மகாவித்துவான் சரித்திரம்- 1(8)

-உ.வே.சாமிநாதையர்

8. கல்வியாற்றாலும் செல்வர் போற்றலும்

அப்பால் திரிசிரபுரத்தில் இருந்து வழக்கம்போலவே இக்கவிஞர்பிரான் தாம் செய்ய வேண்டியவற்றை ஒழுங்காகச் செய்தும் பிறரைக் கொண்டு செய்வித்தும் வருவாராயினர். சென்னையில் இருந்தபோது பழகிய அறிஞர்களுள் ஒவ்வொருவரிடத்தும் இன்னஇன்னவிதமான திறமைகள் உள்ளனவென்று கவனித்து அவற்றைத் தாமும் பயில வேண்டுமென்று பயின்றுவந்தார். அதனால், செய்யுட்களுக்குப் பொருள் கூறுதல், இலக்கண விஷயங்களை எடுத்தாளல், பதச்சரம் சொல்லுதல், நூல்களை ஆராய்தல் முதலிய பலவகையான பயிற்சிகள் இவர்பால் முன்னையிலும் சிறந்து விளங்கின. பலவகை மாணாக்கர்கள் வந்து வந்து தாம் கேட்டற்குரிய பாடங்களைக் கேட்டு வந்தனர். அக்காலத்துப் படித்துவந்த மாணாக்கர்களுள் முக்கியமானவர் தி.சுப்பராய செட்டியார்.

பெரும்பாலும் இவர் ஆண்டார் தெருவிலிருந்த *1 சிதம்பரம் பிள்ளை யென்பவரது வீட்டு மெத்தையிலும் கீழைச் சிந்தாமணியிலுள்ள சொர்க்கபுரம் மடத்திலும் இருந்து காலங்கழித்து வந்தனர்; ஆகாரத்துக்காக மட்டும் தம் வீட்டுக்குப் போய் வருவார். ஏதாவது விஷயங்களைக் கொடுத்து மாணவர்களைப் பாடும்படி பழக்குவிப்பார்; அவர்கள் செய்ய முடியாமல் வருந்துகையில் தாம் அவற்றை முடித்துக் காட்டுவார். அக்காலத்தில் இவருக்கு யாதொரு கவலையுமில்லாதபடி உடனிருந்து பணிசெய்து பாதுகாத்து வந்தவர் *2 அகிலாண்டம்பிள்ளையென்பவர்.

படிப்பவர்கள் தம் இடஞ் சென்றபின், தினந்தோறும் இரவில் ஓய்வு நேரங்களில் புதியனவாகக் கிடைத்த நூல்களை இவர் பனையேட்டிற் பிரதிசெய்தலும் தனியேயிருந்து வெகுநேரம் படித்துக் கொண்டிருத்தலும் வழக்கம். இரவில் இவர் தூங்குங்காலம் மிகக் குறைவேயாகும். இவருடைய பலவகையான ஆற்றலையும் அறிந்து உடனிருந்து ஊக்கமளித்து வந்தவர்கள் வித்துவான் சோமசுந்தர முதலியார், வீரராகவ செட்டியார் முதலிய முதியோர்கள்.

இவருடைய புகழ் தமிழ்நாடெங்கும் பரவி எல்லோருடைய உள்ளத்திலும் குடிகொண்டு விளங்கிற்று. அக்காலத்தில் தாம் இயற்றிய நூல்களை இவருக்குக் காட்டித் திருத்திக்கொள்வதற்கும், அவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் பெறுவதற்கும், அவற்றை அரங்கேற்றும் காலத்தில் உடன் இருப்பதற்காக அழைப்பதற்கும், தம்மைச் சார்ந்தவர்களைப் படிப்பித்தற்குக் கொண்டுவந்து விடுதற்கும், படித்த நூல்களில் தமக்குள்ள ஐயங்களைத் தீர்த்துக் கொள்வதற்கும் பற்பலர் வந்து போவாராயினர்.

புதல்வர் ஜனனம்

இங்ஙனம் இருந்துவருகையில் இவரது இருபத்தொன்பதாவது பிராயமாகிய சோபகிருது வருஷம் ஆடி மாதம் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவில் இவருக்கு ஒரு புதல்வர் பிறந்தனர். அக்குமாரருக்கு இவர் தம்முடைய தந்தையாரின் பெயராகிய சிதம்பரம் என்ற நாமத்தையே வைத்து அழைப்பாராயினர்.

