ஸ்வராஜ்யம்

-மகாகவி பாரதி

5 அக்டோபர், 1918

சென்னை “ஹிந்து” பத்திரிகையின் லண்டன் நிருபர் எழுதிய கடிதமொன்றில் “அமெரிக்காவும், ஐர்லாந்தும், இந்தியாவும்” என்ற மகுடத்தின் கீழே ஒரு குறிப்பெழுதியிருக்கிறார். அதில் அமெரிக்கா ஸ்வாதீனமடைந்த திருநாளாகிய ஜூலை நாலாந்தேதி கொண்டாட்டங்கள்  ஆங்கிலேயர்களாலேயே இங்கிலாந்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட செய்தியைக் குறித்துப் பேசுகிறார். [இங்கிலீஷ் ராஜ்யத்தை எதிர்த்துப் போர்புரிந்து வெற்றி பெற்று (யுனைடெட் ஸ்டேட்ஸ்)  அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1776ஆம் வருஷம் ஜூலை மாஸம் நாலாந்தேதியன்று விடுதலைக் கொடி நாட்டின] மேற்படி லண்டன் நிருபர் எழுதுகிறார்.

“இன்று ஜூலை நாலாந்தேதியன்று (ஆங்கிலேயராகிய) நாமெல்லோரும் அமெரிக்க ஸகோதரருடன் கலந்து ஐக்ய நாடுகளின் விடுதலையை ஆவலுடன் கொண்டாடுகிறோம்.”

இன்று ஆங்கிலேயர்  சொல்லும் வார்த்தைகளையும் செய்யும் செய்கைகளையும் 142 வருஷங்களுக்கு முன்பு சொல்லியும், செய்துமிருப்பார்களாயின் தேசத்துரோகிகளென்றும், கலக்காரரென்றும் சொல்லி மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். இதனைப் பல ஆங்கிலேயர் இப்போது நினைத்திருக்கக்கூட மாட்டார்கள். அதே ஆங்கிலேயரில் சிலர் இக்காலத்தில் “விடுதலை பெற நியாயமாகப் போராடும்” வேறு ஜாதியார் விஷயத்தில் என்ன மாதிரியான வார்த்தை சொல்லுகிறார்கள்?

இங்கு ஒரு முக்யமான பேதத்தை மேற்படி லண்டன் நிருபர் மறந்து விட்டார். ஐக்ய நாடுகள் விடுதலைக்காகப் படை சேர்த்துப் போர் புரிந்து ப்ரான்ஸ் தேசத்தின் உதவியால் இங்கிலாந்தை வென்றன. ஐர்லாந்து கலகங்கள் செய்து விடுதலை பெற முயன்று வருகிறது.

இந்தியாவோ அப்படியில்லை. ஆங்கிலேயரிடமிருந்து ஸமாதானமாகவே ஸ்வராஜ்யம் சட்டத்துக்கிணங்கிய முறைகளால் பெற விரும்புகிறது.

“உபாயத்தால் ஸாதிக்கக் கூடிய காரியத்தைப் பராக்கிரமத்தால் ஸாதிக்க முடியாது” என்று பஞ்ச  தந்திரம் கூறுகிறது. மேலும் நமக்கு ஆங்கிலேயர் ஸமாதானமாகவே ஸ்வராஜ்யம் கொடுத்து விடுவார்கள் என்று நினைப்பதற்கு காலதேச வர்த்தமானங்கள் மிகவும் அனுகூலமாகவே யிருக்கின்றன.

எங்ஙனமெனில் மந்திரி மிஸ்டர் மான்டேகுவும் ராஜபிரதிநிதி லார்டு செம்ஸ் போர்டும் சேர்ந்து தயார் செய்திருக்கும் சீர்சிருத்த ஆலோசனைப் புஸ்தகத்தில் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். “இந்தியாவின் எதிர்கால நிலை டில்லி நகரத்திலேனும் ஸிம்லாவிலேனும் வைட் ஹாலிலேனும் நிச்சயிக்கப்படுவதன்று. ப்ரான்ஸ் தேசத்துப் போர்க்களங்களிலே நிச்சயிக்கப்படும்” என்கின்றார்கள்.

இங்ஙனம் மந்திரியும் ராஜப்பிரதிநிதியும் கூறுவதன் பொருள் நமக்குத் தெளிவாக விளங்கவில்லை. எனினும் நேசக் கக்ஷியாருக்கு வெற்றி கிடைத்தால் நமக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க முடியுமென்று அவர்கள் சொல்வதாகவே நாம் பொருள் கொள்ள நேர்கிறது.

