பாரதியை வடிவமைத்த காசி

-ஜடாயு

காசியிலுள்ள சிவமடமும், அங்குள்ள மகாகவி பாரதி சிலையும்
இன்மழலைப் பைங்கிளியே எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? — சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.

           (பாரத தேவியின் திருத்தசாங்கம்)

தசாங்கம் என்பது தமிழ் சிற்றிலக்கியப் பாடல் வகைகளில் ஒன்று. ஒரு அரசனுடைய அல்லது தெய்வத்தினுடைய பெயர், நாடு, நகரம், ஆறு, மலை, கொடி என்று பத்து உறுப்புக்களை வாழ்த்திப் பாடும் வகையில் அமைந்தது இது. திருவாசகத்தில் சிவபெருமானைக் குறித்து இத்தகைய திருத்தசாங்கம் உள்ளது. பாரத அன்னை நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியாகவும் தெய்வமாகவும் இருவிதங்களிலும் விளங்குகிறாள் என்பதால் பாரதமாதா மீது திருத்தசாங்கம் பாடினார் நமது மகாகவி. அதில் நகரம் என்று வருமிடத்தில் காசி என்றே மேற்கண்ட பாடலில் உள்ளவாறு கூறியிருக்கிறார். ஆறு என்பதற்கு ‘வான்போந்த கங்கையென வாழ்த்து’ என்று பாடுகிறார்.

பாரத நாட்டில் பல்வேறு சிறப்புகளையும் பெற்ற எத்தனையோ மிகப் பெரிய நகரங்கள் இருந்தாலும், காசியே அவரது நினைவில் முதன்மையாக நின்றது. இதற்கு அதன் பாரம்பரியச் சிறப்போடு கூட பாரதியாருக்கு அந்த நகரின் மீது இருந்த தனிப்பட்ட பந்தமும் ஆழ்ந்த நெருக்கமுமே காரணம் என்று கருத இடமிருக்கிறது. “காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்று மற்றொரு பாடலில் கூறுகிறார். தனது கட்டுரைகளிலும், கதைகளிலும் காசி நகரத்தைப் பற்றி பல இடங்களில் பாரதியார் எழுதியுள்ளார்.

1898ல் பாரதிக்கு 15 வயது ஆகியிருந்தபோது, அவரது தந்தையார் சின்னச்சாமி ஐயர் எதிர்பாராத வகையில் அகால மரணமடைந்தார். ஒரு வருடம் முன்பு தான் செல்லமாவுடன் பாரதியாருக்குத் திருமணம் நடந்து முடிந்திருந்தது. தந்தை இறந்த சிறிது காலத்தில், குடும்பத்தின் வறுமையினாலும் சீர்கெட்ட நிலைமையினாலும், பாரதி காசியிலிருந்த தனது அத்தை குப்பம்மாளுடன் வசிக்கச் சென்றார்.

அத்தையின் கணவர் கிருஷ்ணசிவன் பழுத்த வைதிகர், சிவபக்தர். காசியில் ஹனுமந்த கட்டம் (ஹனுமான் காட்) பகுதியில் உள்ள சிவமடத்தை நடத்தி வந்தார். கிருஷ்ண சிவனின் பக்தியையும் நல்ல உள்ளத்தையும் கண்டு மகிழ்ந்த ஒரு செல்வந்தர் தான் நிறுவிய அந்த சிவ மடத்தையும் அதனுடன் இணைந்த தோட்டத்தையும் அவர் பெயருக்கு எழுதி வைத்து தன் காலத்திற்குப் பின்பும் தருமங்களைத் தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படியே கிருஷ்ணசிவன் மடத்தில் பூஜைகள் செய்தும், யாத்ரீகர்களுக்கு உதவியும் மிகுந்த பரோபகாரியாக அங்கு வாழ்ந்து வந்தார். இத்தகைய குடும்பத்தில் தான் இளைஞரான பாரதி வந்து இணைந்தார்.

காசியில் இருந்த மிஷன் காலேஜ், ஜெய்நாராயண் காலேஜ் ஆகிய இரண்டிலும் பாரதி கல்லூரிப் படிப்பு படித்தார். அலகாபாத் சர்வகலாசாலையின் பிரவேசப் பரீட்சைக்காக பாரதி புதிதாக ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் கற்பது அவசியமாயிற்று. இரு பாஷைகளையும் கற்று, ஓரளவு புலமை பெற்று பரீட்சையிலும் தேறினார்.

$$$

பாரதியாரின் காசி வாசத்தைப் பற்றி செல்லம்மாள் எழுதியுள்ள  ‘பாரதியார் சரித்திரம்’  நூலில் உள்ள கீழ்க்காணும் பகுதி சுவாரஸ்யமானது.