பட்டீச்சுரம் போய் மீண்டது

சில மாதங்கள் சென்றபின் பட்டீச்சுரம் நமச்சிவாய பிள்ளை முதலியோர்கள் விருப்பத்தின்படி இவர் சில அன்பர்களுடன் சென்று பட்டீச்சுரத்தில் அவர்களால் ஆதரிக்கப்பெற்றுச் சிலநாள் தங்கியிருந்தார். இவர் அங்கிருப்பதைத் தெரிந்து பட்டீச்சுரத்தைச் சார்ந்த *3 முழையூரில் தனவந்தராகவிருந்த வையாபுரி பிள்ளை யென்பவர் இவரை உபசாரத்துடன் அழைத்துச்சென்று ஆறை வடதளி அல்லது வள்ளலார் கோயிலென்னும் தலத்திலுள்ளதான துறையூர் வீரசைவ ஆதீனத்தின் மூலபுருஷர் ஸ்ரீ சிவப்பிரகாச தேசிகருடைய மடத்தில் இவரை இருக்கும்படி செய்வித்து அன்புடன் ஆதரித்து வந்ததன்றித் தாமும் தம்முடைய அன்பர்களும் கேட்க வேண்டிய நூல்களைப் பாடங்கேட்டு வந்தனர். இங்ஙனம் சில மாதங்கள் சென்றன. அப்பொழுது அந்த மடத்திலிருந்த பல ஏட்டுச்சுவடிகளை இவர் பார்த்தனர்; சிலவற்றை வாங்கிக் கொண்டனர். இங்ஙனமே அயலூர்களிலிருந்த வேளாளப் பிரபுக்களும் வேறு சிலரும் தத்தம் இடங்களுக்கு இவரை அழைத்துச் சென்று உபசரித்துச் சில நாட்கள் வைத்திருந்து அனுப்பியதுண்டு. அப்பால் திரிசிரபுரம் வந்து மேற்கூறிய சிதம்பரம் பிள்ளையின் வீட்டு மெத்தையிலேயே இருந்து காலங் கழிப்பாராயினர்.

புத்தகத்தை வாசித்தால் அழுகை வருமோ?

இவரைப் பார்த்தற்காக ஒருநாள் அயலூரிலிருந்து முக்கிய நண்பராகிய ஒரு வேளாளப் பிரபு வந்தார். அவர் இவரைக் கண்டு பாராட்டிவிட்டு உண்ட பின்பு சிதம்பரம் பிள்ளை வீட்டின் மேல்மாடத்தில் ஒருபக்கத்திற் சயனித்துக் கொண்டார்; சொல்ல வேண்டிய பாடங்கள் முடிந்தவுடன் மாணாக்கர்களை அனுப்பிவிட்டு வேறு ஒருபுறத்திலே இவர் துயின்றார். துயின்றவர் வழக்கம்போலவே பதினைந்து நாழிகைக்குமேல் விழித்துக்கொண்டு காஞ்சிப் புராணத்தின் இரண்டாங் காண்டத்துள்ள ஒரு பகுதியைப் படித்து அதன்பாலுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றுக் கவிஞர் பெருமானாகிய கச்சியப்ப முனிவரது அருமை பெருமைகளை நினைந்து மனமுருகிக் கண்ணீர் வீழ்த்தியும் ஆடையால் கண்களைத் துடைத்தும் படித்துக் கொண்டே இருந்தனர்.

