-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
90. உடல், வாக்கு, மனத்தால் வழிபாடு
.
வசஸா சரிதம் வதாமி சம்போ–
ரஹ முத்யோக விதாஸு தேsப்ரஸக்த: /
மனஸாக்ருதி- மீச்’வரஸ்ய ஸேவே
சிரஸா சைவ ஸதாசி’வம் நமாமி //
.
உலகநலன் உனதாடல் உரைத்திடுவேன் வாக்காலே
உயர்யோக முறைகளைநான் உணர்ந்தேன் அல்லன்
உலகாளும் உன்வடிவம் வழிபடுவேன் மனத்தாலே
சிரசாலும் சிவனேநின் திருவுருவை வணங்குவனே!
.
செயல்களைப் புரிகின்ற கை, கால் உள்ளிட்ட கர்மேந்திரியங்கள், பேசுதல், கேட்டல் உள்ளிட்ட ஞானேந்திரியங்கள், அவை இரண்டையும் இயக்குகின்ற மனம் ஆகிய மூன்றினாலும் ஒருமித்து இறைவனை வழிபட வேண்டும். பரமேஸ்வரனாகிய சிவபெருமான் உலகின் நலனுக்காகவே பல்வேறு திருவிளையாடல்களைப் புரிகின்றார். அவரது அந்தத் திருவிளையாடல்களை, புராணச் சம்பவங்களை வாக்கினாலே பக்தன் உரைக்க வேண்டும்.
எளிய பக்தர்களாகிய நாம், இறைவனுடைய திருவுருவத்தை தரிசிக்கக் கூடிய உயர்ந்த யோக முறைகளை அறியாதவர்களாக இருக்கலாம். இருந்தாலும், எளியோர்க்கு எளியோனான அந்தச் சிவபிரானின் வடிவத்தை, நமது விருப்பத்திற்கேற்ப, உள்ளத்திலே நினைத்து வழிபடலாம். அவ்விதமாக மனத்திலே தியானித்து வழிபட வேண்டும். பல்வேறு திருத்தலங்களிலே நமது உய்விற்காகக் கொலுவிருக்கும் சிவபெருமானின் லிங்கத் திருமேனிகளைக் கண்டு, நமது தலை தரையில்படத் தோய்ந்து வணங்க வேண்டும்.
$$$