பால பாரத சங்கம்- முதலாவது பிரகடனம், பத்தாம் அவதாரம்

-மகாகவி பாரதி

1907 மார்ச் 30.

“ஹே பாரதா! எப்போதெப்போது தர்மத்டதிற்கு பங்கமுண்டாகி அதர்மம் தலைதூக்கி நிற்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுகிறேன். ஸாதுக்களைக் காக்கும் பொருட்டாகவும், தீங்கு செய்வோர்களை நாசம் செய்யும் பொருட்டாகவும், தர்மத்தை நன்கு ஸ்தாபனம் செய்யும் பொருட்டாகவும் நான் யுகந்தோறும் வந்து பிறக்கிறேன்” என்று கிருஷ்ண பகவான் பகவத் கீதையிலே நமது பூர்விகராகிய அர்ஜுனனுக்கு வாக்களித்திருக்கிறார். 

ஆகையால் தற்காலத்தில் இந்தியர்கள் என்று வழங்கப்பெறும் ஹே பாரதர்களே! இப்போது பத்தாம் அவதாரம் தோன்றுவதற்குரிய காலம் வந்துவிட்டதா இல்லையா என்பதைப் பற்றி சிறிது ஆலோசியுங்கள்.

இந்தியாவிலே பிறந்து வாழும் 30 கோடி ஜனங்களை சுமார் ஒரு லக்ஷம் தொகையுள்ள பரங்கிக்கார ஜனங்கள் வந்து எவ்விதமாகவோ மாயைகள் செய்து அரசாட்சி செய்கிறார்கள். நம்மவர் வாயில்லாமல் பூச்சிகள்போல் அந்த அரசாட்சி இன்ன மாதிரியாக நடத்தவேண்டுமென்று வற்புறுத்துவதற்குக்கூட சக்தியில்லாதவர்களாயிருக்கிறார்கள். 30 கோடி ஜனங்கள் தீர்வை செலுத்துகிறார்கள். அந்தத் தீர்வை மொத்தத்தை இன்னவிதமாகச் செலவிட வேண்டுமென்று நியமனம் செய்யக்கூட இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. இங்கிலீஷ்காரர் தம்முடைய சொந்த அனுகூலங்களைக் கவனித்து எவ்விதமான படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்களோ அந்தவிதமான படிப்புத்தான் படிக்க வேண்டும். நாமாக நமது சொந்த நன்மைகளைக் கவனித்து மற்ற சுதந்திர தேசங்களைப் போல் படிப்பு முறைகள் ஏற்பாடு செய்துகொள்ள வழியில்லை. நமது சொந்த ஜன்ம பூமியிலே முக்கிய அதிகாரங்களெல்லாம் அந்நியர்களைச் சேர்ந்ததாய் உள்ளது. ஊழிய வேலைகளையே நாம் செய்ய வேண்டும். நமக்கு அவர்கள் பார்த்து “இட்டதே சட்டம், வைத்ததே வாழ்க்கை.”

மேலும் கன லாபமுள்ள வர்த்தக வியாபாரம், கைத் தொழில் முதலியவற்றிலெல்லாம் அவர்களே முதலாளிகளாயிருந்து லாபங்களையெடுத்து தமது தூர பந்தத்திலே கொண்டு சேர்க்கிறார்கள். கூலிப் பிழைப்புத்தான் நமக்கெல்லாம் விதித்திருக்கிறார்கள்.

நாம் ஆயுதங்களைத் தொடாத பேடிகளாக இருக்க வேண்டுமென்றும் ஆயுதங்கள் வைத்துக் கொண்டிருந்தால் தண்டனையென்றும் ஏற்பாடு செய்துவிட்டார்கள். நிராயுதபாணிகளை அவர்கள் இஷ்டப்படியெல்லாம் நடத்துவது எளிதல்லவா?

வருஷந்தோறும் 60 கோடி ரூபாய்கள் இங்கிருந்து வற்றடிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் இந்த பாரத தேசம் நாளுக்கு நாள் சொல்லமுடியாத தரித்திரத்திலும் பிணியிலும் மூழ்கி வருவது ஆச்சரியமாகுமா? இப்போது நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ராஜாங்க முறைமையிலே மேலே கூறியது போன்ற அநீதிகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அநீதிகளை நாசம் செய்யும் பொருட்டாக நமக்கிடையே கடவுள் பத்தாம் அவதாரம் செய்திருக்கின்றார். இப்போது மனித ரூபமாக அவதாரம் செய்யவில்லை. அவருடைய அவதாரத்தின் பெயர் சுதேசியம்; அவருடைய  ஆயுதம் Boycott, அதாவது அன்னிய சம்பந்த விலக்கு அல்லது பஹிஷ்காரம்; அவருடைய மந்திரம் வந்தே மாதரம்.

  • இந்தியா (30.03.1907)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s