-மகாத்மா காந்தி

ஐந்தாம் பாகம்
21. ஆசிரமத்தில் கண்ணோட்டம்
தொழிலாளர் தகராறைப் பற்றி நான் மேலே விவரிப்பதற்கு முன்னால், ஆசிரம விஷயத்தைக் குறித்தும் ஒரு கண்ணோட்டம் செலுத்துவது முக்கியமாகும். சம்பாரணில் நான் இருந்த சமயம் முழுவதிலும், ஆசிரமம் என் மனத்தை விட்டு விலகினதே இல்லை. அவசரமாகச் சில சமயம் அங்கே போய்ப் பார்த்து விட்டும் வருவேன்.
அச்சமயம் ஆசிரமம் அகமதாபாத்திற்கு அருகிலுள்ள கோச்ராப் என்ற சிறு கிராமத்தில் இருந்தது. இக்கிராமத்தில் பிளேக் நோய் உண்டாயிற்று. அதனால், ஆசிரமக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று கண்டேன். ஆசிரமத்திற்குள் சுத்தத்தின் விதிகளை என்னதான் ஜாக்கிரதையாக அனுசரித்தாலும், சுற்றிலும் உள்ள சுகாதாரக் கேடான நிலைமையினால், ஆசிரமத்தில் இருப்பவர்கள் பாதிக்கப்படாமல் இருந்துவிட முடியாது. கோச்ராப் மக்கள் இந்தச் சுகாதார விதிகளை அனுசரிக்கும்படி செய்யும் நிலையிலோ, வேறு வகையில் அவர்களுக்குச் சேவை செய்யும் நிலையிலோ நாங்கள் அப்பொழுது இல்லை. ஆசிரமம், பட்டணத்திற்கும் கிராமத்திற்கும் கொஞ்சம் தூரத்திலேயே இருக்க வேண்டும். என்றாலும், இந்த இரண்டுக்கும் போக முடியாத தொலைதூரத்திலும் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கை. என்றாவது ஒரு நாள், எங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே ஆசிரமத்தை அமைப்பது என்றும் தீர்மானித்திருந்தோம்.
கோச்ராப்பை விட்டுப் போய்விட வேண்டும் என்பதற்கு அங்கே பரவிய பிளேக் நோயே போதுமான முன்னெச்சரிக்கை என்று எனக்குத் தோன்றிற்று. அகமதாபாத் வர்த்தகரான ஸ்ரீ பூஞ்சாபாய் ஹிராசந்துக்கு ஆசிரமத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. புனிதமான, தன்னலமற்ற எண்ணத்தின் பேரில் அவர் பல விஷயங்களிலும் எங்களுக்குச் சேவை செய்து வந்தார். அகமதாபாத் காரியங்களில் அவருக்கு அதிக அனுபவம் உண்டு. எங்களுக்குத் தகுந்த இடம் தேடித் தருவதாக அவர் முன்வந்தார். இடம் தேடிக்கொண்டு நானும் அவருடன் கோச்ராப்புக்குத் தெற்கிலும் வடக்கிலுமாகப் போனேன். மூன்று நான்கு மைல் வடக்கில் ஓர் இடத்தைப் பார்க்குமாறு அவருக்கு யோசனை சொன்னேன். பிறகு அவர், இப்பொழுது ஆசிரமம் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்த இடம், சபர்மதி மத்திய சிறைக்கு அருகாமையில் இருந்தது, எனக்கு முக்கியமாகக் கவர்ச்சியளித்தது. சிறைப்படுவதே சாதாரணமாக சத்தியாக்கிரகிகளின் கதி என்று கருதப்பட்டதால், இந்த இடம் எனக்குப் பிடித்திருந்தது. பொதுவாகச் சுற்றுப்புறங்கள் சுத்தமாக இருக்கும் இடங்களையே சிறைச்சாலைகளை அமைப்பதற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன்.
எட்டு நாட்களில் அந்த நிலத்திற்குக் கிரய சாசனம் பூர்த்தியாகி விட்டது. அந்த நிலத்தில் எந்தவிதக் கட்டிடமோ, மரமோ இல்லை. நதிக்கரையில் இருக்கிறது, ஏகாந்தமான இடத்தில் இருக்கிறது என்பவை முக்கியமான சௌகரியங்கள். முதலில் கூடாரங்கள் போட்டுக்கொண்டு அங்கே வசிக்க ஆரம்பித்து விடுவது என்று முடிவு செய்தோம். நிரந்தரமான கட்டிடம் கட்டும் வரையில் சமையலுக்கு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்ளுவது என்றும் தீர்மானித்தோம். ஆசிரமம் மெல்ல வளர்ந்து கொண்டு போயிற்று. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பொழுது நாங்கள் நாற்பது பேர். எல்லோருக்கும் பொதுவான ஒரே சமையல். ஆசிரமத்தைப் புது இடத்திற்குக் கொண்டு போய்விடுவது என்ற யோசனை என்னுடையது. வழக்கம் போலவே அந்த யோசனையை மகன்லால் நிறைவேற்றி வைத்தார். குடியிருக்க நிரந்தரமான வீடுகளைக் கட்டி முடிப்பதற்கு முன்னால், நாங்கள் எவ்வளவோ சிரமப்பட வேண்டியதாயிற்று. மழைக் காலம் வரும் சமயம், சாப்பாட்டுக்கு வேண்டிய சாமான்களை, நான்கு மைல்களுக்கு அப்பால் இருக்கும் அகமதாபாத்திலிருந்து வாங்கி வர வேண்டும். அந்நிலம் வெகுகாலமாகத் தரிசாகக் கிடந்ததாகையால், அங்கே பாம்புகள் அதிகம். இத்தகைய நிலைமையில் அங்கே சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு வசிப்பதென்பது பெரிய ஆபத்தாகும். எங்களில் யாரும் இத்தகைய விஷ ஜந்துக்களைப் பற்றிய பயத்தை விட்டொழித்து விட்டவர்கள் அல்ல; இப்பொழுதும் நாங்கள் அவற்றிற்குப் பயப்படாதவர்கள் அல்ல என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆயினும், பாம்புகளைக் கொல்வதில்லை என்பது எங்கள் பொதுவான விதி.
