-தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார்
ஸ்ரீ. தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் (1903- 1991), திருப்பூரைச் சார்ந்தவர்; விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி; தமிழக கல்வி அமைச்சராக இருந்தவர்; கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம் அமையக் காரணமானவர்; பெண்கல்விக்காக இவர் துவங்கிய கல்லூரி, இன்று அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது. சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை கொங்கு மண்டலத்தில் பரப்பியதில் இவரது பங்கு அளப்பரியது. சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...

சுவாமி விவேகானந்தர் தம் சகாவும் சீடருமான, சென்னையைச் சார்ந்த அளசிங்கர் என்பாருக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றில் பின்வருமாறு எழுதினர்:
“அன்பாம் ஒளியே, என்னை வழி நடத்திச் செல்’ எனப் பிரார்த்திப்போமாக; இருளினூடே ஒளிக்கதிர் ஒன்று வரும். நம்மை ஏழைமை புரோகிதத்துவம் (வைதிக) கொடுங்கோன்மை இவற்றால் அழுத்தி (பிடிபட்டு) மிதிபட்டுவரும் லட்சக் கணக்கானவர்களுக்காக நாம் ஒவ்வொருவரும் அல்லும் பகலும் பிரார்த்திப்போமாக. உயர்ந்தோர்க்கும் செல்வம் படைத்தோர்க்கும் போதிப்பதைவிட அன்னவர்க்கு போதித்தலையே நான் கருத்தில் கொள்கின்றேன். நான் தத்துவ போதகன் அல்ல, வேதாந்தி அல்ல, ஞானியும் அல்ல. ஆனால் நான் எளியவன். நான் எளியவர்களை நேசிக்கின்றேன். அறியாமை, ஏழ்மையில் என்றும் அழுந்தித் தவிக்கும் இருநூறு லட்ச மக்களுக்கு இரங்குபவர் யார் உளர்? எளியவர்க்கு இரங்குபவர் எவரோ அவரை நான் மகாத்மா என அழைக்கிறேன். எளியவர்கள் ஒளியையோ, கல்வியையோ பெ றமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு ஒளி ஊட்டுபவர் யார்? வீடுதோறும் சென்று கடவுளர்கள் – அவர்களைப்பற்றி சிந்தியுங்கள். அவர்களுக்காக உழையுங்கள். அவர்களுக்காக இடையறாது பிரார்த்தியுங்கள் – ஈசன் உங்களுக்கு வழிகாட்டுவார்.”
எண்ணங்கள் வலிமை வாய்ந்தன. அவை நீண்ட தூரம் பயணம் செய்வன. “மூளையினின்றும் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் அதைப் பெற்றுக்கொள்ள வல்ல ஒன்றைச் சந்திக்கும் வரையிலும் அதிர்ந்து கொண்டேயிருக்கின்றது” . தீர்க்கதரிசிகள் சமய ஞானிகள் ஆகியோரால் பகரப்பட்ட ஆழ்ந்த பெருமையான எண்ணங்கள் பிற பெரியார்களின் உள்ளத்தில் மோதுதலை ஏற்படுத்துகின்றன. அதேபோல சுவாமி விவேகானந்தர் இந்தியப் பொதுமக்களின் மீது கொண்ட ஆழ்ந்த தயையும், பரிவும் மற்றோர் பெருமைமிக்க ஆன்மாவிடத்து அதிர்வுகளை உண்டாக்கியது. “எளியவர்க்கு இரங்குபவர் யாரோ அவரை மஹாத்மா என்றே அழைக்கின்றேன்” என்றார் சுவாமிஜி, நசுக்கப்பட்டோர்க்கும் அன்பு செலுத்துவதே மஹாத்மா காந்தியின் வாழ்வின் மூச்சாக இருந்தது. தாழ்ந்தோருக்குள் மிகத் தாழ்ந்தவருடன் தம்மை ஒருவராக எண்ணிக் கொண்டார். வாழ்வின் கடைசி மூச்சு வரை இந்தியப் பொதுஜனங்களுக்காகவே உழைத்து வந்தார்.
சுவாமி விவேகானந்தர் பகர்ந்தார்: ”சத்தியத்தை துணிவுடன் எடுத்துரைப்பாயாக. சத்தியம் யாவும் நித்தியமானது. ஆன்மா அனைத்திற்கும் உரிய இயல்பு சத்தியமே, அது வலிவும், ஒளியும், சக்தியும் தர வேண்டும். இத் தத்துவத்தைக் கைக்கொள்வாயாக. உன் இருப்பைப் போன்று மிக எளியவை, மிகப் பெரிய உண்மைகள். அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவாயானால் இந்தியாவிற்கு உய்வு விரைவில் கிட்டும்.” காந்திஜி இக் கொள்கைகளையே தன் தினசரி வாழ்வில் கடைப்பிடித்தார்.
