-இசைக்கவி ரமணன்
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை இரு கவிதைகள்....

6
திருவிழி பாராதா?
.
முதலில் இன்பம், இடையில் ஏக்கம்,
முடிவில் துன்பம்; அதன்பின்னும்
முடியாத் துயரம்! முடியும் வரையில்
முடியா மைதான் தொடரும்! 1
.
இதுவா வாழ்க்கை? இதற்கா உலகம்?
இதற்கா தேகம் மனமெல்லாம்?
மெதுவாய்த் தேறி மறுகரை நாடும்
மேன்மையில் ஆசை வாராதோ! 2
.
கயிலைக் கனலே! கடற்காற் றுலவித்
தலைகோ தும்குளக் கரைவீற்ற
மயிலைச் சிவனே! மாறாத் தவனே!
மாற்றம் ஒன்று தாராயோ! 3
..
களங்க நிலவைக் கற்றைச் சடையில்
காட்டி அதற்கோர் கதிதந்தாய்!
ககனம் அதிர்ந்த கங்கைச் செருக்கைத்
தலையில் வைத்தோர் தரம்தந்தாய்! 4
.
காலடி வாழும் கள்ள முயலகன்
கண்ணைச் சிமிட்டிச் சிரிக்கின்றான்!
உளங் கவர்ந்தவா! உமையின் நாயகா!
உன்மக வுக்கோர் கதியிலையோ! 5
.
ஒருமுறை உன்றன் திருவிழி என்னை
ஓரரைப் பார்வை பாராதோ?
உடனே என்னை உயர்த்தி மகிழ்வாய்,
உருவே! அருவே! குருதேவா! 6
.
$$$
7
சுடலைச் சிந்தனை வெண்பா -10
.
நெய்யூற்றிப் பார்த்தேன் நெருப்பணைய வில்லையே!
பொய்யூற்றை நானிறைத்துப் போட்டாலும் தீரவில்லை
பொய்யான மெய்யிதனில் மெய்யான மெய்யெதுவோ
உய்யுமோ என்றன் உயிர்? 1
.
ஆரா தனைகள் அருமலர்ப் பூசைகள்
நாரா யணாவென்னும் நாமங்கள் யாவுமென்னைச்
சேராத ஓர்சொள்ளைச் சென்மம் எடுத்தேனே!
நேராய் அணைப்பாயா நீ? 2
.
மனக்குரங்கு போட்டடிக்கும் மத்தளச் சத்தம்
கனவு நினைவைக் கடக்கிறதே! தூக்கச்
சுனையிலே சாந்தி, குமிழ்த்தால் பிராந்தி
வினையிலே நானோர் விதம். 3
.
வண்ணங்கள் தீட்டி வனப்புமிகச் செய்தாலும்
எண்ணமெல் லாம்வெறும் எண்ணமன்றோ! ஏந்திடும்
கிண்ணம் கவிழ்த்தாலும் மிஞ்சிடும் ஈரமன்றோ
வண்ணம் களையுமோ வான்? 4
.
சிவனே எனமனம் சிந்தனை நீங்கி
பவம்தாண்டி அக்கரை பார்ப்பேனோ? செய்யும்
தவறே எனது தவமெனக் கொண்டு
சிவமேநீ காத்தல் சிறப்பு. 5
.
மறந்தேன், அதனால் பிறந்தேன், அதனால்
இறந்தேன், இதுதானோ என்கதை? கண்கள்
திறந்தேன், ககனம் தவழ்ந்தேன், எனவாய்
திறந்துசொல்லும் நாளென்றோ செப்பு! 6
.
இருக்கின்றாய் தானே? இதற்கும் மெலிதாய்ச்
சிரிக்கின்றாய் உன்னழகுச் சிற்சபையில்; ஏதோ
இருக்கின்றேன், உன்பேர் இசைக்கின்றேன், ஊரில்
சிரிக்கின்றேன், உள்ளே சிதை. 7
.
அந்தச் சிதையே அழகுச் சுடலையாய்
வந்துநட மாடேன் தவறிலையே! ரொம்பத்தான்
நொந்துவிட்டேன், எப்படியோ வந்துவிட்டால் போதுமையா
சந்தைக்கும் உண்டே சபை. 8
.
அன்னையைக் கேட்டேன், அவளுன்னைக் கைகாட்டி
என்கதியும் சிற்சமயம் இப்படித்தான் என்கின்றாள்;
என்சொல்ல? யார்நீ? எவரறிந்தார்? வந்தென்முன்
நின்றால்நான் சொல்வேன் நிசம்! 9
.
எனக்குன்னை விட்டால் எவருமில்லை; ஆய்ந்தால்
உனக்குமென்னை விட்டால் ஒருவரு மில்லை;
கணக்கு சரியாச்சு கட்டிக்கொள்! என்னை
அணைத்தால் உனக்கும் நலம்! 10
.
$$$