இப்படி யிருக்கையில் அங்கே அயலிடத்தே துயின்ற புதிய பிரபு விழித்தெழுந்து ஜன்னல் வழியாக வெளிச்சந் தெரிந்தமையால் இவரைப் பார்த்தனர். இவர் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொள்ளுதலையும் படிப்பதையும் கவனித்தார். சிறந்த நூல்களிற் சுவையுள்ள பாகங்களைப் படிக்கும்பொழுது கல்விமான்களுக்கு அடிக்கடி மனம் உருகுமென்பதும் கண்ணீர் பெருகுமென்பதும் அவர் அறியாதவர்; ஆதலால், ‘ஏதோ இவர் அழுகிறார்’ என்று எண்ணிக்கொண்டார். திடீரென்று எழுந்து பரபரப்புடன் வந்து இவர் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கீழே எறிந்துவிட்டு இவரை நோக்கி, “ஐயா நீங்கள் வாசித்தது போதும்; நிறுத்துங்கள். இந்த அகாலத்தில் நீங்கள் தூங்காமல் வருந்து அழுவதற்குக் காரணம் என்ன? ஏதேனும் குடும்பக்கவலை உண்டோ? உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் குறிப்பறிந்து செய்வதற்குச் சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள் இருக்கும்பொழுது எதற்காக இப்படி வருத்தமடைய வேண்டும்? மனத்திலிருக்கும் வருத்தத்தை வெளியிடாமற் புத்தகம் வாசிப்பதாகப் பாவனை செய்துகொண்டு ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் மனத்தில் உள்ளதைச் சொல்லுங்கள். ஏதாயிருந்தாலும் நான் முடித்து விடுவேன். நீங்கள் வருத்தப்படுவது என்னுடைய மனத்தை வருத்துகின்றது” என்றார்.

இவர் அவருடைய பேச்சைக்கேட்டு நகைத்தனர். அவர், “இந்தமாதிரி சிரித்துவிட்டால் நான் ஏமாந்து போவேனென்று நினைக்க வேண்டாம். என்னதான் சிரித்தாலும் உங்கள் வருத்தம் எங்கே போகும்? உண்மையாகக் கேட்கிறேன்; உங்கள் மனவருத்தம் இன்னதென்று சொல்ல வேண்டும்” என்றார்.

பிள்ளையவர்கள்: “ஒன்றும் இல்லை; ஐயா! இந்நூலை நான் படித்து வரும்போது ஒரு பாகம் என் மனத்தை உருக்கிவிட்டது. அதனால் என்னையறியாமல் கண்ணீர் வந்தது.”

அவர்: “புத்தகத்தை வாசித்தால் அழுகை வருமோ? அழுகை நீங்கிவிடுமே! எனக்காகச் சொல்ல வேண்டாம். உள்ளதைச் சொல்லுங்கள்” என்று மிகவும் வற்புறுத்திப் பின்னும் வேண்டினார். அவரைச் சமாதானப்படுத்தித் தமக்கு வருத்தமில்லையென்பதைத் தெரிவித்தற்கு இவர் பெரும் பிரயத்தனம் செய்தார். ஆனாலும் அவருக்கு இவருடைய வார்த்தைகளில் முழு நம்பிக்கை உண்டாகவில்லை. மறுநாட் காலையில் அவரே சிதம்பரம் பிள்ளையிடத்தும் அங்குவந்த ஏனையோரிடத்தும் முதல் நாள் இரவில் நடந்தவற்றைச் சொல்லி, “பிள்ளையவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்” என்று கூறிவிட்டுச் சென்றனர். எல்லோரும் அதனைக் கேட்டு, “இப்படியும் ஒரு மனிதருண்டா!” என்று விம்மிதமுற்றுத் தம்முள் அடிக்கடி சொல்லிக்கொண்டு மகிழ்வாராயினர். பிள்ளையவர்களைக் கண்டு அவர்கள் கேட்டபொழுது அவருக்குத் தம்பாலுள்ள அன்பே அச்செயலுக்குக் காரணமென்று விடை பகர்ந்தார்.