இவ்வாறு சுவாமிஜியின் போதனைகளான அர்ப்பணம், சேவை என்பன காந்திஜியின் மூலமாகச் செயல்பட்டு இந்தியாவிற்கு விடுதலை தேடித் தந்தன. இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் முப்பது ஆண்டுகள் இந்திய நாட்டிலே காந்திஜி ஆட்சி புரிந்தார். அவர் வாழ்நாள் முழுமையும் சுவாமிஜிக்குப் பிரியமான தியாகம், சேவை இரண்டினையும் தொடர்ந்து போதித்தார். இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவின. காலத்தின் போக்குக்கு ஏற்ப சுவாமிஜியின் போதனைகளைத் திருத்தி விளக்கி அவற்றை அவர் கடைப்பிடித்தார்.
சுவாமிஜியின் மீது மஹாத்மா காந்தி பெருமதிப்பு கொண்டிருந்தார். சுவாமி விவேகானந்தரது திருநாமம் அற்புத சக்தி வாய்ந்தது என்பார் அவர். சுவாமிஜியின் கல்வி பற்றிய கருத்துக்களைத் தொகுத்து வெளியிட்ட நூலுக்கு முகவுரை எழுத நான் வேண்டினபோது, அவர் பின் வருமாறு எழுதினார்: “நிச்சயமாக சுவாமிஜியின் நூல்கட்கு எவரும் முகவுரை எழுதுதல் தேவையில்லை”. அத்துணை பெருமதிப்பு அவருக்கு சுவாமிஜியிடம் உண்டு. பேலூர் மடத்து சுவாமி விவேகானந்தர் ஜன்மதின விழா ஒன்றினுக்கு அவர் சென்றிருந்த போது பின்வருமாறு பகர்ந்தார்: “அன்னாரின் நூல்கள் முழுமையும் கற்ற பின்னர் என் நாட்டுப்பற்று ஆயிரம் மடங்காகப் பெருகியது.”
தாகூர் பின்வருமாறு பறைசாற்றினார்: “தன்னல வாழ்விற்குரிய பந்தங்களினின்றும், வரையறைகளினின்றும், வரையறையற்ற விடுதலைக்குச் செல்லும் நெறியை மனிதனது உணர்வின் முன் ஒளிரச் செய்வது, விவேகானந்தர் அளித்த செய்தியே. கருமத்தாலும், துறவாலும், தொண்டாலும் முழு ஆண்மையை உணரும்படி விழிப்படைய ஓர் அழைப்பே அவரது செய்தியாகும்.”
ஸ்ரீ அரவிந்தர் சுறியதாவது: “இந்தியா விழிப்படைந்துள்ளது. தான் வாழ்வதற்காக மட்டும் அல்லாது, வெல்லுவதற்குமே என்பதை உலகத்தார்க்குக் கண்முன் காட்டும் ஓர் அடையாளமே சுவாமி விவேகானந்தரது புறப்பாடு, சுவாமி விவேகானந்தர் பெரும் சக்திவாய்ந்த புருடர். மனிதர்களுக்குள்ளே சிம்மமனையர், அவருடைய சக்தி மாபேரளவிற்கு இன்னும் வேலை செய்து வருவதையும் சிம்மமனைய கம்பீரமான எழுச்சியொன்று இந்தியாவின் உயிர்க்குட் புகுந்திருப்பதையும் காண்கிறோம். காண்மின்! இன்னும் விவேகானந்தர் தமது தாய்நாட்டின் உயிர்க்குள்ளும் அதன் மக்களின் உயிர்குள்ளும் வாழ்கின்றார் என்று கூறுகிறோம்” என்பதே.
