பாஞ்சாலி சபதம் – 2.2.6

-மகாகவி பாரதி

பாஞ்சாலியை அவைக்கு அழைத்து வருமாறு ஏவிய துரியனைக் கண்டு சினம் கொண்ட நடுநிலை நாயகரான விதுரன், ”மூட மகனே, நீ செய்வது தகாது. பாண்டவர் உன்னை மாய்க்கும் முன்னம் அவர்களிடம் பறித்ததை திருப்பி அளி” என்று அறிவுறுத்துகிறார். உடனே, விதுரனை மடையனென்று விளம்பிய துரியன் தேர்ப்பாகனை அழைத்து,  ‘பாஞ்சாலியை அவைக்கு வருமாறு வேந்தன் பணித்ததைக் கூறு’ என்கிறான்.

தேர்ப்பாகனால் நடந்த இழிவை அறிந்த பாஞ்சாலி, “மாண்பிழந்த நாயகர்தாம்- என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே -முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?” என்று பதிலறிந்து வருமாறு பாகனிடம் கூறுகிறாள். அதாவது, ஏற்கனவே அடிமைப்பட்டவனுக்கு பிறரை- குறிப்பாக மனைவியை-  அடிமையாக்கும் சுதந்திரம் இல்லை என்பதே பாஞ்சாலியின் கருத்து.

இரண்டாம் பாகம்

2.2. துகிலுரிதற் சருக்கம்

2.2.6. விதுரன் சொல்வது

துரியோ தனன்இச் சுடுசொற்கள் கூறிடவும்,
பெரியோன் விதுரன் பெரிதுஞ் சினங்கொண்டு,
‘மூட மகனே, மொழியொணா வார்த்தையினைக்
கேடுவரஅறியாய், கீழ்மையினாற் சொல்லிவிட்டாய்.
புள்ளிச் சிறுமான் புலியைப்போய்ப் பாய்வதுபோல்,
பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல்போல்,
ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்.
தெய்வத் தவத்தியைச் சீர்குலையப் பேசுகின்றாய்;
நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாஞ் சொல்கிறேன்.
என்னுடைய சொல்வேறு எவர்பொருட்டும் இல்லையடா!
பாண்டவர்தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார்,
மாண்டு தரைமேல், மகனே, கிடப்பாய்நீ.
தன்னழிவு நாடுந் தறுகண்மை என்னேடா?
முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ?
நல்லோர் தமதுள்ளம் நையச் செயல்செய்தான்
பொல்லாத வேனன், புழுவைப்போல் மாய்ந்திட்டான்.
நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?
மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்;
பட்டார்தம் நெஞ்சிற் பலநாள் அகலாது.
வெந்நரகு சேர்த்துவிடும், வித்தை தடுத்துவிடும்,
மன்னவனே, நொந்தார் மனஞ்சுடவே சொல்லுஞ்சொல்.
சொல்லி விட்டேன்; பின்னொருகால் சொல்லேன், கவுரவர்காள்!
புல்லியர்கட் கின்பம் புவித்தலத்தில் வாராது.
பேராசை கொண்டு பிழைச்செயல்கள் செய்கின்றீர்!
வாராத வன்கொடுமை மாவிபத்து வந்துவிடும்,
பாண்டவர்தம் பாதம் பணிந்தவர்பாற் கொண்டதெலாம்
மீண்டவர்க்கே ஈந்துவிட்டு, விநயமுடன்,
“ஆண்டவரே, யாங்கள் அறியாமை யால்செய்த
நீண்ட பழிஇதனை நீர்பொறுப்பீர்” என்றுரைத்து,
மற்றவரைத் தங்கள் வளநகர்க்கே செல்லவிடீர்.
குற்றந் தவிர்க்கும் நெறிஇதனைக் கொள்ளீரேல்,
மாபா ரதப்போர் வரும்; நீர் அழிந்திடுவீர்,
பூபால ரேஎன்றப் புண்ணியனுங் கூறினான்.
சொல்லிதனைக் கேட்டுத் துரியோதன மூடன்,
வல்லிடிபோல் ‘சீச்சி! மடையா, கெடுகநீ
எப்போதும் எம்மைச் சபித்தல் இயல்புனக்கே.
இப்போதுன் சொல்லை எவருஞ் செவிக்கொளார்.
யாரடா, தேர்ப்பாகன்! நீபோய்க் கணமிரண்டில்
“பாரதர்க்கு வேந்தன் பணித்தான்” எனக்கூறிப்
பாண்டவர்தந் தேவிதனைப் பார்வேந்தர் மன்றினிலே
ஈண்டழைத்து வா’என் றியம்பினான். ஆங்கேதேர்ப்

பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில்
சோகம் ததும்பித் துடித்த குரலுடனே,
‘அம்மனே போற்றி! அறங்காப்பாய், தாள்போற்றி!
வெம்மை யுடைய விதியால் யுதிட்டிரனார்
மாமன் சகுனியொடு மாயச் சூதாடியதில்,
பூமி யிழந்து பொருளிழந்து தம்பியரைத்
தோற்றுத் தமது சுதந்திரமும் வைத்திழந்தார்.
சாற்றிப் பணயமெனத் தாயே உனைவைத்தார்.
சொல்லவுமே நாவு துணியவில்லை; தோற்றிட்டார்.
எல்லாருங் கூடி யிருக்கும் சபைதனிலே,
நின்னை அழைத்துவர நேமித்தான் எம்மரசன்’
என்ன உரைத்திடலும், ‘யார்சொன்ன வார்த்தையடா!
சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார்பணியால்
என்னை அழைக்கின்றாய்?’ என்றாள். அதற்கவனும்
‘மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால்’ என்றிட்டான்.
‘நல்லது; நீ சென்று நடந்தகதை கேட்டு வா.
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே
முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?
சென்று சபையில்இச் செய்தி தெரிந்துவா,
என்றவளுங் கூறி, இவன்போகியபின்னர்,
தன்னந் தனியே தவிக்கும் மனத்தாளாய்,
வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய,
உள்ளத்தை அச்சம் உலைஉறுத்தப் பேய்கண்ட
பிள்ளையென வீற்றிருந்தாள். பின்னந்தத் தேர்ப்பாகன்
மன்னன் சபைசென்று, ‘வாள்வேந்தே! ஆங்கந்தப்
பொன்னரசி தாள்பணிந்து “போதருவீர்” என்றிட்டேன்.
“என்னைமுதல் வைத்திழந்தபின்பு தன்னைஎன்
மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற
பின்னரெனைத் தோற்றாரா?” என்றேநும் பேரவையை
மின்னற் கொடியார் வினவிவரத் தாம்பணித்தார்.
வந்துவிட்டேன்’ என்றுரைத்தான். மாண்புயர்ந்த பாண்டவர்தாம்
நொந்துபோ யொன்றும் நுவலா திருந்து விட்டார்.
மற்றும் சபைதனிலே வந்திருந்த மன்னரெலாம்
முற்றும் உரைஇழந்து மூங்கையர்போல் வீற்றிருந்தார். 48

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s