விஷ ஜந்துக்களைக் கொல்வதில்லை என்ற விதி, போனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணை, சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றில் பெரும்பாலும், அனுசரிக்கப்பட்டு வந்தது. இந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் தரிசாகக் கிடந்த நிலத்திலேயே நாங்கள் குடியேறினோம். என்றாலும், பாம்பு கடித்ததனால் எங்களில் யாரும் இறந்ததில்லை. கருணைக் கடலான கடவுளின் கிருபையையே இதில் நான் நம்பிக்கைக் கண்ணோடு காண்கிறேன். இதைக் கொண்டு, கடவுள் பாரபட்சமுடையவராக இருக்கவே முடியாது என்றும், மனிதரின் சாமான்ய விஷயங்களிலெல்லாம் தலையிட்டுக் கொண்டிருக்க கடவுளுக்கு அவகாசம் இருக்குமா என்றும் யாரும் குதர்க்கம் பேசக் கிளம்பிவிட வேண்டாம். இவ்விஷயத்தில் இருக்கும் உண்மையை, எனக்கு ஏற்பட்ட ஒரே மாதிரியான இந்த அனுபவத்தை, வேறுவிதமாக நான் சொல்லுவதற்கு இல்லை. கடவுளின் வழிகளை விவரிக்க மனிதனின் மொழிகள் தகுந்தவை அல்ல. அவர் வழிகள் விவரிக்க முடியாதவை, பகுத்தறிய முடியாதவை – இயலாதவை – என்ற உண்மையை நான் உணருகிறேன். ஆனால், அவற்றை விவரித்துக் கூறிவிட மனிதன் துணிவானாயின், அதற்கு அவனுடைய தெளிவில்லாத பேச்சைத் தவிர வேறு எந்தவித சாதனமுமே கிடையாது. கொல்வதில்லை என்ற வழக்கத்தை அநேகமாக, ஒழுங்காக நாங்கள் அனுசரித்து வந்திருந்தும் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பாம்புகளால் எங்களுக்குத் தீமை ஏற்பட்டதே இல்லை என்பது, கடவுள் அருளேயன்றி அதிர்ஷ்டவசமானதொரு சம்பவம் அல்ல என்று கருதுவது ஒரு மூட நம்பிக்கையாக இருந்தாலும், அந்த மூட நம்பிக்கையை இனியும் நான் விடாமல்தான் இருப்பேன்.
அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலைநிறுத்த சமயத்தில் ஆசிரமத்தின் நெசவுக் கொட்டகைக்குக் கடைகால் போட்டோம். ஏனெனில், அச்சமயம் ஆசிரமத்தில் முக்கியமாக நடந்து வந்த வேலை, கைநெசவு. கையினால் நூற்பதை ஆரம்பிப்பது அதுவரையில் எங்களுக்குச் சாத்தியமாகவில்லை.
$$$
22. உண்ணாவிரதம்
முதல் இரு வாரங்கள் வரையில் ஆலைத் தொழிலாளர்கள் அதிக தீரத்தோடும், தன்னடக்கத்துடனும் நடந்து கொண்டார்கள். தினந்தோறும் பெரிய பொதுக்கூட்டங்களும் நடந்தன. அச்சமயங்களில் அவர்களுடைய பிரதிக்ஞைகளைக் குறித்து அவர்களுக்கு ஞாபகப்படுத்துவேன். ‘உயிரை விட்டாலும் விடுவோமேயன்றி அளித்த வாக்கை மாத்திரம் மீறி விட மாட்டோம்’ என்று அவர்கள் உரக்கக் கூறி எனக்கு உறுதி கூறுவார்கள்.
ஆனால், கடைசியாக அவர்கள் சோர்வின் அறிகுறியைக் காட்டத் தலைப்பட்டு விட்டனர். உடம்பு பலவீனமாக ஆக மனிதன் சீக்கிரத்தில் கோபப்படுவதுபோல, வேலைநிறுத்தம் பலவீனம் அடைவதாகத் தோன்றியதும், கட்டுப்பாட்டை மீறி வேலைக்குப் போகிறவர்கள் விஷயத்தில் தொழிலாளர்கள் கொண்ட போக்கு மேலும் மேலும் ஆபத்தானதாகிக் கொண்டு வந்தது. எங்கே முரட்டுத்தனமான செய்கைகளில் இறங்கி விடுவார்களோ என்று பயப்பட்டேன். தினந்தோறும் கூட்டத்திற்கு வரும் தொழிலாளரின் தொகையும் குறைந்து வந்தது. கூட்டத்திற்கு வந்தவர்களும், சோர்வும் கிலேசமும் அடைந்திருந்தார்கள் என்பது அவர்களுடைய முகக்குறிகளிலிருந்து தெரிந்தது. கடைசியாகத் தொழிலாளர் உறுதி குலைந்து வருகின்றனர் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. இதனால், பெரும் கவலையடைந்தேன். இந்நிலைமையில் என் கடமை என்ன என்பதைக் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கலானேன். தென்னாப்பிரிக்காவில் மகத்தானதொரு வேலை நிறுத்தம் நடத்திய அனுபவம் எனக்கு உண்டு. ஆனால், இங்கே எனக்கு ஏற்பட்ட நிலைமை முற்றிலும் மாறானது. நான் கூறிய யோசனையின் பேரிலேயே ஆலைத் தொழிலாளர்கள் பிரதிக்ஞை செய்துகொண்டனர். தினந்தோறும் அதை என் முன்னால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியும் கூறிவந்தார்கள். அப்படியிருக்க அப்பிரதிக்ஞையை மீறி, அவர்கள் நடந்துகொண்டு விடக்கூடும் என்பதை என்னால் நினைக்கவும் முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட இந்த உணர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது, என் தற்பெருமையா, தொழிலாளர்களிடம் நான் கொண்டிருந்த அன்பா, அல்லது சத்தியத்தினிடம் எனக்கு இருந்த ஆர்வத்தோடு கூடிய பற்றா என்பதை யார் சொல்ல முடியும்?
இவ்வாறு திகைத்துத் தெளிவான வழி காண முடியாமல், நான் தத்தளித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் காலை, ஆலைத் தொழிலாளர்களின் கூட்டத்தில் திடீரென்று எனக்கு ஓர் ஒளி தோன்றிற்று. முன்கூட்டி எண்ணிப் பாராமலே என் நாவில் பின்வரும் சொற்கள் பிறந்தன: “வேலைநிறுத்தம் செய்திருப்பவர்கள் திடம் கொண்டு, ஒரு சமரச முடிவு ஏற்படும் வரையில் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்தினாலன்றி, அல்லது இப்போது வேலைக்குப் போகிறவர்கள் எல்லோரும் ஆலைகளிலிருந்து வெளி வந்துவிடும் வரையில், நான் உணவு கொள்ளப் போவதில்லை” என்று அக்கூட்டத்தில் கூறினேன்.
