அரசியல், சினிமா என்று மடை மாறிச் செல்லும் இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய அற்புதக் கருத்துக்கள் அவை.
மன ஒருமைப்பாடு:
சுவாமிஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், இன்றைய இளைஞர்களுக்கு மிகப் பெரிய உதாரணமாக அமையும். அமெரிக்காவில் ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ஒரு நதிக் கரையோரமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் சிலர் கூட்டமாக நின்று அந்த நதியில் மிதந்து கொண்டிருந்த பந்துகளை துப்பாக்கியால் சுட முயன்று கொண்டிருந்தனர். யாராலும் துல்லியமாகக் குறி பார்த்துச் சுட முடியவில்லை. பந்து குறி தவறி நழுவிக் கொண்டிருந்தது.
சுவாமிஜி அவர்களிடம் சென்று, தான் அந்த பந்தைச் சுட்டு வீழ்த்துவதாகக் கூறினார். காவியுடையணிந்த சன்னியாசி ஒருவர், துப்பாக்கியை எடுத்து குறி பார்த்துச் சுடுவது சாத்தியமா என்ற அவநம்பிக்கையில் அவர்கள் அவரை ஏளனமாகப் பார்த்தனர். சுவாமிஜி அவர்களிடமிருந்த துப்பாக்கியை வாங்கி இலக்கைக் குறி வைத்து சுட்டார். என்ன ஆச்சரியம்! விறுவிறுவென பந்துகளை சுட்டுத் தள்ளிக் கொண்டே இருந்தார். அங்கிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.
“சுவாமி, உங்களால் எப்படி இது சாத்தியமாயிற்று? துப்பாக்கி சுடுவதில் உங்களுக்கு ஏற்கெனவே பயிற்சி உள்ளதா?’’ என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
“துப்பாக்கியை எடுத்தவுடன் அந்த பந்துகள் மட்டுமே என் கவனத்தில் இருந்தன. வேறு எந்த சிந்தனையும் இருக்கவில்லை. அதைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இதற்கு முன்பாக நான் துப்பாக்கியைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை’’ என்று சுவாமிஜி அவர்களைப் பார்த்து புன்முறுவலுடன் பதிலளித்தார்.
நம் எண்ணமும், சிந்தனையும், செயலும் நம் குறிக்கோளைச் சுற்றியே இருக்க வேண்டும். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தால் மனம் தடுமாறிப் போகும் என்பதே சுவாமிஜியின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
அபாரமான நினைவாற்றல்:
சுவாமிஜியின் அபார நினைவாற்றலுக்கு கட்டியம் கூறுவது போல மற்றுமொரு நிகழ்ச்சி நடந்தது. பேலூர் மடத்தில் ஒரு முறை சுவாமிஜி, ‘என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா‘எனப்படும் தகவல் கலைக்களஞ்சிய புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். 25 வால்யூம்களைக் கொண்ட அந்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்த அவர், விரைவிலேயே 10 வால்யூம்களை முடித்துவிட்டு 11-வதை படிக்கத் தொடங்கினார்.
அப்போது அங்கு வந்த அவரது சீடர் ஒருவர் அந்தப் புத்தகத்தில் இருக்கும் நீண்ட வரிகளைப் பார்த்துவிட்டு, “இது போன்ற புத்தகத்தைப் புரிந்து படிக்கவேண்டுமானால் ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் படித்தால் கூட முடியாது” என்றார். அதைக் கேட்ட சுவாமிஜி, “இதுவரை நான் 10 வால்யூம்களைப் படித்துவிட்டேன். இதிலிருந்து நீ எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேள். நான் சரியாக பதில் சொல்கிறேன்” என்றார்.
அந்த சீடரும் அந்த 10 புத்தகங்களிலிருந்தும் கடினமான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். விவேகானந்தர் சற்றும் பதட்டப்படாமல், ஒவ்வொரு கேள்விக்கும் மிகச் சரியான, தெளிவான பதிலைச் சொன்னார். சில கேள்விகளுக்கு அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த அதே வார்த்தைகளிலேயே பதில் அளித்தார்.
விவேகானந்தரின் அபார ஞாபக சக்தியைக் கண்டு வியந்துபோன சீடர், ”இது மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது” என்று கூறிப் பரவசப்பட்டார்.
“மன ஒருமைப்பாட்டினாலேயே இது சாத்தியமாயிற்று’’ என்று அடக்கத்துடன் பதிலளித்தார் சுவாமிஜி.
நினைவாற்றலும், மன ஒருமைப்பாடும் ஒருவரை லட்சியங்களை நோக்கி உந்தித் தள்ளும் அற்புத சக்திகள் என்பதே, அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி.