ஆக, இந்தியப் பெரியார் சுவாமி விவேகானந்தரது செய்தியை அங்கீகரித்து, ஒவ்வொருவரும் தத்தம் மேதைக்கு இயைந்தவாறு அதனை நிறைவேற்றியுள்ளனர். நாடெங்கும் மக்கட் பெருந் தொகுதிகட்கிடையே தொண்டாற்றும் துறையிலே இறங்கியதால், சுவாமிஜியின் செய்தியில் இன்னொறு பகுதியும் தென்படலாயிற்று. பெருங்கருத்துக்களைப் பொதுமக்களனைவருக்கும் உரித்தாக்கும் போதெல்லாம், அவற்றின் தரத்தில் குறைபாடு நேர்கிறது. மக்கட் பெருந் தொகுதியினர் சில இலக்ஷியங்களைப் பற்றும்போது, நாளடைவிலே செயல் முறையின் தீவிரமும் தரத்தின் உயர்வும் குன்றுபடும்; காரணம் யாதெனின் அனைவருமே உயர்ந்த தரத்தினை நாடும் தகுதி பெற்றிறாமையே. கலை, கல்வி, தொழில், பண்பாடு, சமயம் என்னும் வாழ்க்கைத் துறைகள் எதனினும் ஒரு சிலரே முயன்று, உயர்ந்த தரத்தினை எய்தும் இயல்புடையவர். சில காரியங்கள் உயர்வற உயர்ந்தனவாகும் போதும், அடைதற்கு அறியனவாகும் போது இக்கூற்று இன்னும் உண்மையாகும். லக்ஷக் கணக்கான மக்கள் அதைச் செய்ய நேரும்போது மக்களிற் பெரும்பாலாரிடம் காணும் வினைத்திறன், பொறுக்கி எடுக்கப்பட்டுள்ள, தம் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துள்ள சிலரால் எய்தக்கூடிய அளவு உயர்ந்த தரத்தினதாகாது. ஆதலாலே, பொதுமக்களிடையே செய்யும் முயற்சியோடு கூட, இந்த லக்ஷியங்களுக்கென தன் வாழ்வை ஒரு சிலர் அர்ப்பணம் பண்ணியவராயும், அவற்றில் முழு ஈடுபாடுடையராயும், அவற்றைப் பற்றி எப்போதும் சிந்தித்து, பெருந் தியாகத்தோடு அடையப் பாடுபட்டுவோராயும் இருத்தலும் அவசியமாம். ஞான வாழ்க்கையின் தீபத்தை உயரத் தூக்கிப் பிடித்துவரும் அத்தகைய பிறர்க்கு எடுத்துக்காட்டாக விளங்குவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும், சங்கமும் செய்ய முயல்வது இதுவேயாகும்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சங்கம் இரண்டின் அங்கத்தினர் பெருந்தொகையினர் அல்லர். அது நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள, சகோதரப் பான்மையுள்ள ஒரு குழுவாகும்; உறுப்பினர் எல்லா இடங்களின்றும் பெறப்படுவர்; ஆயினும் ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் என்னும் இருவரது உபதேசத்தையும் பக்தி சிரத்தையோடு பின்பற்றி வருவதனால் ஒன்றுபட்ட உணச்ச்சியையுடையவராவர். தியாகமும் சேவையும் உறுப்பினர்க்குப் பழகும் லக்ஷியங்களாக அமையும் ஒரு நிலையம், பெருந் தொகையினராதல் இயலாது. மடத்தைச் சார்ந்த உறுப்பினர் அனைவரும் சங்கத்தின் உறுப்பினர் பலரும் ஆயுட்கால பிரம்மச் சரியத்தையும், தன்னலமற்ற சேவையையும் மேற்கொள்ளக் கங்கணங்கட்டிக் கொண்டவராகின்றனர். இக்குழுவின் – அதாவது, இரு கோடிகட்கும் செல்லாமை – பின்பற்றப்படுகின்றது. எல்லா உறுப்பினர்க்கும் சுதந்திரம் உண்டு; எனினும், தாம் மேற்கொண்ட லக்ஷியங்களுக்கும் இயைந்தவாறு அடங்கி ஒழுகுகிறார்கள். அளவிற்கு மிஞ்சிய தவமோ, சுகமோ அனுமதிக்கப்படுவதில்லை. உடல் நலத்தையும் சுறுசுறுப்பான சேவையையும் பேணுவதற்குரிய நிலைமைகள் அளிக்கப்படுகின்றன. அனைத்திற்கும் மேலாக பிரம்மசாரிகளும், துறவிகளும் அனைவரும் சாஸ்திரங்களை நன்கறிந்தவராகி, இந்தியாவிலும், உலகின் தொண்டு செய்யப் பயிற்சி பெறுகின்றனர். ஆக, சங்கம் முழுமையான வாழ்வின் வளர்ச்சியை அழுத்திக் கூறுகிறது; அதில் ஞானமும், பக்தியும், யோக சமாதியும், தன்னலமற்ற பணியும் ஆகிய பேறுகள் தக்கவாறு வற்புறுத்தப்படுகின்றன.