சுப்பராய செட்டியாரைச் சோடசாவதானியாக்கியது


சேது யாத்திரை சென்று திரிசிரபுரத்திற்கு வந்த புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் தம்முடைய நண்பராகிய பிள்ளையவர்களைக் கண்டார். இவர் சிலதினம் இருந்து செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்; அதற்கு அவரிசைந்து அவ்வாறே இருப்பாராயினர். அப்பொழுது அவருடைய கல்விப் பெருமையையும் அவதான விசேடத்தையும் இவரால் தெரிந்துகொண்ட பல பிரபுக்களும் வித்துவான்களும் அவர் அஷ்டாவதானம் செய்வதைத் தாம் பார்க்க வேண்டுமென்று பிள்ளையவர்களைக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கிசைந்து இவர் ஒரு பெரிய சபை கூட்டி சபாபதி முதலியாரைக் கொண்டு அஷ்டாவதானஞ் செய்வித்தபொழுது யாவருங் கண்டு களித்து உபசரித்தனர். அப்பொழுது அங்கு வந்திருந்த செல்லப்பா முதலியாரென்ற பிரபு இவரை நோக்கி, “இவர்கள் அஷ்டாவதானம் செய்தது மிகவும் ஆச்சரியகரமாக இருக்கிறது. இங்ஙனம் செய்யும்படி உங்களுடைய மாணாக்கர்களுள் யாரையேனும் பழக்க முடியுமா?” என்று கேட்டனர். இவர் அப்பொழுது ஒன்றும் விடைபகராமல் இருந்துவிட்டு சபாபதி முதலியார் ஊர்சென்ற பின்னர், தம்முடைய மாணாக்கருள் ஒருவரும் மிக்க ஞாபகசக்தி யுள்ளவருமாகிய சுப்பராய செட்டியாரை பதினாறு அவதானம் செய்யும்படி சில மாதங்களிற் பயிற்றுவித்து ஒரு மகாசபைகூட்டி, அதற்கு மேற்கூறிய செல்லப்பா முதலியார் முதலியவர்களை அழைப்பித்து அவர்கள் முன்னிலையில் பதினாறு அவதானமும் செய்யச்செய்து அவருக்குச் சோடசாவதானி யென்ற சிறப்புப் பெயரை அளித்துத் தக்க சம்மானங்களையும் வழங்குவித்தார். அதுமுதல் அவர் பெயர் சோடசாவதானம் சுப்பராயசெட்டியா ரென்று கௌரவப் பட்டத்துடன் வழங்குவதாயிற்று.

பிரபுக்கள் பாடங் கேட்டல்

அப்பால் இவருடைய பெருமையை அறிந்து வரகனேரியிலுள்ள நாராயணசாமி பிள்ளை யென்னும் செல்வர் ஒருவர் சில நூல்களை இவர்பாற் பாடங்கேட்க நினைந்து தாமே வலிந்துவந்து இவரை அழைத்துச் சென்று மலைக்கோட்டை வாயிலுக்கு எதிரே யுள்ளதும் தமக்குச் சொந்தமானதுமாகிய பெரியதொரு வீட்டில் இருக்கச்ச் செய்து இவருக்கும் உடனிருப்பவர்களுக்கும் ஆகாராதி களுக்குரிய சௌகரியங்களை அமைப்பித்து ஓய்வுகாலங்களில் வந்து தாம் அறிந்துகொள்ள வேண்டிய நூல்களைப் பாடங் கேட்டார்; விரும்பிய பலரையும் கேட்கும்படி செய்து ஆதரித்தும் வந்தார்.

பின்பு, உறையூரிலுள்ள அருணாசல முதலியாரென்பவர் ஒரு சமயம் இவரை மாணாக்கர் முதலியவர்களோடு அழைத்துச் சென்று தம்முடைய வீட்டிலேயே உபசாரத்துடன் பலமாதங்கள் வைத்திருந்தார். அப்பொழுது அவர் தாம் முன்பு படித்திருந்த நூல்களிலுள்ள ஐயங்களைப் போக்கிக் கொண்டதன்றித் திருக்கோவையார் முதலியவற்றிற்கும் பொருள்கேட்டுத் தெளிந்தனர். அவர் செல்வமும் ஈகையும் வரிசையறிதலும் உடையவராதலின் எவ்வகையிலும் இவர் பிறரை எதிர்பாராதபடி தக்க உதவி செய்து வருவாராயினர். அக்காலத்திலே பிள்ளையவர்களுக்குப் பிராயம் 30.

இவர்பாற் பாடங்கேட்டவர்களுள் ஒருவராகிய சுப்பராய முதலியாரென்பவர் இவருடன் இடைவிடாமல் இருந்து செய்ய வேண்டியவற்றைக் குறிப்பறிந்து செய்து செல்லுமிடங்களுக்கும் ஊர்களுக்கும் உடன் சென்று கற்றுத் தேறினர்.


$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1.  இவர் உப்பு வியாபாரத்தால் மிக்க செல்வம் பெற்றுத் தரும சிந்தையுள்ளவராய்ப் பரோபகாரஞ்செய்து காலங்கழித்து வந்தவர்.
2.  இவரால் இச்சரித்திரச் செய்திகளிற் சில தெரிந்தன.
3.  இது தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s