இதனிடையே இந்தியாவில் இந்து மஹமதிய பேதங்களிருப்பதாகக் காட்டி அதனின்றும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் கொடுக்கத் தகாதென்று சொல்லும் ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர் முதலிய வெளிநாட்டு, உள்நாட்டு துரோகிகள் எல்லார் வாயிலும் ஸ்ரீமான் ஸய்யது ஹசேன் இமாம் – நமது விசேஷ ஜன சபைக் கூட்டத்தின் அதிபதி – மண்ணைக் கொட்டிவிட்டார். “எல்லா வகுப்புகளும் இப்போது கொண்டிருக்கும் ஐக்ய புத்தியையும், எல்லார் நலமும் ஒன்றென்ற கருத்தையும் எதிர்க்க முடியாது” என்று அவர் சொல்லுகிறார்.

மேலும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் மிகவும் அவசியமென்பதை விளக்கிக் காட்டும் பொருட்டாக நீதி நிபுணர் ஸய்யது ஹஸேன் இமாம் ஸாஹப் சொல்லும் பின்வரும் வாக்கியங்களுக்கு ஆங்கிலோ இந்தியப் பத்திராதிபர் என்ன மறுமொழி சொல்லக்கூடும்? ஹஸேன் இமாம் கூறுகின்றார்:-

”எல்லாவிதமான அன்னியாதிபத்தியங்களைக் காட்டிலும் ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தார் மீது செலுத்தும் அன்னியாதிபத்தியம் மிகக்கொடியது என்று மக்காலே சொன்னார். இது மக்காலே காலத்தில் எத்தனை உண்மையோ, அத்தனை இக்காலத்திலும் உண்மையே. அவர் வார்த்தை மற்ற தேசங்களுக்கு எவ்வளவு பொருந்துமோ அத்தனை இந்தியாவுக்கும் பொருந்தும். அன்னிய நுகத்தடியின் கஷ்டத்தை இந்தியா உணர்கின்றதென்பதை மறுத்தல் மூல ஸத்யங்களைப் பார்க்க மாட்டோமென்று கண்ணை மூடிக் கொள்வதேயாகும். இந்தியாவில் ப்ரிட்டிஷ் ராஜ்யத்தை ஆதரித்துப் பேசுவோர் இந்நாட்டிற்கு ப்ரிட்டிஷார் பரோபகாரசிந்தனை கொண்டுமட்டும் வந்ததாகச் சொல்லுகிறார்கள். இந்நாட்டு ஜனங்களை தமக்குத் தாமே தீங்கு செய்து கொள்ளாமல் காக்கும் பொருட்டாகவும், நம்மவரின் தர்ம நியாயத்தை உயர்த்தும் பொருட்டாகவும் லெளகிகச் செல்வம் ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டாகவும், இது போன்ற பல காரணங்களின் பொருட்டாகவும் அவர்கள் இங்கு வந்தாகச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் பக்ஷபாதிகள் வழக்கமாகச் சொல்லும் அரைமொழிச் சொற்களேயாம். உண்மை யாதெனிலோ, ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் நன்மைக்காக அன்று. இந்தியாவினின்றும் பணத்தை ஏராளமாய்த் திரட்டிக் கொண்டு போய் ப்ரித்தானியாவுக்கு நன்மை செய்யும் பொருட்டாக ஏற்பட்டது. பொன்னாசையுடன் மண்ணாசையும் கலந்தது. பிறகு கம்பெனியாரிடமிருந்து அரச மகுடத்தின் கீழே கொண்டுவரப் பட்டபின் பொருளாசையும் அதிகார ஆவலும் ஆட்சி செய்வோருக்குக் குறைவுபடவில்லை. பேதம் யாதெனில், யதேச்சாதிகாரத்தை இப்பொழுது ஒழுங்குப்படி நடத்துகிறார்கள். அந்தக் கொள்ளை சாஸ்த்ர தோரணையில் நடந்து வருகிறது!” என்று நம்முடைய ஜன சபைத் தலைவர் சொல்லுகிறார். “இஃதெல்லாம் ஜனங்களுக்குத் தெரியும். இது அவர்கள் நெஞ்சை உறுத்துகிறது. எனவே பண்டைச் செயல்களுக்கெல்லாம் இப்போது (ஆங்கில அதிகாரிகள்) பரிகாரம் அல்லது ப்ராயச்சித்தம் செய்ய வேண்டுமென்று ஜனங்கள் கேட்கிறார்கள்” என்று கூறி ஸய்யது இமாம் முடிக்கிறார். இதுதான் விஷயம் முழுவதும்.

இவ்வித அதிகாரிகள் கையினின்று நம்மை மீட்டு நமக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டுமென்று மாட்சிமை  தாங்கிய ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியிடம் அழுத்தமாகப் ப்ரார்த்தனை செய்கிறோம்.

எங்களுக்கு உடனே ஸ்வராஜ்யம் கொடுக்க்க வேண்டுமென்று வணக்கத்துடனும் எங்களுடைய பரிபூரண ஜீவ பலத்துடனும் ப்ராரத்தனை செய்து கொள்ளுகிறோம்.

  • சுதேசமித்திரன் (05.10.1918)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s