“பாரதியாரின் அத்தை தனது பிள்ளைகளைக் காட்டிலும் பாரதி மீது உயிரை வைத்திருந்தார் என்று சொல்வது கூட மிகையாகாது. ஆடை விஷயங்களில் பாரதி ஒன்று கேட்டால் அவர் ஒன்பது வாங்கிக் கொடுப்பார். பாரதி கல்லூரி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கங்கா நதிக்கரையில் உட்கார்ந்து கொண்டு கவிதைகள் புனைவதிலும், இயற்கையழகை அனுபவிப்பதிலும், நண்டர்களுடன் படகில் உல்லாச யாத்திரை போவதிலுமாகப் பொழுதைக் கழிப்பார். அந்தணருக்கேற்ற ஆசாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும் தலையில் முண்டாசும் காலில் பூட்ஸும் அணிந்திருப்பதும் நாளடைவில் ஸ்ரீ கிருஷ்ண சிவன் அவர்களுக்கு வெறுப்பை யுண்டாக்கியது. ஆயினும் ஏதாவது சொன்னால் தன் மனைவி மனம் வருந்துவாளென்று அவர் ஒன்றும் சொல்லத் துணிவதில்லை.

ஒருநாள் தற்செயலாகப் பாரதியைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. விஷயம் என்னவென்றால், இத்தனை அநாசாரத்தோடு அந்தணருக்கு அத்யாவசியமான குடுமியை – சிகையை – எடுத்துவிட்டு, வங்காளி போல் ‘கிராப்’ செய்து கொண்டு வகிடு எடுத்து வாரி விட்டு, மீசையும் வைத்துக் கொண்டு பாரதி காட்சியளித்தான்..”

                   (பாரதியார் சரித்திரம்- பக். 19-20).

இதனால் கிருஷ்ண சிவன் மிகவும் கோபமடைந்து, எங்களுடன் ஒரே பந்தியில் சாப்பிடக் கூடாது என்று கூறிவிட்டார். பாரதியாருக்கு தனியாக அத்தை சாப்பாடு போட்டு வந்தார். இரண்டு மூன்று மாதங்கள் இப்படிக் கழிந்தது. மார்கழி மாதம் திருவாதிரை உற்வசம் வந்தது. மடத்திலுள்ள கோயிலில் நூறுக்கு மேல் பக்தர்கள் குழுமியிருந்தனர். வழக்கமாக திருவெம்பாவை பாடும் ஓதுவார் வராததால், பூஜை செய்து கொண்டிருந்த சிவன், திருவெம்பாவை பாடாமல் எப்படி தீபாராதனை முடிப்பது என்று பதற்றமடைந்தார். அவரது மனைவி, “என்ன இவ்வளவு யோசனை? நம்ம சுப்பையா இல்லையா, ஓதுவாரைக் காட்டிலும் திருத்தமாகப் பாடுவதற்கு?” என்று சொல்லி, பாரதிக்குத் தலைப்பாகை கட்டி, விபூதி பூசி அழைத்து வந்தார். பாரதியார் திருவெம்பாவையை அழகாகப் பாடி, பின்பு அங்கிருந்த சுப்புப்பாட்டி என்ற கிழவியுடன் சேர்ந்து ஒரு நந்தன் சரித்திரக் கீர்த்தனையையும் உருக்கமாகப் பாடினார்.

கடைசியில் ஸ்ரீ கிருஷ்ண சிவன் பாரதியைத் தழுவிக் கொண்டு, “அப்பனே! இவ்வளவு சிறு வயதில் உனக்கு இத்தனை ஞானம் ஏற்பட்டு விட்டது. நாங்கள் வெறும் ஆஷாடபூதிகளே. எங்களுக்குத் தான் குடுமியும் வேஷமும் வேண்டும். உன்னைப் போல் உண்மையான மனதுடையவர்க்குக் குடுமியும் வேண்டாம், பூணூலும் வேண்டாம்”, என்று புகழ்ந்தார். அன்றிலிருந்து மறுபடியும் பந்தி போஜனம் ஆரம்பமாயிற்று” (பக். 21)

பாரதியார் காசியில் படித்துவந்த போது செல்லம்மா கடையத்தில் தனது தாய்வீட்டில் இருந்தார். காசிக்குச் சென்று திரும்பி வந்த ஸ்ரீ விசுவநாத சிவன் (செல்லம்மாவின் தமக்கை புருஷர்) மகாபுத்திசாலியான பாரதி தேசிய விஷயங்களில் தீவிர ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அதனால் சர்க்காரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தன்னை எச்சரித்ததாகவும், அதனால் மிகவும் பயந்து போய் அவருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் செல்லம்மா பதிவு செய்திருக்கிறார்.

“எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம்.. நீ பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரிக் கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்” (பக். 26)

என்று பாரதி அதற்குப் பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.

ரா.அ.பத்மநாபன் தனது  ‘சித்திர பாரதி’  நூலில், பாரதியின் அப்போதைய நண்பரும் காசியில் எதிர்வீட்டில் வசித்தவருமான பண்டிட் நாராயண ஐயங்கார் கூறியதாக மேலும் சில தகவல்களைத் தருகிறார்.