இதைக் கேட்டதும் தொழிலாளர்கள் இடி விழுந்ததைப் போல் திகைத்துப் போயினர். அனுசூயா பென்னின் கண்களிலிருந்து நீர் வழிந்து ஓடியது. “நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். நாங்கள் உண்ணாமல் இருக்கிறோம். நீங்கள் பட்டினி இருப்பதைப் போன்ற பெருங்கொடுமை வேறு இல்லை. நாங்கள் செய்துவிட்ட தவறுகளுக்கு எங்களை மன்னித்துவிடுங்கள். இனி இறுதிவரையில் பிரதிக்ஞையில் நிச்சயமாக உறுதியுடன் இருக்கிறோம்” என்று தொழிலாளர் எல்லோரும் ஒரே முகமாகக் கூறினார்.
நான் அப்பொழுது அவர்களுக்குக் கூறியதாவது: “நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய பிரதிக்ஞையிலிருந்து வழுவாமல் நீங்கள் இருந்தாலே போதும். நம்மிடம் நிதி இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். பொது ஜனங்களிடம் பிச்சையெடுத்து. அதைக் கொண்டு வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு போக நாம் விரும்பவில்லை. ஆகையால், வேலைநிறுத்தம் எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்து நடந்தாலும், அதைப் பற்றிய கவலையே இல்லாமல் நீங்கள் இருந்து வருவதற்கு ஏதாவது ஒரு வேலையைச் செய்து ஜீவனத்திற்கு வேண்டியதைத் தேடிக் கொள்ள நீங்கள் முயல வேண்டும். என்னுடைய உண்ணாவிரதத்தைப் பொறுத்த வரையில் வேலைநிறுத்தம் முடிந்த பிறகே நான் அதைக் கைவிடுவேன்.”
இதற்கு மத்தியில் வேலைநிறுத்தம் செய்திருந்த தொழிலாளருக்கு முனிசிபாலிடியின் கீழ் ஏதாவது வேலை தேடிக் கொடுப்பதற்கு வல்லபபாய் முயன்று வந்தார். ஆனால், இதில் வெற்றி பெற முடியும் என்பதற்கு அதிக நம்பிக்கை எதுவும் இல்லை. மகன்லால் காந்தி ஒரு யோசனை கூறினார்: ‘நமது ஆசிரம நெசவுப் பள்ளிக்கூட அடித்தளத்தை நிரப்புவதற்கு நமக்கு மணல் வேண்டியிருக்கிறது. இந்த வேலையில் பலரை அமர்த்திக் கொள்ளலாம்’ என்றார். இந்த யோசனையைத் தொழிலாளர்களும் வரவேற்றார்கள். அனுசூயா பென், தமது தலையில் முதலில் ஒரு கூடையைச் சுமந்து, அவர்களுக்கு வழிகாட்டினார். அவரைப் பின்பற்றித் தொழிலாளர்கள் வரிசை வரிசையாக ஆற்றிலிருந்து மணலை வாரிக் கூடைகளைத் தங்கள் தலைகளில் சுமந்துகொண்டு வந்து கொட்டிய வண்ணம் இருந்தனர். அது காண்பதற்கரிய காட்சியாக இருந்தது. தங்களுக்கு ஏதோ புதிய பலம் வந்திருப்பதாகவே தொழிலாளர்கள் உணர்ந்தனர். அவர்களுக்குச் சம்பளத்தைப் பட்டுவாடா செய்து சமாளிப்பதே கஷ்டமாக இருந்தது.
என்னுடைய உண்ணாவிரதத்தில் பெரிய குறைபாடும் இல்லாது போகவில்லை. நான் முந்திய அத்தியாயத்தில் கூறியிருப்பதைப் போல, ஆலை முதலாளிகளிடம் நெருங்கிய தொடர்பும், அன்பான உறவும் எனக்கு இருந்து வந்தது. ஆகவே என்னுடைய உண்ணாவிரதம் அவர்களுடைய தீர்மானத்தைப் பாதிக்காமல் இருக்க முடியாது. அவர்களை எதிர்த்து நான் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்பதை சத்தியாக்கிரகி என்ற வகையில் நான் அறிவேன். தொழிலாளர் செய்திருக்கும் வேலைநிறுத்தம் ஒன்றைக் கொண்டே அவர்கள் சுயேச்சையான முடிவுக்கு வரும்படி விட்டிருக்க வேண்டும். நான் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது, ஆலை முதலாளிகள் செய்துவிட்ட தவறுக்காக அன்று. தொழிலாளர்கள் பிரதிக்ஞையிலிருந்து தவறி விட்டதற்காகவே உண்ணாவிரதம் இருந்தேன். அவர்களுடைய பிரதிநிதி என்ற வகையில், அவர்கள் செய்த தவறில் எனக்கும் பங்கு இருக்கிறது என்று கருதினேன். ஆலை முதலாளிகளிடம் நான் வேண்டிக் கொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு விரோதமாக உண்ணாவிரதம் இருப்பதென்பது அவர்களை நிர்ப்பந்தப்படுத்துவதாகும். என்னுடைய உண்ணாவிரதம் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியே தீரும் என்பதை நான் அறிந்திருந்தும் உண்மையிலேயே அது அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியது. உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்று எண்ணினேன். உண்ணாவிரதம் இருக்க வேண்டியதே என் கடமை என்று எனக்குத் தெளிவாகத் தோன்றியது.
ஆலை முதலாளிக்குச் சமாதானம் கூற முயன்றேன். “உங்களுடைய நிலைமையிலிருந்து எனக்காக நீங்கள் மாறியாக வேண்டிய அவசியம் கொஞ்சமேனும் இல்லை” என்று அவர்களுக்குச் சொன்னேன். ஆனால், என் வார்த்தைகளால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. நயமான மொழிகளால், உள்ளம் வருந்தும்படியாக என்னை ஏளனம் கூடச் செய்தனர். அவ்விதம் செய்ய அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு.
வேலைநிறுத்தம் சம்பந்தமாக ஆலை முதலாளிகள் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்து வந்ததற்கு மூலகாரணமாக இருந்தவர், சேத் அம்பாலால். அவருடைய தளராக உறுதியும், கபடமற்ற இயல்பும் அற்புதமானவை. அவை என் உள்ளத்தைக் கவர்ந்தன. அவரை எதிர்த்துப் போராடுவது என்பதே மகிழ்ச்சி அளிப்பதாகும். ஆகவே, அவரைத் தலைவராகக் கொண்ட எதிர்க்கட்சிக்கு என்னுடைய உண்ணாவிரதம் உண்டாக்கிய சங்கடமான நிலைமையைக் குறித்து நான் அதிக மனவேதனை அடைந்தேன். அவருடைய மனைவி சரளாதேவி, உடன் பிறந்த சகோதரியைப் போல என்னிடம் அன்பு கொண்டிருந்தார். என்னுடைய செய்கையினால், அவர் மனவருத்தம் அடைந்ததைக் காண என்னால் சகிக்கவில்லை.