ஸ்ரீ ராமகிருஷ்ண சங்கம் அளிக்கும் செய்தி, சுவாமி விவேகானந்தர் விரிவாக உரைத்தவாறேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணரது செய்தியேயாம். சிந்தனையாளர் சமயத்தை அனுபவ வாழ்க்கையிலே மெய்ப்பித்தல் வேண்டும் என்று கோரிய காலத்திலே, ஆன்மிய அனுபூதிகளின் உண்மையை ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையால் நிரூபித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பற்றிக் கூறியுள்ளவாறே, அவர் மனித வர்க்கத்தின் சமயானுபூதிகள் அனைத்தையும் பெற்றார். இந்துமதம், பௌத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் முதலான சமயங்கள் அனைத்தும் உண்மையே என்றும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறான சந்தர்ப்பங்களிலே அவை மக்களுக்கு நன்மையறித்துள்ளன என்றும் தமது வாழ்க்கையினால் மெய்ப்பித்தார். இவ்வாறு மனித வர்க்கம் முழுதிற்கும் உலகப் பொதுவான ஒரு சமயத்திற்கு அடிகோலாக்கப்பட்டது. ஆன்மிய அனுபூதிகளைப் பெற உஞற்றும் மனமுடையார் ஒவ்வொருவராலும் அவை எய்தலாகும் என்று சுவாமிஜி எடுத்துக்காட்டினர். சுருங்கக் கூறின் சமயம் வெறும் பிதற்றலேயன்று, சமயம் அனுபூதியே. கருமம் வழிபாடே என்னும் மற்றொரு செய்தியோ, முன்னைய அத்தியாயங்களில் விளக்கியுள்ளவாறே, சமூக சேவையென்னும் கருத்திற்குப் புதுப் பொருளன்றைக் கொணர்ந்துள்ளதாகும்.
சுவாமி விவேகானந்தர் நமக்களித்தவற்றுள் மிகவுயர்ந்தது கல்வித் துறையிலே தான். கல்வியே நமது முன்னேற்றத்திற்குரிய ஒரே சாதனம் என்பதை அவர் உறுதியாக உணர்ந்தார். அறிவுப் பயிற்சிக்கு மட்டுமல்லாது, ஒழுக்கப் பயிற்சிக்கும், ஞானப் பயிற்சிக்கும் கல்வியே வேண்டும் என்பார் அவர். எல்லா ஆன்மாக்களிடத்தும் ஏராளமான சக்திகள் உள்ளடங்கியிருப்பதாகவும், போதிய முயற்சியும் பயிற்சியும் பெறுவராயின் அனைவரும் அவற்றை வெளிப்படுத்த வல்லார் என்றும் அவர் நம்பினார். பொதுமக்களிடத்தே தன்னம்பிக்கையை மூட்டும் கல்வியே வேண்டும் என்றார். 1897- ஜுலை 11-ல் எழுதிய அவரது கடிதத்தில், “ஜனங்கள் தமக்குத் தாமே உதவி புரிந்து கொள்ளாராயின், உலகிலுள்ள செல்வம் முழுதும் ஓர் இந்திய கிராமத்திற்கு உதவப் போதியதாகாது” என்று பகர்ந்தார். எல்லா கல்விக்கும் பயிற்சிக்கும், மனத்தூய்மையும் உறுதியான ஒழுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட, மனிதனாகும் லக்ஷியமே வேண்டும் என்று அவர் விழைந்தார்.
ஆக, அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் நிறுவிய சங்கம் நாடெங்கும் எல்லா வகைக் கல்வி நிலையங்களையும் அமைத்திருப்பதைக் காண்கிறோம். அவை கல்வியில் எல்லாப் படியில் உள்ளவர்க்கும் பயனளித்து, பலவகைப் பயிற்சிகளையும் கொடுக்கின்றன.
ஆனால், அவரது செய்தியைச் செயலாக்கும் முறை இந்நிலையங்களோடு நின்றுவிடும் என்று நாம் எண்ணுபோமாயின் அது தவறு. அச் செய்தி உலகமளாவியுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண – விவேகானந்த இயக்கம் என அதை அழைக்கலாம். அதன் உற்பத்தியிடத்திற்கு மிக அருகே இருப்பதாலும், தொடங்கிய காலத்திற்கு மிக அண்மையில் வாழ்வதாலும், அதன் முழு வேலைகளையும், அதில் அடங்கியுள்ள அனைத்தையும் அறிய இயலாதவராகிறோம். அதன் ஆரம்பத்தைக் காணவும், அதனாற் பயனடைந்தவராகவும், அதற்குக் கருவிகளாகவும், அமையவும் நமக்குக் கொடுத்து வைத்ததே நமது உண்மையான பாக்கியமாகும்.