“காசியில் அவர் கடைசியாக ஒரு பள்ளியில் ஆசிரியர் பதவி பெற்று மாதம் இருபது ரூபாய் சம்பாதித்து வந்தார்… கையில் எப்போதும் ஷெல்லியின் ஆங்கிலக் கவிதைப் புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பார். ஓய்வு நேரங்களில் கங்கைக் கரையில் படிக்கட்டில் உட்கார்ந்து ஷெல்லி பாடல்களைப் படித்து அர்த்தம் சொல்லுவார்… காசியில் ஒரு சரஸ்வதி பூஜையன்று பாரதி ஒரு கூட்டம் கூட்டி பெண் கல்வி என்பது பற்றித் தமிழில் பேசினார். பெண்கள் கல்வி, சமத்துவம் இந்த இரு விஷயங்களைத் தவிர அப்போது வேறு எதிலும் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை”

                    (சித்திர பாரதி- பக். 16)

$$$

இப்படிப் போய்க்கொண்டிருந்த பாரதியின் காசிவாசம் ஒரு கட்டத்தில் சட்டென்று முடிவுக்கு வந்தது. 1903ம் ஆண்டு ஜனவரியில் தில்லியில் கர்சன் பிரபு ஏற்பாடு செய்திருந்த “தர்பார்” நிகழ்ச்சிக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து சுதேச மன்னர்களும் ஜமீந்தார்களும் சென்றிருந்தனர். எட்டயபுரம் ஜமீந்தாரும் அதில் ஒருவர். ஊர் திரும்பும் வழியில் அவர் காசிக்கும் வருகை தந்து சிவமடத்தில் தங்கினார். அப்போது பாரதியை சந்தித்து, தம்முடைய ஜமீன் சம்ஸ்தானத்திலேயே வேலை போட்டுத் தருவதாகவும், பிறந்த ஊரில் அவர் சுகமாக வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றும் தெரிவித்தார். அவர் பேச்சில் நியாயம் இருப்பதாகக் கருதி அந்த வருடமே சில மாதங்களுக்குப் பிறகு பாரதி எட்டையபுரம் திரும்பினார். பின்பு அங்கிருந்து அவர் வாழ்க்கை வேறு பல திசைகளுக்குப் பயணித்தது என்பது குறித்த விவரங்களெல்லாம் பாரதி வாழ்க்கை வரலாற்றில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாரதி காசியில் வாழ்ந்த வீடு இன்றும் ஏறக்குறைய அதே வடிவில் உள்ளது. கிருஷ்ண சிவன் வம்சாவளியினர் இன்னும் அங்கு வசித்து வருகின்றனர். ஹனுமான் காட் என்ற அந்தப் பகுதியில் காசி நகராட்சியின் சார்பாக பாரதியாரின் மார்பளவுச் சிலையும் நிறுவப் பட்டுள்ளது.  

$$$

பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான், 1898 முதல் 1903 வரை. ஆயினும், அவரது வாழ்க்கைப் பாதையையே காசி தான் நிர்ணயித்தது என்றால் மிகையில்லை.

தனது 16 முதல் 21 வயது வரையிலான காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின.

பாரதி அன்னை பராசக்தியையே தனது இஷ்ட தெய்வமாகக் கொண்டு சக்தி நெறியில் சென்றதற்கான அடித்தளத்தை இட்டதும் காசி தான். “கண்ணால் பார்க்கவும் நினைக்கவும் அருவருப்பு தரக் கூடிய விக்கிரங்கள் வணங்கப் பட்டன” என்று ஆரம்பித்து, “காசியில் கருங்காளிப் பொம்மையின் முன்பு நூற்றுக்கணக்கான எருமைகள் வரிசை வரிசையாக வெட்டுண்டன. எங்க பார்த்தாலும் இரத்த மயமாய் இருந்தது. நாம் கண்டு கண்ணை மூடிக்கொண்டு திரும்பி விட்டோம்..” என்று சக்ரவர்த்தினி இதழில் ஒரு கட்டுரையில் (1906, ஆகஸ்டு) பாரதி குறிப்பிடுகிறார். ஆனால், இதே பாரதி தான் பிற்காலத்தில்,

வெடிபடு மண்டபத் திடிபல தாளம் போட – வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட

என்று காளியின் ஊழிக்கூத்தை அச்சமும் அருவருப்பும் இன்றி அகத்தில் நோக்கிப் பரவசத்துடன் பாடுபவராக ஆகிறார். அன்னை காளி அவரை ஆட்கொண்ட விதமும், காலப்போக்கில் அவர் அடைந்த ஆன்மீக முதிர்ச்சியும் இதில் வெளிப்படுகிறது.

முறுக்கு மீசையும் முண்டாசுமாக என்றென்றைக்கும் நமது மனதில் பதிந்துவிட்ட பாரதியாரின் புறத்தோற்றத்தை அளித்து காசி தான்.

ஏற்கனவே கலைவாணியின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமாகி இருந்த அவரது அகத்தை மேலும் எழுச்சியுறச் செய்து, அதில் ஒளியேற்றியதும் காசி தான்.

தமிழுக்குப் புதிய வாழ்வைத் தந்த மகாகவியை நமக்கு உருவாக்கித் தந்தற்காக தமிழர்களாகிய நாம் காசிக்கு என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s