அனுசூயா பென்னும், நண்பர்கள் பலரும், தொழிலாளரும், முதல் நாள் என்னுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால், அவர்கள் மேற்கொண்டும் உண்ணாவிரதம் இருப்பதைக் கொஞ்சம் சிரமத்தின் பேரிலேயே நிறுத்தி விடும்படி செய்தேன்.
இதனாலெல்லாம் ஏற்பட்ட பலன், எல்லோரிடமும் நல்லெண்ணச் சூழ்நிலை ஏற்பட்டதாகும். ஆலை முதலாளிகளின் மனமும் இரங்கியது. சமரசத்திற்கான வழியைக் காண அவர்கள் முன்வந்தார்கள். அனுசூயா பென்னின் வீட்டில் அவர்களுடைய விவாதங்கள் நடந்தன. ஸ்ரீ அனந்த சங்கர துருவாவும் இதில் தலையிட்டார். முடிவில் அவரையே மத்தியஸ்தராகவும் நியமித்தனர். நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து மூன்று நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தமும் முடிவுற்றது. இந்த நல்ல முடிவைக் கொண்டாடுவதற்காக ஆலை முதலாளிகள், தொழிலாளருக்கு மிட்டாய்கள் வழங்கினர். இவ்விதம் இருபத்தொரு நாட்கள் வேலை நிறுத்தம் நடந்த பிறகு சமரச முடிவு ஏற்பட்டது.
இந்தச் சமரச முடிவைக் கொண்டாடுவதற்காக நடந்த கூட்டத்திற்கு ஆலை முதலாளிகளும் கமிஷனரும் வந்திருந்தனர். இவ் வைபவத்தில் தொழிலாளருக்குப் புத்திமதி கூறிய கமிஷனர், “ஸ்ரீ காந்தி கூறும் புத்திமதியை அனுசரித்தே நீங்கள் எப்பொழுதும் நடந்துகொள்ள வேண்டும்” என்றார். இந்தச் சம்பவங்களெல்லாம் முடிந்தவுடனேயே இதே கனவானிடம் நான் ஒரு தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆனால், நிலைமையோ இதற்கு மாறானது; அந்த நிலைமையை அனுசரித்து அவரும் மாறுதல் அடைந்து விட்டார். அப்பொழுது அவர், என் புத்திமதியைக் கேட்டு நடந்துவிட வேண்டாம் என்று கேடா பட்டாதார்களுக்கு எச்சரிக்கை செய்தார்!
ஒரு சம்பவத்தைக் குறிப்பிடாமல் நான் இந்த அத்தியாயத்தை முடித்துவிடக் கூடாது. அச்சம்பவம் எவ்வளவு வேடிக்கையானதோ அவ்வளவு பரிதாபகரமானதுமாகும். மிட்டாய் வினியோகத்தில் நடந்த சம்பவம் அது. மில் முதலாளிகள் மிட்டாயை ஏராளமாகத் தருவித்திருந்தார்கள். பல்லாயிரக் கணக்கான தொழிலாளரிடையே அதை எப்படி வினியோகிப்பது என்பதே பெரிய பிரச்னையாகி விட்டது. வேறு எந்த இடத்திலும் அவர்களையெல்லாம் ஒன்றாகக் கூட்டி வைப்பது என்பது முற்றும் அசௌகரியமாக இருந்தது. ஆகையால், திறந்தவெளியில், அதுவும் அவர்கள் எந்த மரத்தின் அடியில், இருந்து பிரதிக்ஞை செய்தார்களோ அதே மரத்தின் அடியில், அவர்களுக்கு மிட்டாயை வினியோகிப்பதுதான் சரி என்று தீர்மானிக்கப்பட்டது.
இருபத்தொரு நாட்கள் கண்டிப்பான கட்டுப்பாட்டை அனுசரித்து வந்திருக்கும் தொழிலாளர்கள், எந்தவிதமான கஷ்டமும் இன்றி ஒழுங்காக நின்று வினியோகிக்கப்படும் மிட்டாயை வாங்கிக் கொள்ளுவார்கள், மிட்டாய் வாங்கப் போட்டி போட்டுக் கொண்டு மேலே விழ மாட்டார்கள் என்று நிச்சயமாக நம்பி இருந்துவிட்டேன். ஆனால், இதைச் சோதிக்கும் சமயம் நேர்ந்தபோது, வினியோகிப்பதற்கு அனுசரித்த எல்லா முறைகளும் பலிக்காது போயின. வினியோகிக்க ஆரம்பித்த இரண்டு நிமிஷங்களுக்குள் அவர்கள் வரிசையெல்லாம் கலைந்து விடும்; மீண்டும் மீண்டும் குழப்ப நிலைமை உண்டாகிவிடும். மில் தொழிலாளர்களின் தலைவர்கள், ஒழுங்கை நிலைநிறுத்த என்ன முயன்றும் பயனில்லை. குழப்பமும், நெருக்கித் தள்ளுவதும், போட்டியும் முடிவில் தாங்க முடியாதவை ஆகிவிட்டன. இக்குழப்பத்தில் காலில் மிதியுண்டு ஏராளமான மிட்டாய்கள் பாழாயின. கடைசியாகத் திறந்தவெளியில் வினியோகிப்பது என்பதையே கைவிட்டு விட்டனர். மிஞ்சிய மிட்டாய்களைச் சிரமப்பட்டு மிர்ஜா பூரிலிருந்த சேத் அம்பாலாலின் பங்களாவுக்குக் கொண்டு போனோம். மறுநாள் அந்தப் பங்களாத் தோட்டத்தில் எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் மிட்டாய் வினியோகிக்கப் பட்டது.
இச்சம்பவத்தின் வேடிக்கையான அம்சம் தெளிவானதே. ஆனால், இதிலுள்ள பரிதாபப் பகுதியைக் குறித்து கொஞ்சம் சொல்ல வேண்டும். பின்னால் இதைப்பற்றி விசாரித்தால் உண்மை வெளியாயிற்று. பிரதிக்ஞை எடுத்துக் கொண்ட மரத்தடியில் மிட்டாய்கள் வினியோகிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டுவிட்ட அகமதாபாத்திலிருந்த பிச்சைக்காரர்கள் எல்லோரும் அங்கே ஏராளமாகப் போய்க் கூடி விட்டார்கள். பட்டினியால் வாடிய அவர்கள் மிட்டாய்களைப் பெற முண்டியடித்துக் கொண்டு போனதே அங்கே ஏற்பட்ட குழப்பத்திற்கும் ஒழுங்கின்மைக்கும் காரணம்.
