-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
85. விசித்திரக் கடவுளுக்கு வினோதப் படையல்
.
ஜலதிமதனதக்ஷோ நைவ பாதாலபேதீ
ந ச வனம்ருகயாயாம் நைவ லுப்த: ப்ரவீண:/
அச’ன குஸும பூஷா வஸ்த்ரமுக்யாம் ஸபர்யாம்
கதய கதமஹம் தே கல்பயானீந்துமௌலே//
…..
கடல்கடைய வல்லேனிலன் தரைபிளக்க வல்லேனிலன்
வனவிலங்கு பின்னோடும் வேட்டைக்கும் வல்லேனிலன்
உணவுமலர் நகையணிகள் உபசரித்துப் பிறைசூடி
உமக்குநான் பூசனைகள் செய்வதுவும் எங்ஙனமே?
.
சிவபெருமான் விசித்திரமானவர். அனைத்து ஐஸ்வர்யங்களுக்கும் (பொருள்களுக்கும்) அவரே அதிபதி என்பதால், ஈஸ்வரன் என்று பெயர் பெற்றார். எல்லோரையும், எல்லாவற்றையும் ஆண்டுகொண்டிருக்கும் ஆண்டவனும் அவரே. ஆனால் அனைத்து ஐஸ்வர்யங்களையும் ஜீவராசிகளுக்கு வாரி வழங்குகின்ற அந்த இறைவன், அனைவரையும் ஆளுகின்ற அந்த இறைவன் – எடுத்திருக்கும் திருக்கோலம் என்ன? பிச்சாண்டவர் வடிவம்தானே? பாம்பையும், புலித்தோலையும் அணிந்தபடி பக்தர்களிடம் பிச்சை எடுத்து உண்ணும் கோலத்தில் அல்லவா அவர் இருக்கிறார்? அவருடைய ஆண்டித் திருக்கோலம்தான் என்னே? ஏனிந்த பைத்தியக்காரத்தனம்? இதனால்தான் சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமானை பித்தா என்று அன்புடன் அழைக்கிறார். இதில் பெரிய தத்துவம் அடங்கியிருக்கிறது.
அனைத்திற்கும் உடையவராகிய, உடையான் சிவபெருமானே, எளிமையான கோலத்தில் இருக்கிறார். ஆனால், அவனருளால், ஏதோ ஒருசில உடைமைகளைப் பெற்றுவிட்ட மனிதர்கள் நாம் என்னமாய் குதிக்கிறோம்! நம்மிடம் இருக்கும் செல்வம், உண்மையில் நம்முடையது அல்ல, இந்தச் சமுதாயத்தின் பயனுக்காக நம்மிடம் இறைவன் அளித்தது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறதா? எல்லாவற்றையும் நம்மிடமே கொடுத்துவிட்ட அந்த சிவபெருமான், பிச்சாண்டவர் கோலத்தில் நம்மிடம் கேட்கும் தானம், நல்ல உள்ளமும், நற்பேறு தரும் செயல்களுமே. அப்பேர்ப்பட்ட எம்பெருமான் சிவபிரானுக்கு நாம் செய்கின்ற பூஜை சடங்குகள் எம்மாதிரம்? நம்மால் அப்படி சிறப்பாக என்ன செய்துவிட முடியும்? நல்ல எண்ணங்களும், நல்ல செயல்களுமே அவருக்கு நாம் செய்யக்கூடிய உண்மையான வழிபாடு. இதைத்தான் மறைமுகமாக இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரர். (இதற்கு முன்னர், 30-வது ஸ்லோகத்திலும் இதேபோல் எல்லாம்வல்ல சிவபெருமானுக்கு பூஜை செய்வது எங்ஙனம் என்று வியந்திருக்கிறார்.)
சிவபெருமான், அனைவரும் அஞ்சி நடுங்கிய ஆலகால விஷத்தை ஆகாரமாக அருந்தியவர். சந்திரனை தமது தலையில் மலர் போலச் சூடியிருக்கிறார். நாகராஜனை தமது ஆபரணமாகத் தரித்திருக்கிறார். புலித்தோலையும், யானைத்தோலையும் ஆடைபோல் அணிந்திருக்கிறார். ஆகையினால் சிவபூஜை செய்து அவருக்குப் பிடித்தமான ஆகாரத்தை நைவேத்தியம் செய்ய வேண்டுமென்றால், ஆலகால விஷத்தை எடுப்பதற்கு, பாற்கடலைக் கடையக் கூடிய வல்லமை என்னிடத்தில் இல்லையே! மேலும், அதே பாற்கடலைக் கடைந்தபோதுதான் சந்திரனும் தோன்றினான். ஆகையால், சிவபெருமானே உனக்கு உகந்த மலரை அளிப்பதற்கும் என்னிடம் சக்தி இல்லையே! சிவபெருமானே, பாதாளத்தில் வசிக்கின்ற நாகங்களின் தலைவனாகிய நாகராஜனைப் பிடித்து வந்து உனக்கு ஆபரணமாக அணிவிக்க, தரையைப் பிளந்து செல்கின்ற சக்தியும் எனக்கு இல்லையே! அவைதாம் போகட்டும், உனக்குப் பிடித்த வஸ்திரங்களையாவது வழங்கலாம் என்றால், புலித்தோலையும், யானைத்தோலையும் கொடுக்க, சிறந்த வேட்டைக்காரனாகவும் நான் இல்லையே! ஆகையால், பிறைசூடிய பெருமானே, உனக்குப் பிடித்தமான ஆகாரம், மலர், அணிகலன், ஆடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உன்னை நான் எவ்விதம் பூஜை செய்ய முடியும் என்று கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$