துணிவுடன் எதிர்கொள்:
நம் நாட்டு மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் இளைய சமுதாயத்தினரே. அதே நேரம் தற்கொலை செய்து கொள்வோரில் பெரும்பான்மையோர் இளைஞர்களே என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்க, கவலைக்குரிய செய்தி. பிரச்னைகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் இளைஞர்களுக்கு இல்லாததாலேயே தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எதையும் எதிர்கொள்ள முடியாத இளைஞர்களே தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவைத் தேடுகின்றனர். பிரச்னைகளை தைரியத்துடன் எதிர்கொண்டால், அவை ஒன்றுமில்லாமல் பொடிப்பொடியாகப் போய்விடும் என்பதை விவேகானந்தரின் அனுபவம் ஒன்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சுவாமிஜி ஒருமுறை காசிக்குச் சென்றிருந்தபோது ஒரு தெருவின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு குரங்குகள் கூட்டம் அவரைத் துரத்திக் கொண்டு ஓடி வர ஆரம்பித்தன. பயந்து போன சுவாமிகள், குரங்குகளிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓட ஆரம்பி்த்தார். ஒரு கட்டத்துக்கு மேல் ஓட முடியாமல் போகவே, சட்டென்று அதே இடத்தில் நின்று துணிச்சலுடன் அந்தக் குரங்குகளை எதிர்த்தார். அதைக் கண்ட குரங்குகள் பயந்துபோய், அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தன. அதைப் பார்த்ததும் விவேகானந்தருக்கு சிரிப்பு வந்தது.
நம்மைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளை நாம் துணிச்சலுடன் எதிர்கொண்டால், அவை வந்த வழியே ஓடிவிடும். தனது கதை மூலமாக துணிவே துணை என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார்.

இளைஞர்களிடத்தில் மாபெரும் நம்பிக்கை கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ”ஒரு நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள். இந்தியாவையே தலைகீழாக மாற்றிக் காட்டுகிறேன்”என்று சூளுரைத்தார். இளைஞர் படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அவரது எண்ணத்திற்கு வலுவூட்டும் வகையில் ஆன்மிகப் பயணத்தில் அவருடன் ஏராளமான இளைஞர்கள் கைகோர்த்தனர். பின்னர் சுதந்திரப் போராட்டக் களத்தில் ஏராளமான இளைஞர்கள் துணிவுடன் குதிப்பதற்கு சுவாமிஜியின் உத்வேகக் கருத்துக்களும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.
இளைஞர்களிடையே பரோபகார சிந்தனை தழைத்தோங்க வேண்டும் என்று விரும்பினார் விவேகானந்தர். “கொடுப்பதற்கே கைகள்” என்றார் அந்த மெய்ஞானி.
தனிப்பட்ட வாழ்க்கையில் உற்சாகமிழந்து, சோர்வுற்றுக் கிடக்கும் இளைஞர்களை தன் ‘டானிக்’ வார்த்தைகளால் தட்டி எழுப்புகிறார். ”நன்மையும், தீமையும் கலந்த இந்தப் பிரபஞ்சத்தில், தீமையைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். தீமையின்றி நன்மை இல்லை. தீமையை விலக்கினால் நன்மையின் ஒளிக்கீற்று நமக்குள் புலப்படும்” என்கிறார்.
“பொறாமை, சுயநலம் போன்றவையே இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான தடைக்கற்கள். அவற்றை விலக்கினால் இதுவரையிலும் செய்யாத மகத்தான காரியங்களையெல்லாம் செய்து முடிக்கும் ஆற்றல் இளைஞர்களுக்குக் கிடைக்கும்” என்கிறார் அவர்.
எல்லாச் செயல்களுக்கும் எண்ணங்களே ஆதாரம். எண்ணங்களே ஏணிகள். நம்மை வாழ்க்கையில் உயரத்துக்கு ஏற்றிச் செல்பவை எண்ணங்களே. இளைஞர்கள் தங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தினால், இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
“உலகின் குறைகளைப் பற்றி மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்துக்கு நாம் உதவி செய்ய விரும்பினால், உலகைத் தூற்றத் தேவையில்லை. குறை சொல்லி உலகை பலவீனப்படுத்தாதே. எல்லா சக்திகளும் உங்களுக்குள்ளே உள்ளன. உங்களால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களை பலவீனன் என்று ஒருபோதும் நம்பாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துங்கள். லட்சியத்துக்காக உயிரையும் விடத் தயாராக இருங்கள்’’
-என்கிறார் அந்த வீரத்துறவி.
குறுகிய காலமே வாழ்ந்தாலும், அவர் விட்டுச்சென்ற லட்சிய வேட்கையின் தாகம் இன்னமும் தணிந்தபாடில்லை. விவேகானந்தரின் வாக்குகள் அன்றும், இன்றும், என்றும் நம் இளைஞர்களை உற்சாகத்துடன் வழிநடத்த வல்லவை என்றால் அது மிகையல்ல.
$$$