நம் நாட்டில் வறுமையும் பட்டினியும் மக்களை வாட்டி வருகின்றன. இதனால், ஆண்டுதோறும் பிச்சைக்காரர்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இவர்கள் வேறு கதியின்றி வயிற்றுச் சோற்றுக்காகப் போராடுவது, நேர்மை, சுயமரியாதை ஆகிய உணர்ச்சிகளே இல்லாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது. நமது தருமப் பிரபுக்கள், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யாமல், வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தாமல், அவர்களுக்குப் பிச்சை போடுகிறார்கள்.
$$$
23. கேடாச் சத்தியாக்கிரகம்
கொஞ்சம் ஓய்ந்து மூச்சு விடுவதற்கும்கூட எனக்கு அவகாசமில்லை. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுற்றுவுடனேயே நான் கேடாச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று.
கேடா ஜில்லாவில் எங்கும் விளைச்சல் இல்லாது போய்விட்டதனால், பஞ்சம் வரக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அந்த ஆண்டு நிலவரி வசூலை நிறுத்தி வைத்துவிடும்படி செய்வது எப்படி என்பதைக் குறித்துக் கேடாப் பட்டாதார்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
விவசாயிகளுக்கு நான் திட்டமான ஆலோசனையைக் கூறுவதற்கு முன்பே ஸ்ரீ அமிர்தலால் தக்கர் அங்கிருந்த நிலைமையைப் பற்றி விவாதித்தறிந்து, அப்பிரச்னையைக் குறித்துக் கமிஷனருடன் நேரில் விவாதித்திருந்தார். ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவும், ஸ்ரீ சங்கரலால் பரீக்கும் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீ வித்தல்பாய் படேல். காலஞ் சென்ற ஸர் கோகுலதாஸ் ககன் தாஸ் பரீக் ஆகியவர்களைக் கொண்டு பம்பாய்ச் சட்டசபையில் கிளர்ச்சியையும் ஆரம்பித்திருந்தனர். இது சம்பந்தமாகப் பன்முறை கவர்னரிடமும் தூது சென்றனர்.
இந்தச் சமயத்தில் நான் குஜராத்தி சபைக்குத் தலைவனாக இருந்தேன். இச்சபை, அரசாங்கத்திற்கு மனுக்களையும் தந்திகளையும் அனுப்பியது. கமிஷனர் செய்த அவமரியாதைகளையும், கமிஷனரின் மிரட்டல்களையும் சகித்துக் கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் அதிகாரிகளின் நடத்தை மிகக் கேவலமாகவும் கேலிக்கூத்தாகவும் இருந்தது. அவை, இன்று நம்பக் கூடாத அளவுக்கு அவ்வளவு மோசமானவை.
விவசாயிகளின் கோரிக்கை, பட்டப்பகல் போல அவ்வளவு தெளிவானது; மிகவும் மிதமானது. ஆகவே, அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் நியாயமாக இருந்தது. மகசூல், சாதாரணமாகக் கிடைக்க வேண்டியதில் கால்வாசியும் அதற்குக் குறைவாகவுமே இருந்துவிடுமானால், அந்த ஆண்டுக்கு நிலத் தீர்வை வசூலை நிறுத்தி வைக்கும்படி, நிலத்தீர்வை விதிகளின்படி விவசாயிகள் கேட்கலாம். கால்வாசிக்கும் அதிகமாக மகசூல் இருக்கிறது என்பது சர்க்காரின் கணக்கு. விவசாயிகளோ, கால்வாசிக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்திருக்கிறது என்றார்கள். ஆனால், இவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொள்ளும் மனப்போக்கில் அரசாங்கம் இல்லை. மத்தியஸ்தர் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்ற பொதுஜனக் கோரிக்கை, தங்களுடைய கௌரவத்திற்குக் குறைவானது என்று அரசாங்கம் கருதியது. முடிவாக மனுக்களும் கோரிக்கைகளும் பயனில்லாது போய்விடவே, நான் என் சக ஊழியர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு, சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளுமாறு பட்டாதார்களுக்கு யோசனை கூறினேன்.
இந்தப் போராட்டத்தில் கேடாத் தொண்டர்களே அன்றி எனக்கு முக்கியமான தோழர்களாக இருந்தவர்கள் ஸ்ரீ வல்லபபாய் பட்டேல், சங்கரலால் பாங்கர், ஸ்ரீமதி அனுசூயா பென், ஸ்ரீ இந்துலால் யாக்ஞிக், மகாதேவ தேசாய் முதலியவர்களும் மற்றோரும் ஆவர். இப்போராட்டத்தில் சேர்ந்ததால் ஸ்ரீ வல்லபபாய் பட்டேல், ஏராளமான வருமானத்தை அளித்ததும், வளர்ந்து கொண்டு வந்ததுமான தமது வக்கீல் தொழிலை நிறுத்தி வைத்துவிட நேர்ந்தது. பிறகு அத்தொழிலை அநேகமாக அவர் மேற்கொள்ள முடியாமலே போய்விட்டது.
நதியாத்திலிருந்த அனாதாசிரமத்தை எங்கள் தலைமை ஸ்தலம் ஆக்கிக் கொண்டோம். நாங்கள் எல்லோரும் தங்குவதற்குப் போதுமானதாக இதைவிடப் பெரிய இடம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சத்தியாக்கிரகிகள் கீழ்க்கண்ட பிரதிக்ஞையில் கையெழுத்திட்டனர்.
“எங்கள் கிராமங்களில் மகசூல் கால் பாகத்திற்கும் குறைவாக இருக்கிறது என்பதை அறிந்தே அடுத்த ஆண்டுவரையில் நிலத் தீர்வை வசூலை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டோம். ஆனால், எங்களுடைய வேண்டுகோளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையால், கீழே கையொப்பம் இட்டு இருப்பவர்களாகிய நாங்கள், இவ்வருஷத்திற்கு முழுத் தீர்வையையோ பாக்கியாக இருக்கும் தீர்வையையோ அரசாங்கத்திற்கு நாங்களாகக் கொடுப்பதில்லை என்று இதன்மூலம் சத்தியம் செய்து கொள்கிறோம். அரசாங்கம், தனக்குச் சரியெனத் தோன்றும் எல்லாச் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதோடு நாங்கள் தீர்வை செலுத்தாததால் ஏற்படக்கூடிய விளைவுகளை மகிழ்ச்சியுடனும் அனுபவிப்போம். எங்கள் நிலங்கள் பறிமுதல் ஆகிவிட விட்டு விடுவோமேயன்றி நாங்களாக வலியத் தீர்வையைச் செலுத்தி, எங்கள் கட்சி பொய்யானது என்று கருதப்பட்டு விடுவதற்கோ, எங்கள் சுயமதிப்புக்கு இழுக்கு நேர்ந்து விடுவதற்கோ, நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்றாலும், ஜில்லா முழுவதிலும் நிலத் தீர்வையின் இரண்டாவது தவணையை வசூலிப்பதை நிறுத்தி வைக்க அரசாங்கம் சம்மதிக்குமானால், எங்களில் வரி செலுத்துவதற்குச் சக்தியுள்ளவர்கள், முழு நில வரியையோ அல்லது பாக்கியாக இருக்கும் நிலத்தீர்வையின் மீதத்தையோ செலுத்தி விடுவோம். தீர்வையைச் செலுத்தி விடக் கூடியவர்கள், இன்னும் செலுத்தாமல் இருந்து வருவதற்குக் காரணம், அவர்கள் செலுத்தி விட்டால் ஏழைகளாக இருக்கும் விவசாயிகள் பீதியடைந்து தங்கள் தீர்வைப் பாக்கியைச் செலுத்துவதற்காகத் தங்களிடமிருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களை யெல்லாம் விற்றோ, கடன்பட்டோ தங்களுக்கு மேலும் துயரத்தைத் தேடிக்கொண்டு விடுவார்கள் என்பதே. இந்த நிலைமையில் ஏழைகளின் நன்மையை முன்னிட்டு வரி செலுத்தச் சக்தியுள்ளவர்கள் கூட, நிலத்தீர்வையைச் செலுத்தாமல் இருப்பது அவர்கள் கடமை என்று நாங்கள் உணருகிறோம்.”