இப்புதிய செய்தி பல்வேறு கோணங்களிலிருந்து நோக்கும் காட்சிகளைச் சமரசப்படுத்துவதாகவும் பற்பல பண்பாடுகளைத் தொகுத்து ஒன்றுபடுத்துவதாகவும், மனிதனின் பெருமையை அதிகமாக்குவதாகவும், மனிதர் ஒருவருக்கொருவர் உறவு கொண்டாடவும் கல்வியை வழங்குவதற்கும், பல நாடுகள் ஒன்றையொன்று அறிந்து கொள்வதற்கும், ஒரு புதிய அடிப்படையைப் படைப்பதாகவும் வரவேற்கப்படுகிறது. வருங்காலத்துப் பல பெருங்காரியங்களைச் சாதிக்கும் வலிமையையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது.
சுவாமி விவேகானந்தர் இந்தியாவிற்கும் உலகிற்கும் அளித்த செய்தி தேசகால வரையறைக்கு அதீதமாயுள்ளது. மிஸ்.ஜெ.மாக்லியாட் அம்மையார் என்னும் ஓர் அமெரிக்க நண்பர் தாம் எழுதிய கடிதமொன்றில் அதைப்பற்றிக் கேட்டல் நன்று. அவர் எழுதுவதாவது:

“என்னைக் கவர்ந்த சுவாஜியின் இயல்பாவது, அவரது அளவுபடாத தன்மையே. அவரது அடியையோ, முடியையோ, பக்கங்களையோ என்னால் தொட இயலவில்லை. அவரது வியத்தகும் பரிமாணத்தை என்னென்பது! நிவேதிதையைப் பிணித்ததும் அதுவே என்று கருதுகிறேன். அத்தகைய இயல்புகள் ஒருவர்க்கு எவ்வளவு விடுதலையளிக்கின்றன! அறுதிப் பொருளை யான் பற்றியிருப்பதில் முழு உறுதியுண்டோ என்று நீங்கள் என்னை வினவுகின்றீர்கள். ஆம், முழுவுறுதியே. அது எனது கூறுகின்றது. சுவாமிஜியிடம் யான் கண்ட மெய்ப்பொருளே எனக்கு விடுதலை அளித்தது! ஒருவரிடமுள்ள குறைகள் அவ்வளவு அற்பமாகத் தோன்றுகின்றன. மெய்ப்பொருட் கடலே ஒருவர்க்கு விளையாடும் இடமாகும்போது, அவரைப் பற்றி நினைப்பானேன்? எனக்கு விடுதலையளிக்கவே சுவாமிஜி எழுந்தருளினார். நிவேதிதைக்குத் தியாகத்தையும் அன்பார்ந்த மிஸஸ் ‘ஸ’ என்பார்க்கு ஒருமையையும் அளித்த பணி போன்றே, இதுவும் அவரது ஞானப்பணியின் ஒரு பகுதியேயாம். ஆயினும் அவர் இந்தியாவின் ஆன்மியப் பெருநன்கொடையாவது, அவரது தியாகமே தான். அல்லும் பகலும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே மொழியாவது, ’தியாகத்தை’நினைவுறுக என்பதே…. என்னிடம் தியாகம், இறையும் இல்லை; ஆனால் என்னிடம் விடுதலை உள்ளது; இந்தியா வளர்வதைக் காணவும், அதற்கு உதவி புரியவும் விடுதலை உள்ளது- அதுவே எனது வேலை. அதல் எனக்கு எவ்வளவு ஆர்வம்! எங்கட்கு நிற்பதற்கேற்ற ஒரு பாறையே சுவாமிஜி என்பதை உணர்கிறேன்”.
மேலை நாட்டிலும் கீழை நாட்டிலும் ஆயிரக் கணக்கான மக்கள் இவ்வாறே உணர்கின்றனர்.
சுவாமி விவேகானந்தர் தமது பூதவுடலை நீத்துச் சென்று விட்டனர். ஆயினும் நம்மோடு உள்ளார். மேன்மையுள்ள நினைவுகளையும் செயல்களையும் நம்மிடம் நித்தமும் எழச் செய்யும் ஞான ஊக்கம் அளித்து வருகிறார். இன்னும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இந்தியாவிற்கும் உலகிற்கும் தொடந்து ஞான ஊக்கத்தை ஊட்டி, நம்மை ‘மனிதர்’ ஆக்குவார்.
$$$