இந்தப் போராட்டத்தைக் குறித்துப் பல அத்தியாயங்களை நான் எழுதுவதற்கில்லை. ஆகையால், இதன் சம்பந்தமான அநேக இனிமையான நினைவுகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு நான் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த முக்கியமான போராட்டத்தைக் குறித்து முழுவதையும் விவரமாகத் தெரிந்துகொள்ள விரும்புவோர், கேடாவிலுள்ள கத்தலாலைச் சேர்ந்த ஸ்ரீ சங்கரலால் பரீக் எழுதியிருக்கும் ஆதாரபூர்வமான ‘கேடாச் சத்தியாக்கிரகம்’ என்ற நூலைப் படிப்பார்களாக.
$$$
24. ‘வெங்காயத் திருடர்’
சம்பாரண், இந்தியாவில் தொலைவான ஒரு முடுக்கில் இருக்கிறது. அங்கே நடந்த போராட்டத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் ஆகவில்லை. அதனால், வெளியிலிருந்து அங்கே அதிகம் பேர் வரவில்லை. ஆனால், கேடாப் போராட்டம் அப்படியல்ல. அங்கே நடந்து வந்தவை யாவும் அன்றாடம் பத்திரிகைகளில் வெளியாகி வந்தன. குஜராத்திகளுக்கு இப்போராட்டம் முற்றிலும் புதியதான ஒரு சோதனை. ஆகையால், அவர்கள் இதில் அதிக சிரத்தை கொண்டிருந்தனர். இந்த லட்சியம் வெற்றியடைவதற்காகத் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கொண்டுவந்து கொட்ட அவர்கள் தயாராயிருந்தார்கள். சத்தியாக்கிரகத்தைப் பணத்தினால் மாத்திரமே நடத்திவிட முடியாது என்பதை அவர்கள் சுலபமாக அறிந்துகொள்ள முடியவில்லை. சத்தியாக்கிரகத்திற்குத் தேவையானவற்றில் பணம், கடைசி ஸ்தானத்தையே வகிக்கிறது. வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்காமல் பம்பாய் வர்த்தகர்கள் எங்களுக்கு அவசியமானதற்கும் அதிகமாகப் பணம் அனுப்பினார்கள். இதனால் அப்போராட்டத்தின் முடிவில் எங்களிடம் கொஞ்சம் பணம் மீதமாக இருந்தது. அதே சமயத்தில் சத்தியாக்கிரகத் தொண்டர்கள், புதிய பாடமான எளிமையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் அப்பாடத்தை முழுவதும் கற்றுக் கொண்டுவிட்டனர் என்று சொல்ல முடியாது. என்றாலும், அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றிக் கொண்டார்கள்.
செய்ய வேண்டியிருந்த முக்கியமான காரியம், விவசாயிகளின் பயத்தைப் போக்குவது. அதிகாரிகள், வரி செலுத்துவோர் கொடுக்கும் பணத்திலிருந்தே சம்பளம் பெறுவதால் அவர்கள் மக்களின் சேவகர்களே அன்றி மக்களுக்கு எஜமானர்கள் அல்ல என்பதை விவசாயிகள் உணரும்படி செய்து அவர்கள் பயத்தைப் போக்க வேண்டியிருந்தது. அஞ்சாமை என்பதை அவர்கள் உணரும்படி செய்வது அசாத்தியமான காரியமாகவே இருந்தது. அதிகாரிகளிடம் அவர்களுக்கு இருந்த பயம் போய் விட்ட பிறகு, பதிலுக்குப் பதில் அதிகாரிகளை அவர்கள் அவமதிக்காமல் இருக்கும்படி செய்வது எப்படி? மேலும், மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள முற்பட்டு விடுவார்களாயின், பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்துவிட்டதைப் போன்று சத்தியாக்கிரகம் கெட்டுவிடும். மரியாதையாக நடந்து கொள்ளும் பாடத்தை, நான் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்பதை நான் பின்னால் அறிந்தேன். பிறரிடம் மரியாதையாக நடப்பது என்பது சத்தியாக்கிரகத்தின் மிகக் கடுமையான பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது. மரியாதையாக நடப்பது என்பதற்கு, அச்சமயத்திற்கு ஏற்பப் பழகி வைத்துக் கொள்ளும் நயமான வெளிப் பேச்சு என்பதல்ல, இங்கே பொருள். பெருந்தன்மை, மனப்பூர்வமாக ஏற்பட்டதாக இருப்பதோடு எதிரிக்கும் நல்லதைச் செய்யும் விருப்பமும் இருக்க வேண்டும். சத்தியாக்கிரகியின் ஒவ்வொரு செயலிலும் இது வெளிப்படுவதாகவும் இருக்க வேண்டும்.
ஆரம்பக் கட்டங்களில் மக்கள் அதிகத் தைரியம் காட்டினார்களெனினும், கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொள்ள அரசாங்கம் விரும்பியதாகத் தோன்றவில்லை. ஆனால், மக்களின் உறுதி தளர்ந்துவிடும் என்பதற்கான அறிகுறி எதுவும் தோன்றாது போகவே அரசாங்கம் அடக்குமுறையைக் கைக்கொள்ளக் கிளம்பியது. ஜப்தி அதிகாரிகள், மக்களின் கால்நடைகளை ஏலம் போட்டனர். அகப்பட்ட ஜங்கம சொத்துக்களை யெல்லாம் ஜப்தி செய்தார்கள்; அபராத அறிவிப்புக்களைப் பிறப்பித்தனர்; சிலருடைய மகசூல்களையும் ஜப்தி செய்தார்கள். இவையெல்லாம் விவசாயிகளின் உறுதியைக் குலைத்து விட்டன. சிலர் தங்கள் வரிப்பாக்கியைச் செலுத்தி விட்டார்கள். மற்றும் சிலரோ, தங்கள் வரிப்பாக்கிக்காக ஜப்தி செய்துகொண்டு போகட்டும் என்று, பத்திரமான தங்கள் ஜங்கம சொத்துகள் – அதிகாரிகள் கையில் அகப்படும் வகையில் வைத்துவிட விரும்பினார்கள். ஆனால், இதற்கு மாறாக மற்றும் சிலரோ, கடைசி வரையில் போராடியே தீருவது என்று உறுதியுடன் இருந்தார்கள்.
இப்படி எல்லாம் நடந்து கொண்டிருந்த சமயம், ஸ்ரீ சங்கரலால் பரீக்கின் சாகுபடியாளர்களில் ஒருவர் தம்மிடமிருந்த நிலத்திற்குரிய தீர்வையைச் செலுத்தி விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமது சாகுபடியாளர் செய்துவிட்ட தவறுக்கு ஸ்ரீ சங்கரலால் பரீக் உடனே தக்க பரிகாரம் செய்துவிட்டார். எந்த நிலத்திற்கு வரி செலுத்தப் பட்டுவிட்டதோ அந்த நிலத்தை அவர் தருமத்திற்குக் கொடுத்துவிட்டார். இவ்விதம் அவர் தமது கௌரவத்தைக் காத்துக்கொண்டதோடு மற்றவர்களுக்கும் சிறந்த உதாரணமானார்.
பயமடைந்துவிட்டவர்களின் உள்ளத்தில் உறுதி ஏற்படும்படி செய்வதற்காக, ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவின் தலைமையிலிருந்த மக்களுக்கு நான் ஒரு யோசனை கூறினேன். ஒரு நிலத்தில் மகசூல் நியாயமின்றி ஜப்தி செய்யப்பட்டிருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அந்த வயலிலிருந்த வெங்காய மகசூலை அப்புறப் படுத்திவிடும்படி கூறினேன். இதைச் சாத்வீகச் சட்டமறுப்பு என்று நான் கருதவில்லை. இது சாத்விகச் சட்டமறுப்பாகவே இருந்தாலும், நிலத்தில் இருக்கும் மகசூலை ஜப்தி செய்வது சட்டப்படி சரியானதாகவே இருப்பினும், ஒழுக்க ரீதியில் அது தவறானது; கொள்ளையைத் தவிர வேறு எதுவும் அல்ல அது என்று நான் கூறினேன். ஆகையால், ஜப்தி உத்தரவு இருந்தாலும், அந்த நிலத்திலிருந்து வெங்காய மகசூலை அப்புறப்படுத்திவிட வேண்டியது மக்கள் கடமை என்றேன்.
அபராதம் விதிக்கப்பட்டது அல்லது தண்டனை அடைவது என்பது இத்தகைய சட்ட மறுப்பின் அவசியமான பின்விளைவாகும். ஆகையால், அபராதம் விதிக்கப்படுவது அல்லது தண்டனையை அடைவது என்பதன் மூலம் புதியதொரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு மக்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. ஸ்ரீ மோகன்லால் பாண்டியாவுக்கோ இது மனத்திற்குப் பிடித்த காரியம். சத்தியாக்கிரகக் கொள்கைக்குப் பொருத்தமான வகையில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றைச் செய்து சிறைவாச உருவில் துன்பத்தை அனுபவிக்காமல் இப்போராட்டம் முடிந்து விடுவதை அவர் விரும்பவில்லை. ஆகையால், அந்நிலத்திலிருந்த வெங்காய மகசூலைத் தாமே அப்புறப்படுத்தி விடுவதாக அவர் முன்வந்தார். இதில் மற்றும் ஏழு, எட்டு நண்பர்களும் அவருடன் சேர்ந்துகொண்டார்கள்.
இவர்களைச் சும்மா விட்டுவிடுவது என்பது அரசாங்கத்தினால் முடியாத காரியம். ஸ்ரீ மோகன்லாலும் அவருடைய சகாக்களும் கைதானதால் மக்களின் உற்சாகம் அதிகமாயிற்று. ஜெயிலுக்குப் பயப்படுவதென்பது போய்விட்ட பிறகு அடக்குமுறை மக்களுக்குத் தைரியத்தை ஊட்டிவிடுகிறது. விசாரணை நாளன்று கோர்ட்டில் ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். பாண்டியாவும் அவருடைய சகாக்களும் சொற்பகாலச் சிறைத் தண்டனை அடைந்தார்கள். தண்டனை விதித்தது தவறு என்பது என் அபிப்பிராயம். ஏனெனில், வெங்காய மகசூலை அப்புறப்படுத்தியது குற்றச் சட்டத்தின்படி ‘திருட்டு’ ஆகாது. ஆனால், கோர்ட்டுக்குப் போவதைத் தவிர்ப்பது என்பதே கொள்கையாகையால் அப்பீல் செய்யவில்லை.
‘கைதி’களைச் சிறைக்குக் கொண்டுபோனபோது, அவர்கள் முன்னால் மக்கள் ஊர்வலம் ஒன்றும் சென்றது. அன்று மக்கள் ஸ்ரீ மோகன்லாலுக்கு ‘வெங்காயத் திருடர்’ என்ற பட்டத்தை அளித்துக் கௌரவித்தனர். இன்னும் அப் பட்டப்பெயர் அவருக்கு இருந்து வருகிறது. கேடாச் சத்தியாக்கிரகத்தின் முடிவை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.
$$$
25. கேடாச் சத்தியாகிரக முடிவு
இப்போராட்டம் எதிர்பாராத வகையில் முடிவுற்றது. மக்கள் களைத்துப் போய்விட்டனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆகவே, பணியாமல் உறுதியுடன் இருந்தவர்களைச் சர்வ நாசத்திற்குக் கொண்டுபோய் விடுவதற்குத் தயங்கினேன். சத்தியாக்கிரகி ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், கௌரவமான முறையில் போராட்டத்தை முடிப்பதற்கான வழியைத் தேடிக் கொண்டிருந்தேன். எதிர்பாராத வகையில் அத்தகைய வழி ஒன்று தென்பட்டது. நதியாத் தாசில்தார் எனக்கு ஒரு தகவல் அனுப்பினார். பணவசதியுள்ள பட்டாதார்கள் வரியைச் செலுத்திவிட்டால் ஏழைகளிடமிருந்து வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்றார், அவர். அவ்விதம் செய்யப்படும் என்று எழுத்து மூலம் கொடுக்கும்படி அவரைக் கேட்டேன். அவரும் அப்படியே கொடுத்தார். தாசில்தார், தமது தாலுகாவுக்கு மாத்திரமே பொறுப்பு வாய்ந்தவராக இருக்க முடியும். ஜில்லா முழுவதற்கும் கலெக்டரே உறுதிமொழி கொடுக்க முடியும். முழு ஜில்லாவுக்கும் தாசில்தாரின் உறுதிமொழி அமல் ஆகுமா என்று கலெக்டரிடம் விசாரித்தேன். தாசில்தாரின் கடிதத்தில் கண்ட முறையில் தீர்வை வசூலை நிறுத்தி வைக்குமாறு அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது என்று அவர் பதில் அளித்தார். அது அப்பொழுது எனக்குத் தெரியாது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது உண்மையானால், மக்களின் பிரதிக்ஞை நிறைவேறி விட்டது. இந்தக் காரியத்தை நோக்கமாகக் கொண்டதே அப்பிரதிக்ஞை என்பது நினைவிருக்கலாம். ஆகவே, உத்தரவில் எங்களுக்குத் திருப்தி என்று அறிவித்தோம்.
என்றாலும், முடிவு நான் மகிழ்ச்சி அடையும்படி இல்லை. ஏனெனில், ஒவ்வொரு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் முடிவையும் தொடர்ந்து வர வேண்டியதான பெருமிதம் அதில் இல்லை. சமரசத்திற்காகத் தாம் எதுவுமே செய்யாதவரைப் போலவே கலெக்டர் காரியங்களைச் செய்து கொண்டு போனார். ஏழைகளிடமிருந்து தீர்வை வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஆனால், அந்தச் சகாயம் அவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. ஏழைகள் என்பது இன்னார் என்பதை நிர்ணயிப்பது மக்களுக்குள்ள உரிமை. ஆனால், அந்த உரிமையைச் செயல்படுத்த அவர்களால் முடியவில்லை. உரிமையை நிலைநாட்டுவதற்கு வேண்டிய பலம் அவர்களுக்கு இல்லாததைக் குறித்துத் துக்கம் அடைந்தேன். ஆகையால், இப்போராட்டத்தின் முடிவு சத்தியாக்கிரகத்தின் வெற்றி என்று கொண்டாடப்பட்டதாயினும், முழு வெற்றிக்கு வேண்டிய முக்கியமான அம்சங்கள் அதில் இல்லாததனால், அதைக் குறித்து நான் உற்சாகம் அடைய முடியவில்லை.
சத்தியாக்கிரகத்தின் முடிவில் சத்தியாக்கிரகிகள் மேலும் பலமுள்ளவர்களாகவும், ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிக உற்சாகமுள்ளவர்களாகவும் இருக்க முடிந்தால்தான் சத்தியாக்கிரகப் போராட்டம் பயனுள்ளதாயிற்று என்று சொல்ல முடியும்.
ஆயினும், இப்போராட்டத்தினால் மறைமுகமான பலன்களும் இல்லாது போகவில்லை. இப்பலன்களை இன்று நாம் காணமுடிவதோடு அதன் பயன்களை அனுபவித்தும் வருகிறோம். கேடாச் சத்தியாக்கிரகம், குஜராத் விவசாயிகளிடையே விழிப்பு ஏற்படுவதற்கு ஆரம்பமாக இருந்தது. உண்மையான ராஜீயக் கல்விக்கு அதுவே ஆரம்பமாகும்.
டாக்டர் பெஸன்டின் சிறந்த சுயாட்சிக் கிளர்ச்சி, உண்மையில் விவசாயிகளிடையே ஓரளவுக்கு விழிப்பை உண்டாக்கி இருந்தது. ஆனால், கேடாப் போராட்டமே, விவசாயிகளின் உண்மையான வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ளும்படி படித்த பொதுஜன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தியது. விவசாயிகளுடன் சேர்ந்தவர்களே தாங்களும் என்பதை அவர்கள் அறியலானார்கள். தங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற இடத்தையும் கண்டுகொண்டனர். அவர்களுடைய தியாகத் திறனும் அதிகரித்தது.
இந்தப் போராட்டத்தில் தான் வல்லபபாய், தம்மைத் தாமே கண்டு கொண்டார் என்பது, அதனளவில் சாமான்யமான பலன் அன்று. அதன் பலன் எவ்வளவு பிரமாதமானது என்பதைச் சென்ற ஆண்டு நடந்த வெள்ள கஷ்ட நிவாரண வேலையில் இருந்தும், இந்த ஆண்டு நடந்த பார்டோலி சத்தியாக் கிரகத்திலிருந்தும் நாம் அறிய முடியும். குஜராத்தில் பொதுஜன சேவை வாழ்க்கை புதிய சக்தியையும், ஊக்கத்தையும் பெற்றது. பட்டாதாரரான விவசாயி, தம்முடைய பலத்தை மறக்க முடியாத வகையில் உணரலானார். மக்களின் கதி மோட்சம், அவர்களையும், துன்பங்களை அனுபவிப்பதற்கும் தியாகத்துக்கும் அவர்களுக்குள்ள தகுதியையும் பொறுத்தே இருக்கிறது. இந்தப் பாடம், அழிய முடியாத வகையில் பொதுமக்களின் மனத்தில் பதிந்துவிட்டது. கேடாப் போராட்டத்தின் மூலம் சத்தியாக்கிரகம் குஜராத்தின் மண்ணில் ஆழ வேர் ஊன்றிவிட்டது.
ஆகையால், சத்தியாக்கிரகம் முடிவடைந்ததைக் குறித்து நான் உற்சாகமடைவதற்கு எதுவும் இல்லையென்றாலும், கேடா விவசாயிகள் குதூகலமடைந்தார்கள். ஏனெனில், தங்கள் தங்கள் முயற்சிக்கு ஏற்ற பலனை அடைந்து விட்டதாக அவர்கள் அறிந்ததோடு தங்களுடைய குறைகளைப் போக்கிக் கொள்ளுவதற்கு உண்மையான, தோல்வியே இல்லாத ஒரு முறையையும் அவர்கள் கண்டுகொண்டனர். இதை அவர்கள் அறிந்திருந்தது ஒன்றே, அவர்கள் அடைந்த குதூகலம் நியாயமானது என்பதைக் காட்டுவதற்குப் போதுமானது.
என்றாலும், சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைக் கேடா விவசாயிகள் முற்றும் அறிந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைக் கொண்டே இதை அவர்கள் கண்டுகொண்டனர். அதைக் குறித்துப் பின்வரும் அத்தியாயங்களில் கவனிப்போம்.
$$$